திருப்பரங்குன்றம் மலையில் சிக்கந்தர் பாதுஷா தர்கா அமைந்திருப்பதை வைத்துத் தொடர்ந்து பல்வேறு பொய் பிரச்சாரங்களைச் செய்து மதக் கலவரங்களை நடத்துவதற்குத் திட்டமிட்டு வேலை செய்து வருகிறது ஆர்.எஸ்.எஸ் – பி.ஜே.பி – இந்து முன்னணி கும்பல்.
கடந்த மாதம் ராஜபாளையத்தில் இருந்து இஸ்லாமியக் குடும்பம் ஒன்று “கந்தூரி” எனப்படும் ஆடு, கோழி வெட்டி நேர்த்திக்கடன் செலுத்துவதற்காக வந்திருந்தது. அவர்கள் திருப்பரங்குன்றம் மலையில் அமைந்துள்ள சிக்கந்தர் தர்கா போகும் வழியில் போலீசால் தடுத்து நிறுத்தப்பட்டார்கள். இதுவரை சிக்கந்தர் தர்காவில் வழக்கமாக நடந்து வந்த ஆடு, கோழி பலியிடுவதைக் கூட தடுத்து நிறுத்தியிருக்கிறது போலீசு. இந்த நடவடிக்கை போலீசு காவி கும்பலாகவே மாறி உள்ளதைப் பட்டவர்த்தனமாக அம்பலப்படுத்துகிறது.
“வீழாது தமிழ்நாடு! துவளாது போராடு!” மாநாடு மதுரையில் நடந்தபோது திருப்பரங்குன்றம் பகுதியில் மக்கள் அதிகாரம் உள்ளிட்ட அமைப்புகளின் சார்பாகப் பிரச்சாரம் செய்த போது அதை முதலில் தடுத்து நிறுத்தியது போலீசு தான். திருப்பரங்குன்றம் பகுதியில் இன்னொரு இந்து முன்னணியாக போலீஸ் செயல்படுகிறது.
போலீசின் இத்தகைய நடவடிக்கைகளைத் தமிழ்நாடு முழுவதும் உள்ள ஜனநாயக முற்போக்கு சக்திகள் கண்டித்துப் பேசினர். இதன்பிறகு அனைவரும் ஒன்றிணைந்து ஆலோசனைக் கூட்டம் நடத்தினர். கந்தூரி எனப்படும் விழா தொடர்ந்து நடைபெற்றுவரும் ஒன்றுதான். தடுப்பதற்கு இவர்கள் யார் என இஸ்லாமிய அமைப்புகள் சார்பாக 450 பேர் வரை கூடி தங்கள் உரிமையை நிலைநாட்டப் போராடியும் அனைவரும் கைது செய்யப்பட்டார்கள்.
இந்நிலையில் சிக்கந்தர் தர்கா இருக்கும் பகுதியான நிலம் 50 சென்ட் வக்பு வாரிய கட்டுப்பாட்டில் வருவதால் வக்பு வாரிய தலைவர் என்ற அடிப்படையில் இராமநாதபுரம் நாடாளுமன்ற உறுப்பினர் நவாஸ்கனி அவர்கள் ஆய்வுக்குச் சென்றுள்ளார். அப்போது போலீசு மேலே சென்று உணவு சமைக்கக் கூடாது சமைத்த உணவை எடுத்துச் செல்லலாம் எனக் கட்டுப்பாடு விதித்தது. அதைப் பின்பற்றியே சமைத்த உணவை எடுத்துச் சென்றுள்ளார்கள். இதையும் இப்போது காவி கும்பல் பொய் பிரச்சாரமாக மாற்றி மதவெறியைத் தூண்டி வருகிறது.
படிக்க: சென்னிமலை, அச்சங்குட்டம் மதக் கலவர முயற்சிகள்: தமிழ்நாடே, எச்சரிக்கை!
இது குறித்துப் பேசிய எச். ராஜா “திருப்பரங்குன்றம் மலையின் மீது அசைவம் சாப்பிட்டு இந்து மதத்தின் புனிதத்தின் மீது போர் தொடுத்துள்ளார்கள்” என கலவரத்தைத் தூண்டும் விதமாகப் பேசியுள்ளார். தமிழ்நாடு வக்ஃபு வாரிய தலைவரும் இந்தியன் யூனியன் முஸ்லீம் லீக் எம்.பி-யுமான நவாஸ்கனி அவர்கள் அங்கு அசைவம் சாப்பிடவில்லை என்று பல தகவல்கள் வழங்கிய போதும் இந்த காவி கும்பல் தனது பொய்ப் பிரச்சாரத்தை நிறுத்தவில்லை.
இதேபோல் சங்கி அண்ணாமலை மதக்கலவரத்தைத் தூண்டும் விதமாக நவாஸ்கனி எம்.பி செயல்படுகிறார் என பேசியுள்ளார்.
சைவ மலையின் புனிதத்தைக் கெடுக்கிறார்கள் என இந்து முன்னணியின் மாநிலத் தலைவர் பேசி உள்ளார்.
வேலூர் இப்ராஹிம் என்ற சங்கி நவாஸ்கனி எம்.பி-யை பார்த்த இடத்தில் செருப்பால் அடிப்பேன் என வாங்கிய காசுக்கு மேல் கூவிக் கொண்டிருக்கிறது. இந்த வரிசையில் எல்.முருகன், நயினார் என ஒட்டுமொத்த சங்கிப்படைகளும் களம் இறங்கி உள்ளன.
இப்படி நாளொரு வண்ணம் வன்மத்தைக் கக்கியும் மதவெறியைத் தூண்டியும் வருகிறார்கள்.
இஸ்லாமிய அமைப்புகள் மீதும் இந்துத்துவ அமைப்புகள் மீதும் வழக்குப் பதிவு செய்துள்ளோம் கூறிக்கொண்டு இந்த விஷயத்தில் இதுவரை கள்ள மௌனியாக இருந்து பிரச்சனையை வளர்த்து விடுவதற்கு உதவி செய்து வருகிறது திமுக அரசு.
முருகன் (கந்தன்) மலையா? சிக்கந்தர் மலையா? சைவ மலையா? அசைவ மலையா? புனிதமா? இல்லையா? என்ற கேள்விக்குள் அனைவரையும் வர வைத்து, “ஸ்ரீ கந்தர் மலையைக் காப்பாற்றுவோம்; ஸ்ரீ கந்தர் மலையில் யாருக்கும் உரிமை இல்லை” என முழங்கி வருகிறது சங்கிக் கும்பல்.
முதலில் சைவ மலை என்று எங்கேயாவது உலகத்தில் ஒன்று உள்ளதா என்ற கேள்வி நமக்கு இயல்பாக எழுகிறது. பழங்குடி சமூகங்கள் பலவும் மலை மீது தான் வாழ்ந்துள்ளார்கள். தங்களை இயற்கை பேரிடர்கள் இருந்து காப்பாற்றிக் கொள்ளவும் விலங்குகளிடமிருந்து பாதுகாத்துக் கொள்ளவும் பெரும்பாலான பழங்குடியின மக்கள் மழையின் மீது தங்கள் குடியேற்றங்களை அமைத்து வாழ்ந்துள்ளார்கள். அங்கு தான் தங்களுடைய உணவுகளைச் சமைத்துச் சாப்பிட்டுள்ளார்கள். மதுரை என்பது கூட அழியாத பழமையான நகரங்களில் மிகவும் முக்கியமானது எனக் குறிப்பிடக் காரணம் இங்குள்ள மலைப்பகுதிகள். பல்வேறு பேரிடர் காலங்களிலும் இந்தப் பகுதியில் தான் மக்கள் பாதுகாப்பாக வாழ்ந்துள்ளார்கள். மலையில்தான் வாழ்ந்துள்ளார்கள் எனும் போது அது எப்படி சைவ மலையாகும்.
படிக்க: அசாம்: சட்டவிரோத குடியேறிகள் என்று கூறி முஸ்லீம்களின் வீடுகளை இடிக்கும் பா.ஜ.க அரசு!
முருகன் வாழ்ந்ததாக இவர்கள் குறிப்பிடும் கதைகளே இவர்கள் உருவாக்கி வரும் புனிதத்திற்கு எதிரானது. பழங்குடி வேடராக முருகன் வாழ்ந்தார் பழங்குடி பெண்ணை மணந்தார் என்றால் அவர் என்ன சைவ பிராணியாகவா வாழ்ந்தார்.
மலை புனிதம் என்றால் அழகர் கோவில் மலையில் பதினெட்டாம்படி கருப்பண்ணசாமிக்கு ஆடு பலியிடப்பட்டு நேர்த்திக் கடன் கொடுக்கப்படுகிறதே அதற்கு இவர்கள் என்ன சொல்வார்கள்.
சைவம் தான் புனிதம் எனவும் அசைவம் புனிதம் அல்ல என இவர்கள் கட்டமைத்து வருவதன் நீட்சியாக நாளை அய்யனார், கருப்பன் போன்ற நாட்டார் தெய்வங்களைப் புனிதம் அற்றவர்களாகக் கற்பித்து ஒழித்துக் கட்டப்படுவார்கள்.
தன்னை இந்து இந்து என மாறு தட்டிக் கொள்ளும் எச். ராஜா தலைமையில் எங்காவது கிடா வெட்டும் திருவிழாக்கள் நடந்ததுண்டா? ஆகவே இவர்களது நோக்கம் முஸ்லீம் வெறுப்பைப் பரப்புவதும் நாட்டார் வழிபாடுகளை பார்ப்பனியமயப் படுத்துவதும் தான். இதுதான் அவர்கள் சித்தாந்தம்.
மலையின் புனிதத்தைக் கெடுப்பதாகச் சொல்லும் இந்த இந்துத்துவ கும்பலின் புனிதம் தான் என்ன? தமிழ்நாட்டில் ஏன் இந்தியா முழுவதும் பாலியல் ஜல்சா கட்சி என அழைக்கப்படும் பாரதிய ஜனதா கட்சி புனிதத்தைப் பற்றிப் பேசலாமா?
கஞ்சா விற்கும் ரவுடிகள் முதல் நூறு வழக்கு 200 வழக்கு கொண்ட கொலையாளிகள் வரை அண்ணாமலையின் சட்டைப் பையில் அடக்கம். ஆருத்ரா மோசடி முதல் ரவுடிகளை கட்சியில் சேர்த்து பல்வேறு கிரிமினல் தனங்களையும் செய்து வரும் இந்த அண்ணாமலை புனிதரா?
பா.ஜ.க-வில் உள்ள பாலியல் பொறுக்கிகளும் ரவுடிகளும் தான் புனிதத்தைக் காக்கப் போகிறார்களா?
இதே போல் தான் கடந்த செப்டம்பர் மாதம் சென்னி மலையில் ஒரு வீட்டில் நடந்த கிறிஸ்தவ கூட்டத்தை மதமாற்ற நடவடிக்கையாகப் பொய் பிரச்சாரம் செய்து பல தகடு தித்தங்களை அரங்கேற்றி கல்வராயன் மலையைக் கிறிஸ்தவ மலையாக மாற்றப் போகிறார்கள் என்ற பொய் பிரச்சாரத்தைக் கட்டமைத்தார்கள். பல்லாயிரக்கணக்கான மக்களைத் திரட்டி கலவரத்தை ஏற்படுத்த முயற்சி செய்தார்கள். இதெல்லாம் அம்பலப்பட்டுப் போன பின்பு இப்போது திருப்பரங்குன்றம் கிளம்பி வந்துள்ளார்கள்.
படிக்க: ஜார்க்கண்ட்: முஸ்லீம் வெறுப்பு பிரச்சாரத்தைத் தீவிரப்படுத்திய காவிக் கும்பல்!
திருப்பரங்குன்றம் மலையில் முருகன் கோவிலுக்குச் செல்லும் வழியும் சிக்கந்தர் தர்காவிற்குச் செல்லும் வழியும் வேறு வேறானது. சிக்கந்தர் தர்காவிற்கு இந்து மக்கள் சென்று வருவது என்பதும் சாதாரணமானது. கந்தூரி எனப்படும் விழாக்களிலும் இந்து மக்கள் கலந்து கொள்வது என்பது சாதாரணமானது. தற்போது இந்த பிரச்சனையைக் கிளப்புவதன் மூலம் மக்களை மத ரீதியாகப் பிளவுபடுத்தி கலவரங்களை உருவாக்கி தங்களுக்கான மக்கள் அடித்தளத்தை உருவாக்கிக் கொள்வதற்கு எத்தனிக்கிறது இந்த காவிக் கும்பல்.
திருப்பரங்குன்றம் சிக்கந்தர் மலையில் உயிரினங்களைப் பலியிடுவதற்கும், சமைத்துப் பரிமாறுவதற்கும் தடை விதிக்கக் கோரிய வழக்கை உயர் நீதிமன்ற மதுரை கிளை பிப்ரவரி 4 ஆம் தேதிக்குத் தள்ளி வைத்துள்ளது குறிப்பிடத்தக்கது. அதே பிப்ரவரி 4 அன்று திருப்பரங்குன்றம் மலையை சிக்கந்தர் மலையாக மாற்ற முயல்வதாகக் கூறி இந்து முன்னணி மதுரையில் போராட்டத்தை அறிவித்துள்ளது.
எனவே, எச்சரிக்கையாக இருந்து சங்கிக் கும்பலின் சதித் திட்டத்தை முறியடிக்க வேண்டியது நம் அனைவரின் உடனடிக் கடமையாக உள்ளது.
தோழர் ரவி
சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram