Saturday, July 20, 2024
முகப்புமறுகாலனியாக்கம்ஊழல்வியாபம் ஊழல்: பார்ப்பன கிரிமினல்தனம்! பகுதி - 3

வியாபம் ஊழல்: பார்ப்பன கிரிமினல்தனம்! பகுதி – 3

-

“வியாபம் ஊழல் தொடர்பாக 140 முதல் தகவல் அறிக்கைகள் பதிவு செயப்பட்டிருக்கின்றன; 3,800 பேர் மீது கிரிமினல் குற்றம் சுமத்தப்பட்டிருக்கிறது; இவர்களுள் 2,000 பேர் கைது செயப்பட்டுள்ளனர்; 800 பேர் தேடப்படும் குற்றவாளிகளாக அறிவிக்கப்பட்டிருக்கிறார்கள்; இந்த ஊழலின் மூலம் மருத்துவக் கல்லூரிகளில் சேர்ந்த 1,087 மாணவர்களின் சேர்க்கை ரத்து செயப்பட்டிருக்கிறது; இவர்கள் ஒவ்வொருவரிடமிருந்தும் சராசரியாக தலைக்கு 25 இலட்ச ரூபாய் இலஞ்சம் பெறப்பட்டிருக்கிறது; வியாபம் நடத்திய 68 போட்டித் தேர்வுகளின் மூலம் 1,40,000 பேர் முறைகேடான வழியில் அரசுப் பணிகளில் சேர்ந்திருப்பதாகக் கண்டறிப்பட்டிருக்கிறது; இந்த ஊழலால் 76.76 இலட்சம் விண்ணப்பதாரர்கள் (மருத்துவக் கல்லூரிகளிலும் அரசு வேலையிலும் சேருவதற்கு விண்ணப்பித்தவர்கள்) பாதிக்கப்பட்டிருக்கின்றனர்” என்றொரு புள்ளிவிவரத்தை இந்து நாளிதழ் (ஜூலை 10, பக்.13) வெளியிட்டிருக்கிறது. இப்புள்ளிவிவரங்கள் வியாபம் ஊழலின் ஆழத்தையும் அகலத்தையும் எடுத்துக்காட்டினாலும், இவை மட்டுமே வியாபம் ஊழலின் முழுமையான சித்திரத்தைத் தந்துவிடவில்லை. அந்த ஊழலின் இன்னொருபுறம் விசாரணை நாடகங்கள், சாட்சியங்களைப் படுகொலை செய்வது, அச்சுறுத்துவது, ஆதாரங்களை அழிப்பது என அச்சமூட்டக்கூடியதாக விரிவடைகிறது.

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வு வாரியத்திற்கு (டி.என்.பி.எஸ்.சி.) இணையான வியாபத்தில் ஊழல்களும் முறைகேடுகளும் மலிந்து கிடப்பதை 2007-ம் ஆண்டிலேயே மத்தியப் பிரதேச உள்ளாட்சி தணிக்கை அமைப்பு கண்டுபிடித்துக் கூறியது. இதனைத் தொடர்ந்து, வியாபம் நடத்திய மருத்துவக் கல்வி நுழைவுத் தேர்வுகளில் பல்வேறு முறைகேடுகளும் மோசடிகளும் ஆள்மாறாட்டங்களும் நடந்திருப்பதை 2008, 2009-ம் ஆண்டுகளிலேயே ம.பி. மாநில சுயேச்சை சட்டமன்ற உறுப்பினர்களான பிரதாப் கிரேவாலும் பரஸ் சக்லேகாவும் சட்டமன்றத்திலேயே அம்பலப்படுத்தினர். அதே ஆண்டில் இந்தூரைச் சேர்ந்த டாக்டர் ஆனந்த் ராய் வியாபத்தில் நடந்துவரும் முறைகேடுகள் குறித்து விசாரிக்குமாறு கோரி ம.பி.மாநில உயர்நீதி மன்றத்தில் பொதுநல வழக்கு தொடுத்தார்.

வியாபம் ஊழல்இதற்குப் பிறகு அம்மாநில முதல்வர் சிவராஜ் சௌஹான் ஒரு கண்துடைப்பு நடவடிக்கையாக, இக்குற்றச்சாட்டுகள் குறித்து விசாரிப்பதற்கு மருத்துவக் கல்வி துணை இயக்குநர் தலைமையில் கமிட்டியொன்றை அமைத்தார். சோளக்காட்டு பொம்மைக்கு இணையான இக்கமிட்டி இம்முறைகேடுகளை இரண்டு ஆண்டுகளாக விசாரணை செய்ததாக ஒரு நாடகத்தை நடத்தி, மோசடியான அறிக்கையொன்றை 2011-ம் ஆண்டில் அரசிடம் அளித்தது.

டாக்டர் ஆனந்த் ராய் 2013-ம் ஆண்டில் வியாபம் முறைகேடுகள் குறித்து ம.பி. மாநில உயர்நீதி மன்றத்தில் மீண்டும் ஒரு பொதுநல வழக்கைத் தொடுத்தார். இவ்வழக்கைத் தொடர்ந்து இம்முறைகேடுகள் குறித்து விசாரிப்பதற்கு சிறப்புப் படையொன்றை (Special Task Force) அமைத்தது, அம்மாநில பா.ஜ.க. அரசு. இந்தப் படையின் விசாரணையும் உப்புக்குச் சப்பாணியாக நடப்பது அம்பலமாக, அந்தப் படையின் விசாரணையை மேற்பார்வையிடுவதற்கு சிறப்புப் புலனாய்வுக் குழுவொன்றை (Special Investigation Team) அமைத்து உத்தரவிட்டது, ம.பி. உயர்நீதி மன்றம். இதற்குப் பிறகும் குற்றவாளிகளைத் தப்ப வைக்கும் உள்நோக்கத்தோடு விசாரணை நடத்தப்பட்டதால், இம்முறைகேடுகள் குறித்த விசாரணையை மையப் புலனாய்வுத் துறையிடம் ஒப்படைக்கக் கோரி டாக்டர் ஆனந்த் ராய், ஆஷிஷ் சதுர்வேதி, பிரசாந்த் பாண்டே, காங்கிரசு கட்சியைச் சேர்ந்த திக் விஜய் சிங் உள்ளிட்டோர் உச்சநீதி மன்றத்தில் வழக்கு தொடுத்ததைத் தொடர்ந்து வியாபம் ஊழல் வழக்கு சி.பி.ஐ. வசம் ஒப்படைக்கப்பட்டிருக்கிறது.

இதிலும்கூட, வியாபத்தில் நடந்துள்ள ஊழல்தான் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டிருக்கிறதே தவிர, வியாபம் ஊழலின் இன்னொரு அங்கமான, தனியார் மருத்துவக் கல்லூரி அதிபர்கள் தனியாகவும், வியாபத்தோடு கூட்டுச் சேர்ந்தும் நடத்தியிருக்கும் 10,000 கோடி ரூபாய் பெறுமான டி.எம்.ஏ.டி. ஊழல் (டிமாட் ஊழல்) விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படவில்லை.

***

விசாரணை கமிசன், அதன் பிறகு சிறப்புப் படை, அதனைக் கண்காணிக்க சிறப்புப் புலனாய்வுக் குழு, உச்சநீதி மன்றத்தில் வழக்கு, அதனைத் தொடர்ந்து இப்பொழுது சி.பி.ஐ., என அனுமார் வால் போல விசாரணை நீண்டுகொண்டே போனாலும், எந்தவொரு விசாரணை அமைப்பும் வியாபம் ஊழலின் உயிர்நாடி மீது கைவைக்கவே மறுக்கின்றன. இந்த வழக்கு தொடர்பாக 2,000 பேர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்; அவர்களுள் பெரும்பாலோருக்குப் பிணை வழங்கப்படவில்லை என்பதெல்லாம் உண்மைதான். ஆனால், இந்த இரண்டாயிரம் பேரில் ம.பி. மாநில முன்னாள் உயர்கல்வித் துறை அமைச்சர் லட்சுமிகாந்த் சர்மா, ஆர்.எஸ்.எஸ்.-பா.ஜ.க. தலைவர்களுக்கு நெருக்கமான சுதிர் சர்மா, வியாபமில் தேர்வுக் கண்காணிப்பாளராக இருந்த பங்கஜ் திரிவேதி, இடைத்தரகர்கள் வலைப்பின்னலை இயக்கி வந்த இந்தூரைச் சேர்ந்த மருத்துவர் ஜகதீஷ் சாகர் உள்ளிட்ட ஒரு சிலரைத் தவிர, ஆகப் பெரும்பாலோர் இலஞ்சம் கொடுத்து மருத்துவக் கல்லூரிகளில் இடம் பிடித்த மாணவர்கள், அவர்களது பெற்றோர்கள், உறவினர்கள் மற்றும் எலும்புத் துண்டுக்கு ஆசைப்பட்டு ஆள் பிடிக்கும் ஏஜெண்டுகளாக வேலை பார்த்து வந்த புரோக்கர்கள் உள்ளிட்ட பலியாடுகள்தான்.

ம.பி. மாநில முதல்வர் சிவராஜ் சௌஹான்தான் 2008 முதல் 2012 வரையில் மருத்துவக் கல்வித் துறையின் தலைவராகவும் இருந்தார். அந்தக் கட்டத்தில்தான் வியாபம் ஊழல் அதன் உச்சத்தை எட்டியது. வியாபமில் கணினிப் பொறியாளராக வேலை பார்த்து தற்பொழுது கைது செய்யப்பட்டுள்ள நிதின் மொஹிந்திரா இரகசியமாக வைத்திருந்த கணினிப் பதிவுகளை ஆராய்வதற்காக சிறப்புப் படையால் நியமிக்கப்பட்ட பிரசாந்த் பாண்டே, அப்பதிவுகளில் 64 பேருக்கு சிவராஜ் சௌஹான் பரிந்துரை செய்திருப்பதற்கான ஆதாரங்கள் இருப்பதாகக் குற்றஞ்சுமத்தியிருக்கிறார். இது தொடர்பான கணினிப் பதிவுகளும் ம.பி. உயர்நீதி மன்றத்தில் தாக்கல் செயப்பட்டுள்ளன.

சிவராஜ் சௌஹானின் மனைவி சாதனா சிங் போக்குவரத்து காவலர் தேர்வில் தனது சொந்த ஊரைச் சேர்ந்த 19 பேரைத் தேர்ச்சி பெற செய்யக் கூறி, சுதிர் சர்மாவிற்கு குறுஞ்செய்தி அனுப்பியிருப்பதற்கான ஆதாரங்கள் அம்பலமாகியிருக்கின்றன. ஆனால், இவர்கள் இருவர் பெயரும் குற்றப்பத்திரிகையில் இடம் பெறவில்லை என்பது மட்டுமல்ல, பெயரளவுக்குக்கூட இவர்களிடம் விசாரணை நடத்தப்படவில்லை.

சௌஹானின் நெருங்கிய உறவினரும் ம.பி. மாநில பிற்பட்டோர் கமிசன் தலைவருமான குலாப் சிங் கிராரின் மகன் 2011-ம் ஆண்டு நடந்த முதுகலை மருத்துவப் படிப்புக்கான நுழைவுத் தேர்வில் முதலிடம் பெற்று வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. இந்த ஊழலை விசாரித்து வந்த சிறப்புப் படை கிராரைத் தேடப்படும் குற்றவாளியாக அறிவிக்க, அவரோ அரசு விழாக்களில் சௌஹானின் அருகே அமர்ந்துகொண்டு அதிரடிப் படைக்கு பெப்பே காட்டிவந்தார். இந்த ஊழல் வழக்கு சி.பி.ஐ. வசம் வந்த பிறகும் அவர் கைது செயப்படவில்லை.

ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் முன்னாள் தலைவர் கே.எஸ்.சுதர்சன் மிஹிர் குமார் என்ற தனது எடுபிடிக்கு அரசு வேலை வாங்கித் தர சிபாரிசு செய்ததற்கான ஆதாரங்கள் பத்திரிகைகளில் அம்பலமான பிறகும் கே.எஸ். சுதர்சனிடம் விசாரணைகூட நடத்தப்படவில்லை.

சிறப்புப் படையால் விசாரிக்கப்பட்ட சௌஹானின் தனி உதவியாளர் பிரேம் பிரசாத் யாதவிற்கு எவ்விதத் தயக்கமும் இன்றி நீதிமன்றம் முன்ஜாமீன் வழங்கியிருக்கிறது. வியாபம் ஊழல் தொடர்பாக கைது செயப்பட்ட சௌஹானின் குடும்ப மருத்துவர் அஜய் மேத்தா மூன்றே மாதத்தில் பிணையில் வந்துவிட்டார். இவர்கள் இருவரின் பிணை மனுக்கள் மீதான விசாரணையில், அதனை எதிர்க்க வேண்டிய சிறப்புப் படையோ குற்றவாளிகளின் கூட்டுக் களவாணியாகச் செயல்பட்டிருக்கிறது.

“நிதின் மொஹிந்திரா இரகசியமாக வைத்திருந்த கணினிப் பதிவுகளில்தான் சிவராஜ் சௌஹான் தொடங்கி கே.எஸ். சுதர்சன் வரையிலும் யார், யாருக்கு சிபாரிசு செய்தார்கள், அதற்கு எவ்வளவு பணம் கைமாறியது என்ற விவரங்களெல்லாம் இருந்தன. இந்தப் பதிவுகள் சிறப்பு அதிரடிப் படைக்குக் கிடைத்த பிறகு, அப்படை அப்பதிவுகளில் காணப்பட்ட அரசியல் செல்வாக்குமிக்க முக்கிய குற்றவாளிகளைப் பாதுகாக்கும் நோக்கில் விசாரணையைத் திசை திருப்பியதாக” டாக்டர் ஆனந்த் ராய் உள்ளிட்டவர்கள் குற்றஞ்சுமத்தியுள்ளனர்.

மாநில போலீசு மட்டுமல்ல, சி.பி.ஐ. விசாரணையும் குற்றவாளிகளுக்குச் சாதகமாகச் செல்வதை யோகேஷ் உப்ரித்துக்கு வழங்கப்பட்டுள்ள பிணை எடுத்துக் காட்டுகிறது. யோகேஷ் உப்ரித் அரசு நிறுவனமான வியாபத்தில் இயக்குநராகப் பணியாற்றியவர். அதிலிருந்து ஓய்வுபெற்ற பிறகு தனியார் மருத்துவக் கல்லூரி சங்கம் நடத்திவரும் டிமாட் தேர்வுகளின் கட்டுப்பாட்டு அதிகாரியாகப் பணியாற்றினார். வியாபம் மற்றும் டிமாட் ஊழல்கள் இரண்டிலும் முக்கியப் புள்ளியாக இயங்கியவர் உப்ரித். கடந்த மே மாதம் கைது செயப்பட்ட உப்ரித் செப்டம்பர் 4 அன்று பிணையில் வந்துவிட்டார். இவர் மீது உரிய காலத்தில் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யாமல் இருந்ததன் மூலம் இவருக்குப் பிணை கிடைப்பதற்கு வழி ஏற்படுத்திக் கொடுத்திருக்கிறது, சி.பி.ஐ. குற்றத்தின் தன்மை கருதி இவருக்குப் பிணை வழங்க உயர்நீதி மன்றம் மறுத்திருக்க முடியும். ஆனால், நீதிமன்றமோ சி.பி.ஐ. மீது பழிபோட்டுவிட்டுத் தமது தார்மீக பொறுப்பை, கடமையைத் தட்டிக் கழித்துவிட்டது.

***

ரசியல் செல்வாக்குமிக்க உப்ரித் போன்ற சுறாமீன்களுக்குப் பிணை கிடைத்திருப்பதும், 2,000 குட்டி மீன்களுக்குப் பிணை மறுக்கப்படுவதும், முக்கிய சாட்சியங்கள் மர்மமான முறையில் இறந்து போவதும், இந்த ஊழலை அம்பலத்துக்குக் கொண்டுவந்த டாக்டர் ஆனந்த் ராயும் ஆஷிஷ் சதுர்வேதியும் தினந்தோறும் மிரட்டப்படுவதுமாக இந்த விசாரணை நாடகத்தில் காட்சிகள் நகர்ந்து செல்கின்றன.

இந்த ஊழல் அம்பலத்திற்கு வந்த 2009-ம் ஆண்டு தொடங்கி இன்று வரையில், இந்த ஊழலோடு ஏதாவது ஒரு வகையில் தொடர்புடைய 48 பேர் இயற்கைக்கு மாறாக, அகால மரணமடைந்துள்ளனர். இந்த ஊழலை விசாரித்து வந்த சிறப்புப் படை இவர்களுள் 23 பேர் மர்மமான முறையில் மரணமடைந்திருப்பதாக ம.பி. உயர்நீதி மன்றத்தில் கூறியிருக்கிறது. இறந்து போனவர்களுள் கணிசமானோர் மருத்துவ மாணவர்கள் மற்றும் இடைத்தரகர்கள். இந்த மர்ம மரணங்களுக்கு சாலை விபத்துகள் முக்கிய காரணியாக இருக்கிறது.

இந்த அகால மரணங்களுள் மருத்துவ மாணவி நம்ரதா தமோர், ஆஜ் தக் தொலைக்காட்சி நிறுவனத்தைச் சேர்ந்த செய்தியாளர் அக்ஷய் சிங், ஜபல்பூர் மருத்துவக் கல்லூரி முதல்வர் டி.கே.சகால்லே, அதே மருத்துவக் கல்லூரியில் சகால்லேவுக்கு அடுத்து முதல்வராகப் பதவியேற்ற அருண் ஷர்மா, ம.பி. மாநில கவர்னரின் மகன் ஷைலேஷ் யாதவ், வியாபம் ஊழலை அம்பலப்படுத்தி வந்த மருந்தாளுநர் விஜய் சிங் படேல், கால்நடை மருத்துவக் கல்வி மாணவர் அமித் சாகர் உள்ளிட்ட 10 மரணங்கள் மிகவும் சந்தேகத்திற்குரியவை என்கிறார், டாக்டர் ஆனந்த் ராய்.

வியாபம் ஊழல் மூலம் ஜபல்பூர் மருத்துவக் கல்லூரியில் சேர்ந்த மாணவர்களின் சேர்க்கை ரத்து செய்யப்பட்ட நிலையில், அந்த மாணவர்கள் தந்த நெருக்கடியைச் சமாளிக்க முடியாமல் விடுப்பில் சென்ற அம்மருத்துவக் கல்லூரி முதல்வர் டாக்டர் சகால்லே, தனது உடல் முழுவதும் தீ கொழுந்துவிட்டு எரியும் நிலையில் தெருவில் ஓடிவந்து மரணமடைந்தார். இவர் தீக்குளித்துத் தற்கொலை செய்து கொண்டதாக வழக்கு மூடப்பட்டது.

இவரையடுத்து ஜபல்பூர் மருத்துவக் கல்லூரியின் முதல்வராகப் பொறுப்பேற்றுக் கொண்ட டாக்டர் அருண் ஷர்மா, பதவியேற்ற ஒரு மாதத்திற்குள்ளாகவே டெல்லியிலுள்ள விடுதி அறையொன்றில் இறந்து கிடந்தார். அவரது உடலுக்கு அருகே சில மாத்திரைகளும் விஸ்கி பாட்டிலும் கண்டெடுக்கப்பட்டன.

மர்மமான முறையில் இறந்து போன மருத்துவக் கல்லூரி மாணவி நம்ரதா தமோரின் பெற்றோர்களிடம் அவரது மரணம் குறித்து பேட்டி எடுக்கச் சென்ற ஆஜ்தக் தொலைக்காட்சி நிருபர் அக்ஷ சிங், அப்பேட்டியை முடித்துக் கொண்டு திரும்பும் வழியில் வாயில் நுரை தள்ளி இறந்து போனார்.

பா.ஜ.க. சட்டமன்ற உறுப்பினர் விடுதியில் இறந்து கிடந்த விஜய் சிங் படேலின் உடலில் விஷம் இருந்ததை பிரேத பரிசோதனை அறிக்கை உறுதி செய்திருக்கிறது. இந்தூர் சிறையில் அடைக்கப்பட்டிருந்த இடைத்தரகர் நரேந்திர சிங் தமோர் மாரடைப்பால் இறந்து போனதாகக் கூறப்பட்டாலும், அவரது சாவு குறித்துப் பல சந்தேகங்கள் எழுப்பப்பட்டுள்ளன.

டாக்டர் ஆனந்த் ராய், ஆஷிஷ் சதுர்வேதி, பிரசாந்த் பாண்டே, பரஸ் சக்லேகா
பா.ஜ.க அரசு மூடிமறைக்க முயன்ற வியாபம் ஊழலை அம்பலப்படுத்திக் குற்றவாளிகளைத் தண்டிக்கக் கோரி சட்டப் போராட்டங்களை நடத்தி வரும் (கடிகாரச் சுற்றுப்படி) டாக்டர் ஆனந்த் ராய், ஆஷிஷ் சதுர்வேதி, பிரசாந்த் பாண்டே, பரஸ் சக்லேகா

இத்தகைய மர்ம மரணங்களைத் தற்கொலையென்றோ அல்லது விபத்து என்றோ குறிப்பிட்டு வழக்கை முடித்து விடுவதில் ம.பி.மாநில பா.ஜ.க. அரசு கீழ்த்தரமாகவும், கிரிமினல் முறையிலும் முயன்றுள்ளதற்கு மருத்துவ மாணவி நர்மதா தமோரின் கொலையை உதாரணமாகக் கொள்ள முடியும். இந்தூரைச் சேர்ந்த நர்மதா தமோரின் உயிரற்ற உடல் ஜனவரி 2012-ல் உஜ்ஜையினிக்கு அருகே, ரயில் தண்டவாளத்தின் ஓரத்தில் கண்டெடுக்கப்பட்டது. அவர் மிகவும் கொடூரமான மூச்சுத் திணறலால் இறந்து போனதாக அவரது சடலத்தைப் பரிசோதனை செய்த மருத்துவக் குழு குறிப்பிடுகிறது. இந்த மருத்துவ மொழியின் பொருள் அவர் கழுத்து நெறிக்கப்பட்டுக் கொல்லப்பட்டுள்ளார் என்பதுதான்.

முதலில் இதனைக் கொலை வழக்காகப் பதிவு செய்த ம.பி. போலீசு, இரண்டு ஆண்டுகள் கழித்து அவர் தற்கொலை செய்து கொண்டதாகக் குறிப்பிட்டு வழக்கை மூடியது. இதற்கு ஆதாரமாக நர்மதாவின் மரணம் குறித்து ம.பி. அரசின் மருத்துவ சட்டத் துறையின் தலைவர் பத்குர் அளித்த அறிக்கையை போலீசார் காட்டியுள்ளனர். பத்குர் அறிக்கை அளித்த விதமே அலாதியானது மட்டுமல்ல, சதித்தனமானதும்கூட. அவர் நர்மதாவின் உடலைப் பரிசோதனை செய்யாமல், அவரது சடலத்தின் புகைப்படங்களைக் கொண்டு நர்மதா தற்கொலை செய்து கொண்டதாக அறிக்கை அளித்திருக்கிறார். ம.பி. போலீசார் இந்த மோசடித்தனமான அறிக்கையை ஆதாரமாகக் காட்டியிருப்பதோடு, நர்மதா காதல் தோல்வியின் காரணமாகத் தற்கொலை செய்து கொண்டதாகவும் கதை கட்டியுள்ளனர். குற்றவாளிகள் தம்மைக் காப்பாற்றிக் கொள்ள சாட்சியங்களைக் கொலை செய்து, ஆதாரங்களை அழித்துள்ளனர் என்பதைத் தாண்டி இந்த மர்ம மரணங்களுக்கு வேறு விளக்கம் அளிக்க முடியாது.

2ஜி வழக்கில் குற்றஞ்சுமத்தப்பட்டுள்ள ஆ.ராசாவின் நண்பர் சாதிக் பாட்சா தற்கொலை செய்துகொண்ட பொழுது, தி.மு.க. தலைமையைக் குற்றவாளிக் கூண்டில் ஏற்றிய ஊடகங்கள், வியாபம் ஊழலில் நடந்துள்ள மர்ம மரணங்களுக்கு பா.ஜ.க. தலைமையை, ம.பி. முதல்வர் சௌஹானை எவ்விதத்திலும் பொறுப்பாக்கவில்லை. பார்ப்பானுக்கு ஒரு நீதி, சூத்திரனுக்கு ஒரு நீதி என்ற மனுதர்மத்தின்படிதான் வியாபம் ஊழலையும் 2ஜி ஊழலையும் ‘தேசிய’ ஊடகங்கள் அணுகி வருவதை இந்த பாரபட்சம் புட்டு வைக்கிறது.

இந்த மர்ம மரணங்கள் ஒருபுறமிருக்க, இந்த ஊழலை அம்பலப்படுத்துவதில் முன்னணியில் நிற்கும் ஆஷிஷ் சதுர்வேதியின் மீது 14 முறை கொலைவெறி தாக்குதல் நடத்தப்பட்டு, அவர் நல்வாய்ப்பாக உயிர் பிழைத்திருக்கிறார். இந்த ஊழலில் ம.பி. முதல்வர் சிவராஜ் சௌஹானுக்கு உள்ள தொடர்பை அம்பலப்படுத்திய பிரசாந்த் பாண்டேவுக்கு கொடுக்கப்பட்ட போலீசு பாதுகாப்பு திட்டமிட்டு விலக்கிக் கொள்ளப்பட்டுள்ளது. அரசு மருத்துவர்களான ஆனந்த் ராயும் அவரது மனைவியும் பாதுகாப்பற்ற இடங்களுக்கு பணி மாறுதல் செயப்பட்டு அச்சுறுத்தப்பட்டுள்ளனர்.

ஆர்.எஸ்.எஸ். அமைப்பில் இயங்கி வந்த ஆனந்த் ராய் இந்த ஊழலைத் தொடர்ந்து அம்பலப்படுத்தி வருவதால், அவர் அமைப்பிலிருந்து ஓரங்கட்டப்பட்டுவிட்டார். “குண்டு வெடிப்பு உள்ளிட்ட பயங்கரவாதக் குற்றங்களில் ஈடுபட்ட பெண் சாமியார் பிரக்யா சிங்கை ஆதரித்து வரும் ஆர்.எஸ்.எஸ்., ஊழலுக்கு எதிராகப் போராடும் தன்னைக் கைவிட்டுவிட்டதாக”க் கூறுகிறார், ஆனந்த் ராய். அவரின் இந்த அனுபவம் இந்து மதவெறிக் கும்பலின் இரட்டை வேடத்தைத் தோலுரித்துக் காட்டுகிறது.

***

நம்ரதா தமோர், அக்ஷய் சிங், டாக்டர் டி.கே.சகால்லே, டாக்டர் அருண் ஷர்மா, விஜய் சிங் படேல் மற்றும் அமித் சாகர்
வியாபம் ஊழல் குறித்த விசாரணை நடந்து கொண்டிருந்தபொழுதே மர்மமான முறையில் மரணமடைந்த (கடிகாரச் சுற்றுப்படி) நம்ரதா தமோர், அக்ஷய் சிங், டாக்டர் டி.கே.சகால்லே, டாக்டர் அருண் ஷர்மா, விஜய் சிங் படேல் மற்றும் அமித் சாகர்

குதியும் திறமையும் கொண்டவர்களைத் தேர்ந்தெடுப்பதற்குத்தான் போட்டித் தேர்வுகளும் நுழைவுத் தேர்வுகளும் நடத்தப்படுவதாக நியாயம் கற்பிக்கப்படுகிறது. தமிழகத்தில் கிராமப்புற மாணவர்களின் நலன் கருதி பொறியியல் மற்றும் மருத்துவப் படிப்புகளுக்கு நடத்தப்பட்டு வந்த நுழைவுத் தேர்வு ரத்து செயப்பட்டபொழுது, பார்ப்பன ஊடகங்களும், நடுத்தர வர்க்க மேதைகளும் அந்நடவடிக்கையை தகுதி, திறமை மீது விழுந்த இடியாகச் சித்தரித்தார்கள். ஆனால், மத்திய பிரதேசத்தில் நடந்துள்ள வியாபம் ஊழல் நுழைவுத் தேர்வு என்பது ஊழலின் ஊற்று என்பதையும்; பணத்திற்கு முன் தகுதி, திறமையெல்லாம் மயிருக்குச் சமமாகும் என்பதையும் எடுத்துக் காட்டியிருக்கிறது.

அரசு நிறுவனங்கள் இட ஒதுக்கீடு கொள்கையால் சீரழிந்து போவிட்டதாகவும், அதற்கு மாற்று தகுதி, திறமைக்கு மட்டுமே மதிப்பு கொடுக்கும் தனியார்மயம்தான் எனப் பார்ப்பன-ஆதிக்க சாதி கும்பல் வாதாடி வருவதெல்லாம் மிகப் பெரும் மோசடி என்பதையும் மத்திய பிரதேசத்தில் நடந்துள்ள டிமாட் ஊழல் அம்பலப்படுத்திவிட்டது. தனியார் மருத்துவக் கல்லூரி அதிபர்கள் கள்ள வியாபாரிகளைவிடக் கேடுகெட்ட கிரிமினல்கள் என்பதை டிமாட் ஊழல் எடுத்துக் காட்டியிருக்கிறது.

நடுத்தர வர்க்கம் அரசு நிறுவனமான வியாபத்தில் நடந்துள்ள ஊழலைப் பயன்படுத்திக் கொண்டு, மருத்துவ சீட்டுகளையும், அரசுப் பதவிகளையும் அடைந்தது. நீதிபதிகள், ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். அதிகார வர்க்கம், அமைச்சர்கள், ஓட்டுக்கட்சி தலைவர்கள் ஆகியோர் அடங்கிய சமூகத்தின் மேல்தட்டு வர்க்கம் தாங்கள் பதுக்கி வைத்திருக்கும் கருப்புப் பணத்தை இலஞ்சமாகக் கொடுத்து டிமாட் ஊழல் மூலம் தனியார் மருத்துவக் கல்லூரிகளில் இடத்தைப் பிடித்திருக்கிறார்கள்.

10,000 கோடி ரூபாய் பெறுமான டிமாட் ஊழலை விசாரணை வளையத்திற்குள் கொண்டுவந்து விடக்கூடாது என்ற திட்டத்தோடு காய்கள் நகர்த்தப்படுகின்றன. “இந்த ஊழலை விசாரிக்கும் அளவிற்குத் தன்னிடம் ஆள்பலம் இல்லை” எனக் கூறி, விசாரிப்பதைத் தட்டிக் கழித்து வருகிறது, சி.பி.ஐ. “தனியார் துறை சம்பந்தப்பட்ட இந்த ஊழலை, ஊழல் ஒழிப்புச் சட்டத்தின் கீழ் விசாரிக்க முடியாது” எனக் கேவலமான முறையில் உச்சநீதி மன்றத்தில் வாதிட்டு, இந்த ஊழலில் ஈடுபட்டுள்ளவர்களைக் காப்பாற்ற முயலுகிறது, மோடி அரசு. “எங்களிடம் பணம் இருக்கிறது, அவர்களிடம் மருத்துவ சீட் இருக்கிறது. பண்ட பரிமாற்றம் போல இதுவும் ஒரு பொருளாதார நடவடிக்கைதானே தவிர, ஊழல் அல்ல” என நாக்கைச் சுழற்றி இந்த மோசடியை நியாயப்படுத்தி வருகிறது, மேல்தட்டு வர்க்கம். நான்கைந்து ஆண்டுகளுக்கு முன்பு அன்னா ஹசாரேயை முன்னிறுத்தி வடஇந்திய நகரங்களில் ஊழலுக்கு எதிராக ஒப்பாரி வைத்த ஆர்.எஸ்.எஸ். இந்து மதவெறிக் கும்பல் மற்றும் அக்கும்பலின் சமூக அடித்தளமான ஆதிக்க சாதி, மேல்தட்டு வர்க்கத்தின் யோக்கியதை இதுதான்.

வியாபம் என்ற அரசு நிறுவனமே ஊழலில் ஈடுபட்டிருப்பது, அந்த ஊழல் அம்பலமானவுடன் அரசின் மற்ற உறுப்புகள் அதனை மூடிமறைக்க உதவியிருப்பது, விசாரணை நாடகம், மிரட்டல்கள், கொலைகள் உள்ளிட்ட கிரிமினல் நடவடிக்கைகளின் மூலம் ஆடுகளைப் பலியிட்டு ஓநாய்களைத் தப்பவைப்பது எனச் செல்லும் வியாபம் ஊழலும், டிமாட் ஊழலும் அரசு நிறுவனங்கள் சீழ் பிடித்துப் போயிருப்பதை மட்டும் காட்டவில்லை. எந்தவிதத்திலும் சீரமைக்க முடியாதபடி, சாதாரண மக்களுக்கு எதிரானதாக, தாமே சொல்லிக் கொள்ளும் கடமைகளுக்கு எதிராக அந்நிறுவனங்கள் மாறிப் போவிட்டதையும் எடுத்துக் காட்டியிருக்கிறது.

முற்றும்.

– செல்வம்
_________________________________
புதிய ஜனநாயகம், அக்டோபர் 2015
_________________________________

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க