ந்தி பேசும் மாநிலங்களில் ஆட்சியை இழந்துள்ளதன் மூலம் சங்க பரிவாரம் பீதியடைந்துள்ளது. அதற்காக மத உணர்வை தூண்டிவிட்டு இந்துக்களின் வாக்குகளைத் திரட்டும் பணிகளில் இறங்கியுள்ளது. அடுத்த மாதம் உத்திர பிரதேச மாநிலம் பிரயாக்ராஜ் நகரத்தில் நடக்கவுள்ள அர்த் – கும்பமேளாவில் கலந்துகொள்ள வரும் பக்தர்களை வசமாக்க ஆர்.எஸ்.எஸ். திட்டமிட்டு வருகிறது.

நெருங்கி வரும் 2019 நாடாளுமன்ற தேர்தலில் வெல்ல, அதிக எண்ணிக்கையிலான தொகுதிகளைக் கொண்ட உத்தர பிரதேசத்தை கைப்பற்றுவது சங்கபரிவாரத்துக்கு முக்கியம். அதனடிப்படையில் ஆறு வருடங்களுக்கு ஒருமுறை நடக்கும் அர்த் கும்பமேளாவைப் பயன்படுத்தி இந்துக்களை காவி அரசியலின் பக்கம் திருப்ப தீவிரமாக திட்டமிட்டு வருகிறது ஆர்.எஸ்.எஸ்.

படம் : கும்பமேளா

ஜனவரி 14-ம் தேதி தொடங்கி, ஆறு வாரங்களுக்கு அர்த் கும்பமேளா நடக்க இருக்கிறது. இரண்டு கும்பமேளாக்களுக்கு இடையே வருவது அர்த் கும்பமேளா.  இதில் கலந்துகொள்ள வரும் லட்சக்கணக்கான பக்தர்களை வழிநடத்தவும் உதவிகளை செய்யவும் ஆர்.எஸ்.எஸ்.-காரர்கள் சீருடை அணிந்து வரவிருப்பதாக ஆர்.எஸ்.எஸ்-ன் வாரணாசி வடக்கு பகுதி தலைவர் நந்தலால் தெரிவிக்கிறார்.  கும்பமேளாவில் நேரடியாக இதுபோன்ற பணிகளில் ஈடுபடுவது இதுவே முதல்முறை என்றும் இவர் தெரிவிக்கிறார்.

உத்தரபிரதேசம் காவிகளின் மாநிலமாக நீண்ட காலமாக இருந்து வருகிறது. ஆர்.எஸ்.எஸ். இங்கே தேர்தல் கட்சிகளையும் விடவும் ஆழமாக வேரூன்றியிருக்கிறது. உ.பியை ஆறு பகுதிகளாக பிரித்து, அதில் ஒவ்வொன்றிலும் 25 வட்டார அமைப்புகளுடன் தனது விசக் கிளையை பரப்பியிருக்கிறது ஆர்.எஸ்.எஸ்.  ஒவ்வொரு வட்டார அமைப்புகளிலிருந்து ஆறிலிருந்து ஏழுநூறு பேர் கும்பமேளாவில் கலந்துகொள்வார் என்றும் அவர்கள் கும்பமேளாவில் நெரிசலை கட்டுப்படுத்துவது கூட்டத்தில் காணாமல் போனவர்களை கண்டுபிடித்து தருவது போன்ற பணிகளில் ஈடுபடுவார்கள் என்கிறார் நந்தலால்.  கும்பமேளாவில் வருகிறவர்களுக்கு கண் பரிசோதனை செய்து, ஒரு லட்சம் பேருக்கு கண்ணாடிகள் வழங்கப்பட இருப்பதாகவும் லால் தெரிவிக்கிறார். அதாவது, சேவையை லஞ்சமாகக் கொடுத்து வாக்குகளை பெற திட்டமிடுகிறது காவி கும்பல்.

படிக்க :
♦ கும்பமேளா: இந்தியாவின் புனிதமா, அழுக்காŸ?
♦ ஜெயேந்திரன் – நித்தியனாந்தா கும்பமேளா சந்திப்பு !

ஆர்.எஸ்.எஸ்-ன் வரலாற்றை சொல்லும் நாடகம் ஒன்றும் அரங்கேற இருக்கிறதாம். அதன் பெயர் ‘சங்கம் சரணம் கச்சாமி’ (‘சங்பரிவாருடன் அடைக்கலமாகிறேன்’). ‘புத்தம் சரணம் கச்சாமி’ என்ற பவுத்த பிரார்த்தனை வாக்கியத்தை மாற்றி இதை உருவாக்கியிருக்கிறார்கள். திருட்டு ஆர்.எஸ். எஸ். கும்பலால் ஒரு பிரார்த்தனை வாக்கியத்தைக் கூட உருவாக்க முடியவில்லை!

பாஜக ஆளும் உ.பி அரசின் உதவியோடு நடக்கும் மிகப் பெரிய விழாவில் இந்துத்துகளை மத ரீதியாக தூண்டி, அவர்களை வாக்குகளாக மாற்றும் உத்தியாகவே திட்டமிடப்பட்டிருக்கின்றன.  545 தொகுதிகள் கொண்ட மக்களவையில், உ.பி. மட்டும் 90 தொகுதிகளைக் கொண்டுள்ளது. 2014-ம் ஆண்டு இந்த மாநிலத்தில் 71 தொகுதிகளை வென்றது பாஜக. அந்தக் கட்சி வென்ற 282 தொகுதிகளில் நான்கில் ஒரு பங்கு தொகுதிகள் உ.பி.யில் வென்றவைதாம்.

கடந்த 2017-ம் ஆண்டு நடந்த சட்டபேரவை தேர்தலிலும் பாஜக வென்றது. ஆனால், அடுத்தடுத்து வந்த மூன்று மக்களவை தொகுதி இடைத்தேர்தலிலும் படு கேவலமாக தோற்றது. முதல்வர், துணை முதல்வர் வென்ற தொகுதிகளில்கூட வெற்றி பெற்ற முடியவில்லை. 1991-ம் ஆண்டு முதல் பாஜகவின் கோட்டையாக இருந்துவரும் கோரக்பூர் தொகுதியை இடைத்தேர்தலில் இழந்தது பாஜக. அடுத்து வந்த சட்டப்பேரவை தேர்தல்களில் இந்துத்துவ செல்வாக்கு மிக்க மூன்று மாநிலங்களை இழந்துள்ளது பாஜக.

படிக்க:
♦ சாதி அரசியலைத் தூண்டும் பாஜகவின் நரித்தனம் !
♦ கேள்வி பதில் : ஓட்டுப் போடுவது மட்டுமே பாஜக – வை தோற்கடிக்கும் ஒரே வழியா ?

இந்த நிலையில், இந்துக்களை மத ரீதியாக திரட்டினால் மட்டுமே தேர்தலில் வெற்றி காண முடியும் என ஆர்.எஸ். எஸ். – பாஜக கணக்கு போடுகிறது. அர்த் கும்பமேளா இதுநாள் வரை பெரிய அளவிலான முக்கியத்துடன் கொண்டாடப்படவில்லை. ஆனால், இம்முறை தேர்தல் வரவிருப்பதை ஒட்டி காவி கும்பல், மிகைப்படுத்தி மக்களை திரட்டப் பார்க்கிறது.

கடந்த டிசம்பர் 16-ம் தேதி கங்கைக்கு பூஜை செய்து, பிரயாக்ராஜ் நகரில் கும்பமேளா உதவி மையத்தை தொடங்கி வைத்தார் மோடி. அதுபோல, உ.பி. முதல்வர் ஆதித்யநாத் மாநிலத்தில் உள்ள அனைத்து பஞ்சாயத்து தலைவர்களுக்கும் அதிக அளவிலான மக்களை திரட்டி கும்பமேளாவில் கலந்து கொள்ளும்படி கடிதம் எழுத இருக்கிறார்.

முன்பு விசுவ இந்து பரிசத் மூலம் இயக்கப்பட்ட இந்த நடவடிக்கைகளில் இப்போது ஆர்.எஸ்.எஸ். நேரடியாக களம் இறங்கியிருக்கிறது. மக்களவை தேர்தலில் தோற்றுவிடக்கூடும் என்கிற பயத்தின் காரணமாக ஆர். எஸ்.எஸ். இந்த முடிவு எடுத்திருப்பதாக அந்த அமைப்பைச் சேர்ந்தவர் தெரிவிக்கிறார்.

தரம் சன்சாத் – சாமியார்களின் கூட்டம்

1989-ம் ஆண்டு அலகாபாத்தில் நடந்த கும்பமேளா, காவி கும்பலை அணி திரட்ட உதவியது. ராம ஜென்மபூமி என்ற முழுக்கம் கிளம்ப அது அடித்தளம் இட்டுக்கொடுத்தது. அப்போது விசுவ இந்து பரிசத் இந்த காவி நாடகத்தை அரங்கேற்றியது. அது போன்றதொரு திட்டமிடலைச் செய்ய இப்போது நடக்கவிருக்கும் கும்பமேளாவை பயன்படுத்த பார்க்கிறது காவி கும்பல்.

முன்னாள் அலகாபாத் ஆன பிரயாக்ராஜில் நடைபெறவிருக்கும் அர்த் கும்பமேளாவில் வி.எச்.பி. சாமியார்களை ஒருங்கிணைத்து ‘தரம் சன்சாத்’ நிகழ்வை மீண்டும் நடத்த இருக்கிறது. சமீபத்தில் நடந்த இந்த நிகழ்வில் ‘ராமர் கோயிலை கட்டியே தீர வேண்டும்’ என முழங்கியது இந்த காவி கும்பல்.

நேரடியாக ஆர்.எஸ். எஸ். காவிகளின் கண்காணிப்பில் நடக்கவிருக்கும் கும்பமேளாவில் கலந்துகொள்ளும் ஒரு எளிய இந்து பக்தர், தனது பழைய குணங்களுடன் திரும்புவது சந்தேகமே என கவலை தெரிவிக்கிறது இந்த செய்தியை வெளியிட்டிருக்கும் கேரவன் இதழ்.

பாசிசத்தின் வாரிசுகள் அவ்வளவு எளிதாக தோல்வியை ஒப்புக்கொள்ள மாட்டார்கள். பெரும்பான்மையுடன் அமைத்த ஆட்சியை விட்டுத்தரவும் மாட்டார்கள். மக்களை மத ரீதியாக திரட்ட கற்றுவைத்திருக்கும் வித்தைகளை பரிசோதனை செய்யவும் தயங்க மாட்டார்கள். மக்களே விழிப்போடு இருங்கள்!

அனிதா
செய்தி ஆதாரம் : கேரவன்

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க