திமுக அரசின் கார்ப்பரேட் ஆதரவு திட்டமும், RSS-BJP-யின் தொழிற்சங்கப் பிரிவான BMS-ன் எதிர்ப்பும்!

பாசிச பாஜக-வை முறியடிப்பதுதான் இன்று நமது இலக்கு; அதனால் திமுக உள்ளிட்ட மாநில கட்சிகளை விமர்சித்தால் பாஜக உள்ள வந்துவிடும் என்று, திமுக அரசின் கார்ப்பரேட் நலத் திட்டங்களை எதிர்க்காமல் விட்டால் BMS போன்ற பாசிச சக்திகள்தான் வளர்ச்சியடையும்.

0

மிழ்நாட்டிலேயே முதன்முறையாக Public Private Partnership (PPP) என்ற பெயரில் தனியார் பங்களிப்போடு நீரேற்று மின் நிலையங்களை அமைக்கப்போவதாக  திமுக அரசு சென்ற ஆண்டு  அறிவித்திருந்தது.

இவ்வாண்டு தமிழக அரசின் பட்ஜெட்டில் மேற்கண்ட PPP திட்டத்தில் 15 நீரேற்று மின் நிலையங்களை அமைப்பதன் மூலம் 14500 MW அளவிலான மின்உற்பத்தியை உருவாக்க ரூ.77000 கோடி ஒதுக்கீடு செய்யும் அறிவிப்பையும் வெளியிட்டிருந்தது.

மேற்கண்ட மின் நிலையங்கள் அமைக்கும் ஆணையை ஒன்றிய பொதுத்துறை நிறுவனமான BHEL-க்கு வழங்காமல் தனியாருக்கு கொடுப்பதை எதிர்த்து, RSS-BJP-யின் தொழிற்சங்க பிரிவான BMS (பாரதீய மஸ்தூர் சங்கம்) பல்வேறு கட்ட கவனஈர்ப்பு போராட்டங்களை திருச்சி பெல் ஆலைப் பகுதிகளில் நடத்தி வருகிறது.

படிக்க : தேவாலயங்களின் மீது அதிகரித்து வரும் காவிகளின் தாக்குதல்கள்!

தனியார்மயத்தை நாடு முழுவதிலும் அசுர வேகத்தில் அமல்படுத்தி வருகிறது பாஜக. அதன் தொழிற்சங்கமான BMS தனியார்மயத்தை எதிர்ப்பதாகவும், பொதுத்துறைகளை காக்கப் போராடுவதாகவும் சொல்வது “ஆடு நனைகிறதே என்று ஓநாய் கவலைப்பட்ட கதை”யாக இருக்கிறது.

நாடு முழுவதும் சுமார் ரூ.25 லட்சம் கோடி மதிப்பிலான 1824 அரசு – தனியார் கூட்டு (PPP) திட்டங்களை நடைமுறைப்படுத்தியுள்ளதாக மோடி அரசே தனது வலைத்தள பக்கத்தில் தெரிவித்துள்ளது. மேலும் ரயில்வே, மின் உற்பத்தி, துறைமுகம் உள்ளிட்ட அனைத்து துறைகளிலும் கார்ப்பரேட் முதலாளிகள் லாபம் கொழிக்க அரசு – தனியார் கூட்டு (PPP) திட்டங்களையே கொண்டு வந்து மிக வேகமாக நடைமுறைப்படுத்தியும் வருகிறது.

“நாட்டின் மின்துறையை மேம்படுத்த அரசு தனியார் கூட்டு (PPP) திட்டங்கள் அவசியம்” என்று பிரதமர் மோடி வெளிப்படையாகவே பேசி வருகிறார். நாட்டின் மின்துறையை மொத்தமாகத் தனியார்மயமாக்கும் திட்டத்தோடு செயல்பட்டு வரும் மோடி அரசு, மாநில அரசுகளையும் நிர்பந்தித்து வருகிறது. அதற்காகவே “உதய் மின் திட்டம்”, “புதிய மின்சார திருத்தச் சட்டம்” போன்ற திட்டங்களை அடுத்தடுத்து ஏவி வருகிறது.

நாட்டின் மிகப்பெரிய பொதுத்துறை மின் உபகரணங்கள் உற்பத்தி நிறுவனமான பெல் நிறுவனம் நலிவடைய அடிப்படைக் காரணங்களே மோடி அரசின் கார்ப்பரேட் கொள்கைகள் தான்.

உதாரணமாக, பாஜக அரசின் தனியார்மய நடவடிக்கைகளை உள்ளிருந்தே செயல்படுத்தவதற்கு, பெல் நிறுவனத்தின் இயக்குநர்களாக நேரடியாகவே பாஜக ஆட்களை நியமித்து வருகிறது.

மேலும் “ஆத்ம நிர்பார் பாரத்” (சுயசார்பு இந்தியா)என்ற கொள்கைகளால், பொதுத்துறை நிறுவனங்கள் மூலப்பொருட்களை கொள்முதல் செய்வதற்கான சூழல் பாதகமாகவும் நட்டம் ஏற்படும் வகையிலும் மாறியுள்ளது.

இதனால் தனியார் நிறுவனங்களோடு கடுமையான போட்டி போட வேண்டிய சூழல் பெல் நிறுவனத்திற்கு உருவாகியுள்ளது. மேற்கண்ட குறிப்பிட்ட தனியார்மய ஆதரவு நடவடிக்கைகளையும், தனியார்மய – தாராளமய – உலகமயக் கொள்கைகளையும் மிகத்தீவிரமாக மோடி அரசு அமல்படுத்தியது தான் பெல் நிறுவனம் நலிவடையக் காரணங்களாகும். BMS சங்கம் இதைப்பற்றியெல்லாம் இதுவரை வாய் திறந்ததில்லை.

மேலும், பொதுத்துறைகளை தனியார் கார்ப்பரேட் முதலாளிகளுக்கு அடிமாட்டு விலைக்கு விற்பதற்கென்று ஒரு தனித் துறையையே (Department of Investment and Public Asset Management (DIPAM) உருவாக்கி கார்ப்பரேட்டுகளுக்கு சேவைசெய்து வருகிறது மோடி அரசு. Strategic sale என்ற பெயரில் பல்வேறு பொதுத்துறை நிறுவனங்களை கடந்த 9 ஆண்டு காலத்தில் மொத்தமாகவே தனியார் கார்ப்பரேட் முதலாளிகளுக்கு விற்றுள்ளது.

அதுமட்டுமல்லாமல் (National Monetisation Pipeline) “தேசிய பணமாக்கல் திட்டம்” என்ற பெயரில் பொதுத்துறை மற்றும் அரசின் சொத்துக்களை பல வருடங்களுக்கு தனியாருக்கு குத்தகை எனும் பெயரில் தாரைவார்க்கும் திட்டத்தையும் செயல்படுத்தி வருகிறது.

இதற்கெல்லாம் சிகரம் வைத்தார்போல் “தொழில்களை நடத்துவது அரசின் வேலையல்ல; அது தனியார் கார்ப்பரேட் முதலாளிகளின் வேலை” (“Government has ‘no business to be in business”) என்கிறார் மோடி.

ஒட்டுமொத்த பொதுத்துறை நிறுவனங்களையும் தனியாருக்கு தாரைவார்க்கும் பாஜகவை கண்டுகொள்ளாத BMS சங்கம், நீரேற்று மின்திட்ட விவகாரத்தில் திமுகவிற்கு எதிராக மட்டும் போர்க்கொடி பிடிக்கிறது. இங்கே திமுக அரசின் தனியார்மய ஆதரவு நடவடிக்கைகளை எதிர்ப்பதாக காட்டி பொதுத்துறை தொழிலாளர்கள் மற்றும் ஊழியர்கள் மத்தியில் தனது செல்வாக்கை நிறுவிக்கொள்ள முயலும் BMS, ஒன்றிய RSS-BJP அரசின் மேற்கண்ட கார்ப்பரேட் ஆதரவு தனியார்மய நடவடிக்கைகளுக்கு எதிராக ஒருபோதும் இதுபோல போராடியது கிடையாது.

மோடி ஆட்சிக்கு வந்தபிறகு ஒன்றிய அரசின் கார்ப்பரேட் ஆதரவு, தொழிலாளர் விரோத, மக்கள் விரோத கொள்கைகளுக்கு எதிராக அகில இந்திய அளவில் தொழிற்சங்கங்கள் நடத்தும் அடையாள வேலை நிறுத்தப் போராட்டங்களில் கூட ஒருபோதும் BMS கலந்துகொண்டது கிடையாது.

படுமோசமான ஊழல் கட்சியும், கார்ப்பரேட் சேவையில் உலகில் நிகரற்ற பாசிச தன்மையும் கொண்ட பாஜக-வின் தொழிலாளர் அமைப்பு, தனியார்மயத்திற்கு எதிராக பொதுத்துறை பாதுகாப்பு என கூச்சல் போடுவது நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு மாநில கட்சிகளை ஒழித்துக்கட்டவும், தொழிலாளர்களை ஏய்த்துப் பிழைக்கவும்  நடத்தும் நாடகமேயன்றி வேறொன்றுமில்லை.

BMS-ன் இந்த இரட்டை வேடத்தை தோலுரித்துக் காட்டி பொதுத்துறை ஊழியர்கள் மற்றும் தொழிலாளர்கள் மத்தியில் செல்வாக்கிழக்கச் செய்ய வேண்டியது இன்று நாட்டில் நிலவும் காவி – கார்ப்பரேட் பாசிசத்திற்கு எதிரான செயல் திட்டங்களில் ஒன்றாகும்.

படிக்க : கட்சித் தாவல்களும் மத்திய புலனாய்வு முகமைகளும்!

அதே நேரம் திமுக அரசின் தனியார்மய நடவடிக்கைகளை எதிர்க்காமல் இருக்க வேண்டும் என்று அர்த்தமில்லை. 12 மணி நேர வேலைச் சட்டத்தை திமுக அரசு கொண்டு வந்தபோது அதை தொமுச உட்பட அனைத்து தொழிற்சங்கங்களும் ஜனநாயக சக்திகளும் எதிர்த்து முறியடித்ததுபோல, திமுக அரசின் தனியார்மய நடவடிக்கைகளை எதிர்த்து அனைத்து தொழிற்சங்கங்களும் ஜனநாயக சக்திகளும் போராட வேண்டும்.

பாசிச பாஜக-வை முறியடிப்பதுதான் இன்று நமது இலக்கு; அதனால் திமுக உள்ளிட்ட மாநில கட்சிகளை விமர்சித்தால் பாஜக உள்ளே வந்துவிடும் என்று, திமுக அரசின் கார்ப்பரேட் நலத் திட்டங்களை எதிர்க்காமல் விட்டால் BMS போன்ற பாசிச சக்திகள்தான் வளர்ச்சியடையும்.

எனவே, திமுக அரசின் கார்ப்பரேட் ஆதரவு நடவடிக்கைகளை எதிர்த்த தொழிற்சங்கங்கள், ஜனநாயக சக்திகளின் செயலொற்றுமை தான், பாசிச சக்திகளை தமிழக உழைக்கும் மக்களிடமிருந்து தனிமைப்படுத்தி ஒன்றிய பாசிச பாஜக அரசையும் கார்ப்பரேட் சூறையாடல்களையும் எதிர்த்து முறியடிக்க உதவும்.


பாரி

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க