நெதர்லாந்து நூலகத்தில் புதிய ஜனநாயகம், புதிய கலாச்சாரம் இதழ்கள் !

புதிய ஜனநாயகம், புதிய கலாச்சாரம் இதழ்களை வாசித்து வந்த தோழர் கலையரசன், நெதர்லாந்து தலைநகர் ஆம்ஸ்டர்டாமிலுள்ள நூலகம் ஒன்றிற்கு அவற்றை அன்பளிப்பாக வழங்கிவந்திருக்கிறார்.

மிழ் பேசும் புரட்சிகர, ஜனநாயக சக்திகளின் அரசியல் வெளியில், சுமார் 36 ஆண்டுகளாக மிகப்பெரும் பங்கை செலுத்திவரும் மார்க்சிய – லெனினிய அரசியல் ஏடாக புதிய ஜனநாயகம் திகழ்ந்து வருகிறது. பிற்போக்கு, சந்தர்ப்பவாத, பிழைப்புவாத அரசியல் சக்திகளை அரசியல் அரங்கில் அம்பலப்படுத்தி – முடமாக்கி மக்கள் மத்தியில் புரட்சிகர அரசியல் பாதையை பிரச்சாரம் செய்வது புதிய ஜனநாயகத்தின் முக்கியமான பங்களிப்பு.
விடுதலைப் புலிகள் இயக்கம் மற்றும் ஈழத் தமிழர் விடுதலை பற்றிய சரியான பார்வை; 90-களில் அமல்படுத்திய மறுகாலனியாக்கக் கொள்கையின் அரசியல் – பொருளாதார விளைவுகள்; பார்ப்பன பாசிச பேரபாயம் ஆகியவை தொடர்பாக புதிய ஜனநாயகம் எழுதிய கட்டுரைகள் அரசியல் அரங்கில் உள்ள அறிவுத்துறையினர் மத்தியில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியவை. தற்போது, காவி – கார்ப்பரேட் பாசிசத்தின் பலமுனைத் தாக்குதல்களை அம்பலப்படுத்தியும், பாசிசத்தை முறியடிப்பது பற்றி சரியான மார்க்சிய – லெனினியக் கண்ணோட்டத்தைக் கொடுக்கும் வகையிலும் எழுதி வருகிறது.
படிக்க :
புதிய ஜனநாயகம் டிசம்பர் – 2021 அச்சு இதழ் !
புதிய ஜனநாயகம் டிசம்பர் 2021 மின்னிதழ் !
அரசியல் தளத்தில் புதிய ஜனநாயகம் மேற்கொண்ட பிரச்சாரப் பணியை, பண்பாட்டு தளத்தில் செய்தது புதிய கலாச்சாரம் இதழ். பேச்சு, காட்சி, கேள்வி, உணர்ச்சி, நுகர்ச்சி என அனைத்தின் வழியாகவும் ஆளும் வர்க்கப் பண்பாடு பரந்துபட்ட மக்கள் மீது திணிக்கப்பட்டுக் கொண்டிருக்கையில் அதை திரைகிழித்து உழைக்கும் வர்க்கம் தனது சொந்த (மார்க்சிய – லெனினிய) பார்வையைப்பற்றி நிற்பதற்கு துணை செய்தது புதிய கலாச்சாரம்.
புதிய ஜனநாயகம் மற்றும் புதிய கலாச்சாரத்தின் புரட்சிகர பிரச்சாரப் பணியை தமது பணியாக நினைத்து தோள்கொடுத்து உதவிய பல ஆதரவாளர் தோழர்கள் இல்லையேல் இவை எதுவும் சாத்தியமாகியிருக்காது. அந்தவகையில் புதிய ஜனநாயகம், புதிய கலாச்சாரம் ஏடுகளை ஐரோப்பிய நாடுகளுள் ஒன்றான நெதர்லாந்து வரை கொண்டு சேர்த்திருக்கிறார் தோழர் கலையரசன்.
நெதர்லாந்தில் வசிக்கக்கூடிய ஈழத்தமிழரான கலையரசன் இடதுசாரி ஆதரவாளராவார். வினவு வாசகர்களுக்கு கலையரசனை பற்றி புதிதாக அறிமுகம் கொடுக்கத் தேவையில்லை. கலையகம் என்ற அவரது வலைப்பூவில் அவர் எழுதும் முக்கியத்துவமிக்க கட்டுரைகளை நமது தளத்திலும் மீள்பிரசுரம் செய்திருக்கிறோம்.
புதிய ஜனநாயகம், புதிய கலாச்சாரம் இதழ்களை அஞ்சல் சந்தா மூலம் பெற்று வாசித்து வந்த அவர், தனது பிரதியை நெதர்லாந்து தலைநகர் ஆம்ஸ்டர்டாமிலுள்ள நூலகம் ஒன்றிற்கு அன்பளிப்பாக வழங்கிவந்திருக்கிறார். அந்நூலகம் அவற்றை ஆவணப்படுத்தி பாதுகாத்து வருகிறது. தோழரின் இந்த அரசியல் முன்முயற்சியையும் தோழமையுணர்வையும் எண்ணி நாம் பூரிப்படைகிறோம்.
இதுதொடர்பாக, தோழர் கலையரசன் தமது வலையொலியில் வெளியிட்ட காணொலி கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

புதிய ஜனநாயகம்

1 மறுமொழி

  1. பார்த்தவுடன் படித்தவுடன் ஏற்பட்ட உணர்வுகளை எப்படி சொல்வது?நானும் அந்த இதழ்களோடு பயணித்திருக்கிறேன் என்ற வகையில் பெருமையும் பூரிப்புமாக இருக்கிறது.தோழர் கலையரசனின் பணி மகத்தானது.நமது மார்க்சிய லெனினிய அரசியல் தான் உலகை ஆளும்.சந்தேகமில்லை.வினவு தோழர்களுக்கு வாழ்த்துகள்.

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க