Wednesday, September 23, 2020
முகப்பு செய்தி இந்தியா அங்கன்வாடி பெண் ஊழியர்களை வஞ்சிக்கும் மகாராஷ்டிரா அரசு !

அங்கன்வாடி பெண் ஊழியர்களை வஞ்சிக்கும் மகாராஷ்டிரா அரசு !

-

திப்பூதியம் மற்றும் ஓய்வூதியத்தை அதிகரிக்க வலியுறித்தி போராட்டம் அறிவித்துள்ள 2 இலட்சம் மகாராஷ்டிர அங்கன்வாடி பெண் ஊழியர்கள் மீது எஸ்மா (ESMA) சட்டத்தை ஏவியிருக்கிறது அம்மாநில அரசு. இதன் மூலம் இனி எப்போதுமே போராட்டத்தில் ஈடுபட முடியாதவாறும் ஊழியர்களது அடிப்படை உரிமைகளை மாநில குழந்தைகள் மற்றும் பெண்கள் நலத்துறை பறித்துள்ளது.

குழந்தைகளுக்கு ஆறு வயதாகும் வரை அவர்களை பேணிப் பாதுகாப்பதில் பங்காற்றும் அங்கன்வாடி ஊழியர்கள் அதற்கென குறைவான ஊதியத்தையே பெருகின்றனர். ஊதியத்தை அதிகரிக்கச் சொல்லி பல ஆண்டுகள் போராடி வந்தாலும் அவர்களது கோரிக்கையை நிறைவேற்றாமல் இழுத்தடித்து வருகிறது அரசு.

பொதுமக்களின் விருப்பத்தின் பேரிலேயே இந்த நடவடிக்கையை எடுத்ததாக அரசு கூறுகிறது. ஆனால் மார்ச் -27 ஆம் தேதி நடக்கவிருக்கும் மாநில அளவிலான போராட்டத்தைத் தடுக்கவே அரசு இந்த நடவடிக்கையை எடுத்திருப்பதாக ஊழியர்கள் கூறுகின்றனர். இதன் மூலம் போராட்டத்தில் ஈடுபடும் ஊழியர்களை ஆறு மாதம் வரை சிறையில் அடைக்க முடியும்.

கடந்த நாற்பது ஆண்டுகளாக அங்கன்வாடி பணியாளர்களை அங்கீகாரம் செய்யாமல் அரசு ஏய்த்து வருகிறது. இதன் மூலம் தொழிலாளர் சட்டத்தின் படி அவர்களுக்கு நியாயமாக கிடைக்க வேண்டிய முறையான சம்பளம், சுகாதார காப்பீடு, ஓய்வூதிய நலன் உள்ளிட்டவைகள் கிடைக்காமல் சதி செய்கிறது. அங்கன்வாடி பணியாளர்களுக்கு இதுவரை மதிப்பூதியம் மட்டுமே வழங்கப்பட்டு வருகிறது.

அங்கன்வாடி பணியாளர்களில் பெரும்பான்மையானோர் தனித்து வாழும் தாய்மார்கள், கைம்பெண்கள் மற்றும் கைவிடப்பட்டவர்களே! அங்கன்வாடி வேலைக்கான ஆட்சேர்ப்பு விதிகள் இப்படி சமூகத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு முன்னுரிமை அளிப்பதாகத்தான் இருந்தது. ஆனால் அங்கன்வாடி ஊழியர்களின் நிலையோ இன்றும் பரிதாபமாகத்தான் உள்ளது.

“சென்ற முறை ஊழியர்கள் போராட்டத்தினால் ஏற்பட்ட விளைவுகள் சமாளிக்க முடியாததாக இருந்தது. அதை தவிர்க்கும் பொருட்டே இந்நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது” என்று பெண்கள் மற்றும் குழந்தைகள் நலத்துறை உயர் அதிகாரி ஒருவர் கூறியிருக்கிறார்.

மதிப்பூதியத்தை ரூபாய் 7,000 -லிருந்து 13,000 ஆக உயர்த்த வலியுறுத்தி 2017 -ம் ஆண்டு செப்டம்பர் மாதம் அங்கன்வாடி ஊழியர்கள் 26 நாட்கள் தொடர்ச்சியாக போராட்டத்தில் ஈடுபட்டனர். ஊழியர்கள் தற்போது 6,500 – 6,800 ருபாயும் உதவியாளர்கள் 3,500 ரூபாயும் மதிப்பூதியமாக பெறுகின்றனர்.

தேவேந்திர பட்னாவிஸ்

ஆனால் 20, 30 ஆண்டுகள் அனுபவமிக்க ஊழியர்களுக்குக் கூட 3 – 5 விழுக்காடு வரை மட்டுமே ஊதியத்தை உயர்த்த அரசு ஒப்புக்கொண்டது. 2018 -ம் ஆண்டு வரவு செலவு திட்டத்தில் ஊதிய உயர்வு அறிவிப்பதாய் சொன்ன முதலமைச்சர் தேவேந்திர பட்னாவிஸின் வாக்குறுதியும் நிறைவேற்றப்படவில்லை என்று அங்கன்வாடி ஊழியர் சங்கத்தைச் சேர்ந்த சுபா ஷமிம் கூறினார்.

இதுவரை மூன்று முறை மட்டுமே ஊழியர்கள் தொடர்ச்சியான போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். “இந்த வேலை நிறுத்தத்தால் குழந்தைகளுக்கு ஏற்படும் பாதிப்பு குறித்து நாங்கள் நன்றாகவே அறிவோம். ஆனால் குழந்தைகளுக்கு நாங்கள் மட்டுமா பொறுப்பானவர்கள்? அங்கன்வாடி ஊழியர்கள் இப்படியான இன்றிமையாத பணியில் ஈடுபடுவதை அரசு உணர்ந்தால் ஏன் அவர்களை மதிக்கவும் முறையான ஊதியத்தை கொடுக்கவும் மறுக்கிறது? என்று ஷமிம் வினவுகிறார்.

இது ஒருபுறமிருக்க அங்கன்வாடி ஊழியர்களுக்கான வயது வரம்பை 65 லிருந்து 60 – ஆக குறைக்கவிருப்பதாகவும் அரசு முடிவெடுத்திருக்கிறது. இப்புதிய அறிவிப்பு ஏப்ரல் முதல் அமலுக்கு வரும் போது சுமார் 13,000 பெண்கள் பணியிலிருந்து துரத்தப்படுவார்கள்.

இதுவரை அரசிடமிருந்து முறையான அறிக்கை எதுவும் வரவில்லை என்றார் 62 வயதான அங்கன்வாடி பணியாளரான யசோதா சிண்டே. இருப்பினும், இப்புதிய அறிவிப்பைப் பற்றி தொழிலாளர்கள் சங்கம் அவரிடம் தெரிவித்துள்ளது. “இம்மாத இறுதியில் பணியிலிருந்து விலக வேண்டும் என்று எனக்குச் சொல்லப்பட்டிருக்கிறது. அங்கன்வாடியில் சம்பாதிக்கும் மாத ஊதியத்தை கொண்டு தான் நான் வாழ்ந்து வருகிறேன். திடீரென வேலையிலிருந்து எங்களை அரசாங்கம் அகற்ற முடியாது. நான் நல்ல உடல்நலத்துடன் இருக்கிறேன். கிட்டத்தட்ட 25 ஆண்டுகள் அங்கன்வாடியில் வேலை செய்து வருகிறேன். இது நியாயமற்றது” என்று ஷிண்டே கூறுகிறார்.

“இது ஒரு கடுமையான வேலை, மேலும் முழுமையான கவனத்தை குழந்தைகளுக்கு அளிக்க வேண்டும். வயதான இப்பெண்களால் நீண்ட நேரம் வேலை செய்யமுடியும் என்று நாம் எதிர்பார்க்க முடியாது. எனவே வயது வரம்பை குறைக்க நாங்கள் முடிவெடுத்திருக்கிறோம்” என்று பெண்கள் மற்றும் குழந்தைகள் நலத்துறை அதிகாரி ஒருவர் கூறினார்.

அரசின் எஸ்மா சட்டம் மற்றும் வயது வரம்பைக் குறைத்தல் உள்ளிட்ட சட்டவிரோத நடவடிக்கைகளை எதிர்த்து மும்பை உயர்நீதிமன்றம் சென்றிருக்கிறது அங்கன்வாடி ஊழியர்கள் சங்கம். “இது ஒரு நியாயமற்ற சட்டவிரோதமான நடவடிக்கை. அங்கன்வாடி பணியாளர்கள் பல ஆண்டுகளாக வஞ்சிக்கப்பட்டு வந்துள்ளனர். அவர்களது கோரிக்கைகளுக்கு முகங்கொடுக்காமல் அவர்களை வேலையை விட்டு துரத்த பார்க்கிறது மாநில அரசு. உயர்நீதி மன்றம் எங்களுக்கு சற்று நிம்மதியை கொடுக்கும் என்று நம்புகிறோம்” என்று ஷமிம் கூறினார்.

ஆயினும் நீதிமன்றங்கள் என்பது மக்களின் நியாயமான போராட்டங்களை ஒடுக்குவதில் அரசிற்கு உதவிதான் செய்யுமென்பதை போக்குவரத்து ஊழியர்களின் போராட்டத்தின் போதும் செவிலியர்களின் போராட்டத்தின் போதும் சென்னை உயர்நீதிமன்றத்தின் நடவடிக்கை மூலம் சமீபத்தில் உணர்ந்திருக்கிறோம். எனவே தளராத போராட்டமும் சமூகத்தின் ஆதரவும் தான் அங்கன்வாடி ஊழியர்களுக்கான இன்றைய கட்டாயத் தேவை.

மேலும் படிக்க :

 

சந்தா செலுத்துங்கள்

இணையத்தில் உழைக்கும் மக்களின் குரலாக பதினோரு ஆண்டுகளாக போராடும் வினவுடன் கை கோருங்கள். ஆதரியுங்கள்

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க