அருண் கார்த்திக்
மீபத்தில் பொது பிரிவினருக்கு 10% இட ஒதுக்கீடு என்று சொல்லி அதற்கான சட்டம் பாராளுமன்றத்தில் கொண்டுவரப்பட்டபொழுது அதை ஒட்டி பல விவாதங்கள் நடந்தன. பாராளுமன்றத்திலும், சமூக வலைதளங்களிலும், தொலைக்காட்சிகளிலும் விவாதங்கள் நடந்தன. இந்த விவாதங்களில், இட ஒதுக்கீடு என்பது சமூக நீதிக்காக கொண்டுவரப்பட்டது; 8 லட்சம் வருமானம் என்பது நகைப்புக்குரியது; இந்த நடவடிக்கை எந்தவித ஒரு கள ஆய்வும் செய்யாமல் எடுக்கப்பட்டுள்ளது; இந்த நடவடிக்கை தேர்தலுக்காக பிஜேபி-யால் கொண்டுவரப்பட்டது என்பன போன்ற பல அலைவரிசைகளில் விவாதங்கள் நடந்தன.

இவை அனைத்தும் முக்கியமான விவாதங்களே. ஆனால், இந்த 10% நடவடிக்கையை பற்றி விவாதிக்க துவங்கும் முன் இதுவரை அரசு பணிகள் எவ்வாறு நிரப்பப்பட்டு வந்துள்ளன என்பது பற்றி நாம் புரிந்துகொள்வது அவசியம்.

இருக்கும் வேலைகள் எவ்வாறு நிரப்பப்படுகின்றன, நிரப்பப்படுகின்றனவா, என்பது எல்லாம் தெரிந்தால்தான் அந்த வேலைகளில் இட ஒதுக்கீடு பற்றி நாம் பேச முடியும்.

NDTV-இந்தி செய்தி சேனலில் ‘Prime Time with Ravish Kumar’ என்ற ஒரு நிகழ்ச்சி உண்டு. ரவீஷ் குமார் என்னும் செய்தியாளர் / தொகுப்பாளர்  நடத்தும் நிகழ்ச்சி. வட மாநிலங்களில் அரசு பணிகளை நிரப்பும் தேர்வாணையங்கள் பற்றி ‘Job series’, கல்லூரிகள் இயங்கும் விதம் பற்றி ‘college series’, வங்கிகளில் வேலைசெய்பவர்கள் பற்றி ‘bank series’, என்று தொடர் நிகழ்ச்சிகளை நடத்தினார். இவை அனைத்தும் போலி விவாதங்களை தவிர்த்து உண்மையான கள நிலவரத்தைப் பற்றி பேசின.

இந்த நிகழ்ச்சியில் வந்த தகவல்கள் அனைத்தும் மிக முக்கியமானவை, நாம் தெரிந்துகொள்ளவேண்டியவை. இந்த 10% விவாதத்துக்கு சம்மந்தமானவையும் கூட.

மேலும்,  முன்னுரையை நீட்டிக்காமல், 19 டிசம்பர் 2018 அன்று ரவீஷ் குமார் நிகழ்ச்சியில் வந்த சில தகவல்களை மட்டும் கீழே தருகிறேன். இதில் இருந்து 10% பற்றி நமது புரிதலை நாம் ஏற்படுத்திக்கொள்ள முடியும். (19 டிசம்பர் அன்று ஒளிபரப்பான நிகழ்ச்சி மேலே கூறிய எந்த வகையான தொடரும் அல்ல, இது அவர் வழக்கமாக தினமும் நடத்தும் பொதுவான நிகழ்ச்சி).

(கீழே உள்ள தகவல்களும் பல கருத்துகளும் ரவீஷ் சொல்பவை, என்னுடையவை சிலதே)

♠ ♠ ♠ 

மண்ணின் மைந்தர்களுக்கு முன்னுரிமை:

2018-ல் முதல்வர் பதவியேற்ற கமல்நாத் மத்திய பிரதேசத்தில் உள்ள வேலைகளை உத்தர பிரதேசம், பீகார் மாநில இளைஞர்கள் எடுத்துக்கொள்கிறார்கள் என்றும், அதை சரி செய்ய 80% வேலைகளை மத்திய பிரதேசத்தை சேர்ந்தவர்களுக்கே வழங்க வழிசெய்ய உள்ளதாகவும் கூறினார். பல பாஜக தலைவர்கள் இதை கண்டித்தனர். டிவிக்களில் இதை பற்றி சூடுபறக்கும் விவாதங்கள் நடந்தன. டிவி நிகழ்ச்சிகளில் கலந்து கொண்ட அரசியல்வாதிகள், உ.பி. பீகார் இளைஞர்களுக்காக மிகவும் கோவப்பட்டார்கள். உ.பி., பீகார் இளைஞர்களா இல்லை மத்திய பிரதேச இளைஞர்களா, யார் முக்கியம் என்கிற தொனியில் விவாதங்கள் நடந்தன.

கமல்நாத்.

கமல்நாத் போலவே, ‘உத்தரபிரதேசத்தில் உள்ள வேலைகளில் 90% அம்மாநில இளைஞர்களுக்கே கிடைக்கும்படி வழிவகைகள் செய்யப்படும்’ என்று 2017 உத்தர பிரதேச தேர்தல் அறிக்கையில் பாஜக வாக்குறுதி அளித்தது. இந்த நடவடிக்கை பாஜக உத்தர பிரதேசத்தில் ஆட்சி அமைத்து 90 நாட்களில் மேற்கொள்ளப்படும் என்றும், ஆட்சி அமைத்து 90 நாட்களில் ஏற்கனவே காலியாக உள்ள அரசு பணியிடங்களை நிரப்பும் பணிகள் துவங்கப்படும் என்றும், தேர்தலுக்கு முன் நடந்த கூட்டம் ஒன்றில் அமித்ஷா தெரிவித்தார்.

இப்படி மாறி மாறி உத்திரவாதங்கள் தருவது ஒரு பக்கம் என்றால் உண்மையில் களத்தில் நடப்பது முற்றிலும் வேறு மாதிரி உள்ளது.

நிரப்பப்படாத ஆசிரியர் பணியிடங்கள் :

உத்தர பிரதேசத்தில், 12,460 முதல் நிலை பள்ளி ஆசிரியர் பணிகளுக்கான விளம்பரம் வெளியாகி மார்ச் 2016-ல் கவுன்சிலிங்கும் முடிந்துவிட்டது. 30 மார்ச் 2017-ல் அவர்களுக்கு நியமன உத்தரவு கிடைக்கவேண்டியது. ஆனால் அதற்குள் மார்ச் 2017-ல் அகிலேஷ் யாதவ் ஆட்சி போய் ஆதித்யநாத் ஆட்சிக்கு வந்துவிட்டார். புதிதாக பதவி ஏற்ற ஆதித்யநாத் இந்த தேர்வையே மறு பரிசீலனை செய்வதாக கூறி நியமனங்களை நிறுத்திவைத்தார். மறு பரிசீலனை என்று சொல்லி ஒரு வருடம் ஆன பிறகும் எதுவும் நடக்கவில்லை.

இந்த ஒரு ஆண்டில் ஆசிரியர் பதவிக்கு தேர்வானவர்கள் முதல் அமைச்சர், துணை முதல்வர், அமைச்சர்கள் என்று பலரையும் சந்தித்து தங்களது நிலைமையை தெரிவித்தும் எதுவும் நடக்கவில்லை. மார்ச் 2018-ல் உத்தர பிரதேச பாஜக அலுவலகம் முன்பு போராட்டம் நடத்தினர். அமைச்சரின் வீட்டை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். இருந்தாலும், 90 நாட்களில் இடங்கள் நிரப்பப்படும் என்ற பாஜக -வின் வாக்குறுதி நிறைவேற்றப்படவில்லை. நீதி மன்றத்தின் அறிவுறுத்தலுக்கு பின் சிலருக்கு, சுமார் 1000 பேருக்கு, நியமன உத்தரவு கிடைத்தது. ஆனால், டிசம்பர் 2018 வரை பல்லாயிரம் பேருக்கு தேர்வு நடந்து முடிவுகள் வெளிவந்த பிறகும் நியமன உத்தரவுகள் வழங்கப்படவில்லை.

இவ்வாறு தேர்வு நடந்து கவுன்சிலிங்கும் முடிந்து 2 ஆண்டுகள் ஆகியும், சுமார் 11000 பேருக்கு நியமனங்கள் நடக்காதது பற்றி எந்த அரசியல் தலைவரும் அறிக்கை வெளியிட்டது போலவோ அல்லது போராட்டம் நடத்தியது போலவோ தெரியவில்லை. தேர்தல் சமயங்களில் மக்களின் கவனத்தை திருப்பவே இவ்வாறு வேலைவாய்ப்பில் அக்கறை உள்ளவர்கள் போல நாடகமாடுகின்றனர். இந்து – முஸ்லீம், உ.பி. – பீகார் போன்ற இருமைகளில் விவாதங்கள் நடக்கும்படியும் பார்த்துக்கொள்கின்றனர். இவ்வாறு விவாதங்களை நடக்க வைத்து களத்தில் இருக்கும் உண்மை நிலவரம் பற்றி எந்த பேச்சும் நடக்காதவண்ணம் பார்த்துக்கொள்கின்றனர்.

உ.பி.யில் நடைபெற்ற முதலீட்டாளர் மாநாடு.

அனைத்து மாநில அரசுகளும் முதலீட்டாளர்கள் மாநாடு என்ற பெயரில் வருடா வருடம் மாநாடு நடத்தி முதலாளிகளுக்கு பல சலுகைகளை வழங்குகின்றன. இந்த மாநாடுகளில் பல கோடிகளுக்கு முதலீடு செய்ய ஒப்பந்தம் ஆகி உள்ளதாகவும் அதன் மூலம் பல ஆயிரம் வேலை வாய்ப்புகள் கிடைக்கப்போவதாகவும் அறிக்கைகள் வெளியாகின்றன. உண்மையில் எவ்வளவு முதலீடுகள் வந்தன, எவ்வளவு வேலைவாய்ப்புகள் கிடைத்தன என்பன போன்ற தகவல்கள் வெளியிடப்படுவது இல்லை.

இவ்வாறு நடந்த ஒரு முதலீட்டாளர் மாநாட்டில், குஜராத்தில் உருவாகும் வேலை வாய்ப்புகளில் 90% குஜராத் மக்களுக்கு தான் வழங்க வேண்டும் என்று முதல்வர் விஜய் ரூபாணி உத்தரவிட்டார். இதே போல் உத்தரவுகளை கர்நாடகா, இமாச்சல பிரதேசம் போன்ற அரசுகளும் கடை பிடிக்கின்றன. இதில் காங்கிரஸ் பாஜக, இரண்டு அரசுகளும் அடக்கம்.

பணமதிப்பழிப்பின் தாக்கம்:

ஆனால், எந்த அரசும் இவ்வாறான விதிகளின் மூலம் மாநில இளைஞர்கள் எவ்வளவு பேருக்கு வேலைவாய்ப்பு கிடைத்தது என்ற தகவலை வெளியிடுவது இல்லை. எந்த தகவலும் இல்லாவிட்டாலும் ஒவ்வொருமுறையும் இந்த விதிகள் புதிதாக அறிவிக்கப்படும்பொழுதோ அல்லது மாற்றப்படும்பொழுதோ இந்து-முஸ்லீம், உபி-பீகார், மகாராஷ்டிரா-இந்திவாலா என்பன போன்ற டிவி விவாதங்களில் உணர்ச்சி பொங்க கட்சிகளை சேர்ந்தவர்கள் பேசுகின்றனர். அவர்கள் நோக்கம் உணர்வுகளை தூண்டி ஓட்டுகளை வாங்குவதே தவிர வேலை கிடைப்பது அல்ல. டிவியில் நடக்கும் விவாதங்களை மட்டும் பார்த்தால் நமக்கு உண்மை என்னவென்று தெரியாது. செய்திகளை தெரிந்துகொள்கிறோம் என்கிற மாயையில் மட்டுமே வாழ்ந்து கொண்டிருப்போம்.

2-3 நாட்களுக்கு முன்பு ஒரு செய்தி வெளியானது. பண மதிப்பு நீக்க நடவடிக்கைக்கு பிறகு வணிகர்கள், சிறு குறு மற்றும் நடுத்தர தொழில்களில் 35 இலட்சம் வேலைகள் காணாமல் போய்விட்டன என்று அனைத்திந்திய உற்பத்தியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. 34 ஆயிரம் உற்பத்தியாளர்களிடம் நடத்திய கணக்கெடுப்பின் அடிப்படையில் அறியப்பட்ட தகவல் இது. அதாவது, பண மதிப்பு நடவடிக்கைக்கு பிறகு நாடு முழுவதும் 35 இலட்சம் பேர் வேலை இழந்துள்ளனர். ஒவ்வொருவரும் ஒரு குடும்பத்தை சேர்ந்தவராக இருந்து, ஒவ்வொரு குடும்பத்திலும் 3 உறுப்பினர்கள் என்று வைத்துக்கொண்டால் சுமார் 1 கோடி பேருக்கு அதிகமாக பாதிக்கப்பட்டுள்ளனர்.

இதுவரை எதாவது டிவி விவாதங்களில் இதை பற்றி பேசி உள்ளார்களா? உபி-பீகார் விவாதம், இந்து-முஸ்லீம் விவாதம் போன்ற விவாதங்கள் மூலம் மக்களின் உணர்வுகளை தூண்ட மட்டுமே டிவி விவாதங்கள் பயன்படுத்தப் படுகின்றன. எந்த ஒரு தலைவரும், காங்கிரஸ் பாஜக யாரும், இதைப் பற்றி பேசவில்லை.

தனியார் வேலைவாய்ப்புகளை விட்டுவிடுவோம், பல ஆயிரக்கணக்கான அரசு வேலை வாய்ப்புகளின் நிலைமையும் மேலே கூறிய வேலைகளின் நிலைமை தான்.

உஜ்வல் தாஸ் என்பவர் 17 டிசம்பர் அன்று இறந்துவிட்டார். போலீஸ் தடியடியில் காயங்கள் ஏற்பட்டு சிகிச்சை பலன் இல்லாமல் இறந்துவிட்டார். 16 டிசம்பர் அன்று ஜார்கண்டில் உள்ள ஜும்கா என்ற இடத்தில மகளிர் மற்றும் குழந்தைகள் நல அமைச்சரின் வீட்டுக்கு வெளியில் போராட்டம் நடத்திக்கொண்டிருந்த கஞ்சன் தாஸ் என்பவரும் இறந்து போனார்.

கஞ்சன் கடந்த 10 ஆண்டுகளாக ஜார்கண்டில் தற்காலிக ஆசிரியராக இருந்தார். இறப்பதற்கு முந்தய நாள் போராட்டம் தொடரவேண்டும் என்பதற்காக தன்னுடைய சகாக்களுக்காக கஞ்சன் அரிசி வாங்கிவந்திருந்தார். உஜ்வல் மற்றும் கஞ்சன் போலவே பகதூர் தாக்குர், ஜீத்தன் காத்துன் ஆகியோரும் இதே சமயத்தில் மரணமடைந்தனர். இவர்கள் அனைவரும் 15 நவம்பர் அன்று நடந்த போலீஸ் தடியடியில் அடி வாங்கியவர்கள்.

இந்த தற்காலிக ஆசிரியர்கள் கடந்த 10, 15 ஆண்டுகளாக ஆசிரியப் பணி புரிந்து வருகின்றனர். அவர்களுடைய வேலை நிரந்தரம் ஆக வேண்டும், நல்ல ஊதியம் கிடைக்க வேண்டும் என்பதுதான் அவர்களுடைய எதிர்பார்ப்பு. அதற்காகதான் போராட்டம். ஜார்கண்டில் மட்டும் சுமார் 68,000 தற்காலிக ஆசிரியர்கள் உள்ளனர். இவர்கள் அனைவரும் 10, 15 ஆண்டுகளாக வேலை பார்த்து வருகின்றனர். வேலையை நிரந்தரம் ஆக்கக்கோரி பல வருடங்களாக பல முறை பல போராட்டங்களை நடத்திவிட்டார்கள்!

இவர்களை பற்றி எந்த டிவி விவாதங்களும் பேசுவது இல்லை, யாரும் உணர்ச்சிவசப்படுவதும் இல்லை. எந்த அரசியல்வாதியும் இதைப் பற்றி பேசுவது இல்லை. எதிர்க்கட்சியாக இருக்கும்போது பேசுகின்றனர், ஆட்சி கிடைத்ததும் பேசுவதை நிறுத்திவிடுகின்றனர். ஆட்சி கிடைப்பதற்காக பேசுகிறார்களோ?

அகிலேஷ் யாதவ்.

மேலே கூறிய தகவல்தான். 2016-ல் அகிலேஷ் யாதவ் முதல்வராக இருந்த பொழுது 12,640 முதல்நிலை (primary) ஆசிரியர் பணிகளுக்கான தேர்வு நடத்தி ஆசிரியர்கள் தேர்வு செய்யப்பட்டனர். ஆனால், அதன் பின்பு ஆட்சிக்கு வந்த ஆதித்யநாத் அரசு இந்த தேர்வு ஒழுங்காக நடைபெறவில்லை என்று கூறி முடிவுகள் செல்லாது என்று அறிவித்துவிட்டு, 2016-இல் அகிலேஷ் யாதவ் ஆட்சியில் 12,640 முதல்நிலை ஆசிரியர்களை தேர்வு செய்ததை செல்லாது என்று அதற்குப் பின் 2018-ல் ஆட்சிக்கு வந்த ஆதித்யநாத் அரசு சொன்னது; தேர்வு ஒழுங்காக நடைபெறவில்லை என்பதுதான் காரணமாக கூறப்பட்டது. இப்படி சொன்ன ஆதித்யநாத் அரசு, 2018-ல் சுமார் 70 ஆயிரம் பணியிடங்களை நிரப்புவதற்காக  புதிதாக தேர்வு நடத்தியது. 2018 செப்டம்பர் மாதம் உ.பி.-யில் ஒரு போராட்டம் நடந்தது. போராட்டம் நடத்தியவர்கள் ஆதித்யநாத் அரசாங்கம் நடத்திய முதல்நிலை ஆசிரியர் பணிக்கான தேர்வு எழுதியவர்கள்.

முன்பு நடந்த தேர்வு ஒழுங்காக நடைபெறவில்லை என்று கூறி புதிதாக ஆதித்யநாத் அரசு நடத்திய தேர்வு எவ்வாறு இருந்தது என்று பார்ப்போம்.

தேர்வு எழுதியவர்களில் ஒருவரான அங்கித் வர்மா 122 மதிப்பெண் எடுத்தும் பெயில் ஆக்கப்பட்டார். தேர்வு முடிவுகள் வந்தபொழுது அங்கித் வெறும் 22 மதிப்பெண்களே பெற்றிருந்ததாக முடிவுகள் கூறியது. முடிவுகள் வந்தவுடன் விடைத்தாள் நகலை பெற 2000 ரூபாய்க்கு காசோலை எடுத்து விண்ணப்பித்தார். எந்த பதிலும் வராததால் நீதிமன்றத்தை நாடி நகலை பெற்ற பொழுதுதான் அவருடைய மதிப்பெண் 122 என்று மாறியது. தேர்வு எழுதிய 68000 பேரில் அங்கித் முதல் மதிப்பெண் பெற்றிருந்தார். இதே தேர்வில், தேர்வே எழுதாத சிலருக்கு வேலை கொடுக்கப்பட்டுள்ளது.

அதே போல, குறித்த நேரத்தில் நியமனங்கள் நடைபெறவில்லை. தேர்வான அனைவருக்கும் இன்னும் நியமன ஆணை வழங்கப்படவில்லை. தேர்வானவர்கள் போராட்டம் நடத்திக் கொண்டிருக்கிறார்கள்.

கொஞ்சம் தகவல்களை திரட்டிப் பார்த்தால் பீகாரில் 2016, 2017 ஆண்டுகளில் நடந்த தேர்வுகளுக்கே இன்னும் முடிவுகள் வெளியாகவில்லை; நியமனங்களும் நடைபெறவில்லை என்பதை நாம் தெரிந்துகொள்ளலாம்.

மத்திய பிரதேச முதல்வர் கமல்நாத் 80% பற்றி பேசியபொழுது மோடியின் மந்திரி சபையைச் சேர்ந்த கிரிராஜ் சிங் என்பவர் கமல்நாத்தை கண்டித்தார். இந்தியா என்பது பல மாநிலங்கள் கூட்டாட்சி செய்யும் ஒரே நாடா இல்லையா என்ற கேள்விக்கு கமல்நாத் பதிலளிக்க வேண்டும் என்று கிரிராஜ் சிங் கூறினார். அது மட்டுமல்லாமல், காங்கிரஸ் முதல்வர் ஒருவர் இவ்வாறு தெரிவித்ததற்கு காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி உ.பி. பீகார் மக்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும் கிரிராஜ் கூறினார்.

கிரிராஜ் கமல்நாத்திடம் கூட்டாட்சி பற்றி கேள்வி கேட்பார், ஆனால் உ.பி. தேர்தலின் பொழுது அவர் இருக்கும் பாஜக, கமல்நாத் தந்த அதே வாக்குறுதியை தரும்பொழுது கூட்டாட்சி பற்றி அவருக்கு எந்த கேள்வியும் இருக்காது. கமல்நாத்தும் ஆட்சியில் இல்லாமல் இருந்தால் பாஜகவை கேள்வி கேட்டு இருப்பார். ஆனால், இப்போது கேட்க மாட்டார்.

இவர்கள் அனைவரும் இதுபோன்ற கேள்விகளை மட்டுமே கேட்டு மக்களின் உணர்வுகளைத் தூண்டி, மக்கள் மத்தியில் பகையை வளர்த்து ஓட்டுக்களை வாங்க வேண்டும் என்று மட்டுமே நினைக்கின்றனர். மக்களுக்கு வேலை கிடைப்பது பற்றி இவர்களுக்கு கவலை இல்லை!

நீதிமன்றங்களும் சளைத்தவை அல்ல:

உ.பி., பீகார் இருக்கட்டும். ரிசர்வ் வங்கி (RBI) நடத்தும் தேர்வு பற்றி பார்ப்போம். 623 உதவியாளர் பணிகளை நிரப்பும் தேர்வுக்கான அறிவிப்பு அக்டோபர் 2017-ல் வெளி வந்தது. அறிவிப்பு வெளியாகி மார்ச் 2018-க்குள் தேர்வு மற்றும் மற்ற நடைமுறைகள் அனைத்தும் நடந்து முடிந்துவிட்டன. ஆனால், இந்த 623-ல் ஒருவருக்கு கூட இன்னமும் நியமனம் நடைபெறவில்லை. எந்த பிரச்சினையிலும் சிக்காத பதவிகளுக்கும்கூட இன்னும் நியமனம் நடைபெறவில்லை. மும்பை பகுதியில் உள்ள 261 பணியிடங்கள் சம்மந்தமாக ஒருவர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார். வழக்கின் காரணமாக அனைத்து நியமனங்களும் சிக்கலில் உள்ளன. இந்த வழக்கின் அடுத்த வாய்தா எப்பொழுது தெரியுமா? 25 செப்டம்பர் 2019-ல்!! இந்த ஆட்டத்தில் நீதிமன்றங்களின் பங்கும் இல்லாமல் இல்லை, நீதி அரசர்களும் சளைத்தவர்களும் இல்லை.

ஒரு மாணவர் ரவீஷ் குமாருக்கு கொடுத்துள்ள தகவல் பின்வருமாறு. அலகாபாத் உயர்நீதிமன்ற பணிக்கான தேர்வெழுதி அதில் தேர்ச்சி பெற்று 6 மாதங்களாக காத்துக்கொண்டிருக்கிறார். ஆனால் இன்னும் நியமனம் நடைபெறவில்லை. நம்பிக்கை இழந்துவிட்டதாக மாணவர் தெரிவிக்கிறார். பல இளைஞர்களின் நிலை இது தான்!!

ரயில்வே வேலைக்கான அறிவிப்பு வந்தபொழுது 2 1/2 லட்சம் பேர் விண்ணப்பித்துள்ளதாக பெருமையாக சொன்னார்கள். ஆரம்பத்தில் ரூ.500-க்கு விண்ணப்பங்கள் விற்கப்பட்டன. பின்னர் ரூ.400-ஐ திருப்பி தந்துவிடுவோம் என்று ரயில்வே மந்திரி தெரிவித்தார். இந்த தேர்வு எழுதும் மாணவர்களுக்கான தேர்வு மையங்கள் 2500 கிமீ தொலைவில் வேறு மாநிலங்களில் ஒதுக்கப்பட்டிருப்பது தேர்வு நுழைவுச்சீட்டு வந்தபொழுதுதான் மாணவர்களுக்கு தெரிந்தது. இந்த மாணவர்களில் பெரும்பாலானோருக்கு 2-3 நாட்கள் பயணம் செய்து விடுதிகளில் தங்கி தேர்வு எழுதும் அளவுக்கு வசதி இல்லை. இதனாலேயே பலர் தேர்வு எழுத முடியவில்லை.

ரயில்வே தேர்வு எழுதும் இந்த மாணவர்களும் உ.பி. பீகாரை சேர்ந்தவர்கள்தான். இவர்களுக்காக கிரிராஜ் சிங்கோ அல்லது கமல்நாத்தோ அல்லது அமித்ஷாவோ பேசுவதில்லை!

நாம் செய்ய வேண்டியது என்ன ?

இதில் தமிழகத்தை சேர்ந்த நாம் புரிந்துகொள்ள வேண்டிய செய்தியும் உள்ளது. தேர்வுகளை நடத்துவதில் மத்திய அரசும் பாஜகவும் எந்த பாகுபாடும் காட்டுவதில்லை. நீட் எவ்வாறு நடத்துகிறார்களோ அதே போல் தான் ரயில்வே தேர்வுகளையும் நடத்துகிறார்கள். இது புரியாவிட்டால் பாஜக தமிழர்களுக்கு மட்டும் எதிராக நடந்துகொண்டு வட மாநிலத்தவருக்கு நல்லது செய்வது போல தெரியும். ஒடுக்கப்பட்ட மக்கள் அனைவருக்கும் எதிரானவர்கள்தான் இவர்கள்.

தனியார் துறையிலும் சரி, அரசு துறையிலும் சரி, வேலைவாய்ப்புகள் இல்லை. இருக்கும் அரசு வேலைவாய்ப்புகளையும் அரசு சரியாக நிரப்புவது இல்லை!

வேலை வாய்ப்புகள் இல்லாததை மறைக்கத்தான் இந்து-முஸ்லீம் விவாதங்கள், உ.பி.-பீகார் விவாதங்கள் போன்றவற்றை ஆளும் வர்க்கம் கிளப்பிக்கொண்டே இருக்கிறது. இந்த விவாதங்களின் மூலம் மக்களின் உணர்வுகளை தூண்டி சரியான கேள்விகளை கேட்பதில் இருந்து தடுக்கப்படுகின்றனர்.

படிக்க:
வியாபம் ஊழல்: பார்ப்பன கிரிமினல்தனம்! பகுதி – 3
வேலை வாய்ப்பின்மைக்கு சமூகரீதியிலான தீர்வுதான் தேவை !

இந்த தகவல்களின் மூலம் நாம் புரிந்துகொள்ளக் கூடியது என்ன. பாஜக (அல்லது காங்கிரஸ்) கட்டமைக்கும் விவாதங்களில் நாம் சிக்கிக்கொள்ளக் கூடாது. தனியார்மயத்தின் காரணமாக, ஒன்று, அரசு நிறுவனங்களே தனியார்மயம் ஆகின்றன; அல்லது, அரசு நிறுவனங்களில் இருக்கும் வேலைகளும் ஒப்பந்த வேலைகளாக மாற்றப்பட்டுவிட்டன. ஜனாதிபதி அலுவலகத்தில் உள்ள துப்புரவு தொழிலாளர்கள் கூட ஒப்பந்தக் கூலிகளாகவே இருப்பார்கள். இவை எல்லாம் போக, மீதம் இருக்கும் வேலைகளை அரசுகள் எவ்வாறு நிரப்புகின்றன என்று மேலே உள்ள தகவல்கள் காட்டுகின்றன.

நிலைமை இவ்வாறு இருக்க பாஜக அரசு, எங்கும் இல்லவே இல்லாத அரசு வேலைகளில் 10% இட ஒதுக்கீடு தருவதாக கூறுகிறது. நாமும் அதை பற்றியே பேசிக்கொண்டு இருக்கிறோம். நாம் எதைப் பற்றி விவாதிக்க வேண்டும் என்பதை பாஜகவால் கட்டுப்படுத்த முடிகிறது.

ஆகவே, நாம் அரசிடம் கேட்க வேண்டியது இட ஒதுக்கீடு மட்டுமல்ல. இருக்கும் வேலை வாய்ப்புகளை சரியாக நிரப்ப வேண்டும், அரசு அலுவலகங்களில் இருக்கும் வேலைகளை நிரந்தர வேலைகளாக்க வேண்டும்; தனியார்மய கொள்கைகளை தவிர்த்து அத்தியாவசிய சேவைகளில் அரசே நேரடியாக ஈடுபட வேண்டும். இதை விடுத்து பாஜக புருடா விடும் 10% பற்றி பேசிக்கொண்டு இருந்தால் அவர்கள் விரித்த வலையில் தான் விழ வேண்டும்.

பி.கு.: NDTV இந்தி செய்தி சேனலில் ‘Prime Time with Ravish Kumar’ என்ற ஒரு நிகழ்ச்சி உண்டு. இந்த ரவீஷ் குமார் இந்தி செய்தி பார்ப்பவர்கள் மத்தியில் பிரபலமானவர். மக்களுக்காகத்தான் பத்திரிக்கை, பத்திரிக்கையாளர்கள், என்ற கருத்தை உடைய மக்கள் பத்திரிக்கையாளர். மற்ற எந்த பத்திரிக்கைகளும், செய்தி சேனல்களும் கவனிக்காத மக்கள் பிரச்சனைகளையும் போராட்டங்களையும் பதிவு செய்து Prime Time நிகழ்ச்சியில் பேசுபவர். உண்மையான மக்கள் வாழ்க்கைக்கு தேவையான உண்மைகளை பேசுவதால் ஆளும் வர்க்கத்துக்கு இவரை பிடிப்பது இல்லை, கொலை மிரட்டல்களும் வந்தவண்ணம் உள்ளன.

அருண் கார்த்திக்