பாஜக-வை தோற்கடிக்க மக்கள் முன் உள்ள வழி ஓட்டு மட்டுமே உள்ளது. ஓட்டு போடாமல் இருந்தால் பாசிச பிஜேபி- க்கு வெற்றி உறுதியாகிவிடாதா? மாற்று வழி என்ன?

– சுந்தரராஜன் பரசுராமன்

ன்புள்ள பரசுராமன்,

டிசம்பர் 6, 1992-ஆம் ஆண்டில் பாபர் மசூதி இடிக்கப்பட்ட போது பாரதிய ஜனதா ஆட்சியில் இல்லை. பாபர் மசூதி இடிக்கப்பட்ட குற்ற வழக்கு அன்று ஆரம்பித்து இன்று வரை தொடர்கிறது. குற்றவாளிகள் தண்டிக்கப்படவில்லை. இந்த இடைக்காலத்தில் காங்கிரஸ் அரசாங்கங்கள் மத்தியில் ஆண்டிருக்கின்றன.

அதேபோன்று நாடு முழுவதும் சங்க பரிவாரங்கள் நடத்திய கலவரங்கள் பலவற்றில் இந்துத்துவா குற்றவாளிகள் தண்டிக்கப்பட்டது இல்லை. 2002-ம் ஆண்டில் நடந்த குஜராத் கலவரம் தொடர்பான குற்றவாளிகள் இன்று விடுவிக்கப்பட்டு வருகிறார்கள். குஜராத் முசுலீம் மக்களை இனப்படுகொலை செய்த அந்தக் கலவரத்திற்கு பிறகும் கூட இருமுறை காங்கிரஸ் அரசு மத்தியில் ஆட்சி செய்திருக்கின்றது.

இதனை 1947-க்கு பிந்தைய இந்திய வரலாற்று முழுவதிலும் பார்க்கலாம். ஏன் அதற்கு முன்பே பிரிட்டிஷ் காலனிய ஆட்சியின் போதும் கூட பார்க்கலாம். இன்றைக்கு கேரளாவில் பாரதிய ஜனதாவிற்கு ஒரு எம்.எல்.ஏ மட்டும் இருக்கிறார்.

ஆனால் சபரிமலையில் பெண்கள் நுழையலாம் என்று உச்சநீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து இன்றுவரை அங்கே ஆயிரக்கணக்கான பக்தர்களோடு சங்க பரிவார குண்டர்களும் இணைந்து பெண்களை அனுமதிக்க மறுக்கிறார்கள். அன்றாடம் பதட்டத்தையும் பற்ற வைக்கிறார்கள்.

கேரளாவை ஆள்வது மார்க்சிஸ்ட் கூட்டணி ஆட்சி. அது மதவாதத்திற்கு எதிரான ஆட்சியும் கூட. ஆனாலும் அங்கே சபரிமலை பிரச்சனையில் இந்துமதவெறியர்கள் செல்வாக்குடன் மக்களை திசை திருப்புகிறார்கள். தமிழகத்தில் கூட கவுன்சிலர் தேர்தலில் கூட வாக்குகளை பெற முடியாத கட்சி என்ற என்ற புதிய பழமொழிக்கு சொந்தமான பாரதிய ஜனதா கட்சி ஊடகங்களில் கொண்டாடப்படுகிறது. மட்டுமல்ல ஊடகங்களை தன் பிடியிலும் வைத்திருக்கிறது. அனைத்து தொலைக்காட்சிகளிலும் அன்றாடம் நடக்கும் மாலை நேர விவாதங்களில் சேனல் ஒன்றுக்கு இரண்டு நபர்கள் வீதம் நேரடியாகவோ சமூக ஆர்வலர் பேரிலும் இறக்கப்படுகிறார்கள்.

மேகாலயா உயர் நீதிமன்ற நீதிபதி ஒரு தீர்ப்பில் இந்தியாவை இந்து நாடாக அறிவிக்க வேண்டும் என பிரதமர் மோடிக்கு கோரிக்கை விடுக்கிறார். முன்னாள் ஐ.ஏ.எஸ் ஐ.பி.எஸ் மற்றும் ராணுவ அதிகாரிகள் அனைவரும் பாஜக-வில் சேர்கிறார்கள்.

இந்து அறநிலையத்துறை கோவில்களில் சிலைகள் திருடப்படுவதை விசாரிக்கும் பொன்மாணிக்கவேல் வீட்டு திருமணத்திற்கு எச் ராஜா வந்து ஆசிர்வாதம் தருகிறார். ரப்பர் ஸ்டாம்பாகவே இருந்தாலும் அரசியல் சாசன பதவிகள் என்று மதிக்கப்படும் ஆளுநர்கள் ஜனாதிபதிகள் ஆர்.எஸ்.எஸ் விழாக்களில் கலந்து கொள்கிறார்கள். கடைசியாக கலந்து கொண்டவர் காங்கிரசைச் சேர்ந்த முன்னாள் குடியரசுத் தலைவர் பிரனாப் முகர்ஜி.

தமிழக அமைச்சர் மா.ஃபா பாண்டியராஜனோ, ஆர்.எஸ்.எஸ்-ஐ சொக்கத்தங்கம் என்று சொல்கிறார். எனவே பாரதிய ஜனதாவை தோற்கடிப்பது என்பது தேர்தல் மூலமாக மட்டுமே முடியுமா என்பதைப் பரிசீலியுங்கள்.

படிக்க:
♦ தேர்தல் புறக்கணிப்பு ஏன் ? தீர்வுதான் என்ன ?
♦ ஐந்து மாநிலத் தேர்தலில் பாஜக தோல்வி : மகிழ்ச்சியடையலாம் ! எனினும் மெத்தனம் கூடாது !

அதேநேரம் 2014-ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலில் ஆட்சியைப் பிடித்த மோடி அரசு இன்று நீதித்துறை, நிதித்துறை, ராணுவம், ஊடக நிறுவனங்கள் என அனைத்துத் துறைகளையும் இந்துத்துவ மயமாக்கி வருகிறது. அந்த மயமாக்கத்திற்கு அவர்கள் ஆட்சியில் இருப்பது ஒரு முக்கியமான காரணம் தான் மறுக்கவில்லை.

ஆனால் அதைவிட முக்கியமானது மேற்கண்ட அரசு இயந்திரங்கள் அனைத்தும் நெடுங்காலமாகவே இந்துத்துவாவின் செல்வாக்கோடு இயங்கி வருவதாகவும் இருக்கிறது. அதனால் மோடி அரசு இத்தகைய பார்ப்பனிய பாசிச நிகழ்ச்சி நிரலை அதிவேகமாகச் செய்து வருகிறது.

எனவே பாஜகவை தோற்கடிப்பது என்பது தேர்தல் மூலம் நடக்கக் கூடிய ஒன்றல்ல. மக்களைப் பொறுத்தவரை பாஜகவை தோற்கடிப்பது தேர்தல் மூலம் தான் என்று ஒரு சிலர் கருதலாம். சமீபத்தில் நடந்த 5 மாநில தேர்தலில் முடிவுகளின் போதும் நாம் அதைப் பார்த்தோம். ஆனால் அந்த தேர்தலில் காங்கிரஸ் கட்சி கூட மிதவாத இந்துத்துவ அரசியலில் பேசியதாக விமர்சிக்கப்பட்டது. ஓரளவிற்கு அது உண்மையும் கூட.

அதேநேரம் ஆட்சியில் இல்லாத போது சங்க பரிவாரங்கள் மூர்க்கமாக தமது மதவெறி அரசியலை நிகழ்ச்சி நிரலில் கொண்டு வருகின்றனர். இங்கே இங்கே எச் ராஜா அந்தப் பணியினை அவ்வப்போது செய்து வருகிறார்.

தேர்தல் அரசியல் மூலமாக பாரதிய ஜனதாவை தோற்கடிப்பதற்கு ஓரளவு பங்கு இருப்பதாக மட்டும் சொல்லலாம். மற்றபடி அதனுடைய சித்தாந்தத்திற்கு பலியாக இருக்கின்ற மக்களை பல்வேறு பார்ப்பனிய பண்பாட்டு எதிர்ப்புப் போராட்டங்களின் ஊடாக அரசியல் படுத்த வேண்டியது முக்கியம். ஏனெனில் நாமெல்லாம் இந்துக்கள் என்று அவர்கள், இல்லாத இந்து மதத்தின் பிரதிநிதியாக தங்களை முன்வைக்கிறார்கள். உண்மையில் இந்து மதத்தில் இருப்பதெல்லாம் சாதி பேதமும் வர்க்க பேதமும் பாலின பேதமும் தான். இந்த முரண்பாட்டை புரியவைத்து மக்களை மீட்பது அவசியம்.

ஜல்லிக்கட்டு தடையை நீக்குவதற்கு தமிழக மக்கள் நடத்திய போராட்டம் பாரதிய ஜனதா அரசோடு நீதிமன்றத்தையும் பணிய வைத்தது. அதேபோன்று பெங்களூரு ஆயத்த ஆடை தொழிலாளிகளின் போராட்டம் அவர்களுக்கு உரிய சேமநல நிதியை மீட்டு வந்தது. இதேபோன்று மகாராஷ்டிரா மத்தியப் பிரதேசத்தில் விவசாயிகள் போர்க்குணத்துடன் போராடியதன் விளைவாக இன்று விவசாயக் கடன்கள் ரத்து செய்யப்படுவதையும் பார்க்கிறோம். எனவே பொருளாதாரப் பிரச்சனையாக இருந்தாலும் சரி, பண்பாட்டு பிரச்சனையாக இருந்தாலும் சரி அதில் பார்ப்பனியத்திற்கு எதிரான வெற்றி என்பது வீதியில், ஊரில் பொதுமக்கள் நடத்தும் போராட்டத்தோடு இணைக்கப்பட்டிருக்கிறது.

இதே கருத்தை “இனவாதம், வகுப்புவாதத்தை கருத்தியல் ரீதியாக தோற்கடிக்காமல் வீழ்த்த முடியாது” என பேராசிரியர் பிபன் சந்திராசில சான்றுகளோடு முன் வைக்கிறார். அமெரிக்காவில் 1864-ம் ஆண்டிலேயே அடிமை முறை, சட்டத்தால் ஒழிக்கப்பட்டாலும் இன்று வரை கருப்பின மக்கள் மீதான பேதமும், அடக்கு முறையும் தொடர்வதைப் பார்க்கிறோம். ஜார் ஆண்ட ரசியாவில் யூதர்கள் மீதான அடக்குமறை அதிகம் இருந்தது. அதை சித்தாந்தம், நடைமுறை என இரு அரங்கிலும் கம்யூனிஸ்ட் கட்சி எதிர்த்துப் போராடியது. அந்தப் போராட்டத்தின் பலனால்தான் 1917 புரட்சி முடிந்த பிறகு யூத மக்கள் மீதான ஒடுக்குமுறையை ரசியாவில் துடைத்தெறிய முடிந்தது. 1984 பாராளுமன்றத் தேர்தலில் இரு இடங்களில்தான் பாஜக வெற்றி பெற்றிருந்தாலும் அதன் வகுப்புவாத  செல்வாக்கு அப்படியே இருந்தது. 2004-ம் ஆண்டில் வாஜ்பாயி தலைமையில் தேர்தலை சந்தித்த பாஜக தோற்கடிக்கப்பட்டாலும் அவர்களுடைய இந்துத்துவம் வலுவாகி பின்னர் 2014-ல் மோடி தலைமையில் வெற்றி பெற்றது. கடைசியாக கேரளாவில் தேர்தல் வெற்றி பெறாத பாஜக அங்கே நடுத்தர வர்க்கத்தின் மத்தியில் வகுப்புவாதத்தை பரவலாக்கி வருகிறது, இதை தடுக்கா விட்டால் அதற்கு நாமே பொறுப்பு என்கிறார் பிபன் சந்திரா.

இதை அவர் எழுதிய ஆண்டு 2008. தற்போது 2018-லும் அதுதான் நிலைமை!

பாரதிய ஜனதா ஆட்சியில் இருந்தாலும் இல்லாவிட்டாலும் அவர்களது அழுத்தத்திற்கு ஏற்பவே மற்ற கட்சிகள் செயல்படுகின்றனர். அந்த கட்சிகள் மதச்சார்பற்ற கட்சிகளாக இருந்தாலும் இதுதான் நியதி. தமிழக சிறையில் அப்பாவிகளான முஸ்லீம் மக்கள் ஏராளம் பேர் இருக்கிறார்கள். இவர்கள் தி.மு.க மற்றும் அ.தி.மு.க அரசுகள் சிறையில் அடைக்க காரணமே பா.ஜ.க.முன்வைக்கும் இந்துத்துவா அரசியலின் மீதான பயம்தான்.

எனவே பார்ப்பனிய பாசிசத்தை வீழ்த்துவதற்கும், அதை மற்ற மதசார்பற்ற கட்சிகளுக்கு புரியவைப்பதற்குமே கூட மக்கள் அரங்கில் பாஜக வீழ்த்தப்படுவது நிபந்தனை. தூத்துக்குடி ஸ்டெர்லைட் போராட்டத்தை எடுத்துக் கொண்டால் அது மூடப்பட்டது மக்களின் போராட்டத்தால். இன்றைக்கு திறக்கப்படுவது என்பது நீதிமன்றத்தின் பெயரால் பாஜக செய்கிறது.

இன்றும் இதை எதிர்த்து முறியடிக்கும் சக்தி மக்களின் கையில்தான் உள்ளது. திமுக முதலான எதிர்க்கட்சிகள் ஆட்சியில் இருந்தாலும், இல்லை என்றாலும் இத்தகைய போராட்டத்திற்கு தார்மீக ஆதரவைத்தான் தருவார்களே அன்றி நேரடி பங்கேற்பை அல்ல.

ஆகவே ஓட்டுப் போடுவது மக்களிடம் உள்ள ஒரே வழி என்பதும் தவறு. தேர்தல் அரசியலைத் தாண்டிய மக்கள் அரங்கில் இந்துத்துவா சக்திகளை தனிமைப்படுத்தும் போது மட்டுமே அந்த வெற்றியும் மக்களுக்கு கிடைக்கும்.

உங்கள் கேள்விகளை அனுப்ப:

தங்களின் கேள்விகளை பதிவு செய்யுங்கள்