கட்சித் தாவல்களும் மத்திய புலனாய்வு முகமைகளும்!

எம்.எல்.ஏ-க்களின் குதிரை பேரமும் கட்சித் தாவல் நடவடிக்கைகளும் முந்தைய அரசாங்கங்களின் போதும் நடைபெற்றுள்ளன. ஆனால் பாசிச பா.ஜ.க அரசு அதை அடுத்த கட்டத்திற்குக் கொண்டு சென்றுள்ளது.

0

மீபத்தில் தேசியவாத காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரும் கட்சித் தலைவர் சரத் பவாரின் அண்ணன் மகனுமான அஜித் பவார் பா.ஜ.க கூட்டணியில் இணைந்து மகாராஷ்டிராவின் துணை முதல்வராகப் பதவியேற்றுக்கொண்டார். அவருடன் இருந்த 8 சட்டமன்ற உறுப்பினர்கள் அமைச்சர்களாகப் பதவியேற்றுக்கொண்டனர். கட்சியின் 40 சட்டமன்ற உறுப்பினர்களின் ஆதரவு தனக்கு இருப்பதாகவும், கட்சியின் கொடி, சின்னம் அனைத்தும் தங்களின் அணிக்கே சொந்தம் என்றும் அவர் கூறினார். மகாராஷ்டிரா மாநிலத்தில், கடந்த இரண்டு ஆண்டுகளில் மட்டும், பா.ஜ.க இது போன்ற கட்சித் தாவல்களை இருமுறை நடத்தியுள்ளது.

முன்னதாக, 2022-ஆம் ஆண்டு ஜூன் மாதத்தில் மொத்தமுள்ள 55 சிவ சேனா சட்டமன்ற உறுப்பினர்களில் 40 பேர் ஏக்நாத் ஷிண்டே தலைமையில் கட்சியைவிட்டு விலகினர். அதனையடுத்து மகாராஷ்டிரா விகாஸ் அகாடி (Maharashtra Vikas Aghadi – MVA) அரசு ஆட்சியை இழந்தது. பின்னர், ஷிண்டே பா.ஜ.க-வோடு கூட்டணியமைத்து முதல்வராகப் பதவியேற்றார்.

கட்சித் தாவல்களின் வரலாறு

கட்சித் தாவல் என்பது பாசிச இருள் சூழ்ந்துள்ள தற்போதைய காலகட்டத்தில் நடைபெற்றுவரும் புதியதொரு நிகழ்வல்ல. அது ‘சுதந்திர’ இந்தியாவில் வழக்கமாக நடைபெற்று வரும் நிகழ்வாகும். ‘சுதந்திர’த்திற்குப் பின்பு, காங்கிரஸ் சோசலிச கட்சி மற்றும் ஜனா காங்கிரஸ் ஆகிய கட்சிகள் கட்சித் தாவலின் மையங்களாக விளங்கின. 1960-களில், குறிப்பாக 1967-ஆம் ஆண்டில், காங்கிரஸ் பல மாநிலங்களில் ஆட்சியை இழந்தபோது கட்சித் தாவல் சம்பவங்கள் அதீத அளவில் நடைபெற்றன.

ஆரம்பத்தில் கட்சித் தாவல்களின் மையமாக இருந்த ஹரியானாவில் இருந்துதான் ”ஆயா ராம் கயா ராம்” என்ற பிரபலமான சொற்றொடர் தோன்றியது. கயா லால் என்ற ஒரு சட்டமன்ற உறுப்பினர் ஒரு வருடத்திற்குள் பல அரசாங்கங்களைக் கவிழ்க்க உதவினார். கயா லால் ஒரே நாளில் 3 மூன்று முறையும், 15 நாட்களில் 4 முறையும் கட்சி தாவியவர் என்பது குறிப்பிடத்தக்கது. 1980-களில் பஜன் லால் தனது ஆட்சியைத் தக்கவைத்துக் கொள்வதற்காக ஹரியானாவின் கயா லாலாக மாறினார். ’பண்ணைவீடு அரசியல்’ (farmhouse politics) என்ற சொல் கூட ஹரியானாவில் தோன்றியதுதான். ஏனெனில் சட்டமன்ற உறுப்பினர்கள் மற்ற கட்சிகளுக்குத் தாவாமல் தடுப்பதற்காகப் பண்ணை வீட்டில் தங்குமாறு கேட்டுக் கொள்ளப்பட்டனர். இது தற்போதைய ’ரிசார்ட்’ அரசியலின் முந்தைய வடிவமாகும்.

‘சுதந்திர’த்திற்குப் பிறகு, முதல் நான்கு தசாப்தங்களில் காங்கிரஸ் பல கட்சி தாவல்களை நடத்தியுள்ளது. மத்தியில் வலுவான காங்கிரஸ் அரசாங்கம் இருந்த போதெல்லாம், மற்ற கட்சிகளைச் சேர்ந்த எம்.எல்.ஏ-க்கள், எம்.பி-க்கள் காங்கிரசுக்குத் தாவினர். 1971-ஆம் ஆண்டில் இந்திரா காந்தி ஆட்சியில் இந்தியா முழுவதும் கட்சித் தாவலினால் அரசாங்கங்கள் கவிழ்க்கப்பட்டன. மேலும், 1980-ஆம் ஆண்டில் இந்திரா ஆட்சி மீண்டும்  அமைந்தபோது இம்மாதிரியான ஆட்சிக்கவிழ்ப்பு நடவடிக்கைகள் மீண்டும் நடத்தப்பட்டன.

மொரார்ஜி தேசாய் அரசாங்கத்திலிருந்து 76 எம்.பி-க்கள் கட்சி தாவியதன் மூலம் இந்திரா காந்தி மீண்டும் ஆட்சியமைத்தார். அதனையடுத்து, கம்யூனிஸ்ட் அல்லாத எதிர்க்கட்சிகளைச் சேர்ந்த சட்டமன்ற உறுப்பினர்கள் காங்கிரஸில் இணைந்து நாடு தழுவிய அளவில் பல மாநிலங்களில் அரசாங்கங்களை அமைக்க இந்திரா காந்திக்கு உதவினர். உதாரணமாக, இமாச்சலப் பிரதேசத்தில் ஆளும் ஜனதா கட்சி காங்கிரசில் இணைந்தது; இதேபோல், ஹரியானாவில் 21 எம்.எல்.ஏ-க்களுடன் பஜன் லால் காங்கிரசுக்குத் தாவினார். அதேசமயம், 1980-களில் ஆட்சியில் நீடிப்பதற்காகக் காங்கிரஸை விட்டு வெளியேறவும் பஜன் லால் போன்றவர்கள் தயங்கவில்லை.


படிக்க: இந்திரா காந்தியின் எமர்ஜென்சியும் சங்கப் பரிவாரத்தின் ஆதரவும்!


இந்த கட்சித் தாவல்களுக்கு அதிகார‌ ஆசை போன்ற காரணங்கள் இருந்தாலும் பல கட்சி அரசியல் அமைப்பில் ஆதிக்கம் செலுத்தும் கட்சியாக காங்கிரஸின் தனித்துவமான இருப்பு என்பதுதான் முதன்மைக் காரணமாக அமைந்தது. இந்திய அரசியல் சக்திகள் காங்கிரஸ் ஆதரவு, காங்கிரஸ் எதிர்ப்பு என இரு பிரிவுகளாகப் பிரிந்தன.

காங்கிரஸில் கருத்தியல் அடித்தளம் இல்லாதது கட்சி தாவல்களுக்கு முக்கியக் காரணமாகும். எடுத்துக்காட்டாக, 1980-களில் கம்யூனிஸ்ட் கட்சிகளும் பாஜகவும் கட்சி தாவல்களில் இருந்து தப்பின. இதற்கு நேர்மாறாக, பிற சாதி அடிப்படையிலான, குடும்ப அடிப்படையிலான கட்சிகளால் இதிலிருந்து தப்ப முடியவில்லை.

கட்சித் தாவலை அதிகமாக அரங்கேற்றிய காங்கிரஸ் கட்சிதான் 1985-ஆம் ஆண்டு ராஜீவ் காந்தி  ஆட்சியில் கட்சித் தாவல் தடைச் சட்டத்தை இயற்றியது. ஆனால், அதன் பின்னரும் கட்சித் தாவல்கள் தடையின்றி நடைபெற்றன. மூன்றில் ஒரு பங்கு உறுப்பினர்கள் கட்சி மாறினால் கட்சித் தாவல் தடைச் சட்டத்தின்படி நடவடிக்கை எடுக்கப்படமாட்டாது என்று ஆரம்பத்தில் இருந்தது. பின்னர், அது 2003-ஆம் ஆண்டில் மூன்றில் இரண்டு பங்கு என்று மாற்றப்பட்டது.

பாசிச பா.ஜ.க பெரும்பான்மை பெற்ற பின்பு

2014-ஆம் ஆண்டில் நரேந்திர மோடி பிரதமராவதற்கு முன்பு, பா.ஜ.க ஒப்பீட்டளவில் பல மாநிலங்களில் வலுவாக இருந்தது. மத்தியப் பிரதேசம், குஜராத், சத்தீஸ்கர் மற்றும் கோவாவில் அரசாங்கங்களைக் கொண்டிருந்தது; பீகார் மற்றும் பஞ்சாப் போன்ற மாநிலங்களின் அரசாங்கங்களில் ஒரு கூட்டாளியாக இருந்தது.

2014 மக்களவைத் தேர்தலில் பா.ஜ.க தனிப்பெரும்பான்மை பெற்று ஆட்சியைப் பிடித்ததும் காங்கிரஸில் இருந்து பா.ஜ.க-விற்கு கட்சித் தாவல்கள் தொடங்கிவிட்டன. மக்களவையில் காங்கிரஸை 44 இடங்களாகக் குறைத்த ‘மோடி அலை’யில் சவாரி செய்ய பல தலைவர்கள் கட்சி மாறி பா.ஜ.க-வில் இணைந்தனர். ஹரியானா, அசாம், உத்தரகண்ட், உத்தரப்பிரதேசம் போன்ற மாநிலங்களின் தேர்தல்களில் பா.ஜ.க வெற்றி பெறுவதற்குக் காங்கிரஸில் நடந்தேறிய இந்த கட்சி விலகல்கள் முக்கியமானவை.

அதே நேரத்தில், தனது ‘காங்கிரஸ் இல்லாத இந்தியா’(காங்கிரஸ்-முக்த் பாரத்) திட்டத்தைத் தொடங்கியபோது, எம்.எல்.ஏ-க்களை ஈர்க்க திருத்தப்பட்ட கட்சித் தாவல் தடைச் சட்டத்தின் உதவியை நாடியது பா.ஜ.க. ஒரு கட்சியின் மூன்றில் இரண்டு பங்கு எம்.எல்.ஏ-க்கள் கட்சி மாறினால் அது தகுதி நீக்கத்திற்கு வழிவகுக்காது என்பதால் அதைத் தனது இலக்காக பா.ஜ.க நிர்ணயித்துக் கொண்டது.

அருணாச்சல பிரதேசத்தில் 2014 தேர்தலில் காங்கிரஸ் 47 இடங்களில் வெற்றி பெற்றது. இருப்பினும், இரண்டு ஆண்டுகளுக்குள் முதல்வர் பெமா காண்டு மற்றும் பிற எம்.எல்.ஏ-க்கள் அருணாச்சல மக்கள் கட்சிக்கு (People’s Party of Arunachal) தாவினர். இதனால் காங்கிரஸின் பலம் ஒரு இடமாகக் குறைந்தது. பின்னர், காண்டு பா.ஜ.க-வுடன் கூட்டணி அமைத்து முதல்வராகத் தொடர்ந்தார்.


படிக்க: டெல்லி அரசின் நிர்வாக அதிகாரம் பறிப்பு: மோடி அரசின் சட்டப்பூர்வ பாசிச நடவடிக்கை!


மணிப்பூரில் 2017 சட்டமன்றத் தேர்தலில் காங்கிரஸ் அதிக இடங்களை வென்ற பின்னர் பா.ஜ.க இதேபோன்ற ஒன்றைச் செய்தது. நாகா மக்கள் முன்னணி (என்.ஜி.எஃப்) மற்றும் தேசிய மக்கள் கட்சி‌ (என்.பி.பி) ஆகிய பிராந்திய கட்சிகளுடனும் ஒரு காங்கிரஸ் எம்.எல்.ஏ-வின் ஆதரவுடனும் பா.ஜ.க அரசாங்கத்தை அமைத்தது. கட்சி மாறிய அந்த ஒரு காங்கிரஸ் எம்.எல்.ஏ கட்சியிலிருந்து விலகவில்லை. மாறாக அவர் புதிய அரசாங்கத்தில் அமைச்சரானார்.

கர்நாடகாவில் 2008-ஆம் ஆண்டில் பா.ஜ.க ‘ஆபரேஷன் லோட்டஸ்’-ஐ வெற்றிகரமாக மேற்கொண்டது. அந்த அனுபவத்தைக் கொண்டு 2019-ஆம் ஆண்டில் அங்கு காங்கிரஸ்-மதச்சார்பற்ற ஜனதா தளம் அரசாங்கத்தைக் கவிழ்த்து, 2018-இல் இழந்த ஆட்சியை பா.ஜ.க மீண்டும் கைப்பற்றிக் கொண்டது. காங்கிரஸ் எம்.எல்.ஏ-க்கள் 13 பேர், மதச்சார்பற்ற ஜனதா தளத்தைச் சேர்ந்த எம்.எல்.ஏ-க்கள் மூவர் மற்றும் கே.பி.ஜே.பி-யைச் (KPJP) சேர்ந்த ஒரு எம்.எல்.ஏ ஆகியோர் பா.ஜ.க-வுக்குத் தாவினர்.

2014-ஆம்‌ ஆண்டு முதல் 405 எம்.எல்.ஏ-க்கள் தங்கள் கட்சிகளிலிருந்து விலகியதாக ஜனநாயக சீர்திருத்த சங்கத்தின் (ADR) 2020-ஆம் ஆண்டு அறிக்கை கண்டறிந்துள்ளது. அவர்களில் 182 பேர் (44.9%) பா.ஜ.க-வில் இணைந்தனர். இந்த 405 எம்.எல்.ஏ-க்களில் 170 பேர் (42%) காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்தவர்கள்.

2020-ஆம் ஆண்டு மார்ச் மாதத்தில் கரோனா பெருந்தொற்று இந்தியாவின் கதவுகளைத் தட்டிக்கொண்டிருந்தபோது, பா.ஜ.க மற்றுமொரு அரசாங்கத்தைக் கவிழ்ப்பதில் மும்முரமாக ஈடுபட்டிருந்தது. மத்திய பிரதேசத்தில் 21 காங்கிரஸ் எம்.எல்.ஏ-க்கள் அக்கட்சியிலிருந்து விலகி பா.ஜ.க-வில் இணைந்தனர். இது கமல்நாத் அரசாங்கத்தின் வீழ்ச்சிக்கு வழிவகுத்தது. தேர்தலில் தோல்வியடைந்த மற்றுமொரு மாநிலத்தில் பாஜக மீண்டும் ஆட்சியைப் பிடித்தது.

பாசிச பா.ஜ.க-வும் மத்திய புலனாய்வு முகமைகளும்!

ஆரோக்கியமான ஜனநாயகத்தில் பெரும்பான்மை இருந்தால் ஒரு கட்சி அல்லது கூட்டணி ஆட்சியமைக்க முடியும். மோடி ஆட்சியில் இந்த நிலைமை மாற்றப்பட்டுவிட்டது. எதிர்க்கட்சி ஆட்சி அமைத்தாலும் அதன் தலைவர்கள் மத்திய புலனாய்வு முகமைகளால் துன்புறுத்தப்படுகின்றனர். 2014-ஆம் ஆண்டு முதல், அமலாக்கத்துறை சுமார் 121 அரசியல் தலைவர்களிடம் விசாரணை நடத்தியுள்ளது. இவர்களில் 115 பேர் (95%) பா.ஜ.க அல்லாத கட்சிகளைச் சேர்ந்தவர்கள்.

ஒரு எதிர்க்கட்சித் தலைவர் பா.ஜ.க-வுக்குத் தாவ முடிவு செய்தால் மத்திய புலனாய்வு முகமைகளின் விசாரணைகள் வலுவிழந்து விடுகின்றன. காங்கிரஸில் இருந்து பா.ஜ.க-வில் இணைந்த அசாம் முதல்வர் ஹிமந்த பிஸ்வா சர்மா, மேற்கு வங்கத்தில் சுவேந்து அதிகாரி எனப் பலரின் மீதான வழக்குகள் பா.ஜ.க-வில் அவர்கள் இணைந்ததும் கிடப்பில் போடப்பட்டன; கைவிடப்பட்டன.

ஆனால், எதிர்க்கட்சித் தலைவர்களுக்கு எதிரான துன்புறுத்தல்கள் தடையின்றித் தொடர்ந்தது. சி.பி.ஐ-யும் (CBI) அமலாக்கத்துறையும் (EB) இணைந்து எதிர்க்கட்சிகளின் முக்கிய தலைவர்கள் மீது பல வழக்குகளைப் பதிவு செய்கின்றன. ராஷ்ட்ரிய ஜனதா தள தலைவர் தேஜஸ்வி யாதவும், அவரது குடும்பத்தினரும் குறிவைக்கப்படுவது இதற்கு ஒரு உதாரணம். மற்றொரு உதாரணம் டெல்லி துணை முதல்வர் மணீஷ் சிசோடியா. இதுபோன்ற பல வழக்குகளில் அரசியல் தலைவர்களை சிறையில் அடைப்பதற்காக பணமோசடி தடுப்புச் சட்டத்தின் (Prevention of Money Laundering Act) கடுமையான விதிகளை அமலாக்கத் துறை பயன்படுத்துகிறது.

இந்த செயல்முறையை பா.ஜ.க வெற்றிகரமாகப் பயன்படுத்தி வருகிறது. ஹிமந்த பிஸ்வா சர்மா, சுவேந்து அதிகாரி, நாராயண் ரானே போன்ற தலைவர்கள் பா.ஜ.க-வுக்குத் தாவிய நிலையில், கட்சி மாறாத மற்றவர்கள் விசாரணை மற்றும் தண்டனை செயல்முறைக்கு உட்படுத்தப்படுகின்றனர்.

இந்த தந்திரத்தைப் பயன்படுத்தி, 2022-ஆம் ஆண்டில், மகாராஷ்டிராவில் மகா விகாஸ் அகாடி (எம்.வி.ஏ) அரசாங்கத்தை பா.ஜ.க கவிழ்த்தது. யாமினி ஜாதவ், பாவனா கவாலி, பிரதாப் சர்நாயக் போன்ற சிவசேனா தலைவர்கள் ஷிண்டே முகாமில் சேருவதற்கு முன்பு அவர்கள் மீது அமலாக்கத் துறையால் வழக்குகள் பதிவு செய்யப்பட்டிருந்தன. இதேபோல், சமீபத்தில் கட்சி தாவிய தேசியவாத காங்கிரசைச் சேர்ந்த பல எம்.எல்.ஏ-க்கள் மற்றும் எம்.எல்.சி-க்கள் மீதும் அமலாக்கத்துறை வழக்குகள் இருந்தன.


படிக்க: இது பாசிஸ்டுகளுக்கான ‘ஜனநாயகம்’! பாசிச எதிர்ப்பு ஜனநாயகக் குடியரசுக்காக போராடுவோம்!


எம்.எல்.ஏ-க்களை தகுதி நீக்கம் செய்ய ஒரு கட்சிக்கு வலுவான காரணம் இருந்தாலும், தகுதி நீக்க மனுக்கள் மீதான முடிவுகளைத் தாமதப்படுத்த சபாநாயகரின் அதிகாரம் பயன்படுத்தப்படுகிறது. ஷிண்டே அணி எம்.எல்.ஏ-க்களுக்கு எதிராக சிவசேனா தாக்கல் செய்த தகுதி நீக்க மனுக்கள் மீது மகாராஷ்டிரா சபாநாயகர் இன்னும் முடிவு எடுக்கவில்லை; எடுக்கவும் போவதில்லை.

முக்கியமான தேர்தல்களுக்கு முன்பு மத்திய புலனாய்வு முகமைகள் எதிர்க்கட்சிகளின் தலைவர்கள் மீது சோதனை நடத்துவதென்பது ஒரு பொதுவான போக்காக உருவெடுத்து உள்ளது. 2021-ஆம் ஆண்டு ஏப்ரல் மாதத்தில் தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலுக்கு முன்பாக தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலினின் மகள் செந்தாமரைக்குச் சொந்தமான வீடுகளில் வருமான வரித்துறை சோதனை நடத்தியது. திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி அபிஷேக் பானர்ஜி மற்றும் அவரது குடும்பத்தினரும் இதேபோன்றதொரு தாக்குதலை எதிர்கொண்டனர்.

கேரள தேர்தலுக்கு முன்பு, தங்கக் கடத்தல் வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர்களில் ஒருவரான ஸ்வப்னா சுரேஷ் முதல்வர் பினராயி விஜயனின் உத்தரவு மற்றும் வற்புறுத்தலின் பேரில் அந்தக் குற்றத்தைச் செய்ததாக அமலாக்கத்துறை குற்றம் சாட்டியது. 2020-ஆம் ஆண்டு அக்டோபரில் கர்நாடக காங்கிரஸ் தலைவர் டி.கே.சிவக்குமாரிடம் சி.பி.ஐ சோதனை நடத்தியது. ராஜஸ்தான் மாநிலத்தில் அசோக் கெலாட்டுக்கும் சச்சின் பைலட்டுக்கும் இடையே காங்கிரஸில் அதிகார மோதல் ஏற்பட்டபோது ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட்டின் கூட்டாளிகளின் வீடுகளில் பல சோதனைகள் நடத்தப்பட்டன.

ஹரியானா மாநில காங்கிரஸ் தலைவர் பூபிந்தர் சிங் ஹூடா மீது, 2019 மக்களவைத் தேர்தலுக்கு முன்பாக, நிலம் கையகப்படுத்தியதாக வழக்குப் பதிவு செய்யப்பட்டது. தெலுங்கு தேசம் கட்சி பா.ஜ.க உடனான கூட்டணியை விட்டு வெளியேறியபோது அக்கட்சியின் தலைவர் சந்திரபாபு நாயுடுவுக்கும் இதே நிலைதான் ஏற்பட்டது.

எம்.எல்.ஏ-க்களின் குதிரை பேரமும் கட்சித் தாவல் நடவடிக்கைகளும் முந்தைய அரசாங்கங்களின் போதும் நடைபெற்றுள்ளன. ஆனால் பாசிச பா.ஜ.க அரசு அதை அடுத்த கட்டத்திற்குக் கொண்டு சென்றுள்ளது. எதிர்க்கட்சிகளை அச்சுறுத்துவதற்கும் துன்புறுத்துவதற்கும் பலவீனப்படுத்துவதற்கும் தன்னிடம் உள்ள அனைத்து வழிகளையும் பயன்படுத்துகிறது. எதிர்க்கட்சிகளை ஒழித்துக்கட்ட எத்தனிக்கிறது.

மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகளைக் கட்சி மாற வைக்க பா.ஜ.க கையாளும் இழிவான வழிமுறைகளை ‘மாஸ்டர் ஸ்ட்ரோக்கள்’ என்று ஆளும் வர்க்க ஊடகங்கள் பாராட்டுப் பத்திரம் வாசிக்கின்றன. எம்.எல்.ஏ-க்கள் குதிரை பேரம் செய்யப்படுவது ‘சாணக்கிய தந்திரம்’ என்று அழைக்கப்படுகிறது.

அடுத்த பொதுத் தேர்தல் நெருங்கிவிட்டதால், பாசிச பா.ஜ.க இந்த இழிவான உத்திகளைப் பயன்படுத்துவது மேலும் அதிகரிக்கும் என்பது திண்ணம்.

நாம்‌ இதில் இரண்டு விசயங்களைக் கவனிக்க வேண்டியுள்ளது. ஒன்று‌, கட்சித் தாவல் குறித்து; மற்றொன்று மத்திய புலனாய்வு முகமைகளின் அதிகாரம் குறித்து.

இந்தப் போலி ஜனநாயகக் கட்டமைப்பில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகள் மக்களுக்குப் பதிலளிக்கக் கடமைப்பட்டவர்களாக இருக்கத் தேவையில்லை. அவர்கள் கட்சித் தாவும்போது அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கவும் மக்களுக்கு அதிகாரம் இல்லை. இதனால் கட்சி தாவும் பேர்வழிகள் கலக்கமோ அச்சமோ இல்லாமல் தங்கள் விருப்பத்திற்கேற்ப கட்சி தாவுகிறார்கள்.

அதேபோல், இந்தப் போலி ஜனநாயகக் கட்டமைப்பு மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகள் மீது நடவடிக்கை எடுக்கும் அதிகாரத்தை மக்களால் தேர்ந்தெடுக்கப்படாத மத்திய புலனாய்வு முகமைகளுக்கு சட்டத்தின் மூலம் வழங்குகிறது. இந்த மத்திய புலனாய்வு முகமைகளைக் கொண்டுதான் பாசிச பா.ஜ.க எதிர்க்கட்சிகளை வேட்டையாடுகிறது. சட்ட வழிமுறைகளின் மூலம் தன்னை வலுவாக நிலைநிறுத்திக் கொண்டுதான் பாசிசம் மேன்மேலும் செழித்து வளர்கிறது.

எனவே, பாசிச எதிர்ப்பு ஜனநாயக சக்திகள் இந்தப் போலி ஜனநாயகக் கட்டமைப்பினுள் தீர்வைத் தேடுவதை விடுத்து, ஒரு பாசிச எதிர்ப்பு ஜனநாயகக் குடியரசைக் கட்டியமைப்பதற்கான போராட்டத்தில் ஒன்றிணைய வேண்டும்.


பொம்மி

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க