இது பாசிஸ்டுகளுக்கான ‘ஜனநாயகம்’! பாசிச எதிர்ப்பு ஜனநாயகக் குடியரசுக்காக போராடுவோம்!

இனியும் “அரசியலமைப்புச் சட்டத்தைக் காப்போம்” என்று முழங்குவது இல்லாத ஜனநாயகத்திற்காக அழுவதாகும். இதை விடுத்து, ஆர்.எஸ்.எஸ்-பா.ஜ.க; அம்பானி-அதானி பாசிசக் கும்பலை வீழ்த்தி பாசிச எதிர்ப்பு ஜனநாயகக் குடியரசு ஒன்றை அமைப்பதற்காகப் போராடுவதுதான் நாம் முன்னெடுக்க வேண்டிய கடமையாகும்.

ஆர்.எஸ்.எஸ்-பா.ஜ.க. பாசிசக் கும்பலை எதிர்த்துப் போராடிவரும் பெரும்பாலான அரசியல் கட்சிகளின் இன்றைய பிரபலமான முழக்கம் “அரசியல் அமைப்புச் சட்டத்தைக் காப்போம்” என்பதுதான். இப்படிச் சொல்லும்போது ‘மதச்சார்ப்பற்ற’, ‘சோசலிச’, ‘ஜனநாயக’த் தன்மையுள்ள நமது அரசியல் அமைப்புச் சட்டத்தை ஆர்.எஸ்.எஸ்-பா.ஜ.க. கும்பல், தூக்கியெறிய முயல்வதாகக் கருதுகிறார்கள் அல்லது சித்தரிக்கிறார்கள். ஆனால், எதார்த்தமோ வேறுவகையில் உள்ளது.

ஆர்.எஸ்.எஸ்-பா.ஜ.க. கும்பல், தனது பாசிச ஆட்சியை அரங்கேற்றுவதற்கு ஒத்திசைவாகத்தான் நமது நாட்டின் அரசியலமைப்பே உள்ளது. வரலாற்றாளர் மற்றும் நூலாசிரியருமான ஏ.ஜி.நூராணி, தனது “ஆர்.எஸ்.எஸ். இந்தியாவிற்கு ஓர் அச்சுறுத்தல்” என்ற நூலில் குறிப்பிடுவதைப் போல, “இப்போதிருக்கும் அரசாங்கம் இந்தியாவை ஒரு இந்து நாடாக பிரகடனப்படுத்தும் வகையில் ஓர் அரசியல் சட்டத்திருத்தத்தை செய்ய வேண்டிய தேவையில்லை. அது ஓர் இந்து நாட்டை ஆள்வதைப் போன்றே ஆட்சி செய்தால்போதும். இதைத்தான் மோடி குஜராத்திலும், 2014 முதல் இந்தியாவிலும் செய்கிறார்” என்று குறிப்பிடுகிறார்.

அதாவது, இப்போதிருக்கும் அரசியலமைப்பே பாசிச ஆட்சியை நிறுவிக் கொள்வதற்குப் போதுமானது என்பது நூரணியின் கருத்தில் இருந்து கிடைக்கும் உண்மையாகும். குஜராத், உத்தரப் பிரதேசம், திரிபுரா போன்ற எல்லா மாடல்களும் இந்திய அரசியலமைப்பைத் திருத்தாமலேயே மேற்கொள்ளப்படுபவைதான். ஆகையால், அரசியல் சட்டத்தைத் தூக்கியெறிந்துவிட்டுத்தான் பாசிச ஆட்சி வரப்போவதாக நாம் கருதுவதே தவறான ஒன்றாகும்.

அப்படியெனில், இந்திய அரசியலமைப்புச் சட்டம் மதசார்பற்றது, ஜனநாயகமானது சோசலிசக் குடியரசு என்று பல கட்சிகள் குறிப்பிடுவது உண்மையா என்ற கேள்வி எழலாம்.


படிக்க: ஜனநாயக ஊடகங்களின் குரல்வளையை நெறிக்கும் பாசிஸ்ட்டுகள்!


உண்மையில், 1950-இல் உருவாக்கப்பட்ட அரசியலமைப்புச் சட்டம் இந்தியாவை மதச்சார்ப்பற்ற, சோசலிச, ஜனநாயகக் குடியரசு என்று குறிப்பிடவில்லை. 1976-இல் கொண்டுவரப்பட்ட 42-வது அரசியல் சட்டத்திருத்தத்தை ஒட்டி “இந்தியாவை மதச்சார்பற்ற, சோசலிச, ஜனநாயகக் குடியரசாக அமைப்பதற்கு உறுதி பூணுவதாக” இந்திய அரசியல் சாசனத்தின் முன்னுரையில் (preamble) சேர்க்கப்பட்டது. அந்த சொற்களுக்கெல்லாம் என்ன விளக்கம் – வரையறை என்பதையும் அரசியல் சாசனத்தில் குறிப்பிடப்படவில்லை. இயல்பிலேயே சர்வாதிகாரத்தன்மை கொண்ட இந்த போலி ஜனநாயகத்தின் உண்மை முகத்தை மூடி மறைக்கும் முகமூடியாக அச்சொற்கள் பயன்படுத்தப்பட்டன.

இந்த அரசமைப்பைக் கைப்பற்றியுள்ள ஆர்.எஸ்.எஸ்-பா.ஜ.க. பாசிசக் கும்பல், தங்களது இந்துராஷ்டிர இலட்சியத்தை நோக்கிப் பயணிக்கும் வகையில், அரசியலமைப்பையும் அரசுக் கட்டமைப்பையும் ஒரே அடியாக தூக்கியெறிந்துவிடாமல் படிப்படியாக மறுவார்ப்பு (Remodifying) செய்துவருகிறது. இதன்மூலம், அன்று அரசியல் சாசனத்திற்கு அணிவிக்கப்பட்ட மதசார்பற்ற-சோசலிச-ஜனநாயாகக் குடியரசு என்ற முகமூடிதான் கிழித்தெறியப்படுகிறது. மாறாக, இந்திய ஜனநாயகத்தின் உண்மையான சர்வாதிகாரத் தன்மையை மோடி கும்பல் முழுவதுமாக வெளிக்கொண்டுவரப்பட்டு, அதனைத் தனது இந்துராஷ்டிரத்திற்கான கட்டமைப்பாகப் பயன்படுத்துகிறது.

ஆகையால், “அரசியல் அமைப்புச் சட்டத்தைக் காப்போம்” என்று குறிப்பிடுவதானது, ஜனநாயக அரசமைப்பைக் காப்பாற்றும் முயற்சி என்று கருதிக் கொள்வது நம்மை நாமே ஏமாற்றிக்கொள்வதாகும். இந்திய அரசியலமைப்புக்கே இல்லாத, வெறும் முகமூடியாகப் பயன்படுத்தப்பட்ட, ஏட்டளவிலான சில அம்சங்களைத்தான் மீட்டெடுப்பதைதான் இந்த முழக்கம் குறிக்கிறது.

அண்மைக் காலமாக மோடி கும்பல் தனக்கு கிடைத்திருக்கும் அறுதிப் பெரும்பான்மையைப் பயன்படுத்தி, சர்வாதிகார ஆட்டம் போட்டு வருகிறது. இது இந்த அரசியல் சாசனத்தின் அடிப்படையில்தான் நடக்கிறது என்பதை நாம் மறுத்துவிட முடியுமா? இல்லை. மோடி கும்பல், காங்கிரசைப் பார்த்து எழுப்பும் ஒவ்வொரு கேள்வியையும் கவனித்து நோக்கும் போது, இந்த உண்மையை நாம் நன்குணர முடியும்.

இருவேறு ‘ஜனநாயகம்’!

இந்த மார்ச் மாதத்தில், ஒரு வார காலத்திற்கும் மேலாக நாடாளுமன்றம் முடக்கப்பட்டிருந்தது. இந்திய நாடாளுமன்ற வரலாற்றில் இதற்கு முன்பு இல்லாத வகையில் எதிர்க்கட்சிகளுக்கு எதிராக, ஒரு ஆளும் கட்சி நாடாளுமன்றத்தை முடக்கிவைத்திருந்தது.

அதானியின் பங்குச் சந்தை மோசடி தொடர்பாக நாடாளுமன்றக் கூட்டுக் குழுவில் விசாரிக்க வேண்டும்; சி.பி.ஐ, அமலாக்கத்துறை உள்ளிட்ட விசாரணை அமைப்புகள் எதிர்க்கட்சிகளை முடக்கும் அரசியல் கருவிகளாக பயன்படுத்தப்படுவதைப் பற்றியும், எரிவாயு சிலிண்டர் விலையுயர்வு பற்றியும் விவாதம் நடத்தப்பட வேண்டும், பட்ஜெட்டில் மாநிலங்களுக்கு எதிராக ஜி.எஸ்.டி. வரிவிகிதத்தை மாற்றியமைத்திருப்பது போன்ற பிரச்சினைகளை நாடாளுமன்றத்தில் விவாதிக்கப்பட வேண்டும் என எதிர்க்கட்சிகள் தொடர்ந்து கோரிவந்தன.

பா.ஜ.க. எம்.பி.க்களோ, “லண்டனில் ராகுல் காந்தி பேசியது மன்னிக்கமுடியாத தேசத்துரோகக் குற்றம். அந்நிய மண்ணில் அவர் இந்தியாவின் ஜனநாயகத்தை இழிவுபடுத்திவிட்டார். இதற்கு ராகுல் மன்னிப்பு கேட்க வேண்டும்” என்று கூச்சலிட்டு நாடாளுமன்றத்தை முடக்கிவந்தனர்.

இக்கூட்டத்தொடர் பற்றி செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்த காங்கிரஸ் பொதுச்செயலாளர் ஜெயராம் ராமேஷ், அதானியின் முறைகேடுகள் குறித்து பிப்ரவரி 5-ஆம் தேதி முதல் காங்கிரஸ் நாள்தோறும் மூன்று கேள்விகளை எழுப்பிவந்ததாகவும், இதுவரை 100 கேள்விகளை காங்கிரஸ் வெளியிட்டுள்ளதாகவும் கூறினார்.

இவற்றில் எந்தக் கேள்விக்கும் பா.ஜ.க.வினர் பதிலளிக்கவில்லை, பதிலளிக்கப் போவதுமில்லை. அதானியின் மோசடியை மடைமாற்றுவதற்குத்தான் ராகுல் ‘இந்திய ஜனநாயகத்தை’ இழிவுபடுத்திவிட்டார் என்று கூப்பாடு போட்டுந்தது பா.ஜ.க கும்பல்.


படிக்க: ராகுல் தகுதி நீக்கம்: நாடாளுமன்றத்தை முடக்கினால், மக்கள் மன்றத்தில் முழங்குவோம்!


நட்டநடுநிலை என்று தம்பட்டமடித்துக் கொள்ளும் ஊடகங்கள் எவையும், மோடி கும்பலின் இந்த மடைமாற்றும் சதியை அம்பலப்படுத்திக் கண்டிக்கவில்லை. மாறாக, “ராகுல் பேசியது சரியா, தவறா” என்று விவாதம் நடத்தியதன் மூலம், ராகுல் காந்தி தேசத்துரோகியாகச் சித்தரிக்கப்பட்டார்.

அதானியின் மோசடிகளைப் பற்றி பேசினால், மைக் ஆஃப் செய்யப்படும் என்பது நாடாளுமன்றத்தில் ஏற்கெனவே நிலைநாட்டப்பட்டிருக்கின்ற நடைமுறை.

நாடாளுமன்றத்தின் இந்த அவலநிலையைப் பற்றித்தான், லண்டனில் ராகுல் காந்தி ‘ஜனநாயக நிறுவனங்களின் மீதான தாக்குதல்’ என்றார். இதே ‘ஜனநாயக’ நிறுவனங்களை இழிவுபடுத்திவிட்டதாகத்தான் பா.ஜ.க.வினரும் கூப்பாடு போடுகிறார்கள்.

ஒரே நாடாளுமன்றம், இருவேறு ‘ஜனநாயகங்கள்’! – இப்படியொரு நிலை இருக்க முடியுமா? ‘ஜனநாயகத்தின் மீதான தாக்குதல்’ என்று ஏற்கெனவே பல்வேறு வடிவங்களில் புதைக்கப்பட்டுவிட்ட போலி ஜனநாயகத்தின் நிலையை சித்தரிக்கிறார் ராகுல். ஆர்.எஸ்.எஸ்-பா.ஜ.க. கும்பலோ, தற்போது நடைமுறையில் நிலவுகின்ற ‘ஜனநாயக’த்தின் மாண்பை இழிபடுத்திவிட்டதாக கூச்சலிடுகிறது.

ஆம், இன்று நாடாளுமன்றத்தை ஆட்சிசெய்துகொண்டிருப்பது ஆர்.எஸ்.எஸ்-பா.ஜ.க; அம்பானி-அதானி கும்பல்களுக்கான ஜனநாயகமே. இந்திய மக்கள் மீதான பாசிச சர்வாதிகார ஆட்சியே.

000

“மோடி” என்ற சாதியையே இழிவுப்படுத்திவிட்டார் என்று ராகுல்காந்தி மீது தொடுக்கப்பட்ட வழக்கில் அவருக்கு இரண்டு ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டதைக் காரணம்காட்டி, மக்கள் பிரதிநிதித்துவச் சட்டத்தின் கீழ் ராகுலின் எம்.பி பதவி பறிக்கப்பட்டிருப்பது, நடப்பது காவி-கார்ப்பரேட் பாசிஸ்டுகளின் ஆதிக்கம்தான் என்பதற்குப் பொருத்தமான அண்மைய சான்றாகும்.

ராகுலின் எம்.பி பதவி பறிக்கப்பட்டது பாசிஸ்டுகளின் திட்டமிட்ட சதியாகும். மக்கள் பணத்தைக் கொள்ளையடித்துவிட்டு நாட்டை விட்டே ஓடிப்போன தேசத்துரோகிகளான லலித் மோடி, நீரவ் மோடிக்கு பாரதப் பிரதமர் நரேந்திர மோடி சவுகிதாராக (காவலர்) செயல்பட்டார் என்பதை அம்பலப்படுத்தி பேசியதற்காக அவருக்கு சிறை தண்டனை விதிக்கப்பட்டிருக்கிறது.

ஆனால், காந்தியை சுட்டுக் கொன்ற கோட்சேயை பகிரங்மாக ஆதரிக்கும் மாலேகான் குண்டுவைப்பு குற்றவாளி பிரக்யாசிங் தாக்கூர் போன்றவர்கள் எவ்வித தொந்தரவுக்கும் ஆளாகாமல் நாடாளுமன்றத்தை அலங்கரிக்கிறார்கள். குஜராத் இனப்படுகொலைக் குற்றவாளியே நாட்டின் பிரதமராக இருக்கும் போது, இதுவெல்லாம் ஆச்சரியப்படுவதற்கு குறைவான விசயம்தான்.

பதவி பறிப்பு என்பது ராகுல் காந்தியோடு நிற்கப்போவதில்லை. மோடி, ஆர்.எஸ்.எஸ், பா.ஜ.க.வைப் பற்றியோ, அம்பானி-அதானி கார்ப்பரேட் கும்பல்களைப் பற்றியோ யாரேனும் நாடாளுமன்றத்தில் கேள்வி எழுப்பினால், அவர்களெல்லாம் நாடாளுமன்றத்தை விட்டே தூக்கியெறிப்படுவார்கள் என்று எச்சரிக்கிறது பாசிசக் கும்பல்.

இவை எல்லாம் அரசியல் சாசனத்திற்கு எதிராக நடத்தப்படுவதாக ஒரேயடியாக சொல்லிவிடமுடியுமா?

போலி ஜனநாயகமே விளைநிலம்!

சென்றமுறை நாடாளுமன்ற விவாதத்தின்போது, எதிர்க்கட்சிகள் ஹிண்டன்பர்க் அறிக்கை, பிபிசி ஆவணப்படத்தைத் தடை செய்தது, ஒன்றிய தகவல் தொடர்புத் துறைக்கு சமூக வலைதளப் பதிவுகளை நீக்குவதற்கான அதிகாரம் கொடுத்தது உள்ளிட்டவற்றை பற்றி விவாதிக்க வேண்டும் என்று முயன்றபோது, இந்திரா காந்தியின் அவசரநிலையைச் சுட்டிக்காட்டி எதிர்க்கட்சிகளை விமர்சித்தார் மோடி. “அதானி.. அதானி” என்று எதிர்க்கட்சிகள் ஒருபக்கம் முழங்கிக் கொண்டிருக்க, சுமார் ஒன்றே முக்கால் மணிநேரமாக காத்திரமான உரையாற்றினார் மோடி.

“சட்டப்பிரிவு 356-ஐப் பயன்படுத்தி 90 முறை மாநில ஆட்சியைக் கலைத்தது யார் தெரியுமா? அதிலும் ஒருவர் மட்டுமே 356 சட்டப்பிரிவைப் பயன்படுத்தி 50 முறைகளுக்கு மேல் மாநில ஆட்சியைக் கலைத்திருக்கிறார். அது இந்திரா காந்திதான். மாநில ஆட்சியை கலைப்பதில் அரைசதம் அடித்திருப்பவர் இந்திரா காந்திதான்” என்றார் மோடி.

இந்த நாடாளுமன்றக் கூட்டத்தொடரில், ராகுல் காந்தி லண்டனில் பேசிய உரையைச் சுட்டிக்காட்டி, “1975-இல் மக்களின் அடிப்படை உரிமைகள் பறிக்கப்பட்டு எமர்ஜென்சி அமல்படுத்தப்பட்டபோது ஜனநாயகம் எங்கே இருந்ததாம்” என்று மடக்கினார் பா.ஜ.க. எம்.பி பிரகலாத் ஜோஷி.

மோடியின் பாசிச சர்வாதிகாரப் போக்கை கேள்வி எழுப்பினால், “ஏன் இதெல்லாம் காங்கிரஸ் செய்யாததா? இந்திரா காந்தி செய்யாததா? அந்த காங்கிரஸுடன் தானே கூட்டணி வைத்துள்ளீர்கள்” என்று எதிர்க்கட்சிகளை சாடுகிறது பாசிசக் கும்பல். இது கேள்விக் கேட்பவர்களுடைய அருகதையை கிளருவதன் மூலம் தன்னை யோக்கியவானாக காட்டிக் கொள்ளும் உத்தியாகும்.

அதேநேரம், இக்கூற்றுகள் “தனது இயல்பிலேயே சர்வாதிகாரத்தன்மை கொண்ட, பெரும்பான்மை அதிகாரங்களை ஒன்றியத்திடம் குவித்துள்ள போலி ஜனநாயக அரசமைப்புதான் பாசிசத்தின் விளைநிலமாக இருக்கிறது” என்று பா.ஜ.க-மோடி கும்பலே கொடுக்கும் ஒப்புதல் வாக்குமூலமாகும்.

000

கொலிஜியத்தை கலைத்துவிட்டு, நீதிபதிகளைத் தெரிவுசெய்ய ஒன்றிய அரசின் பிரதிநிதிகள் அங்கம் வகிக்கின்ற புதிய அமைப்பை உருவாக்க முயற்சிக்கிறது பா.ஜ.க. இதன் மூலம் அரிதிலும் அரிதாக சந்திரசூட், கே.என்.ஜோசப் போன்ற நீதிபதிகள் நியமிக்கப்படுவதை வடிகட்டி, அக்மார்க் சங்கிகளை நீதித்துறை முழுவதும் நிரப்ப எத்தனிக்கிறது காவிக் கும்பல். “இந்நடவடிக்கை அரசியமைப்புச் சட்டத்திற்கு எதிரானது. நீதிமன்றத்தின் சுயேட்சைத் தன்மையில் அரசியல் தலையீடு இருக்கக்கூடாது” என்று முன்னாள் நீதிபதிகள் உள்ளிட்டு பலரும் எதிர்ப்பு தெரிவித்தனர். இதற்கு ‘பதிலடி’ கொடுக்கும் வகையில், இந்திரா காந்தி அவசரநிலையைக் கொண்டுவந்தபோது, அதை ஆதரித்து அரசியல் சார்போடு நடந்துகொண்டது அன்றைய கொலிஜியம்தானே, இப்போது என்னமோ ‘அரசியல் சார்பு’ நீலிக்கண்ணீர் வடிக்கிறார்கள் என்கின்ற பாணியில் சிறப்புக் கட்டுரை எழுதியது ஆர்.எஸ்.எஸ்-ன் பஞ்சசன்யா இதழ்.

இந்திரா காந்தியை விமர்சிக்கும் ஆர்.எஸ்.எஸ்-பா.ஜ.க. கும்பல், இந்திரா காந்தியின் வழியில்தான், அதாவது நிலவும் போலி ஜனநாயகக் கட்டமைப்பைப் பயன்படுத்தித்தான் தமது பாசிச ஆட்சியை அரங்கேற்றி வருகிறது. பாசிசம் வேர்பிடித்து வளர்வதற்கான பக்குவப்பட்ட விளைநிலமாக இருப்பது நிலவும் போலி ஜனநாயகக் கட்டமைப்பாகும்.

000

ராகுல் காந்திக்கு இரண்டு ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டதை எதிர்த்தும், நாடாளுமன்றத்திலிருந்து தகுதி நீக்கம் செய்யப்பட்டதை எதிர்த்தும் காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் சார்பில் நாடு முழுவதும் போராட்டம் அறிவிக்கப்பட்டிருக்கிறது. ராகுலின் பதவி நீக்கம் அரசமைப்புச் சட்டத்தின் மீதான தாக்குதல் என்று அழைக்கிறார்கள் எதிர்க்கட்சித் தலைவர்கள். “இது நீதிமன்றத்தின் முடிவு. குறிப்பிட்ட எதிர்க்கட்சி சார்பில் எடுக்கப்பட்ட முடிவல்ல. யாருக்கு எதிராகப் போராடுகிறார்கள் என்பதை காங்கிரஸ் தெளிவுபடுத்த வேண்டும் என்று மிரட்டுகிறார்” அமைச்சர் பிரகலாத் ஜோஷி.

பா.ஜ.க. எதிர்ப்பாளர்கள் பலரும் விமர்சிப்பதைப் போல, பா.ஜ.க. இந்திய ஜனநாயகத்தின் ‘புனிதங்களை’ கெடுத்துவிடவில்லை; மாறாக, இந்த ‘புனிதத்தை’ மேலும் அடுத்த நிலைக்கு கொண்டுசெல்வதன் மூலமே, இந்துராஷ்டிரத்தை நிறுவத்துடிக்கிறது!

சொந்த அனுபங்களை தொகுத்துப் பாருங்கள்

நிலவுகின்ற இந்த அரசு முறை, யாருக்கான ஜனநாயகமாக இருக்கிறது? யாருக்கு சர்வாதிகாரமாக இருக்கிறது என்பதை வகுப்பெடுத்து புரிய வைக்க வேண்டிய நிலைமையெல்லாம் இல்லை. பா.ஜ.க.வை எதிர்க்கும் கட்சிகள், அமைப்புகள் தங்களுடைய சொந்த அனுபவத்தை தொகுத்துப் பார்ப்பதே போதுமானது.

ஆர்.எஸ்.எஸ்-பா.ஜ.க.வை எதிர்க்கும் கட்சிகளை ஒழித்துக்கட்டுவது ஒன்றே, மோடி ஆட்சியின் கீழ் சி.பி.ஐ, அமலாக்கத்துறை ஆகிய விசாரணை அமைப்புகளின் முழுநேரப் பணியாக உள்ளது.

ஆம் ஆத்மி கட்சியின் தலைவர்களுள் ஒருவரும் முன்னாள் டெல்லி துணை முதல்வருமான மணிஷ் சிசோடியா, டெல்லி அரசின் மதுப்பானக் கொள்கையை வகுப்பதில் தனியார் நிறுவனங்களுக்கு சாதகமாக செயல்பட்டதாக சி.பி.ஐ.யால் கைதுசெய்யப்பட்டு சிறைவைக்கப்பட்டுள்ளார். பல சுற்று விசாரணைக்கு பிறகும், சி.பி.ஐ. அவர் குற்றவாளி என்பதற்கான எவ்வித ஆதரத்தையும் இதுவரை தாக்கல்செய்யவில்லை. பொய்யான குற்றச்சாட்டை ஒப்புக்கொள்ளச் சொல்லி சி.பி.ஐ.யால் தாம் துன்புறுத்தப்படுவதாக மணிஷ் சிசோடியா தெரிவித்துள்ளார்.

இதே வழக்கில் தொடர்புடையவராக, தெலுங்கான முதல்வரும் பாரதிய ராஷ்டிரிய சமிதியின் தலைவருமான சந்திரசேகர் ராவின் சகோதரி கவிதாவும் விசாரிக்கப்பட்டு வருகிறார்.

பிகாரில் நிதிஷ்குமாரின் ஐக்கிய ஜனதா தளம் பா.ஜ.க.வுடான கூட்டணியை முறித்துக் கொண்டு, ராஷ்டிர ஜனதா தளத்துடன் மீண்டும் கூட்டணி ஆட்சி அமைத்தவுடன், லாலு பிரசாத் யாதவ் மீது மேலும் ஒரு ஊழல் வழக்கு தூசி தட்டப்பட்டிருக்கிறது. லாலு, இரயில்வே துறை அமைச்சராக இருந்தபோது, முக்கிய பதவிகளை நியமனம் செய்வதற்கு நிலங்களை இலஞ்சமாகப் பெற்றதாக குற்றஞ்சாட்டப்பட்டு அவரும், அவரது மனைவியும் விசாரிக்கப்பட்டுக் கொண்டிருக்கிறார்கள்.

இதுகுறித்து பேட்டியளித்துள்ள லாலுவின் மகனும், பிகார் துணை முதல்வருமான தேஜஸ்வி யாதவ், “நீங்கள் ராஜா ஹரிச்சந்திரனாக இருந்தாலும் பா.ஜ.கவிற்கு எதிராக செயல்பட்டால் ரெய்டு நடக்கும். மராட்டியத்தில் சரத்பவாரின் மருமகன் பா.ஜ.க.விற்கு சென்றார். அவர் மீதான அனைத்து வழக்குகளும் திரும்பப் பெறப்பட்டன. திரிணமூல் காங்கிரஸிலிருந்த முகுல் ராய் பா.ஜ.க.விற்கு சென்றபோது அனைத்து வழக்குகளும் திரும்பப் பெறப்பட்டன. ஆனால், நீங்கள் பா.ஜ.க.வின் முகத்திரையை வெளிக்கொண்டு வந்தால் ரெய்டுதான் நடக்கும்” என்று அம்பலப்படுத்தியுள்ளார்.


படிக்க: காக்னிட் உளவு செயலி: டிஜிட்டல் பாசிசத்தை ஏவும் மோடி அரசு!


சொல்லிக் கொள்ளப்படும் ஜனநாயக நிறுவனங்களாலேயே எதிர்க்கட்சிகள் பழிவாங்கப்படுவதைக் கண்டித்து, காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்க்கே தலைமையில் 16 எதிர்க்கட்சி எம்.பி.க்கள் அமலாக்கப்பிரிவு அலுவலகத்தை நோக்கிப் பேரணியாகச் சென்றனர்.

பா.ஜ.க.வை எதிர்த்து காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸுடன் கூட்டணி சேர்ந்துகொண்ட உத்தவ் தாக்கரேவின் சிவசேனா கட்சியை ஏக்நாத் ஷிண்டே மூலம் இரண்டாகப் பிளந்து தண்டித்தது பா.ஜ.க. காவிக் கும்பலின் அடியாளாக செயல்படும் தேர்தல் ஆணையமோ, இன்று ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான அணிக்கே கட்சியின் பெயரையும், சின்னத்தையும் வழங்கி உள்ளது.

“தேர்தல் ஆணையத்தின் மீதான நம்பிக்கையை நாங்கள் இழந்துவிட்டோம். தேர்தல் ஆணையத்தை கலைத்திட வேண்டும். தேர்தல் ஆணையர்களை நியமிப்பதற்கு பதிலாக, வாக்கெடுப்பு முறையில் அவர்களைத் தேர்தெடுக்க வேண்டும். உச்சநீதிமன்றத்தின் மீதுதான் கடைசி நம்பிக்கையை வைத்திருக்கிறோம்”

“… ஜனநாயக அமைப்புகளின் உதவியுடன் நாட்டில் ஜனநாயகத்தை அழிக்கும் நடவடிக்கையை பா.ஜ.க. மேற்கொண்டு வருகிறது. “… 2024க்குப் பிறகும் பா.ஜ.க. ஆட்சி தொடர்ந்தால், நாட்டில் ஜனநாயகம், தேர்தல் நடைமுறைகள் என எதுவும் இருக்காது” – என்று எச்சரிக்கிறார் உத்தவ் தாக்கரே.

உத்தவ் தாக்கரே பேசுகிறாரே இதுதான் சொந்த அனுபவம்.

ராகுல் காந்தியும்கூட, “இந்தியாவில் உள்ள எதிர்க்கட்சிகள் ஓர் அரசியல் கட்சியை எதிர்த்துப் போராடவில்லை. ஒரு கட்டமைப்பை எதிர்த்துப் போராடிவருகிறோம். இந்தியாவின் அனைத்து அமைப்புகளையும் ஆர்.எஸ்.எஸ்-பா.ஜ.க. கைப்பற்றியுள்ளன” என்று பல மேடைகளிலும் பேசிவருகிறார்.

ஆர்.எஸ்.எஸ்-பா.ஜ.க; அம்பானி-அதானி கும்பலின் பாசிசத்தை தேர்தலின் மூலம் வீழ்த்திவிட முடியாது. ஆர்.எஸ்.எஸ்-பா.ஜ.க.வை எதிர்த்துப் போராடும் எல்லா அரசியல் சக்திகளும் தங்களது சொந்த அனுபவத்தின் மூலமே இதை உணர்ந்துகொள்ள முடியும். ஆனாலும், “அரசியல் அமைப்புச் சட்டத்தைக் காப்போம்” என்று இல்லாத ஜனநாயகத்தைக் கட்டியழுதுகொண்டிருக்கிறார்கள்.

ஆர்.எஸ்.எஸ்-பா.ஜ.க. கும்பல், இந்த கட்டமைப்பை ஒட்டுமொத்த இந்துராஷ்டிரமாக உருவாக்கி வார்த்துக் கொண்டுவருகிறது. இந்துராஷ்டிரம் முழுமையாக நிலைநாட்டப்படும்போது, அதை எதிர்த்துப் போராடுவதற்கான சக்தியைத் திரட்டிக் கொள்ளும் வாய்ப்புகள்கூட இல்லாமல் ஆக்கப்படுவோம். ராகுலின் எம்.பி. பதவி பறிக்கப்பட்டுவிட்டது. இனி, எட்டு ஆண்டுகளுக்கு அவர் தேர்தலில் போட்டியிடவே முடியாத சூழல் உருவாக்கப்பட்டிருக்கிறது. நாளை அது மற்ற கட்சி எம்.பி.களும் பரவலாம். அல்லது ஒரே நாடு ஒரே தேர்தலை நடைமுறைப்படுத்துவதன் தொடர்ச்சியாக தேர்தலே ரத்துசெய்யப்படலாம்.

இனியும் “அரசியலமைப்புச் சட்டத்தைக் காப்போம்” என்று முழங்குவது இல்லாத ஜனநாயகத்திற்காக அழுவதாகும். இதை விடுத்து, ஆர்.எஸ்.எஸ்-பா.ஜ.க; அம்பானி-அதானி பாசிசக் கும்பலை வீழ்த்தி பாசிச எதிர்ப்பு ஜனநாயகக் குடியரசு ஒன்றை அமைப்பதற்காகப் போராடுவதுதான் நாம் முன்னெடுக்க வேண்டிய கடமையாகும்.

பால்ராஜ்

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க