ராகுல் தகுதி நீக்கம்: நாடாளுமன்றத்தை முடக்கினால், மக்கள் மன்றத்தில் முழங்குவோம்!

எதைப் பேசக்கூடாது என்று பாசிசக் கும்பல் தடை போடுகிறதோ, அதைப் உரக்கப் பேசுவோம். எப்படி பேசக்கூடாது என்று பாசிசக் கும்பல் கருதுகிறதோ, அப்படி பேசுவோம். “ஆர்.எஸ்.எஸ்-பா.ஜ.க., அம்பானி-அதானி பாசிசம் ஒழிக!” என்று முங்குவோம்!

ராகுல் காந்திக்கு இரண்டு ஆண்டுகள் சிறை தண்டனை என்ற தீர்ப்பையோ, அதைத்தொடர்ந்து அவர் நாடாளுமன்ற உறுப்பினர் பதவியிலிருந்து தகுதி நீக்கம் செய்யப்படுவார் என்றோ எதிர்க்கட்சிகளால் முன்னூகித்திருக்க முடியாது. இந்த நிகழ்வுகள் எதிர்க்கட்சிகளுக்கு நிச்சயமாக அதிர்ச்சியூட்டுபவைதான். ஆனால், மோடி தலைமையிலான ஆட்சியின் கீழ் இப்படி அதிர்ச்சியூட்டும் பல நிகழ்வுகள்  இயல்பாக்கப்பட்டு வருகின்றன.

நாடாளுமன்ற விவாதநேரம் படிப்படியாக வெட்டிச்சுருக்கப்பட்டதும், பா.ஜ.க. கொண்டுவரும் மக்கள்விரோத-கார்ப்பரேட் கொள்ளை மசோதாக்கள் விவாதங்களின்றி சட்டமாக்கப்படுவதும் நேற்றுவரை இருந்த நிலைமை. பா.ஜ.க.வின் இந்த பாசிசப் போக்கைக் கண்டித்துக் குரலெழுப்பவும், போராடவும், இதன்மூலம் ‘நாடாளுமன்ற ஜனநாயகம்’ அடைந்திருக்கின்ற அவநிலையை நாட்டுமக்கள் முன் அம்பலப்படுத்தவும் மட்டுமே எதிர்க்கட்சிகளால் செய்ய முடிந்தது.

ராகுலின் தகுதி நீக்கம் மூலம், இப்போது அந்தக் ‘கண்டக் குரலெழுப்பும் ஜனநாயகமும்’ பறிக்கப்பட்டுள்ளது. பாசிச பா.ஜ.க.வை அம்பலப்படுத்திப் பேச முயன்றால், நீங்கள் நாடாளுமன்றத்தைவிட்டே தூக்கியெறிப்படுவீர்கள் என்ற புதிய இயல்புநிலை அறிவிக்கப்பட்டிருக்கிறது.

ராகுலின் தகுதி நீக்கம் என்பது ஆர்.எஸ்.எஸ்-பா.ஜ.க. பாசிசக் கும்பலால் திட்டமிட்டு நடத்தப்பட்ட சட்டப்பூர்வ பாசிசத் தாக்குதலாகும்.

படிக்க : ஸ்டெர்லைட்டுக்கு எதிராக யார் பேசினாலும் வழக்கு போடறாங்க | தோழர் மருது

பா.ஜ.க.வை எதிர்க்கும் கட்சிகள் மீது, சி.பி.ஐ, அமலாக்கத்துறை ஆகிய விசாரணை அமைப்புகள் எப்படி ஏவிவிடப்படுகிறதோ, மக்களுக்காக போராடும் செயல்பாட்டாளர்கள், அறிவித்துறையினர் மீது எப்படி ஊ.ஃபா கொடுஞ்சட்டம் பாய்ச்சப்படுகிறதோ, சிறுபான்மை முஸ்லிம் மக்கள் மீது என்.ஐ.ஏ எப்படி ஏவிவிடப்படுகிறதோ – அதுபோல, இதுவும் சட்டப்பூர்வமான பாசிசத் தாக்குதலாகும்.

2019 நாடாளுமன்றத் தேர்தல் பிரச்சாரத்தின் போது, கர்நாடாவில் உரையாற்றிய ராகுல் காந்தி, “ஏன் அனைத்து திருடர்களும் மோடி என்ற குடும்பப் பெயரையே கொண்டுள்ளனர்? நீரவ் மோடி, லலித் மோடி, நரேந்திர மோடி என்று எல்லா திருடர்களின் பெயர்களும் மோடி என்றே முடிவது ஏன்?”என்று பேசியிருந்தார். இதைத்தொடர்ந்து, குஜராத் பா.ஜ.க. எம்.எல்.ஏ புர்னேஷ் மோடி, “ராகுல் ஒட்டுமொத்த மோடி சமூகத்தையும் இழிவுபடுத்திவிட்டார்” என்று அவதூறு வழக்கு பதிவுசெய்தார்.

நான்கு ஆண்டுகளாக சூரத் நீதிமன்றத்தால் இந்த வழக்கு விசாரிக்கப்பட்டு வந்த நிலையில், 23-03-2023 அன்று நடைபெற்ற வழக்கு விசாரணையில், ராகுல் காந்திக்கு இரண்டு ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து தீர்ப்பளித்தது சூரத் நீதிமன்றம்.

இத்தீர்ப்புக்காகவே காத்துக் கொண்டிருந்ததைப்போல, அடுத்த 24 மணிநேரத்திற்குள் மக்கள் பிரதிநிதித்துவச் சட்டத்தின்கீழ் ராகுல் எம்.பி பதவியிலிருந்து தகுதி நீக்கம் செய்யப்படுகிறார். அவரது தொகுதியான வயநாடு காலியான தொகுதியாக அறிவிக்கப்படுகிறது.

1951-ஆம் ஆண்டு மக்கள் பிரதிநிதித்துவச் சட்டத்தின் பிரிவு 8(3)-ன் படி, ஒரு நாடாளுமன்ற உறுப்பினர் எந்த குற்றத்திற்காகவும் குறைந்தபட்சம் இரண்டு ஆண்டுகள் அல்லது அதற்கு கூடுதலான காலம் சிறைதண்டனை விதிக்கப்பட்டால், அவர் தகுதி நீக்கம் செய்யப்படுவார். இதன்படி ராகுலின் பதவி பறிக்கப்பட்டுள்ளது.

இத்தீர்ப்பை வழங்கிய சூரத் மாவட்ட நீதிமன்ற நீதிபதி எச்.எச்.வர்மா, காவிக் கும்பலுக்கு தான் செய்த கைங்கரியத்திற்கு இவ்வாறு விளக்கம் தருகிறார் : “குற்றம் சாட்டப்பட்டவர் ஒரு நாடாளுமன்ற உறுப்பினர் என்ற முறையில், அவர் ஆற்றிய உரை பொதுமக்களிடையே பரவலான தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கிறது. எனவே, அவருக்கு குறைந்தபட்ச தண்டை வழங்கப்பட்டால், அது பொதுமக்களுக்கு தவறான முன்னுதாரணமாக இருக்கும். மேலும், அவதூறு சட்டத்தின் நோக்கமும் நிறைவேறாது”

ராகுல்மீது தொடர்ப்பட்ட சாதாரண அவதூறு வழக்கில், இரண்டு ஆண்டுகள் சிறை என்பது உச்சபட்ச தண்டனையாகும். பாசிசக் கும்பல், ராகுலின் பதவியைப் பறித்து நாடாளுமன்றத்தை விட்டுத் துரத்துவதற்கு தோதாகவே இத்தீர்ப்பு “தயாரிக்கப்பட்டிருக்கிறது”.

அந்நிய மண்ணில் ‘இந்திய ஜனநாயகத்தை’ இழிவுப்படுத்திய ராகுல் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று தொடர்ந்து ஒருவார காலத்திற்கும் மேலாக நாடாளுமன்றத்தை பா.ஜ.க. முடக்கிவந்த சூழலில் இந்த தீர்ப்பு வழங்கப்பட்டு, அதைத்தொடர்ந்து ராகுல் பதவி நீக்கம் செய்யப்பட்டிருக்கிறார்.

தெளிவான விசயம், ராகுல் பழிவாங்கப்பட்டிருக்கிறார். எதற்காக?

“அதானி விவகாரம் குறித்து நாடாளுமன்றத்தில் பேசிய எனது பேச்சுக்கள் அனைத்தும் அவைக்குறிப்பிலிருந்து நீக்கப்பட்டுவிட்டன”

“… பிரதமர் மோடியை நோக்கி மூன்று கேள்விகள் முன்வைத்தேன். அதானி குழுமத்தில் ரூ.20,000 கோடி முதலீடு செய்த நிறுவனங்கள் யாருடையது, அந்த பணம் யாருடையது? என்று கேட்டேன். மோடி வெளிநாடு சென்றபோதெல்லாம் அதானி குழுமத்திற்கு தொழில் ஒப்பந்தங்கள் கிடைத்ததை புகைப்பட ஆதாரத்துடன் வெளியிட்டேன். அதானிக்காக விமான நிலையங்களின் விதிமுறைகளில் மாற்றம் செய்யப்பட்டன. அதானி குழும முறைகேடு விவகாரத்தில் சீனாவை சேர்ந்த ஒருவருக்கு தொடர்பு உள்ளது. பிரதமருக்கும் அதானிக்குமான தொடர்பு குறித்து நாடாளுமன்றத்தில் புதிய தகவலை வெளியிடுவேன் என்பதாலேயே தகுதி நீக்கம் செய்யப்பட்டுள்ளேன்” – என்று தெரிவித்துள்ளார் ராகுல் காந்தி.

அதானியின் கொள்ளைகளை அம்பலப்படுத்தும் ஹிண்டன்பர்க் அறிக்கை, மோடியின் ரத்தக் கறை படிந்த கைகளை அம்பலப்படுத்தும் குஜராத் இனப்படுகொலை தொடர்பான பிபிசியின் ஆவணப்படம் ஆகியவை மக்களிடயே விவாதப்பொருளானதை பாசிசக் கும்பலால் சீரணித்துக் கொள்ள முடியவில்லை.

தகவல் தொழில்நுட்பச் சட்டம் 2021-இல் உள்ள அவசரகால சட்டத்தைப் பயன்படுத்தி இணையம் மற்றும் சமூக வலைதளங்களிலிருந்து பிபிசி ஆவணப்படத்தை நீக்கிய மோடி அரசு, மக்கள் பிரதிநிதித்துவச் சட்டம் 1951-ஐப் பயன்படுத்தி அதானியை அம்பலப்படுத்திய ராகுலை பழிதீர்த்துவிட்டது. ராகுலின் பதவி பறிப்பைக் காட்டி, எதிர்க்கட்சிகளை அச்சுறுத்த முயற்சிக்கிறது.

லண்டனில் பேசிய ராகுல் காந்தி, பிபிசி ஆவணப்படம் தடை, ஹிண்டன்பர்க் அறிக்கையை விவாதிக்க அனுமதிக்காதது, விசாரணை அமைப்புகளை ஏவி எதிர்க்கட்சிகள் ஒடுக்கப்படுவது, பத்திரிக்கையாளர்கள் மீதான தாக்குதல் உள்ளிட்ட பலவற்றையும் சுட்டிக்காட்டித்தான் இந்தியாவில் ஜனநாயக நிறுவனங்கள் தாக்கப்படுவதாகப் பேசினார்.

மேலும், “இந்தியா எதிர்கொண்டிருக்கும் அபாயம் பா.ஜ.க. என்ற தனிப்பட்ட கட்சி அல்ல. ஒட்டுமொத்த ஜனநாயக நிறுவனங்களையும் இன்று ஆர்.எஸ்.எஸ். அமைப்பு கைப்பற்றியிருக்கிறது. நாம் ஒரு கட்டமைப்பை எதிர்த்துப் போராடிக் கொண்டிக்கிறோம்” என்றார்.

இதைக்காட்டித்தான் ராகுல் அந்நிய மண்ணில் ‘இந்தியாவின் ஜனநாயகத்தை’ இழிவுபடுத்திவிட்டார். நம் நாட்டின் மாண்புகளை குலைத்துவிட்டார் என்று ஊளையிட்டது பாசிசக் கும்பல்.

படிக்க : காக்னிட் உளவு செயலி: டிஜிட்டல் பாசிசத்தை ஏவும் மோடி அரசு!

ஆர்.எஸ்.எஸ்-பா.ஜ.க; அம்பானி-அதானி பாசிசக் கும்பல்தான் இந்தியாவை ஆட்சி செய்துவருகிறது; சொல்லிக்கொள்ளப்படும் ஜனநாயகம் என்பது ஆர்.எஸ்.எஸ்-பா.ஜ.க. அம்பானி-அதானி பாசிச கும்பல்களுக்கான ஜனநாயகமாகவும் இந்திய மக்கள் மீதான பாசிசமாகவும் இருக்கிறது என்பது – இன்று உள்நாட்டிலும் சர்வதேச அளவிலும் அம்பலப்பட்டுவருகிறது. அடக்குமுறையை ஏவிவிடுவதன் மூலம் இதை முடிவுக்கு கொண்டுவர முயல்கிறது பாசிசக் கும்பல். அதன் ஒருபகுதிதான் ராகுல் காந்தியின் எம்.பி பதவி பறிப்பு.

தங்களை நோக்கி எழுப்பப்படும் எந்தக் கேள்விக்கும் பதில் அளிப்பதற்கு பாசிஸ்டுகளுக்கு துணிச்சல் இல்லை. இந்த அடக்குமுறை பாசிஸ்டுகள் கோழைகள் என்பதற்கான சாட்சியே. வெறும் கொலு பொம்மையாக வைத்திருக்கும் நாடாளுமன்றத்தை அவர்களே இழுத்து மூடுவதற்கு எத்தனிக்கிறார்கள்.

நாம் ஏன் இந்த நாடாளுமன்ற ஜனநாயகத்தைக் கட்டி அழ வேண்டும்? இந்தக் குட்டிச்சுவர்தான் பாசிச ஆட்சிக்கு வழிகோலுகிறது எனும் போது, அதனை உறுதிப்படுத்த நாம் முயற்சிப்பதன் மூலம் பாசிச ஆட்சிக்கு நாமும் அடியெடுத்துக் கொடுப்பவர்களாகிவிடுகிறோம். ஆகையால், நாம் மக்கள் மன்றத்தை நிரப்புவோம்.

எதைப் பேசக்கூடாது என்று பாசிசக் கும்பல் தடை போடுகிறதோ, அதைப் உரக்கப் பேசுவோம். எப்படி பேசக்கூடாது என்று பாசிசக் கும்பல் கருதுகிறதோ, அப்படி பேசுவோம்.

“ஆர்.எஸ்.எஸ்-பா.ஜ.க., அம்பானி-அதானி பாசிசம் ஒழிக!” என்று முங்குவோம்!