ஜூன் 25, 1975 அன்று அப்போதைய இந்தியப் பிரதமர் இந்திரா காந்தி நாடு முழுவதும் அவசர நிலையை (எமர்ஜென்சியை) பிரகடனப்படுத்தினார். அவசரநிலை பிரகடனப்படுத்தப்பட்டு தற்போது 48 ஆண்டுகள் நிறைவடைந்துவிட்டன. 2014-ஆம் ஆண்டில் தற்போதைய பிரதமர் நரேந்திர மோடி பதவியேற்பதற்கு முன்புவரை, இந்திரா ஆட்சியின் எமர்ஜென்சி காலம் தான் ‘சுதந்திர’ இந்தியா வரலாற்றில் மிக மோசமான அத்தியாயமாகக் கருதப்பட்டது.
ஆண்டுதோறும் ஜூன் 25 அன்று எமர்ஜென்சி காலத்தில் தாங்கள் தான் இந்தியாவைக் காப்பாற்றியதாக பா.ஜ.க-வும் ஆர்.எஸ்.எஸ்-உம் முகநூலில் பதிவுகளை வெளியிட்டு தங்களைத் தாங்களே பாராட்டிக் கொள்கின்றனர். அடல் பிஹாரி வாஜ்பாய், மொரார்ஜி தேசாய் மற்றும் பிற தலைவர்கள் சிறையில் அடைக்கப்பட்டதாக ஜூன் 26, 1975 அன்று வெளியான செய்தித்தாள்களின் முதல் பக்கங்களைப் படங்களாக வெளியிடுவர்.
கம்யூனிஸ்டுகளும் நக்சல்பாரி புரட்சியாளர்களும் தான் ஜன சங்கத் தலைவர்களை விட பெரும் அடக்குமுறைக்கு ஆளாகினர் என்று உளவுத்துறை அறிக்கைகளும் மத்திய உள்துறை அமைச்சக தரவுகளும் சுட்டிக்காட்டுகின்றன. அப்படியானால் செய்தித்தாள்களின் முதல் பக்கங்களில் பெயர் இடம்பெற்ற அடல் பிஹாரி வாஜ்பாய் எமர்ஜென்சி காலத்தில் சிறையில் அடைக்கப்பட்டாரா என்று கேட்டால் இல்லை என்பது தான் பதில்.
ஆம்; அவசரநிலை அமலில் இருந்த 20 மாதங்களின் பெரும்பகுதியைப் பரோலில் தனது வீட்டிலே கழித்தார் வாஜ்பாய். தன்னை பரோலில் விடுவித்தால் அரசுக்கு எதிரான நடவடிக்கைகளில் பங்கேற்க மாட்டேன் என உறுதிமொழி அளித்துள்ளார்.
படிக்க: துரோகி சாவர்க்கர் விடுதலை வீரரா?
இந்த உண்மைகளை ஆதாரங்களுடன் வெளியிட்டவர்கள் கம்யூனிஸ்டுகள் அல்ல. பா.ஜ.க-வின் மூத்த தலைவரான சுப்பிரமணியன் சுவாமிதான். ஜூன் 13, 2000 அன்று “தி இந்து”வில் வெளியான “எமர்ஜென்சியின் கற்றுக்கொள்ளப்படாத பாடங்கள்” (The Unlearnt Lessons of Emergency) என்ற கட்டுரையில், பல ஆர்.எஸ்.எஸ் மற்றும் ஜனசங்கத் தலைவர்கள் இந்திரா காந்தியுடன் எவ்வாறு ரகசிய பேச்சுவார்த்தை நடத்தினர் என்பதை சுப்பிரமணியன் சுவாமி விரிவாக வெளிப்படுத்தியுள்ளார்.
அதே கட்டுரையில், ஆர்.எஸ்.எஸ் தலைவர்கள் டிசம்பர் 1976 வாக்கில் இந்திரா காந்தியின் எமர்ஜென்சிக்கு வெளிப்படையான ஆதரவை அறிவிக்கும் ஆவணத்தில் கையெழுத்திடுவதற்கான முடிவை எவ்வாறு எடுத்தனர் என்பதையும் சுவாமி விவரிக்கிறார்.
அதேபோல, உளவுத்துறையின் அப்போதைய தலைவர் டி.வி.ராஜேஸ்வர் தனது “இந்தியா – முக்கியமான ஆண்டுகள்” (India – The Crucial Years) என்ற புத்தகத்தில் ஆர்.எஸ்.எஸ் தலைவர்களின் சரணடைவு முடிவை விவரித்துள்ளார். இந்திரா காந்தியின் அப்போதைய தகவல் ஆலோசகர் எச்.ஒய்.சாரதா பிரசாத்தின் மகன் ரவி விஸ்வேஸ்வரய்யாவும் ஆர்.எஸ்.எஸ் தலைவர்களின் சரணடைவை ஆவணப்படுத்தியுள்ளார்.
படிக்க: சாவர்க்கர் ஒரு அதிதீவிர சாதிவெறியர் : இந்துத்துவ ஆவணங்களிலிருந்து ஆதாரம் !
பாலாசாகேப் தியோராஸ் (Balasaheb Deoras) என்று அழைக்கப்படும் ஆர்.எஸ்.எஸ்-இன் அப்போதைய சர்சங்சாலக்கான மதுகர் தியோராஸ் (Madhukar Deoras) எரவாடா சிறையில் இருந்து இந்திரா காந்திக்கு எழுதிய கடிதங்கள் மிகவும் முக்கியமானவை. (ஆர்.எஸ்.எஸ்-இன் தலைவரை சர்சங்சாலக் – Sarsanghchalak – என்று கூறுவார்கள்). வினோபா பாவேவுக்குக் கடிதம் எழுதிய தியோராஸ், தன்னை விடுதலை செய்வது குறித்து பரிசீலிக்க இந்திராவை வற்புறுத்துமாறு கேட்டுக் கொண்டார். எமர்ஜென்சியின் போது ஆர்.எஸ்.எஸ் மற்றும் ஜனசங்கம் ஆற்றிய பங்கின் உண்மைத்தன்மையைப் புரிந்துகொள்ள இந்த கடிதங்கள் நமக்கு உதவுகின்றன.
தியோராஸ் இந்தியில் எழுதிய “இந்து சங்கதன் அவுர் சட்டவாடி ராஜ்நீதி” (Hindu Sangathan aur Sattavadi Rajneeti) என்ற புத்தகத்தின் முடிவில் இந்த கடிதங்கள் இணைப்புகளாக இடம்பெற்றுள்ளன. இந்த கடிதங்களின் ஆங்கில மொழிபெயர்ப்புகளை பிரம்ம தத் எழுதிய “ஐந்து தலை பூதம்: ஜனதா கட்சியின் தோற்றத்தின் ஒரு உண்மை விவரிப்பு” (Five Headed Monster: A Factual Narrative of the Genesis of Janata Party) என்ற புத்தகத்தில் காணலாம். அதேபோல பிரதினவ் அனில் மற்றும் கிறிஸ்டோப் ஜாஃப்ரெலோட் எழுதிய “இந்தியாவின் முதல் சர்வாதிகாரம்” (India’s First Dictatorship) என்ற புத்தகத்திலும் இக்கடிதங்களைக் காணலாம்.
முதல் கடிதம் (ஆகஸ்ட் 22, 1975)
ஜூன் 25, 1975-இல் இந்திரா காந்தி எமர்ஜென்சியை பிரகடனம் செய்தார். அதனைத் தொடர்ந்து ஆகஸ்ட் 15 அன்று செங்கோட்டையில் அவர் ஆற்றிய சுதந்திர தின உரையின்போது தனது நடவடிக்கைகள் நாட்டின் பாதுகாப்புக்கு அவசியமானது என்றும், அதை எதிர்ப்பவர்கள் துரோகிகள் என்றும் அனைத்து சர்வாதிகாரிகளையும் போலவே அவரும் கூறினார். அவரது பேச்சையும் சர்வாதிகாரத்தையும் நாடு முழுவதுமுள்ள ஜனநாயக சக்திகள் கண்டித்தனர்.
இருப்பினும், தியோராஸ் ஆகஸ்ட் 22, 1975 அன்று இந்திரா காந்திக்கு எழுதிய முதல் கடிதத்தில் இந்திராவின் ஆகஸ்ட் 15 உரையை வெளிப்படையாகப் பாராட்டியுள்ளார். இன்னும் ஒருபடி மேலே சென்று, உரையின் நேர்த்தியைப் பாராட்டுகிறார். ஆர்.எஸ்.எஸ் பற்றிய தவறான கருத்துக்களை அகற்றுவதற்காக இந்திராவுக்கு கடிதம் எழுதுவதாகவும், ஆர்.எஸ்.எஸ் இந்துக்களுக்கான அமைப்பை உருவாக்க முயற்சிப்பதாகவும் ஒருபோதும் இந்திரா அரசாங்கத்திற்கு எதிரானது அல்ல என்றும் அவர் உறுதியளித்துள்ளார்.
இறுதியில், “இதை மனதில் கொண்டு ஆர்.எஸ்.எஸ் மீதான தடையை நீக்குமாறு கேட்டுக்கொள்கிறேன். உங்களுக்குப் பொருத்தமாகத் தோன்றினால் உங்களை நேரில் சந்திப்பது எனக்கு மிகுந்த மகிழ்ச்சியைத் தரும்” என்று எழுதினார்.
எனவே, முதல் கடிதத்தில் எமர்ஜென்சியை அமல்படுத்துவதில் தனது உடன்பாட்டை வெளிப்படுத்தியுள்ளார். ஆர்.எஸ்.எஸ் மீதான தடையை நீக்க வலியுறுத்துகிறாரே தவிர எமர்ஜென்சியை நீக்குவதற்கு அல்ல.
இரண்டாவது கடிதம் (நவம்பர் 10, 1975)
தியோரஸின் முதல் கடிதத்தை இந்திரா காந்தி கண்டு கொள்ளவில்லை.
ஊடகங்களும் உச்ச நீதிமன்றமும் இந்திரா காந்திக்கு அடிபணிந்து நடந்தன. இந்திரா காந்தியின் தேர்தல் வெற்றி செல்லாது என்ற அலகாபாத் உயர் நீதிமன்றத்தின் உத்தரவை உச்ச நீதிமன்றத்தின் ஐந்து நீதிபதிகள் கொண்ட அமர்வு ரத்து செய்தது. உச்ச நீதிமன்றத்தை இந்த பரிதாபகரமான நிலைக்குத் தள்ளியதற்காக இந்திராவை அனைத்து ஜனநாயக சக்திகளும் கண்டித்தனர்.
அந்த சமயத்தில் தான், நவம்பர் 10, 1975 அன்று தியோரஸ் இந்திராவுக்கு தனது இரண்டாவது கடிதத்தை எழுதுகிறார்.
அதில் அவர் “உச்ச நீதிமன்றத்தின் ஐந்து நீதிபதிகள் அமர்வு உங்கள் தேர்தல் வெற்றி செல்லுபடியாகும் என்று தீர்ப்பளித்துள்ளதற்கு நான் உங்களை வாழ்த்துகிறேன்” என்று எழுதுகிறார்.
கடிதம் முழுவதும், ஆர்.எஸ்.எஸ் அமைப்பானது அரசாங்கத்திற்கோ அவசரநிலைக்கோ எதிரானது அல்ல என்று இந்திரா காந்தியை நம்பவைக்க முயல்கிறார். இறுதியில், “லட்சக்கணக்கான ஆர்.எஸ்.எஸ் தொண்டர்களின் தன்னலமற்ற முயற்சிகளை அரசாங்கத்தின் வளர்ச்சித் திட்டங்களை முன்னெடுத்துச் செல்ல பயன்படுத்தலாம்” என்று கூறிவிட்டு ஆர்.எஸ்.எஸ் மீதான தடையை நீக்குமாறு அவர் மீண்டும் கேட்டுக் கொள்கிறார்.
மூன்றாவது கடிதம் (பிப்ரவரி 24, 1976)
தியோரஸின் இரண்டாவது கடிதத்தையும் இந்திரா காந்தி கண்டு கொள்ளவில்லை.
1976-ஆம் ஆண்டு பிப்ரவரி இறுதியில் இந்திரா காந்தி வினோபா பாவேவின் ஆசிரமத்திற்குச் செல்லத் திட்டமிடப்பட்டிருந்தபோது தியோராஸ் மூன்றாவது கடிதத்தை எழுதுகிறார் (வினோபா பாவே ஆர்.எஸ்.எஸ்-க்கும் இந்திரா காந்திக்கும் நெருக்கமானவர்). அதில் அவர், ஆர்.எஸ்.எஸ்-க்கு ஆதரவாக தலையிடுமாறும், தடையை நீக்க இந்திராவை வற்புறுத்துமாறும் கேட்டுக் கொண்டார்.
இதன் நீட்சியாக, ஜூன் 25, 1976 (எமர்ஜென்சியின் ஓராண்டு நிறைவு நாள்) அன்று உத்தரப்பிரதேச ஜனசங்கம் இந்திரா காந்தி அரசாங்கத்திற்குத் தனது முழு ஆதரவை அறிவித்தது. மேலும் எந்தவொரு அரசாங்க விரோத நடவடிக்கைகளிலும் பங்கேற்க மாட்டோம் என்றும் உறுதியளித்தது. உத்தரபிரதேசம் மற்றும் மத்திய பிரதேசத்தில் ஜனசங்கத்தை சேர்ந்த 34 தலைவர்கள் காங்கிரசில் இணைந்தனர்.
இவை மட்டுமல்ல, ஆர்.எஸ்.எஸ் அரசாங்கத்துடன் ஒரு உடன்பாட்டை எட்டுவதற்காக 1977-ஆம் ஆண்டு ஜனவரி இறுதியில் சரணடைதல் ஆவணத்தில் கையெழுத்திட முடிவு செய்திருந்தது. ஆனால் அதற்கு முன்பாகவே இந்திரா காந்தி எமர்ஜென்சியை விலக்கிக் கொண்டதால், சரணடைவு ஆவணத்தில் கையெழுத்திட வேண்டிய அவசியம் எழவில்லை.
எமர்ஜென்சி காலத்தில் ஆர்.எஸ்.எஸ்-இன் உண்மை முகம் இதுதான். மக்களின் உரிமைகளை இந்திரா திட்டமிட்டு நசுக்கியபோது, ‘ஜனநாயகம்’ கொல்லப்பட்ட போது, ஆர்.எஸ்.எஸ் மற்றும் ஜனசங்கத்தினர் அந்த அடக்குமுறையில் மறைமுகமாக பங்கேற்பதாக உறுதியளித்து அதன்மூலம் தங்களை சிறையிலிருந்து விடுவித்துக்கொள்ள முயன்றனர்.
சங்கப் பரிவார கும்பல்கள் மன்னிப்பு கடித இழிபுகழ் சாவர்க்கரின் அடித்தோன்றல்கள் ஆயிற்றே. மன்னிப்பு கடிதங்கள் எழுதுவதென்பது அவர்கள் டி.என்.ஏ-விலேயே ஊறிப் போன ஒன்றுதான்.
நன்றி: தி நியூஸ் மினிட்
பொம்மி