2023 ஆம் ஆண்டில் தற்போது வரை, 23 மாநிலங்களில் கிறிஸ்தவர்களுக்கு எதிரான 400 தாக்குதல் சம்பவங்கள் பதிவாகியுள்ளது. அதில், 155 தேவாலயங்கள் மீதான தாக்குதல்களுடன் உத்தரப்பிரதேசம் முதலிடத்தில் இருக்கிறது என்று யுனைடெட் கிறிஸ்டியன் ஃபோரம் (யு.சி.எஃப்) தெரிவித்துள்ளது.
மணிப்பூரில் 2 மாதங்களுக்கும் மேலாக நீடித்துவரும் வன்முறையால் எண்ணற்ற தேவாலயங்கள் தாக்கப்பட்டதாகவும், பலர் கொல்லப்பட்டதாகவும் யு.சி.எஃப் செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
உத்தரப்பிரதேசத்தில், ஆறு மாவட்டங்களில் கிறிஸ்தவர்களுக்கு எதிரான தாக்குதல் சம்பவங்கள் பதிவாகியுள்ளன. ஜான்பூர் மாவட்டத்தில் 13 தேவாலயங்கள் தாக்கப்பட்டுள்ளன. அதைத் தொடர்ந்து ரேபரேலி மற்றும் சீதாபூர் ஆகிய மாவட்டங்களில் தலா 11 தாக்குதல்கள்; கான்பூர் மாவட்டத்தில் 10 தாக்குதல்கள், அசம்கர் மற்றும் குஷிநகர் ஆகிய மாவட்டங்களில் தலா 9 தக்குதல்கள் பதிவுசெய்யப்பட்டுள்ளன. சத்தீஸ்கரின் பஸ்தாரில் 31 என்ற எண்ணிக்கையில் அதிக ஆவணப்படுத்தப்பட்ட தாக்குதல் சம்பவங்கள் அரங்கேறியுள்ளது என UCF தெரிவித்துள்ளது.
படிக்க : பழங்குடியினர் மீது சிறுநீர் கழித்த சங்கியை விமர்சித்தால் வழக்கு!
கடந்த 2023 ஜூன் மாதத்தில் 88 ஆவணப்படுத்தப்பட்ட தாக்குதல் சம்பவங்கள் பதிவாகியுள்ளது. அதாவது சராசரியாக ஒரு நாளைக்கு மூன்று தாக்குதல் சம்பவங்கள் வீதம் அரங்கேற்றப்பட்டிருக்கிறது என்ற அதிர்ச்சி தகவல் யு.சி.எஃப் கூறியுள்ளது. இந்த மாதம் தாக்குதல்களுக்கான மாதம் என்று வரையறுக்கிறது. அதைத் தொடர்ந்து, மார்ச் மாதத்தில் 66 தாக்குதல் சம்பவங்களும், பிப்ரவரி மாதத்தில் 63 தாக்குதல் சம்பவங்களும், ஜனவரி மாதத்தில் 62 தாக்குதல் சம்பவங்களும், மே மாதத்தில் 50 தாக்குதல் சம்பவங்களும், ஏப்ரல் மாதத்தில் 47 தாக்குதல் சம்பவங்களும் பதிவாகியுள்ளன.
2022 ஆம் ஆண்டின் இதே நேரத்தில், ஜனவரி மாதத்தில் 121 என்ற எண்ணிக்கையில் அதிக எண்ணிக்கையிலான தேவாலயங்கள் மீதான தாக்குதல் சம்பவங்கள் அரங்கேற்றப்பட்டிருக்கின்றன என்பது குறிப்பிடத்தக்கது. கிறிஸ்தவர்களுக்கு எதிராக இந்த ஆண்டு நாடு முழுவதும் அரங்கேற்றப்பட்ட 400 தாக்குதல் சம்பவங்களை யு.சி.எஃப் மிகவும் வேதனையுடன் பதிவு செய்துள்ளது.
உத்தரப்பிரதேசம் 155 தேவாலய தாக்குதல் சம்பவங்களுடன் முதலிடத்தில் உள்ளது. அதைத் தொடர்ந்து சத்தீஸ்கரில் 84, ஜார்க்கண்டில் 35, ஹரியானாவில் 32, மத்தியப் பிரதேசத்தில் 21, பஞ்சாபில் 12, கர்நாடகாவில் 10, பீகாரில் 9, ஜம்மு & காஷ்மீர் மாநிலத்தில் 8 மற்றும் குஜராத்தில் 7 என்ற எண்ணிக்கைகளில் தாக்குதல் சம்பவங்கள் பதிவாகியுள்ளது. இதைத் தவிர உத்தரகண்ட், தமிழ்நாடு, மேற்கு வங்காளம், இமாச்சலப் பிரதேசம், மகாராஷ்டிரா, ஒடிசா, டெல்லி, ஆந்திரப் பிரதேசம், அசாம், சண்டிகர் மற்றும் கோவா ஆகிய மாநிலங்களிலும் பல தேவாலய தாக்குதல் சம்பவங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
2014 ஆம் ஆண்டிலிருந்து தற்போது வரை கிறிஸ்தவர்களுக்கு எதிரான தாக்குதல் சம்பவங்கள் மிகவும் ஆபத்தான நிலையை எட்டியுள்ளது என்று யு.சி.எஃப் தெரிவித்துள்ளது. அவற்றைப் பின்வரும் புள்ளிவிவரங்களில் இருந்து காண்போம். 2014 ஆண்டில் 147, 2015 ஆண்டில் 177, 2016 ஆண்டில் 208, 2017 ஆண்டில் 240, 2018 ஆண்டில் 292, 2019 ஆண்டில் 328, 2020 ஆண்டில் 279, 2021 ஆண்டில் 505, 2022 ஆண்டில் 599, 2023 ஆண்டின் முதல் 190 நாட்களில் 400 என்ற எண்ணிக்கையில் தாக்குதல் சம்பவங்கள் பதிவாகியுள்ளது. முந்தைய ஆண்டில் 274 தாக்குதல் சம்பவங்கள் பதிவாகியது என்பது குறிப்பிடத்தக்கது.
படிக்க : ஏ.ஐ. லிசாக்களும் வேலையை இழக்கும் ஹென்றிக்களும்
கும்பல் வன்முறையில் ஈடுபடும் காவிக்குண்டர்கள் மீது போதுமான அளவு விசாரணை செய்து தண்டனை வழங்குவதில் போலீசுத்துறை பெரும்பாலும் தவறிவிடுவதாக யு.சி.எஃப் குற்றம்சாட்டியுள்ளது.
நாடுமுழுவதும் காவிக் குண்டர்களின் கிருத்துவ சிறுபான்மையினருக்கு எதிரான தாக்குதல்கள், தேவாலயங்கள் மீதான தாக்குதல்கள் தீவிரமடைந்து வருகிறது என்பதையும், போலீசு குண்டர்களின் மீதான நடவடிக்கைகளை மிகவும் சொற்பமாகவே செய்கிறது என்பதையும் யு.சி.எஃப்-ன் புள்ளிவிரவங்கள் நமக்கு எடுத்துக்காட்டுகின்றன.
கல்பனா
செய்தி ஆதாரம்: siasat