அர்ஜெண்டினா – நெதர்லாந்து: பாசிஸ்ட்டுகள் வெற்றி! இந்திய ஜனநாயக சக்திகள் கற்க வேண்டிய பாடம்!

தென் அமெரிக்காவிலேயே இரண்டாவது பெரிய பொருளாதாரத்தைக் கொண்ட அர்ஜெண்டினாவில் வரலாறு காணாத அளவிற்கு பணவீக்கம் நிலவுவதற்கு மையவாத இடதுசாரிகளின் அர்ஜெண்டினாவை அமெரிக்காவிற்கு அடகு வைக்கின்ற பொருளாதாரக் கொள்கைகள்தான் காரணம்.

அர்ஜெண்டினா மற்றும் நெதர்லாந்து: பாசிஸ்ட்டுகள் வெற்றி!
பாசிச எதிர்ப்பில் இந்திய ஜனநாயக சக்திகள் கற்க வேண்டிய எதிர்மறை பாடம்!

லகம் முழுவதும் ஏகாதிபத்திய முதலாளித்துவம் சமூக – அரசியல்-பொருளாதார நெருக்கடியில் சிக்கி ஒரு முட்டுச் சந்துக்கு வந்துள்ளது. உலகெங்கும், வேலையில்லா திண்டாட்டமும், பட்டினிச் சாவுகளும் அதிகரித்து வருகின்றன. ஊதிப் பெருக்கப்பட்ட பொருளாதார வளர்ச்சியும்கூட சொல்லிக் கொள்ளும்படி இல்லை. விண்ணைத் தொடுமளவிற்கு அத்தியாவசியப் பொருட்களின் விலைவாசி உயர்வு, பணவீக்கம், டாலருக்கு நிகரான நாணய மதிப்பு குறைவு என உலக முழுக்க ஏகாதிபத்திய முதலாளித்துவ பேய் பிடித்தாட்டுகிறது.  ஏகாதிபத்தியத்தால் அடக்கி ஒடுக்கப்படும் நாடுகள் மட்டுமின்றி, ஏகாதிபத்திய நாடுகளிலும் தொழிலாளர்களும், உழைக்கும் மக்களும் வீதியிலிறங்கிப் போராடுகின்றனர்.

பொருளாதாரரீதியாக உலகமயமாக்கலை முன் தள்ளிய நாடுகள் தற்போது காப்புவாதத்தைக் கடைபிடிக்க வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டிருக்கின்றன. ஜனநாயக உரிமைகள் பற்றி பேசப்படும் நாடுகளில் கூட, அகதிகளை ஏற்றுக் கொள்ள மறுக்கின்ற சமூகக் காப்புவாதம் கடைபிடிக்கப்படுகிறது. அந்தளவிற்கு, இன்றைய ஏகாதிபத்திய முதலாளித்துவம் சமூக-அரசியல்-பொருளாதார ரீதியாக தோல்வியடைந்திருக்கிறது, எதிர்நிலைக்கு மாறியிருக்கிறது.  இந்த ஏகாதிபத்திய முதலாளித்துவத்தின் வீழ்ச்சியை கொரோனா பெருந்தொற்றுக்காலம் தீவிரப்படுத்தியிருக்கிறது. இதன் எதிரொலியாகத்தான் ஏகாதிபத்தியங்களுக்கிடையிலான மேலாதிக்கப் போர்களும் நடைபெற்று வருகின்றன.

இந்த பின்புலத்திலிருந்துதான் ஏகாதிபத்திய முதலாளித்துவவாதிகள் தங்களது சுரண்டலை மேலும் தீவரப்படுத்த, பாசிச சக்திகளை வளர்த்து வருகிறார்கள், உலகெங்கும் பாசிஸ்ட்டுகள் ஆட்சிப் பொறுப்புக்கு வந்துக் கொண்டிருக்கிறார்கள். குறிப்பாக அமெரிக்க ஏகாதிபத்தியமான தனது சரிந்துவரும்  உலக மேலாதிக்கத்தைத் தக்க வைத்துக் கொள்ள, மூன்றாம் உலக நாடுகளில் பாசிச சக்திகளை ஊக்குவித்தும், ஆட்சிக் கவிழ்ப்புகள் மூலம் பொம்மை அரசுகளை உருவாக்கியும் வருகிறது. ஏற்கனவே தெற்காசிய பிராந்தியத்தில் தனது மேலாதிக்கத்தை நிலைநிறுத்திக் கொள்ள இலங்கை மற்றும் பாகிஸ்தானில் ஆட்சிக் கவிழ்ப்பை அரங்கேற்றியது. தற்பொழுது, ‘ஜனநாயக’ப் பூர்வமாகவே, தென் அமெரிக்க நாடான அர்ஜெண்டினாவில் தீவிர வலதுசாரியான ஜாவியர் மில்லெ அதிபராகத் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறார்.

“அர்ஜெண்டினாவின் டிரம்ப்” என்றும்,  “பைத்தியக்கார மனிதன் (Madman)” என்று அழைக்கப்படும், மில்லே அதிபர் தேர்தலில் 56 சதவீத ஓட்டுகள் பெற்றிருக்கிறார். அர்ஜெண்டினாவின் ஆளும் மையவாத மற்றும் இடதுசாரி கூட்டணி கட்சிகளின் வேட்பாளரும், தற்போதைய நிதியமைச்சருமான செர்ஜியோமஸ்ஸா 44 சதவீத வாக்குகள் பெற்றிருக்கிறார். மில்லேவின் வெற்றியை, அமெரிக்காவின் முன்னாள் அதிபர் ட்ரம்ப் மற்றும் பிரேசிலின் அதிபர் பொல்சான்ரோ வரவேற்றிருக்கின்றனர். அர்ஜெண்டினாவை மீண்டும் வலுவாக்குங்கள் என்று டிரம்ப் மில்லேவைப் பாராட்டியிருப்பது குறிப்பிடத்தக்கது.

பெரியளவிற்கு அரசியல் பாரம்பரியமில்லாத ராக்பாடகரும், தொலைக்காட்சி பொருளாதாரவாதியுமான மில்லேவிற்கு அர்ஜெண்டினாவின் இளம் வாக்காளர்கள், அதுவும் 30 வயதிற்குட்பட்டவர்கள்தான் வாக்களித்திருக்கின்றனர். ஆளும் கூட்டணி கட்சியின் மீதான ஊழல் குற்றச்சாட்டுகள், 143 சதவீதத்திற்கும் அதிகமான தீவிர பணவீக்கம், வேலையின்மை ஆகியவைதான் இந்த இளம் வாக்காளர்களை இந்த வலதுசாரியின் பின் அணிதிரட்டியிருக்கிறது. அணிதிரட்டப்பட்டிருக்கிறார்கள் என்பதே உண்மை.


படிக்க: துருக்கி தேர்தல் முடிவு: தேவை, பாசிசத்திற்கு எதிரான மாற்று ஜனநாயகத் திட்டம்!


இந்த கொரோனா பெருந்தொற்றுக் காலத்தில்தான் மில்லே பெருவாரியான அர்ஜெண்டினா இளைஞர்களுக்கு சமூக வலைதளங்களில் அறிமுகமாகியிருக்கிறார். கொரோனா ஊரடங்கு காலத்தில்,  தொடர்ச்சியான யூடியூப் விவாதங்கள், தொலைக்காட்சி நிகழ்ச்சிகள், டிக்டாக் காணொளிகள் மூலமாக மில்லேவை இளைஞர்களிடம் கொண்டு சேர்த்திருக்கிறது அர்ஜெண்டினாவின் (ராணுவ சர்வாதிகார) வலதுசாரி கும்பல்.

18 முதல் 29 வயதிற்குட்பட்ட இளைஞர்களில் 45 சதவீதத்திற்கும் அதிகமானோர், உணவு வழங்கும் (Food delivery) வேலைதான் செய்கின்றனர். இந்த இளைஞர்கள்தான் மில்லேவை தேர்ந்தெடுக்கப் பின்புலமாக இருந்திருக்கின்றனர். இவர்கள்தான் 2019-இல் நடந்த அதிபர் தேர்தலில், மையவாத மற்றும் இடதுசாரி கூட்டணி கட்சியின் ஆல்பர்ட் பெர்ணாண்டஸை ஆதரித்தவர்கள். நடந்து முடிந்த தேர்தலில், இடது சாரி இளைஞர்கள்கூட மில்லேவிற்கு வாக்களித்திருக்கின்றனர். அந்த இளைஞர்களுக்கு அர்ஜெண்டினாவில் தற்போது நிலவும் பணவீக்கத்தைக் குறைப்பதும், வேலைவாய்ப்பை உருவாக்குவதும்தான் முதன்மையானதாக இருக்கிறது. “முதலில் எனது சட்டைப்பைக்குள் சிறிது பணம் பெறுவதே தேவையாய் இருக்கிறது” என்கின்றனர், இளைஞர்கள்.

ஏனெனில் அந்தளவிற்கு கொடுமையான சூழல் அங்கு நிலவுகிறது. பணவீக்கத்தால், தங்களது அத்தியாவசிய அன்றாட தேவைகளை ஈடுசெய்து கொள்ள தங்களது பழைய துணிகளை விற்று வயிற்றைக் கழுவும் நிலைக்கு மக்கள் தள்ளப்பட்டுள்ளனர். 40 சதவீதத்திற்கும் அதிகமான மக்கள் வறுமையில் வாடுகின்றனர்.

எனவேதான், மின் ரம்பத்தை (Chainsaw) கையில் வைத்துக் கொண்டு இந்த அமைப்புமுறையை வீழ்த்துவேன் என்று பிரச்சாரம் செய்த மில்லே  “மீட்பராக” தெரிந்திருக்கிறார். மற்றபடி, அர்ஜெண்டினாவின் பெசோ நாணயத்திற்கு பதிலாக, அமெரிக்காவின் டாலரைப் பயன்படுத்துவது, மத்திய வங்கியை மூடுவது, கம்யூனிச எதிர்ப்பு, சமூக நலத்திட்டங்களுக்கான நிதியை வெட்டுவது, சட்டபூர்வக் கருக்கலைப்பை ஒழிப்பது, அனைத்துத் துறைகளையும் தனியாமயமாக்குவது, பருவநிலைமாறுபாடு என்பது சோசலிசவாதிகள் பொய் என்ற மில்லேவின் கொள்கைகள் அவர்களுக்குப் பிரச்சினையாகவில்லை.

மேலும், தென் அமெரிக்காவிலேயே இரண்டாவது பெரிய பொருளாதாரத்தைக் கொண்ட அர்ஜெண்டினாவில் வரலாறு காணாத அளவிற்கு பணவீக்கம் நிலவுவதற்கு மையவாத இடதுசாரிகளின் அர்ஜெண்டினாவை அமெரிக்காவிற்கு அடகு வைக்கின்ற பொருளாதாரக் கொள்கைகள்தான் காரணம். 2019-ல் அதிபராக ஆட்சிப் பொறுப்பேற்ற பெர்ணான்டஸ் சர்வதேச நாணய நிதியத்திடமிருந்து கடன்பெற அர்ஜெண்டினாவை அடகு வைத்தார். இவர்களின் பொருளாதாரக் கொள்கைகள்தான் அர்ஜெண்டினாவின் பணவீக்கத்திற்கு காரணமென்றாலும், தீவிரமாகி வரும் பணவீக்கத்தைக் குறைப்பதற்கு சர்வதேச நாணய நிதியம் கடன் உதவி செய்யவில்லை. அர்ஜெண்டினாவின் டாலர் இருப்பு வெகுவாக குறைந்தபிறகும், பணவீக்கம் 100 சதவீதத்தைத் தொட்ட பிறகும் சர்வதேச நாணய நிதியத்தால் முன்மொழியப்பட்ட பொருளாதாரச் சீர்த்திருத்தங்களை மேற்கொள்ளவில்லை என்பதற்காக அர்ஜெண்டினாவிற்கு வழங்குவதாக இருந்த 44 மில்லியன் டாலர் கடனை கடந்த செப்டம்பர் மாதம் சர்வதேச நாணய நிதியம் வழங்கவில்லை.


படிக்க: இத்தாலியில் பாசிசத்தின் வளர்ச்சி வரலாறு !


இலங்கையில் பொருளாதார நெருக்கடி தீவிரமடைந்து பாலும், மருந்துப் பொருட்களும் கிடைக்காமல் மக்கள் அவதியுற்று, ஆளும் ராஜபக்சே கும்பலுக்கு எதிராக மக்கள் போராடிக் கொண்டிருந்த போதும் சர்வதேச நாணய நிதியம் இலங்கைக்கு நிதிஉதவி செய்யவில்லை. இலங்கைக்கு கடைபிடித்த அதே நடைமுறையைத்தான் அர்ஜெண்டினாவிற்கு கடைபிடிக்கப்பட்டிருக்கிறது. இலங்கையில் அமெரிக்க மேலாதிக்கத்தை நிறுவுவது, அர்ஜெண்டினாவில் தனியார்மயத்தைத் தீவிரப்படுத்துவது, பெயரளவிற்கான சமூக நலத்திட்டங்களையும் ஒழித்துக்கட்டுவதுதான் அமெரிக்கா மற்றும் சர்வதேச நாணய நிதியத்தின் கொள்கையாக இருக்கிறது. எனவேதான், அர்ஜெண்டினாவில், பணவீக்கத்தைத் தீவிரப்படுத்தி அமெரிக்க ஆதரவாளரும், தீவிர வலதுசாரியுமான ஜாவியர் மில்லே அந்நாட்டின் அதிபராகியிருக்கிறார்.

இலங்கையைப் போல், ரணில் ஆட்சிப் பொறுப்பேற்ற பிறகு, சர்வதேச நாணய நிதியம் கடனுதவி வழங்கியது போல,  மில்லே ஆட்சிப் பொறுப்பேற்ற பிறகு, அர்ஜெண்டினாவிற்கு கடனுதவி வழங்கப்படும். பணவீக்கம் குறையும். அதேசமயம், அர்ஜெண்டினா உழைக்கும் வர்க்கத்தின் மீது பொருளாதார ரீதியான தாக்குதல்களும், பாசிச தாக்குதல்களும் வலுப்பெறுவதும் மிகத் தீவிரமாக அரங்கேறும் என்பதையும் அர்ஜெண்டினா மக்கள் எச்சரிக்கையாகக் கொள்ளவேண்டியிருக்கிறது.

000

அர்ஜெண்டினாவைப் போலவே, மேற்கு ஐரோப்பிய நாடான நெதர்லாந்தின் வரலாற்றில் முதன்முறையாக, “நெதர்லாந்தின் டிரம்ப்” என்று அழைக்கப்படும் தீவிர வலதுசாரியான கீர்ட் வில்டர் அதிபராகத் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறார். 150 இடங்கள் கொண்ட நெதர்லாந்து நாடாளுமன்றத்தில் 37 இடங்களில் வில்டரும், கன்சர்வேட்டிவ் மக்கள் கட்சியின் மார்க் ருட்டே 24 இடங்களிலும், இடதுசாரி தொழிலாளர் கூட்டணி 25 இடங்களிலும் வெற்றிபெற்றிருக்கின்றனர். மக்கள் சுதந்திரம் மற்றும் ஜனநாயகத்திற்கான மக்கள் கட்சியின் செய்தித் தொடர்பாளராக இருந்த வில்டர் 2006-இல் சுதந்திரக் கட்சியை (Party for Freedom) உருவாக்கினார் என்பது குறிப்பிடத்தக்கது.

வில்டர் தனது தேர்தல் வாக்குறுதிகளில் வெளிப்படையாக இஸ்லாமிய மற்றும் அகதிகள் வெறுப்பைக் கக்கியிருக்கிறார். தனது தேர்தல் வாக்குறுதிகளில், “நெதர்லாந்து ஒரு இஸ்லாமிய நாடு அல்ல; இஸ்லாமிய பள்ளிகள், குரான் மற்றும் மசூதிகளுக்கு இடமில்லை”என்று அறிவித்திருக்கிறார். அதுமட்டுமின்றி, நெதர்லாந்தின் பிரச்சினை அகதிகள்தான் என்றும் பேசியிருக்கிறார். தனது தேர்தல் பிரச்சாரத்தில், “நாம் மீண்டும் நெதர்லாந்தை டச்சுக்காரர்களுக்கான நாடாக மாற்றுவோம். நாம் புலம்பெயர்வுகளையும், புகலிடம் தேடுபவர்களையும் கட்டுப்படுத்துவோம். மீண்டும் மக்கள் தங்கள் வாலட் அட்டைகளில் நிறைய பணம் பெறுவர்” என்று பேசியிருக்கிறார். மேலும், ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து நெதர்லாந்து விலக வேண்டும் என்றும் பேசியிருக்கிறார்.

கொரோனா பெருந்தொற்றால் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடியிலிருந்து ஐரோப்பிய நாடுகள் மீளாத சூழலில், ரஷ்ய -உக்ரைன் போரானது அந்நாடுகளில் பொருளதார நெருக்கடியை மேலும் தீவிரப்படுத்தியது. அமெரிக்கா மற்றும் மேற்கு ஐரோப்பிய ஏகாதிபத்தியங்களால் ரஷ்யா மீது போடப்பட்ட பொருளாதாரத் தடையால், பொருளாதாரரீதியாக மேற்கு ஐரோப்பிய நாடுகள்தான் வெகுவாக பாதிக்கப்பட்டன. இந்நாடுகள், எண்ணெய் மற்றும் எரிவாயுவிற்காக ரஷ்யாவையே சார்ந்திருந்தன. ஆகவே, ரஷ்யா மீது போடப்பட்ட பொருளாதாரத் தடையால், இந்நாடுகளில், குறிப்பாக நெதர்லாந்தில் பணவீக்கமும், வாழ்க்கைச் செலவுகளும், எரிவாயு மற்றும் எண்ணெய் தேவையும், பொருளாதார ஏற்றத்தாழ்வும் வெகுவாக அதிகரித்தன.

நெதர்லாந்தில் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடியும், அகதிகள் பிரச்சினையையும் தற்போது நெதர்லாந்தில் நடைபெற்ற தேர்தலில் முக்கியப் பங்காற்றின. இத்தேர்தலில், வில்டர் மட்டுமின்றி வில்டரை எதிர்த்துப் போட்டியிட்ட மைய வலதுசாரிகளான சுதந்திரம் மற்றும் ஜனநாயகத்திற்கான மக்கள் கட்சியும் அகதிகள் பிரச்சினையையே கையிலெடுத்தன. நெதர்லாந்தில் பெரும்பாலும் அகதிகளாக குடியேறுபவர்கள் இஸ்லாமியர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

“நெதர்லாந்தின் மைய வலதுசாரிகள், வாக்காளர்களைக்  கவர்வதற்காக புலம்பெயர்வு பிரச்சினையைக் கையிலெடுத்தன. இது தீவிர வலதுசாரிகளுக்கு வாக்களிப்பதேற்கே வழிவகுத்தது” என்கிறார் லெய்டன் பல்கலைக் கழக உதவிப் பேராசிரியரான சிமோன் ஓட்ஜேஸ்.

இந்தப் பொருளாதார அரசியல் பின்புலத்திலிருந்துதான், நெதர்லாந்து வரலாற்றில் முதல்முறையாக தீவிர வலதுசாரியான வில்டர் வெற்றிபெற்றிருக்கிறார். ஆட்சி அமைக்க 76 இடங்கள் தேவையிருப்பினும், வில்டரின் வெற்றியை மேற்கு ஐரோப்பிய பாசிச ஆளும் வர்க்கப் பிரிவுகள் கொண்டாடுகின்றன. ஏற்கனவே, ஸ்வீடன், ஸ்பெயின், இத்தாலி, ஜெர்மனி, போலந்து, ஹங்கேரி, பின்லாந்து என பெரும்பாலான ஐரோப்பிய நாடுகளில் பாசிச சக்திகள் அதிகாரத்திலும், ஆட்சியிலும் பங்கேற்று இருக்கின்றன. இந்நாடுகளின், பாசிச சக்திகளும் தங்களது நாடுகளில் இஸ்லாமிய வெறுப்பையும், அகதிகளை எதிரிகளாக சித்தரித்துமே ஆட்சிப் பொறுப்பில் இருக்கிறார்கள். தற்போது நெதர்லாந்தில், பாசிச வில்டரின் வெற்றிக்குப் பிறகு, தீவிர வலதுசாரி சித்தாந்தம் ஐரோப்பிய அரசியலில் முதன்மையாக மாறியிருக்கிறது.

000

அர்ஜெண்டினாவிலும், நெதர்லாந்திலும் பொருளாதார நெருக்கடி பாசிச சக்திகள் வலுப்பெற ஒரு காரணமாகியிருக்கிறது என்பது எந்தளவிற்கு உண்மையோ, அந்தளவிற்கு இடதுசாரிகள் என்று சொல்லிக் கொள்கின்ற கட்சிகளின், உலகமயத்திற்கு எதிரான தேசிய பொருளாதாரத் திட்டமின்மை, பாசிசத்திற்கு எதிரான ஜனநாயக சித்தாந்தப் போராட்டமின்மை, மக்களை ஜனநாயக சித்தாந்த ரீதியாக வளர்த்தெடுக்காமை ஆகியவை காரணமாக உள்ளது.

இதேபோன்றுதான் நமது நாட்டிலும் தோல்வி முகத்தில் உள்ள ஆர்.எஸ்.எஸ்-பா.ஜ.க காவி பாசிஸ்ட்டுகள் தீவிரப்படுத்துகிற தனியார்மய-தாராளமய-உலகமய கொள்கைகளுக்கு எதிரான, சுயதேசிய பொருளாதாரத் திட்டத்தை முன்வைக்கின்ற குறைந்தபட்ச செயல்திட்டத்தை முன்வைக்காமல் காவி பாசிஸ்ட்டுகளை தேர்தலில் வீழ்த்த முடியாது. இதுதான் மேற்கு ஜரோப்பா மற்றும் அர்ஜெண்டினாவில் பாசிச சக்திகளின் எழுச்சி நமக்குக் கற்பிக்கும் எதிர்மறை பாடமாகும். எனவே, வெறும் கவர்ச்சிவாத இலவசத் திட்டங்களை மட்டும் நம்பாமல், பாசிசத்திற்கு எதிரான ஜனநாயக சித்தாந்த-அரசியல்-பொருளாதார திட்டங்களை முன்வைத்து இந்திய உழைக்கும் மக்களை அணிதிரட்ட வேண்டியது காலத்தின் அவசியமாகிறது.


வாகைசூடி

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube



விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க