அசாம் முதல்வர் ஹிமந்தா பிஸ்வா சர்மா காய்கறிகளின் விலை உயர்வுக்கு அம்மாநிலத்தில் உள்ள மியா முஸ்லீம் சமூகமே காரணம் என்று குற்றம் சாட்டி முஸ்லீம் வெறுப்பு பிரச்சாரம் செய்துவருகிறார். மியா என்பது அசாமில் உள்ள வங்காள முஸ்லீம்களை இழிவாக கூற பயன்படுத்தப்படும் வார்த்தையாகும்.
சர்மா, “இப்போது காய்கறிகளின் விலையை உயர்த்தியவர்கள் யார்? மியா வியாபாரிகள் தான் அதிக விலைக்கு காய்கறிகளை விற்பனை செய்கின்றனர். கிராமங்களில் காய்கறிகளின் விலை குறைவாகவே உள்ளது. கவுகாத்தியில் உள்ள அசாமிய மக்களிடம் மியா வியாபாரிகள் காய்கறிகளுக்கு அதிக விலையை வசூலிக்கிறார்கள். அசாமிய வியாபாரிகள் காய்கறிகளை விற்றிருந்தால், மக்களிடம் இருந்து அதிக விலை வசூலித்திருக்க மாட்டார்கள்.” என்று கூறியுள்ளார்.
படிக்க : திமுக அரசின் கார்ப்பரேட் ஆதரவு திட்டமும், RSS-BJP-யின் தொழிற்சங்கப் பிரிவான BMS-ன் எதிர்ப்பும்!
சர்மா, மேம்பாலங்களின் கீழ் உள்ள காய்கறி சந்தைகளை காலி செய்து தருவதாகவும், அதனால் அசாமிய சிறுவர்களுக்கு வேலை வாய்ப்பு கிடைக்கும், தற்போது கவுகாத்தி மேம்பாலத்தின் கீழ் காய்கறிகள் மற்றும் பழங்கள் விற்பனை செய்பவர்களில் பெரும்பாலானோர் மியா சமூகத்தைச் சேர்ந்த முஸ்லீம்கள் என்றும் செய்தியாளர் சந்திப்பில் கூறியுள்ளார். அசாமிய இளைஞர்கள் கடுமையாக உழைக்க வேண்டும். வணிகங்களில் மியாக்களுக்கு எதிராக வலுவான போட்டியைக் கொடுக்க வேண்டும் என்று மேலும் கூறினார்.
வங்காள வம்சாவளியை சார்ந்த முஸ்லீம் மக்களை பற்றி அசாம் முதல்வர் பிஸ்வா சர்மா கூறிய வெறுப்பு பேச்சுக்கு அம்மாநில எதிர்கட்சிகள் – அவரது கருத்துக்கள் வகுப்புவாத பிளவை உருவாக்குவதை நோக்கமாக கொண்டுள்ளது என்று – விமர்சித்து வருகின்றனர்.
அகில இந்திய ஐக்கிய ஜனநாயக முன்னணியின் தலைவர் பத்ருதீன் அஜ்மல், சர்மாவின் பேச்சு மியா சமூகத்தை புண்படுத்தியுள்ளது என்றும், இதுபோன்ற வார்த்தைகள் ஒரு முதலமைச்சருக்கு தகுதியற்றது என்றும் கூறினார். “இது ஒரு வகுப்புவாத பிளவை உருவாக்குகிறது, முதலமைச்சரின் பேச்சு ஏதேனும் வகுப்புவாத வன்முறையை தூண்டினால், அதற்கு அரசாங்கமும் ஹிமந்த பிஸ்வா சர்மாவும் பொறுப்பேற்க வேண்டும்” ” என்று அஜ்மல் கூறினார்.
ரைஜோர் தளத்தின் தலைவரும் எம்.எல்.ஏ.வுமான அகில் கோகோய் முக்கியமான பிரச்சினைகளில் இருந்து மக்களின் கவனத்தை திசை திருப்பவே இதுபோன்ற பேச்சுக்கள் பேசப்படுகின்றன என்று தெரிவித்துள்ளார்.
“தேர்தல் நெருங்கி வருவதால், மக்களை மத அடிப்படையில் பிரிக்க நினைக்கிறார்கள்” என்று அசாம் காங்கிரஸ் தலைவர் பூபன் குமார் போரா கூறினார். “வேலையில்லா திண்டாட்டம், விலைவாசி உயர்வு, சட்ட விரோதமாக குடியேறுபவர்கள் போன்ற முக்கிய பிரச்சினைகளுக்கு தீர்வு காண பாஜக தவறிவிட்டது, மேலும் கவனத்தை திசை திருப்ப அவர்கள் இத்தகைய தந்திரங்களில் ஈடுபடுகின்றனர்” என்றார்.
படிக்க : தக்காளி விலை உயர்வு – மக்கள் நேர்காணல்
ஆர்.எஸ்.எஸ் – பா.ஜ.க காவி பயங்கரவாதிகளின் பிரமலமான யுத்தி முஸ்லீம் மக்களில் மீதான வெறுப்பு பேச்சு. அது தற்போது காய்கறி விலை உயர்வு வரை பயன்படுத்த படுகிறது என்பதுதான் மிகவும் முக்கியமான அம்சம். அசாம் மாநிலத்தின் முதல்வர் சர்மா அம்மாநில முஸ்லீம்களை இழிவுபடுத்தி அவர்களுக்கு எதிரான வெறுப்பை தூண்டிவிடும் விதமாக காய்கறி விலை உயர்வுக்கு இவர்கள் தான் காரணம் என்று முஸ்லீம் மக்கள் மீது வெறுப்பு விஷத்தைக் கக்குகிறார்.
காய்கறி விலையேற்றம் நாட்டுமக்களை கலங்கடித்து வரும் இந்த சூழலில் உண்மை என்ன என்பதை மக்கள் அறிந்து கொள்ள கூடாது என்பதற்கானவே இதுபோன்ற வெறுப்பு பிரச்சாரம் செய்து திசைதிருப்புகிறார் அசாம் முதல்வர். காவி பயங்கரவாதிகளின் வெறுப்பு பேச்சுக்களையும், ஆர்.எஸ்.எஸ் – பி.ஜே.பி; அம்பானி – அதானி பாசிச கும்பலின் சதித் திட்டங்களையும் முறியடிக்க வேண்டியது நம் அனைவரின் உடனடி பணியாகும்.
கல்பனா