கும்பமேளா: இந்தியாவின் புனிதமா, அழுக்காŸ?

52
30

ட இந்தியாவைப் போல தமிழகத்தில் கும்பமேளா குறித்து அத்தனை ஆர்வம் இருப்பதில்லை. ஒருவேளை குடந்தை குளத்தில் அம்மா கைங்கைரியத்தில் சில பல தமிழர்கள் முக்தி அடைந்ததின் கசப்பான நினைவுகள் தமிழ் மக்களை கிலியடைச் செய்திருக்குமோ தெரியவில்லை.

அலகாபாத், நாசிக், உஜ்ஜையினி, ஹரித்துவார் நான்கு நகரங்களிலும் 12 ஆண்டுகளுக்கு ஒரு முறை இந்த கும்பமேளா நடக்கிறது. கும்பமேளா தோன்றிய புராணக்கதையே நம்மூர் எச்சக்கலை கதைகளை விஞ்சி விடும் தரம் கொண்டது.

தன்னை மதிக்காத இந்திரனைக் கண்டு கோபமடையும் துர்வாசர் அவனை பிச்சைக்காரனாக ஒழிந்து போ என்று சாபம் கொடுக்கிறார். இதனால் இந்திரன் மட்டுமல்ல, தேவர்கள் அத்தனை பேரும் தங்களது சுகமான தேவலோக வாழ்க்கையை இழந்தனர். அது என்ன சுக போகம்? ரம்பா, ஊர்வசி, மேனகைகளால் ஆடப்படும் இந்திர லோகத்து குத்தாட்டங்களை இனி பார்த்து மகிழ முடியாது.

இதனால் அசுரர்கள் கை ஓங்கியதாம். இதனால் கலங்கிய தேவர்கள் பிரம்மா தலைமையில் சிவனிடம் புகார் கொடுத்தார்களாம். அவர் கொடுத்த ஆலோசனையின் படி விஷ்ணுவிடம் வழி கேட்க, அவரோ பாற்கடலை கடைந்து அமுதத்தை எடுத்து அருந்தினால் இழந்த சுகபோக வாழ்க்கை, பலம் அனைத்தும் கிடைக்கும் என்றாராம்.

ஆனால் அமுதத்தை தனியாக கடைந்து எடுக்க முடியாது என்பதால் அசுரர்களையும் துணைக்கழைத்துக் கொண்டு தேவர்கள் பாற்கடலை கடைய இறுதியில் தன்வந்திரி அமுதக் கலசத்துடன் தோன்றுகிறார். கடைவதற்கு துணை நின்ற அசுரர்களுக்கு பாதி பங்கை கொடுக்காமல் ஏமாற்றுகிறார்கள் தேவர்கள். இதற்காகவே விஷ்ணு மோகினி அவதாரம் எடுத்து அமுதக் குண்டானை எடுத்துக் கொண்டு ஓடுகிறார். அசுரர்கள் துரத்துகிறார்கள். இந்த ஓட்டம் தேவலோக கணக்குப்படி 12 நாளுக்கு நடந்ததாம். நமது கணக்கின் படி 12 ஆண்டுகளாம். இந்த ‘சேசிங்கில்’ அமுதக் குண்டானிலிருந்து நான்கு துளிகள் மேற்படி கும்பமேளா இடங்களில் விழுந்ததாம். இதனால் அந்த தலங்கள் புனிதமடைந்து அமுதத் துளி விழுந்த தினத்தில் கும்பமேளா நடக்கிறதாம்.

அமுதத் துளி விழுந்த நீர்நிலைகளில் நீராடினால் சகல பாவங்களும் நீங்கி முக்தி அடையப் பெறுவார்களாம். ஆக சிந்திய நான்கு துளிகளுக்கு இப்படி ஒரு நிகழ்வை நடத்தி அதையும் உலகில் அதிகம் மக்கள் ஒன்றுகூடும் மதத்திருவிழா என்று வேறு பெருமை பேசி திரிகிறார்கள். அந்த அமுதத்தின் பிறப்பே ஒரு மோசடியில் குடிகொண்டிருக்கிறது எனும் போது அதன் எச்சில் துளிகள் எப்படி பாவத்தை போக்கும்?

மூன்று கோடி மக்கள் நீராடினார்கள், அரசு ஆயிரம் கோடி செலவழித்தது, வர்த்தக முதலாளிகள் பத்தாயிரம் கோடிகளை அள்ளினார்கள் என்று கும்பமேளாவின் கணக்குகள் எல்லாம் கோடிகளில்தான். கூடவே அலகாபாத் ரெயில் நிலைய நெரிசலில் முப்பது, நாற்பது பேர் இறந்து போயிருக்கின்றனர் என்ற கணக்கும் உண்டு. மதக்கூடல் நடக்கும் மெக்காவோ இல்லை கங்கையோ எங்கும் இத்தகைய பலிகளை ஆண்டுதோறும் பார்க்கிறோம்.

அலகாபாத் கங்கையில் குளித்தால் ஏழு பிறவிகளில் செய்த பாவங்கள் விலகி பிறப்பில்லா முக்தி நிலை கைவரப்பெறுமாம். இந்த குறுக்கு வழி முக்தியில் பெரிய அளவு சிரமப்படத் தேவையில்லை என்பதால் வட இந்தியாவில் இருக்கும் எல்லா வகை சாமியார்களும் கும்பமேளாவில் ஆஜராகிறார்கள். பாவத்தையே தொழிலாகக் கொண்ட நித்தியானந்தா, ஜெயேந்திரன் போன்ற தென்னிந்திய மோசடி சாமியார்களும் கூட கும்பமேளாவில் குளிக்கிறார்கள். பாவம் கங்கை!

(படங்களை பெரிதாக பார்க்க அவற்றின் மீது கிளிக் செய்யவும்)

வாழ்நாள் முழுக்க மௌன விரதம் இருக்கும் பரிவாஜக சாமியார்கள் தங்கள் வருகையை மணி அடித்து தெரிவிப்பார்களாம். தங்களது உடலை வருத்தி முக்தியடையலாம் எனும் ஊர்த்துக வாஹூர சாமியார்கள், தலைகீழாக தவம் செய்யும் சிரசாசன சாமியார்கள், திசைகளை ஆடையாகத் தரித்த திகம்பர சாமியார்கள், நிர்வாணிகள், அப்புறம் நிர்வாண நாகா சாமியார்கள் என்று கும்பமேளாவில் கவர்ச்சியே இத்தகைய வேடிக்கை சாமியார்கள்தான்.

இவர்கள் அனைவரும் பிரம்ம முகூர்த்தமான அதிகாலையில் கங்கையில் குளிப்பார்களாம். இவர்களை பார்ப்பதற்கென்றே பெரும் கூட்டம் கும்பமேளாவிற்கு வருகிறது. விளம்பர நடிகை பூனம் பாண்டே கூட இந்த ஆண்டு கும்பமேளா சென்று குளித்து சாமியார்களின் ஆசிகளை வாங்கியிருக்கிறாராம். இருவரது தொழிலும் உடை குறைவு என்பது ஒரு ஒற்றுமை.

வண்டலூர் உயிரியில் பூங்கா போல தினுசு தினுசான இந்த சாமியார்களுக்கும் ஒரு மிருகக் காட்சி சாலை திறந்தால் நாட்டு மக்கள் அனைவரும் ஒரே இடத்தில் இந்த ஜந்துக்களை பார்க்கலாம். நிர்வாண சாமியார்கள் பணம் கொடுத்தால்தான் ஆசிர்வாதம் மட்டுமல்ல, காமராவுக்கு போசே கொடுப்பார்களாம். இவர்களில் சிலர் பைக்கெல்லாம் வைத்து ஓட்டுகிறார்கள். சமயங்களில் நவநாகரிக அடைகளும் அணிகிறார்கள். காமராவைத் திறந்தால் உடன் ஆடைகளை களைந்து கொண்டு ரெடியாகிறார்கள்.

கஞ்சா முதலான போதை பொருட்கள், மக்கள் கொடுக்கும் பணம் என்று சாமியார்களின் வாழ்க்கை பேஷாகவே கழிகிறது. அரசர்களைப் போல அலங்காரத்துடன் உருத்திராட்சக் கொட்டை, காவிப்பட்டையுடன் வரும் சாமியார்களும் இங்கு உண்டு. இவர்கள் கார்ப்பரேட் சாமியார்கள் போல பரிவாரங்களுடன் வருவார்கள். அடுத்து கும்பமேளாவின் விசித்திரக் காட்சிகளை பார்ப்பதற்கென்றே வெளிநாட்டாரும் கணிசமாக வருகின்றனர். அவர்களில் சிலர் இந்தியாவில் ஏதோ ஆன்மீக மர்மம் குடிகொண்டிருக்கிறது அதை கண்டு கொண்டால் நிம்மதி என்று அறியாமையிலும் வருகிறார்கள்.

இருப்பினும் இந்தியா பாம்பாட்டிகளின் தேசம் என்று வெளிநாட்டவர்களால் கேலி செய்யப்படுகிறது என்று சங்கபரிவார பக்தர்கள் சினமுறுவார்கள். ஆனால் அந்த கேலி போதாது என்பதைத்தானே கும்பமேளா காட்டுகிறது?

– வேல்ராசன்
________________________________________________________________________________
புதிய கலாச்சாரம் – மார்ச் 2013
________________________________________________________________________________

சந்தா