இளைஞர்களே! எது கெத்து?

வண்ண வண்ண ஆடை உடுத்தி செல்வதும், விலையுயர்ந்த வாகனங்களை சாலைகளில் ஓட்டி சாகசம் செய்வதும், பிறரை அடிப்பதும்-துன்புருத்துவதும் தான் கெத்து என நினைக்கிறார்கள். ஆனால் உண்மையில் கெத்து எது?

0

பிழைப்புவாத நடிகர்களும், வரலாற்றை மறந்த இளைஞர்கள் கூட்டமும்!

ந்தியா சுதந்திரப் போராட்டத்திலும், தமிழகத்தின் மொழிப் போராட்டத்திலும் நெஞ்சை நிமிர்த்தி களத்தில் முன் நின்று போராடிய இளைஞர்களை கொண்ட இந்த மண்ணில்தான், பிழைப்புவாத நடிகர்களுக்காக தன் உயிரையும் மாய்த்துக் கொண்டிருகிறார்கள் இன்றைய இளைஞர்கள்.

கடந்த 11-1-2023 அன்று அஜித் நடித்துள்ள துணிவு படத்தின் முதல் நாள் முதல் காட்சியை பார்க்க சென்ற பரத் என்ற இளைஞர், துணிவு பட கொண்டாட்டத்தின் போது ஓடும் லாரியின் மீது ஏறி நடனம் ஆடியுள்ளார். அப்போது லாரி சற்று நகர்கையில் பரத் நிலைத் தடுமாறி லாரியில் இருந்து கீழே விழுந்து லாரி சக்கரத்தில் மாட்டி உயிரிழந்துள்ளார். அதேபோன்று இன்னொரு இடத்தில் கிரேனில் மூலம் உடலில் அளவு குத்தி கொண்டு அஜித் போஸ்டருக்கு மாலையிடும் காட்சியும் நெஞ்சை பதற வைக்கிறது.

அஜித் அல்லது விஜய் படம் வருகின்றது என்றவுடன் பல்லாயிரம் செலவு செய்து போஸ்டர் வைப்பது, பால் ஊத்துவது, வெடி வைப்பது இரவு முழுவதும் காத்திருப்பது என அந்த படத்தை திருவிழா போல் கொண்டாட ஒரு இலக்கற்ற இளைஞர்கள் கூட்டமே உருவாகியுள்ளது. இவர்களுக்கு வாழ்க்கை பற்றிய கவலையோ தன்னை சுற்றி உள்ளவர்களை பற்றிய அக்கறையோ துளியும் கிடையாது. நடிகர்களே தன் வாழ்க்கை என போதையில் முழுகி கிடைக்கிறார்கள்.

அஜித் படம் வந்தால் விஜய் படத்தை கேலிச் செய்து, போஸ்டர் ஒட்டுவது, மீம்ஸ் போடுவது, விஜய் படம் வந்தால் அஜித் படத்தை கேலிச் செய்து, போஸ்டர் ஒட்டுவது, மீம்ஸ் போடுவது என யார் கெத்து என காட்டி கொள்ள முயற்சிக்கிறார்கள் ரசிகர்கள்.

படிக்க : இறையூர் தண்ணீர்த் தொட்டியில் மலம் கலந்த விவகாரம்: விசாரணை என்ற பெயரில் தாழ்த்தப்பட்ட மக்களை துன்புறுத்தாதே! | மக்கள் அதிகாரம்

அஜித் படம் வந்தாலோ அல்லது விஜய் படம் வந்தாலோ அதை தனித்தனியாக கொண்டாடும் ரசிகர் கூட்டத்தின் மத்தியில் படத்தின் விளம்பரத்திற்காக இரண்டு படத்தையும் ஒரே நேரத்தில் விட்டு ரசிகர்கள் மத்தியில் சண்டையும் போட்டியை உருவாக்கி டிக்கெட்டை அதிக விலைக்கு விற்று லாபம் பார்த்து கொண்டிருக்கிறார்கள் திரைப்படங்களை வெளியிடும் முதலாளிகள். ஆனால் இதை புரிந்து கொள்ள முடியாமல் அப்பாவி இளைஞர்கள் இதில் மாட்டிக் கொள்கிறார்கள். முதல் காட்சியின் டிக்கெட் விலை ரூ.1000 முதல் ரூ.2000 வரை இருந்தாலும் அதை ரசிகர்கள் வாங்கி கொள்கிறார்கள். அதற்காக பல நாட்கள் வரிசையில் காத்து கிடக்கிறார்கள்.

திரைப்படம் என்றால் அது வணிகம் (commerical) அல்லது காதல் (romantic) அல்லது பேய் படங்கள் (Adventure) என வகைவகையான திரைப்படங்களை தினம்தோறும் எடுத்துக் குப்பைகளை போல் அள்ளிக் கொட்டி கொண்டு இருக்கின்றனர். இந்த திரைப்படங்களில் கதைகளை விட கதாநாயகர்களுக்கு தான் அதிகம் முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது. திரைக்கதைகளில் விஜய், அஜித் நடித்த காலம் போய் கதையே ’விஜய்’ ‘அஜித்’ தான் என்று மாறி நிற்கிறது. விஜய், அஜித்-காக மட்டுமே திரைப்படம் எடுக்கப்படுகிறது. இதில் திரைக்கதைகளுக்கு முக்கியத்துவம் கொடுப்பது கிடையாது விஜய்-அஜித் நடை, உடை அவர்கள் செய்வதை எல்லாம் கெத்தென காட்டப்படுகிறது.

இதனால் தன் திரைப்படத்தை பார்ப்பதை விட அவர்களை பார்த்து விட்டு வந்தால் போதுமென ரசிகர்கள் இரவு முழுவதும் காத்துக் கிடக்கிறார்கள். பணம் இல்லையென்றால் கூட கடன் வாங்கி கொண்டு படத்திற்கு செல்ல துடிக்கிறார்கள். அப்படி பார்க்கும் படத்தை முதல் பார்வை (status) வைப்பதும் அல்லது பிற நண்பர்கள் சொல்லி பெருமை படுவதே கெத்து என நினைக்கிறார்கள் இவர்கள். இப்படி பைத்தியம் பிடித்து இறந்து போனவர்களில் ஒருவர்தான் பரத்.

இன்று கல்வி தனியார்மயமக்கம் தீவிரமடைந்து வருகிறது. 2 கோடிக்கும் மேற்பட்ட இளைஞர்கள் வேலை தேடி தெருக்களில் அலைந்துக் கொண்டிருக்கிறார்கள். உலகளவில் ஊட்டச்சத்துக் குறைபாட்டால் பாதிக்கப்பட்டுள்ள 82.8 கோடி மக்களில் இந்தியாவில் மட்டும் 22.43 கோடி மக்கள் உள்ளனர். பட்டினி குறியீட்டில் இந்தியா 107 இடத்தில் உள்ளது. வரி மேல் வரி போட்டு உழைக்கும் மக்களின் ரத்தத்தை உறிஞ்சி கொண்டிருக்கிறது மத்திய-மாநில அரசு. உழைக்கும் மக்களோ அடிப்படை உரிமைகள் அனைத்தும் பறிக்கப்பட்டு நடு தெருவில் வீசியெறிப்பட்டுள்ளனர். ஆனால் இந்த அவலங்களுக்காக போராடுவதோ, எதிர்ப்பு குரல் கூட எழுப்பாத இந்த கதாநாயகர்களுக்காகத்தான் இரவு பகலாக இளைஞர்கள் திரையரங்கு வாயில்களில் பைத்தியம் போல் திரிந்துகொண்டிருக்கிறார்கள். அவரக்ளையே தெய்வமென வழிபடுகிறார்கள்.

ஆனால் நாம் வரலாற்றை சற்று திரும்பி பார்க்க வேண்டி இருக்கிறது.

மெரினா கடற்கரையில் காற்றை கிழித்து வரும் ஈட்டியை போல திரண்ட இளைஞர்கள்-மக்கள் 7 நாட்கள் தொடர் போராட்டத்தின் மூலம் ஜல்லிக்கட்டுக்கு தடை என்ற மோடி அரசின் பாசிச நடவடிக்கையை முறியடித்தார்கள். நீட் எதிர்ப்பு, ஸ்டெர்லைட் எதிர்ப்பு போராட்டம் என எல்லா போராட்டத்திலும் களத்தில் முன் நின்றவர்கள் மாணவர்களும் இளைஞர்களும் தான்.

1937 ஆண்டு தமிழ்நாட்டின் வீதிகளில் தமிழ் மொழிக்காக்க இளைஞர்கள் திரண்டு போராடினார்கள். பல லட்சக்கணக்கான தமிழ்நாட்டு இளைஞர்கள் தங்களையும் அந்த போராட்டத்தின் இணைத்து கொண்டனர்.

இப்படி வீரம் விதைக்கப்பட்ட இந்த மண்ணில், தற்போதைய இளைஞர்கள், நடிகர்களுக்காக அடித்து கொள்வதும் நடிகர்களுக்காக தன்னுயிரை மாய்த்துக் கொள்வதென மூடர்களாக அலைந்துகொண்டிருக்கிறார்கள்.

படிக்க : புர்கா அணிய தடை: பறிக்கப்படும் இஸ்லாமியர்களின் கல்வி உரிமை!

இன்றைய தலைமுறை இளைஞர்கள் மற்றும் மாணவர்களிடம் அதிகம் பயன்படுத்தப்படும் சொல் யார் கெத்து என்பதும் கெத்தாக வாழ வேண்டும் என்பதுதான். வண்ண வண்ண ஆடை உடுத்தி செல்வதும், விலையுயர்ந்த வாகனங்களை சாலைகளில் ஓட்டி சாகசம் செய்வதும், பிறரை அடிப்பதும்-துன்புருத்துவதும் தான் கெத்து என நினைக்கிறார்கள். ஆனால் உண்மையில் கெத்து எது?

ஒடுக்கப்பட்ட மக்களின் உரிமைக்காக போராடுவதும், கல்வி மறுக்கப்பட்ட ஏழை-எளிய மாணவர்களுக்காக போராடுவதே உண்மையான கெத்தாகும். அப்படி கெத்தாக நம் நாட்டில் உயிர்நீத்தவர்கள் பலர். பகத்சிங்கும் அவரது தோழர்களும் வெள்ளை ஏகாதிபத்தியத்திற்கு எதிராக வீரம் செறிந்த போரை தொடுத்தார்கள். தமிழ்நாட்டு மாணவர்கள் இந்தி மொழி திணிப்புக்கு எதிராக வீரம் செறிந்த போரை தொடுத்தார்கள்.

நாம் தொலைத்த வீரத்தையும், மறைந்து போன தியாகத்தையும் மீண்டும் இப்போது பட்டைதீட்டவேண்டிய தேவை எழுந்திருக்கிறது. திரைபடங்களும், நடிகர்களும் வாழ்க்கையென அடிமைப்பட்டு கிடக்கும் இளைஞர்களிடம் உரிமைக்காக களத்தில் முன் நின்று போராடுவதே கெத்து என்பதை தெளிவுபடுத்த வேண்டி இருக்கிறது.

பாரி

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க