privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புபோலி ஜனநாயகம்அதிகார வர்க்கம்தேர்தல் புறக்கணிப்பு ஏன் ? தீர்வுதான் என்ன ?

தேர்தல் புறக்கணிப்பு ஏன் ? தீர்வுதான் என்ன ?

-

மறுகாலனியாக்கத்துக்கான போலி ஜனநாயகத் தேர்தலைப் புறக்கணிப்போம்!
உழைக்கும் மக்கள் அதிகாரத்துக்கான புதிய ஜனநாயக அரசமைப்பைக் கட்டியெழுப்புவோம்!
கொலைகார மோடி தலைமையிலான பார்ப்பன பாசிச பா.ஜ.க. – ஆர்.எஸ்.எஸ். கும்பலை விரட்டியடிப்போம்!

தமிழகம் தழுவிய இயக்கம்!

ன்பார்ந்த உழைக்கும் மக்களே!

ஓட்டுப்போடுவது உங்கள் ஜனநாயகக் கடமை என்கிறது தேர்தல் கமிசன். என்ன ஜனநாயகம் இங்கே வாழ்கிறது? எல்லாக் கட்சிகளிலும் மன்னராட்சியைப் போல மனைவி, மகன், மாமன், மச்சான் ஆட்சி! அப்புறம் கோடீசுவரர்கள், சாதிவெறியர்கள், ரவுடிகள் – இவர்களெல்லாம்தான் வேட்பாளர்கள். இவர்களில் எவனாவது உழைத்துச் சோறு தின்பவனா? இவர்களுடைய தொழில் என்ன? சுயநிதிக் கல்லூரி முதலாளி, தண்ணீர் வியாபாரி, மணற்கொள்ளையன், கிரானைட் திருடன், லாட்டரி சீட்டு வியாபாரி, ரியல் எஸ்டேட் முதலைகள். இப்படி தனியார்மயக் கொள்கையைப் பயன்படுத்திக்கொண்டு மக்களைக் கொள்ளையடிக்கும் நபர்களுக்கு ஓட்டுப் போட்டு பதவியில் அமர்த்துகிறீர்களே, இது ஜனநாயக கடமையா அல்லது மடமையா?

நீங்கள் தேர்ந்தெடுக்கும் எம்.பி. நல்லவனாகவே கூட இருக்கட்டும். அவனால் என்ன செய்துவிட முடியும்? டில்லியிலோ சென்னையிலோ உட்கார்ந்திருக்கும் எம்.பி. – எம்.எல்.ஏ.க்களா நம்மை ஆட்சி செய்கிறார்கள்? பிறப்பு – இறப்பு, சாதிச்சான்று, பத்திரப்பதிவு, ஓட்டுநர் உரிமம், ரேசன் அட்டை, முதியோர் பென்சன், குடிநீர், மின்சாரம், சாலைவசதி, பள்ளி, மருத்துவமனை உள்ளிட்ட நமது அன்றாடப் பிரச்சினைகள் அனைத்தையும் கையாள்பவர்கள் மாவட்ட ஆட்சியர், ஆர்.டி.ஓ, தாசில்தார், போக்குவரத்து, கல்வி, மின்வாரிய அதிகாரிகள் போன்ற அந்தந்தத் துறை அதிகாரிகள்தான். நீங்கள் சி.எம். செல்லுக்கு மனுச் செய்தாலும், பி.எம். செல்லுக்கு புகார் செய்தாலும் அதன்மீது நடவடிக்கை எடுக்கும் அதிகாரமுள்ளவர்கள் இந்த அதிகாரிகள்தான். மாதம் மும்மாரி பொழிகிறது என்று இவர்கள் எழுதித் தருவதைத்தான் அமைச்சர்கள் சட்டமன்றத்தில் ஒப்பிக்கிறார்கள்.

இந்த அதிகார வர்க்கத்தினரை நாம் தேர்ந்தெடுப்பதும் இல்லை, இவர்களை நீக்குவதற்கும் நமக்கு அதிகாரமுமில்லை. தேர்தலே நடக்கவில்லையென்றாலும் இவர்கள்தான் அரசை நடத்துகிறார்கள். அரசாங்கத்தை நடத்துவார்கள். ஏனென்றால், அரசு என்பதே இவர்கள்தான். யார் வென்றாலும் தோற்றாலும் இவர்கள் நம்மீது செலுத்தும் சர்வாதிகாரம் தொடர்ந்து கொண்டுதான் இருக்கும். எனவேதான், இது தேர்ந்தெடுக்கப்பட்டோரின் ஆட்சியல்ல, ஜனநாயகமல்ல – இரட்டை ஆட்சிமுறை என்கிறோம்.

இந்த அதிகார வர்க்கம் தலை முதல் கால்வரை பன்னாட்டு முதலாளிகள், தரகு முதலாளிகள், நிலப்பிரபுக்களுடைய ஆதிக்கத்தைப் பாதுகாப்பதற்கும் அவர்களுக்குச் சேவை செய்வதற்கும் ஏற்பத்தான் வடிவமைக்கப் பட்டிருக்கிறது. ஒரு ஆலை முதலாளி சட்டப்படியான குறைந்தபட்ச ஊதியத்தைத் தொழிலாளிக்கு மறுத்தாலோ, சட்டவிரோதமாக தொழிற்சங்க உரிமையைப் பறித்தாலோ அதற்காக எந்த கலெக்டரும் முதலாளியைக் கைது செய்வதில்லை. மணற்கொள்ளையை விவசாயிகள் எதிர்த்தால், தாசில்தாரும் போலீசும் விவசாயிகள் மீதுதான் பொய்வழக்கு போடுகிறார்கள். இவையெல்லாம் நாம் அன்றாடம் காணும் காட்சிகள். ஆகவேதான் இது ஜனநாயகமல்ல, ஆளும் வர்க்கத்தின் சர்வாதிகாரம் என்கிறோம். இதற்கு மக்களிடமிருந்தே நியாயவுரிமை பெறுவதற்காகத்தான் தேர்தல் நடத்தப்படுகிறது.

இந்த அதிகாரிகளுக்கும் அரசாங்கங்கத்துக்கும் கூட தனியார்மயம் – தாராளமயம் என்று அழைக்கப்படும் மறுகாலனியாக்கம் அமலாகத் தொடங்கிய பிறகு உலகவங்கி, உலக வர்த்தக கழகம் போன்ற ஏகாதிபத்திய நிறுவனங்கள்தான் ஆணையிட்டு வருகின்றன. தானியக் கொள்முதலை நிறுத்து, கல்வி-மருத்துவத்துக்கான நிதி ஒதுக்கீட்டைக் குறை – என்று உத்தரவிடுகின்றன. உலகவங்கியின் அதிகாரம் ஊராட்சி மன்றம் வரை வந்துவிட்டது. அதுமட்டுமல்ல, மின்சாரம், தொலைபேசி, சாலைகள் அனைத்தும் தனியார்மயமாக்கப்பட்டு விட்டதால், அனைத்திலும் வல்லுநர்கள் என்ற பெயரில் கார்ப்பரேட் அதிகாரிகள் அரசு அதிகாரத்துக்குள்ளேயே நுழைந்து விட்டார்கள். மின் கட்டணம், தொலைபேசிக் கட்டணம் முதலானவற்றை அந்தந்தத் துறைக்கான ஒழுங்குமுறை ஆணையம்தான் தீர்மானிக்கிறது. அதாவது, அரசு நிர்வாகமே தனியார்மயம் ஆகிவருகிறது. மின்கட்டணத்தைக் குறைக்கும் அதிகாரம் தனக்கு இல்லையென்று எல்லாம் வல்ல அம்மா சட்டமன்றத்திலேயே கூறியதை நீங்கள் கேட்கவில்லையா?

இந்த மறுகாலனியாக்கக் கொள்கைகளின் விளைவாகத்தான்

  • விவசாயிகள் லட்சக்கணக்கில் தற்கொலைக்குத் தள்ளப்பட்டிருக்கிறார்கள். விவசாயம் அழிந்து பிழைப்புத்தேடி ஊர் ஊராக ஓடுகிறார்கள்.
  • கல்விக்குப் பணம், குடிதண்ணீருக்குப் பணம், மருத்துவமனையில் கால் வைத்தால் பணம், டோல்கேட்டுக்குப் பணம் என்று திரும்பிய பக்கமெல்லாம் மக்களின் ரத்தம் உறிஞ்சப்படுகிறது.
  • இன்னொருபுறம் விளைநிலங்கள் ரியல் எஸ்டேட்டுகள் ஆகின்றன; கனிம மணற்கொள்ளையால் கடல் வளம் அழிகிறது; ஆலைக்கழிவுகளால் ஆற்றுநீர் நஞ்சாகிறது.
  • ஆற்று மணற்கொள்ளையால் நிலத்தடி நீரும் காற்றின் ஈரமும் அழிந்து மழை பொய்க்கிறது. மிச்சமிருக்கும் நீரையும் சூறையாடி காசாக்குகிறார்கள் தண்ணீர்க் கொள்ளையர்கள்.
  • விவசாயம் அழியும் என்று தெரிந்தே மீதேன் திட்டமும், கெயில் குழாய் திட்டமும் திணிக்கப்படுகின்றன.

இவை அனைத்திலும் லாபம் ஈட்டுபவர்கள் முதலாளிகள். கார்ப்பரேட் முதலாளிகளின் லாபத்தை வளர்க்கும் திட்டங்களைத்தான் மக்களுக்கான வளர்ச்சித்திட்டம் என்ற பெயரில் அரசு நம்மீது திணித்து வருகிறது. எந்தக் கட்சி வென்றாலும் அமலாக்கவிருப்பது இதைத்தான். இதனைத் தீவிரமாகவும் திறமையாகவும் அமல்படுத்துவது யார் என்பதில்தான் கட்சிகளுக்கிடையில் போட்டி நடக்கிறது. இதில் ஏதாவது ஒரு கொள்ளிக்கட்டையை எடுத்து கூரையில் செருகிக் கொள்ளலாம் என்பதுதான் நமக்கு வழங்கப்பட்டிருக்கும் வாக்குரிமையின் உண்மையான பொருள்.

இப்படிச் சொல்வது மிகையானது என்று எண்ணுகிறீர்களா? நாட்டைப்போலவே, நம் வீடும் சமூகமும் பற்றியெரிவதை நீங்கள் காணவில்லையா? பள்ளி மாணவிகளைக் கெடுக்கும் வாத்தியார்கள், ரவுடிகளாகக் கல்லூரித் தாளாளர்கள், கிட்னி திருடும் டாக்டர்கள், அங்கீகாரமே இல்லாத பல்கலைக்கழகங்கள், ஆசி வாங்கப்போனால் முந்தானையை உருவும் சாமியார்கள், வயிற்றில் குழந்தையோடு தவிக்கும் கைவிடப்பட்ட காதலிகள், திரும்பிய பக்கமெல்லாம் சங்கிலிப் பறிப்பு – என்று நச்சரவங்களுக்கு நடுவே குடித்தனம் நடத்துவது போல நாடே மாறியிருக்கிறதே, இதற்கெல்லாம் காரணம் என்னவென்று நினைக்கிறீர்கள்?

காரணம் என்னவென்றால், எந்தச் சட்டங்களையும் மரபுகளையும் மதித்து நடக்க வேண்டும் என்று ஆளும் வர்க்கம் மக்களுக்கு அறிவுறுத்துகிறதோ, அந்தச் சட்டங்களை அவர்களே மதிப்பதில்லை. அதாவது, இந்த ஜனநாயகக் கோயிலில் மக்கள் பக்தர்கள் என்றால், ஆளும் வர்க்கமும், அதிகார வர்க்கமும், ஓட்டுப்பொறுக்கிகளும் தேவநாதன்கள், ஆசாராம் பாபுகள், நித்தியானந்தாக்கள்!

  • எம்.எல்.ஏ. எம்.பி.க் களில் 30% பேர் மீது கிரிமினல் வழக்குகளாம்!
  • அலைக்கற்றை, ஆதர்ஷ், நிலக்கரி வழக்குகள் அனைத்திலும் முக்கியக் குற்றவாளிகளாக ஐ.ஏ.எஸ். அதிகாரிகள்!
  • பிரதமர், முதல்வர், அமைச்சர்கள் என்று எல்லா மட்டத்திலும் குற்றவாளிகள்!
  • பாலியல் வல்லுறவுக் குற்றம் சாட்டப்பட்ட ஒரு டி.ஜ.ஜி. 15 ஆண்டுகளாகத் தலைமறைவு!
  • வேறொரு டி.ஜி.பி. யை பிடித்துக் கொடுத்தால் பத்து லட்சம் சன்மானம் என்று அறிவிக்கிறது சி.பி.ஐ!
  • தேசபக்தியின் திருவுருவமாகச் சித்தரிக்கப்படும் இராணுவ அதிகாரிகளோ அப்பாவி மக்களைச் சுட்டுக் கொன்றுவிட்டு பாக். தீவிரவாதிகளைக் கொன்றதாகக் கணக்குக் காட்டி பதவி உயர்வு வாங்குகிறார்கள்.
  • ஓய்வு பெறுவதைத் தள்ளிப்போடுவதற்காக பிறந்த தேதியை மாற்றி போர்ஜரி செய்கிறார் இராணுவத்தின் தலைமைத் தளபதி.
  • தலைமை நீதிபதிகளில் 8 பேர் ஊழல் பேர்வழிகள் என்று பகிரங்கமாகக் குற்றம் சாட்டினாலும் மவுனம் சாதிக்கிறது உச்ச நீதிமன்றம்.
  • ஜனநாயகத்தின் நான்காவது தூண் என்று அழைக்கப்படும் பத்திரிகைகளோ கவர் வாங்கிக்கொண்டு கருத்துக் கணிப்பு வெளியிடுகின்றன.
  • பத்திரிகையாளர்கள் கார்ப்பரேட் முதலாளிக்கும் ஓட்டுக்கட்சிகளுக்கும் தரகுவேலை பார்க்கின்றனர்.

மொத்தத்தில், இந்த அரசியல் கட்டமைப்பு முழுவதுமே நொறுங்கிச் சரிந்து வருகிறது. சமூகத்தின் உறுப்புகள் அனைத்திலிருந்தும் சீக்குப்பிடித்து அழுகிச் சீழ் வடிகிறது. இதன் காரணமாக, பாதிக்கப்படுபவர்கள் ஏழை மக்கள். ஆனால், நம்மீதுதான் சட்டம்-ஒழுங்கை நிலைநாட்டுவது என்ற பெயரில் கொடூரமான அடக்குமுறை ஏவப்படுகிறது.

நாம் அனுபவிக்கும் இந்தக் கொடுமைகளைப் பற்றியெல்லாம் ஏன் எந்தக் கட்சியும் பேசுவதில்லை என்று யோசித்துப் பாருங்கள். ஏனென்றால், அவர்கள் ஆளும் வர்க்கங்களின் கையாட்கள். பாதிக்கப்படுபவர்களாகிய நாம்தான் நமக்கான தீர்வை யோசிக்க வேண்டும். மாறாக, மன்மோகனுக்குப் பதிலாக மோடி என்று சிந்திப்பது தீர்வு அல்ல, நமக்கு நாமே வழங்கிக் கொள்ளும் தண்டனை.

சின்னத்தை மாற்றிப் பயனில்லை; நாம் சிந்திக்கும் முறையை மாற்றவேண்டும். இந்தப் போலி ஜனநாயக அரசு, ஒருபோதும் நமக்குச் சேவை செய்யாது. உழைக்கும் மக்களின் நலன் காக்கும் புதிய ஜனநாயக அரசினை நாம்தான் புதிதாக உருவாக்க வேண்டும்.

அதன் முதல்படி தேர்தல் புறக்கணிப்பு. அடுத்த அடி இந்த மக்கள் விரோத அதிகாரத்தைத் தகர்க்கும் போராட்டங்கள்! மனு கொடுப்பதும், ஓட்டுப் போடுவதும், வழக்கு தொடுப்பதும் நம் உரிமைகளை நிலைநிறுத்திக் கொள்ள உதவாது. மக்கள் எழுச்சிகளின் மூலம் நம் அதிகாரத்தை நிலைநிறுத்திக் கொள்வோம்.

இந்தப் போலி ஜனநாயகத்தை ஒழித்து, ஒரு புதிய ஜனநாயக அரசமைப்பை நிறுவுவதுதான் நமது போராட்டத்தின் இலக்கு.

  • புதிய ஜனநாயக அரசமைப்பில் இன்றைய இரட்டை ஆட்சிமுறைக்கு மாறாக, தேர்ந்தெடுக்கப்பட்ட மக்கள் கமிட்டிகளுக்குச் சட்டமியற்றவும் அதனை அமல்படுத்தவும் அதிகாரம் இருக்கும்.
  • அதிகாரிகள், போலீசு, இராணுவம், நீதித்துறை அனைத்தும் தேர்ந்தெடுக்கப்பட்ட மக்கள் கமிட்டிகளின் அதிகாரத்தின் கீழ் கொண்டுவரப்படும். தவறிழைக்கும் மக்கள் பிரதிநிதிகளின் பதவியைப் பறிக்கவும், தண்டிக்கவுமான அதிகாரம் வாக்களித்த மக்களுக்கு இருக்கும்.
  • இன்று மக்கள் பிரதிநிதிகளாக பவனி வரும் தரகு அதிகார வர்க்க முதலாளிகள், நிலப்பிரபுக்கள், சாதி-மத ஆதிக்க சக்திகள், சமூக விரோதிகளின் வாக்குரிமை பறிக்கப்படும். உழைப்போர்க்கு மட்டுமே வாக்குரிமை வழங்கும் மக்கள் அதிகாரம் நிறுவப்படும்.
  • புதிய ஜனநாயக அமைப்பில் கல்வி, மருத்துவம், குடிநீர் உள்ளிட்ட அடிப்படைத் தேவைகள் அனைத்தும் இலவசமாக மக்களுக்கு வழங்கப்படும். கல்வி, மருத்துவம், தண்ணீர், போக்குவரத்து, தொலைபேசி, மின்சாரம் உள்ளிட்ட அனைத்து சேவைத்துறைகளும் நாட்டுடைமை ஆக்கப்படும்.
  • டாடா, அம்பானி போன்ற தரகு முதலாளிகள், பன்னாட்டுக் கம்பெனிகளின் சொத்துக்களும் நிலப்பிரபுக்கள், ஊழல் அரசியல்வாதிகள், அதிகாரிகளின் சொத்துக்களும் நாட்டுடைமை ஆக்கப்படும்.
  • நிலமற்ற உழவர்களுக்கு நிலத்தைச் சொந்தமாக்குவதுடன், பாசன வசதி, உழுபடைக் கருவிகள், உள்ளீடு பொருட்களை உழவர்களுக்கு வழங்கி விவசாயம் ஊக்குவிக்கப்படும். விளைபொருட்களுக்கு விலை நிர்ணயம் செய்யும் அதிகாரம் தேர்ந்தெடுக்கப்பட்ட உழவர் கமிட்டிகளுக்கு வழங்கப்படும்.
  • நெசவு, மீன்பிடி, சிறுதொழில்கள், சிறுவணிகம் உள்ளிட்ட சிறு – நடுத்தர முதலாளிகளின் உள்நாட்டுத் தொழில்கள் ஊக்குவிக்கப்படும். பன்னாட்டு நிறுவனங்கள் வெளியேற்றப்படும். இயற்கை வளங்களைச் சூறையாடி நீர், நிலம், காற்று உள்ளிட்ட சுற்றுச்சூழலை நஞ்சாக்கும் முதலாளித்துவ பயங்கரவாதத்துக்கு முடிவு கட்டப்படும்.

கேட்க நன்றாகத்தான் இருக்கிறது, ஆனால் நடக்கக்கூடிய காரியமா? என்று நீங்கள் சிந்திக்கக் கூடும். மன்னராட்சியையும் பிரிட்டிஷ் ஆட்சியையும் அகற்றுவது நடக்காத காரியம் என்றுதான் பலரும் அன்று எண்ணினார்கள். தொழிற்சங்க உரிமை முதல் தாழ்த்தப்பட்ட மக்கள் பொதுப்பாதையில் நடக்கும் உரிமை உள்ளிட்ட அனைத்தும் மக்கள் போராடி நிலைநாட்டிக் கொண்ட உரிமைகளேயன்றி, ஓட்டுக்கட்சிகள் வழங்கிய இலவசத்திட்டத்தில் கிடைத்தவை அல்ல. ரசியாவிலும், சீனாவிலும் வேறு பல நாடுகளிலும், போராட்டத்தின் மூலம்தான் மக்கள் தங்களுக்கு உரிமையும் அதிகாரமும் உள்ள அரசமைப்பை அன்று உருவாக்கிக் கொண்டார்கள்.

போராடத் தவறியதால்தான், அன்று போராடிப் பெற்ற உரிமைகளையும் கூட இன்று ஒவ்வொன்றாய் நாம் இழந்து கொண்டிருக்கிறோம். இந்தப் போலி ஜனநாயகத்தில் வாக்குரிமை என்பது, நமக்கு எதிராக நாமே வாக்களித்துக் கொள்ளும் உரிமைதான் என்பதைப் புரிந்து கொள்ளுங்கள்! போதும். இன்னொருமுறை அந்தத் தவறைச் செய்யாதீர்கள்! போலி ஜனநாயகத் தேர்தலைப் புறக்கணியுங்கள்! புதிய ஜனநாயகத்தை உருவாக்கும் மக்கள் எழுச்சிகளுக்கு அணிதிரளுங்கள்!

இவண்

மக்கள் கலை இலக்கியக் கழகம்,
விவசாயிகள் விடுதலை முன்னணி,
புரட்சிகர மாணவர் – இளைஞர் முன்னணி,
புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி,
பெண்கள் விடுதலை முன்னணி
தமிழ்நாடு.

தொடர்புக்கு

அ.முகுந்தன்,
110, இரண்டாம்தளம், மாநகராட்சி வணிக வளாகம்,
63, என்.எஸ்.கே.சாலை, கோடம்பாக்கம்,
சென்னை – 600 024.

அலைபேசி: 94448 34519

  1. இந்தப் போலி ஜனநாயகத்தில் வாக்குரிமை என்பது, நமக்கு எதிராக நாமே வாக்களித்துக் கொள்ளும் உரிமைதான் என்பதைப் புரிந்து கொள்ளுங்கள்!

  2. “தேவநாதன்கள், ஆசாராம் பாபுகள், நித்தியானந்தாக்கள்!”

    உங்கள் குருட்டு கண்ணுக்கு பாலியல் வன்புணர்வு செய்யும் பாதிரிமாரும் , இமாம்களும் தெரியவில்லையா ?

    பக்கசார்புடன் நடப்பதாக நக்சல்பாரிகளின் கலாச்சாரம்

  3. அப்பாடா இப்பவாது தேர்தல் புறக்கணிப்புக்கு காரணங்களை பட்டியல் இட்டுருக்கிறீர்களே நன்றி தேர்தல் புறக்கணிப்பிற்கு நீங்கள் கூறி இருக்கும் காரணங்கள் மக்கள் அறியாதவைகள் அல்ல, அப்புறம் ஏன் தேர்தல் புறக்கணிப்பில் மக்களிடம் ஆர்வம் இல்லை இதை தெளிவு படுத்த வேண்டியது உங்கள் கடமை தேர்ந்தெடுக்கப்பட்ட மக்கள் பிரதினிதிகள் சட்டம் இய்ற்றும் அதிகாரம் ,அனைத்து சேவைகளையும் இலவசமாக மக்களுக்கு வழங்குவது எல்லா தனியார் நிருவனங்களையும் அரசுடமை ஆக்குவது போன்ற கோரிக்கைகளை செயல் படுத்த யாரிடம் போராடுவது இப்போது இயங்கி வரும் அரசு அமைப்பிடம் தானே அவர்கள்தனே இதை நடைமுறைப்படுத்த வேண்டும் அல்லது யாரிடம் இவைகளை நடைமுறை படுத்த சொல்லி போராடிவீர்கள் போராட்டத்தின் வடிவம் எப்படி வேண்டுமானாலும் இருக்கலாம் (தேர்தல் புறக்கனிப்பு) ஆனால் யாரிடம் போராடுவீர்கள் என்பதுதான் கேள்வி ஒரு வேளை மக்கள் அனைவருமே தேர்தலை புறக்கனித்தால் மேற்ச்சொன்ன கோரிக்கைகளை யார்நாடைமுறை படுத்துவது தேர்தல் கமிசனா இல்லை ரஸ்யா தேசமா அல்லது மக்களா சரியான விளக்கத்தை எதிர் பார்க்கிறேன் மேலும் மாற்றம் அல்லது புரட்சிக்கான் மக்கள் ஆதரவு எவ்வளவு உள்ளது மக்கள் ஆதரவை பெற என்ன செய்வீர்கள் இதையும் தெளிவு படுத்தவும் தேர்ந்தெடுக்கப்பட்ட மக்கள் பிரதினிதிகள் சபை சட்டம் இயற்றும் நன்றாக செயல் படும் ஊழல் செய்யாது மக்களை வதைக்காது அதிகாரத்தை தவறாக பயண்படுத்தாது என்பதற்க்கு உத்திரவாதம் அளிப்பது யார்

    • //தேர்ந்தெடுக்கப்பட்ட மக்கள் பிரதினிதிகள் சபை சட்டம் இயற்றும் நன்றாக செயல் படும் ஊழல் செய்யாது மக்களை வதைக்காது அதிகாரத்தை தவறாக பயண்படுத்தாது என்பதற்க்கு உத்திரவாதம் அளிப்பது யார்//
      Good question.

    • //தவறிழைக்கும் மக்கள் பிரதிநிதிகளின் பதவியைப் பறிக்கவும், தண்டிக்கவுமான அதிகாரம் வாக்களித்த மக்களுக்கு இருக்கும்.//

  4. மொத்தத்தில் பழைய கள்ளயே புதிய செம்பில் ஊற்றி தர முயற்சிக்கிறீர் என்றே நினைக்கிறேன்

  5. இது ஒரு தவறான முடிவு…இப்போதைக்கு இருப்பவர்களில் யார் நல்லவர்கள் என்று பார்த்து ஒட்டு போடுவதே நல்லது…இல்லாவிடில் மிகவும் மோசமானவர்கள் ஆட்சிக்கு வரக்கூடும்

    • எரிகிற கொள்ளியில் ஒரு நல்ல கொள்ளியை எடுத்துக்கொள்ளச்சொல்கிறீர்கள். இது நல்ல முடிவாக தெரியவில்லையே?

  6. மதம், இனம்,ஜாதி….போன்ற பிரிவினைகள் அழிக்கப்பட்டு மனித சகோதரத்துவம் மட்டுமே பேணப்படும் என்பதையும் தாங்கள் இங்கு உரத்துக் கூறியிருக்கலாம்.மனித உணர்வுக்கு அப்பாற்பட்ட எல்லாம் ஆராய்ச்சிக்கு உட்பட்டவையே அவற்றை வைத்து பிரிவினயை வளர்க்கும் சக்திகள் ஒடுக்கப் பட வேண்டும்.இதற்கு கால தாமதம் ஆனாலும் இது நடந்தேறியே ஆகவேண்டும்.
    என் போன்றோர் கட்டாயமாக இதற்கு துணைநிற்பர்.வரும் காலம் நம்மை வாழ்த்தட்டும்.

  7. தொலைதொடர்பு அரசின் ஏகபோகமாக இருந்தபோது அவர்களால் 100-க்கு 5 பேருக்கு மேல் கொடுக்க முடியவில்லை. எஸ்.டி.டி. நிமிடத்துக்கு 24 ரூபாய் இருந்தது. இதெல்லாம் உங்களுக்கு ஞாபகம் இருக்காது அல்லது தெரியாது.

  8. வினவு பதில் எழுதும் என்று எதிர்பார்த்தேன் ஏனோ எழுதவில்லை முக்கியமான் பிரச்சனையை வினவு எழுதியிருக்கிறது எனவே நான் கேட்ட கேள்விகளுக்கும் பதில் எதிர் பார்த்தேன் ஆனால் இது வரை இல்லை நான் ஒரு விசயத்தை பதிவு செய்ய விரும்புகிறென் இனறய ஜனநாயகத்தில் மிகப்பெரிய குறைபாடு தனி மனிதனுக்கு கட்டற்ற அதிகாரத்தை வழங்குவதுதான் அவன் மக்கள் மூலம் தேர்ந்தெடுக்கப்பட்ட எம் எல் ஏ ,எம் பி ,முதலமைச்சர்,பிரதமர் எதுவாக இருக்கலாம் இப்படி தனி மனிதனுக்கு அதிகாரத்தை வழங்கும் ஜனநாயகம் தான் நடைமுறையில் உள்ளது இதை தவிர்த்து எல்லா மக்களுக்கும் அல்லது மக்கள் கூட்டத்திற்க்கு அதிகாரம் வழங்கும் புதிய ஜனநாயக வழிமுறை ஏதெனும் உங்களிடம் இருக்கிறதா அப்பிடி இருக்குமெனில் அதை தயவு செய்து இங்கு விளக்குங்கள் அதற்க்காக தேர்தலை கண்டிப்பாக மக்கள் புறக்கணிப்பார்கள் நல்லது மக்களுக்குநடக்க வேண்டும் என்ற ஆசையால் கேட் க்கிறேன் பதில் வரும் என்ற நம்பிக்கையுடன்

  9. இராமராஜ்யம் அமைப்போம் என்கிறது பா.ஜ.க. சோழர்காலம் பொற்காலம்; எனவே சோழர் கால ஆட்சியைக் கொண்டு வருவோம் என்கிறார்கள் ஒரு சில தமிழினவாதக் குழுக்கள். காமராஜர் ஆட்சி அமைப்போம் என்கிறது காங்கிரசு. அண்ணா ஆட்சி, எம்.ஜி.ஆர் ஆட்சி என வாக்குச் சீட்டு அரசியல் கட்சிகள் அமைக்கப் போவதாகக் கூறும் ஆட்சிகளின் பட்டியல் நீள்கிறது. இராமனின் ஆட்சி புராணங்களில் மட்டுமே அறியப்படுவது. மற்றபிற ஆட்சிகள் பொற்கால ஆட்சிகள் என்றால் அவைகள் ஏன் மக்களால் புறக்கணிக்கப்பட்டன? அவைகளை மீண்டும் ஏன் கொண்டு வரமுடியவில்லை? என்றெல்லாம் யாரும் கேட்பதில்லை. ஆனால் மனித குலமே வியக்கத்தக்க ஆட்சி வடிவமான சோவியத் ஆட்சி வடிவத்தை மட்டும் “அது தோற்றுப் போனது !” என ஒரு சிலர் ஓயாது ஒப்பாரி வைக்கின்றனர்.

    மற்ற ஆட்சிகள் எல்லாம் தனிநபர்களை முன்னிறுத்தி ஆளப்பட்டன. ஆனால் சோவியத் ஆட்சி வடிவம் மட்டும்தான் மக்களை முன்னிறுத்தி ஆளப்பட்டது. நல்லவர்கள்கூட எதிரிகளின் சூழ்ச்சிகளால் வீழ்த்தப் படுவதில்லையா? அத்தகைய நல்லவர்களை மீட்பதற்காக மக்கள் முயல்வதில்லையா? அது போல நாம் ஏன் சோவியத் ஆட்சி வடிவத்தை மீட்டெடுக்கக் கூடாது? மீட்டெடுக்க வேண்டும். இங்கு மட்டுமல்ல; உலகெங்கும். மனித குலத்திற்கு வேறு மாற்று வழிகள் கிடையாது.
    தேர்தல் களம்-3: நாம் தேட வேண்டியதும் நாட வேண்டியதும்!http://www.hooraan.blogspot.com/2014/04/3.html
    தேர்தல் களம்-2: நாம் தேட வேண்டியதும் நாட வேண்டியதும்!http://www.hooraan.blogspot.in/2014/04/2.html
    தேர்தல் களம்-1: நாம் தேட வேண்டியதும் நாட வேண்டியதும்!http://hooraan.blogspot.com/2014/04/1.html

  10. முகுந்தன் அண்ணா நான் கேட்ட கேள்விக்கு பதில் வரலயே அண்ணா யெப்பிடி இந்த தேர்தல் முறையை மாற்ற போறிங்க தயவுசெய்து விளக்குங்க இதுக்கு மேல என்னால பேச முடியாது அன்னா பிலிஸ் விளக்கம் சொல்லுங்க எனது தொலை பேசி எண் தரட்டும்மா

  11. ஜோசப் உண்மையிலேயே மக்கள் மீது உங்களுக்கு அன்பும் அக்கறையும் இருக்குமேயானால் மிக்க மகிழ்ச்சி…. தேர்தலை புறக்கணித்து விட்டால் போதும் எல்லாம் சரியாகிவிடும் என்று யாரும் இங்கு சொல்லவில்லை , நடைமுறை பிரச்சனைகுக்கு போராடுபவர்கள் அவர்கள் நீங்கள் பொருளை வாங்கிகொடுத்தால் தான் இங்கிருத்து நகருவேன் என குழந்தை போல அடம் பிடிப்பது போல பேசுகிறீர்கள், நாடுமீதுள்ள தங்களின் அக்கறையினால் தாங்கள் நேரடியாவே அவர்களை சந்தித்து இதை பற்றி விவாதிக்கலாம் அல்லது வினவு தளத்திலேயே சொல்லுங்க டாடி சொல்லுங்க என நச்சரிதுக்கொண்டிருக்கலாம்…….

  12. //புதிய ஜனநாயக அரசமைப்பில் இன்றைய இரட்டை ஆட்சிமுறைக்கு மாறாக, தேர்ந்தெடுக்கப்பட்ட மக்கள் கமிட்டிகளுக்குச் சட்டமியற்றவும் அதனை அமல்படுத்தவும் அதிகாரம் இருக்கும்.//

    அந்த மக்கள் கமிட்டிக்கு பெயர் சட்டசபை

    //அதிகாரிகள், போலீசு, இராணுவம், நீதித்துறை அனைத்தும் தேர்ந்தெடுக்கப்பட்ட மக்கள் கமிட்டிகளின் அதிகாரத்தின் கீழ் கொண்டுவரப்படும். //

    இப்போதும் அப்படிதான் இருக்கிறது

    //தவறிழைக்கும் மக்கள் பிரதிநிதிகளின் பதவியைப் பறிக்கவும், தண்டிக்கவுமான அதிகாரம் வாக்களித்த மக்களுக்கு இருக்கும்.
    //

    அப்படி என்றால் நீதி துறை எதற்கு ? எந்த மக்கள் முடிவு செய்வார்கள் ?

    //இன்று மக்கள் பிரதிநிதிகளாக பவனி வரும் தரகு அதிகார வர்க்க முதலாளிகள், நிலப்பிரபுக்கள், சாதி-மத ஆதிக்க சக்திகள், சமூக விரோதிகளின் வாக்குரிமை பறிக்கப்படும். //

    எதிர்த்து பேசுபவர்களின் வாக்குரிமை பரிக்கபடாது என்பதற்கு என்ன உத்திரவாதம் ?
    இதன் படி , ஆ தி மு க ஆட்சியில் கட்சி உறுப்பினர் அல்லாதவர் அனைவரையும் இந்த கேட்டகரியில் வைத்து செல்லாகாசாகி விடுவார்கள்

    //உழைப்போர்க்கு மட்டுமே வாக்குரிமை வழங்கும் மக்கள் அதிகாரம் நிறுவப்படும்.//

    எங்களுக்கு பிடிச்சவங்களுக்கு கொடுப்போம்

    //புதிய ஜனநாயக அமைப்பில் கல்வி, மருத்துவம், குடிநீர் உள்ளிட்ட அடிப்படைத் தேவைகள் அனைத்தும் இலவசமாக மக்களுக்கு வழங்கப்படும். //
    இப்போதும் இலவசமாக கிடைகிறது . மக்கள் பயன்படுத்தப்படும் தரத்தில் இல்லை

    // கல்வி, மருத்துவம், தண்ணீர்,
    போக்குவரத்து, தொலைபேசி, மின்சாரம் உள்ளிட்ட அனைத்து சேவைத்துறைகளும் நாட்டுடைமை ஆக்கப்படும்.
    //

    அரசாங்க அதிகாரிகளுக்கு அடித்தது யோகம்

    //டாடா, அம்பானி போன்ற தரகு முதலாளிகள், பன்னாட்டுக் கம்பெனிகளின் சொத்துக்களும் நிலப்பிரபுக்கள், ஊழல் அரசியல்வாதிகள், அதிகாரிகளின் சொத்துக்களும் நாட்டுடைமை ஆக்கப்படும். //

    புதிய சிந்தனையாளர்களுக்கும் , தொழில் முனைவோர்க்கும் தண்டனை . அதன் பிறகு எல்லோரும் விவசாயம் செய்ய வேண்டியது தான்

    //
    நிலமற்ற உழவர்களுக்கு நிலத்தைச் சொந்தமாக்குவதுடன், பாசன வசதி, உழுபடைக் கருவிகள், உள்ளீடு பொருட்களை உழவர்களுக்கு வழங்கி விவசாயம் ஊக்குவிக்கப்படும். விளைபொருட்களுக்கு விலை நிர்ணயம் செய்யும் அதிகாரம் தேர்ந்தெடுக்கப்பட்ட உழவர் கமிட்டிகளுக்கு வழங்கப்படும்.
    //

    நன்று

    //
    நெசவு, மீன்பிடி, சிறுதொழில்கள், சிறுவணிகம் உள்ளிட்ட சிறு – நடுத்தர முதலாளிகளின் உள்நாட்டுத் தொழில்கள் ஊக்குவிக்கப்படும். பன்னாட்டு நிறுவனங்கள் வெளியேற்றப்படும். இயற்கை வளங்களைச் சூறையாடி நீர், நிலம், காற்று உள்ளிட்ட சுற்றுச்சூழலை நஞ்சாக்கும் முதலாளித்துவ பயங்கரவாதத்துக்கு முடிவு கட்டப்படும்.//

    நல்லது

  13. அழுகி நாறும் போலி ஜனநாயகத்திற்கு மாற்றாக முன்வைக்கப்பட்டிருக்கும் புதிய ஜனநாயகத் தீர்வை ஆழமாகவோ, அக்கறையுடனோ பரிசீலிக்காமல் எல்லாவற்றுக்கும் நக்கலாக ஒற்றை வரியில் பதில் எழுதியிருக்கும் ராமன் கடைசி இரண்டு பாயிண்டுகளுக்கு மட்டும் நன்று மற்றும் நல்லது என்று கூறியுள்ளார்.

    ஆனால் எல்லாவற்றையும் விட அந்த கடைசி இரண்டு அம்சங்கள் தான் மிகவும் முக்கியமானவை. அதில் கூறியுள்ள நடவடிக்கைகளை எடுக்காமலிருப்பது தான் கோடிக்கணக்கான மக்கள் வறுமையிலும், துண்பத்திலும் உழல காரணமாக இருக்கிறது. பெரும்பாண்மை மக்களின் பிரச்சினைகளுக்கு இவை தான் காரணம்.

    ஆனால் அவை ஏன் இங்கே செய்யப்படவில்லை? இந்த சமூகத்தில் அவை செய்யப்பட்டால் பிறகு முதலாளிகளுக்கான இந்த சமூக அமைப்பு மக்களுக்கானதாக மாறிவிடும். முதலாளிகள் எப்படி அதை செய்ய இசைவார்கள்? அந்த நடவடிக்கைகள் மக்கள் நலனை கொண்டிருப்பதால் தான் ராமன் அதைப் பற்றி நக்கலாக எதுவும் கூறாமல் நன்று என்று நகர்கிறார். நன்று என்கிர அந்த வார்த்தைக்குள் இதெல்லாம் சாத்தியமில்லை என்கிற மைண்ட் வாய்சும் உண்டு.

    அந்த அம்சங்களை நல்லது என்று ஏற்றுக்கொண்டால் அந்த நல்லதை வாக்களிப்பதன் மூலம் செய்ய முடியாது. அதற்கு புரட்சி ஒன்று தான் தீர்வு.

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க