ஜார்கண்ட் மாநிலத்தில் மட்டும் கடந்த பத்து நாட்களுக்குள் இரண்டு பட்டினிச்சாவுகள் நிகழ்ந்துள்ளன. கடந்த 2017-ம் ஆண்டின் இறுதி மாதங்களில் 4 பட்டினிச்சாவுகளை அம்மாநிலம் சந்தித்துள்ளது. ஆதாரில் இணைக்காத ரேசன் அட்டைகளை  போலி அட்டைகள் எனக் கூறி சுமார் 11.6 இலட்சம் ரேசன் அட்டைகளை அம்மாநில அரசு கடந்த ஆண்டு ரத்து செய்ததன் பின்னரே இத்தகைய பட்டினிச் சாவுகள் அங்கு நிகழ்ந்துள்ளன.

கடந்த 2017-ம் ஆண்டு பட்டினிக்கு பலியான 11 வயது சிறுமி சந்தோஷி

ஜார்கண்டின் முர்கு பகுதி, கொடெகல் கிராமத்தைச் சேந்த 60 வயது முதியவரான சுடாமா பாண்டே கடந்த மே 25 அன்று தனது வீட்டில் மரணமடைந்தார். தனியாக வாழ்ந்து வந்த பாண்டே, மனநலம் பாதிக்கப்பட்டவர் என்றும் கடந்த ஒன்றரை மாதங்களாக அவருக்கு ரேஷன் பொருட்கள் எதுவும் கிடைக்கவில்லை என்றும் அக்கிராமத்தைச் சேர்ந்தவர்கள் கூறுகின்றனர். அவருக்கு வழங்கப்பட்டு வந்த ரேசன் பொருட்கள் திடீரென்று நிறுத்தப்பட்டதன் காரணமாக, கடந்த ஒன்றரை மாதங்களாக உணவு கிடைக்காமல், பட்டினியில் கிடந்து படிப்படியாக உடல்நிலை மோசமாகி உயிரிழந்திருக்கிறார்.

இந்த பட்டினிச்சாவு குறித்து அப்பகுதியின் துணைப் பிரிவு அலுவலர் பிரனவ்குமார் பல் கூறுகையில், இத்தகைய சம்பவம் குறித்து தனக்கு இதுவரை தெரியாது என்றும் அது குறித்து பின்னர் விசாரிக்கவிருப்பதாகவும் கூறியிருக்கிறார்

மற்றொரு பட்டினி மரணம், ஜார்கண்டின் கிரிடி மாவட்டத்தில் உள்ள தும்ரி பகுதியின், மங்கர்கட்டி கிராமத்தில் நிகழ்ந்துள்ளது. அக்கிராமத்தைச் சேர்ந்த 58 வயதான சாவித்ரி தேவி, கடந்த பல மாதங்களாக ரேசன் கடைகளில் உணவுப் பொருட்கள் கிடைக்கப்பெறாமல், அவரது மொத்தக் குடும்பமும் கடந்த 3 நாட்களாக பட்டினி கிடந்துள்ளது.

சாவித்ரிதேவியின் இரண்டு மகன்களும் வேலைக்காக வெளிமாநிலங்களுக்குச் சென்று தனியார் நிறுவனங்களில் பணிபுரிந்து வந்தனர். ஆனால் கடந்த 6 மாதங்களாக எவ்வித வேலையும் இல்லாத காரணத்தால், இருவரும் வீட்டிற்கு பணம் அனுப்பமுடியாத அவலநிலைக்குத் தள்ளப்பட்டனர்.

சாவித்ரி, அவரது இரண்டு மருமகள்கள் மற்றும் 3 பேரக் குழந்தைகள் என 6 பேரும் கடந்த 6 மாதங்களாக நண்பர்களிடமும் உறவினர்களிடமும் அருகிலுள்ளவர்களிடம் கடன் வாங்கி வாழ்க்கை நடத்தியுள்ளனர். பல சமயங்களில் அருகிலுள்ளவர்களிடம் அரிசி கடன் பெற்று வாழ்ந்துள்ளனர். அக்குடும்பத்தைச் சேர்ந்த சிறுவர்கள், அங்கன்வாடியில் கிடைக்கப்பெறும் உணவின் காரணமாக ஒரு தேரம் உணவு உண்டு உயிர்வாழ்ந்துள்ளனர். மற்ற அனைவரும் பட்டினி கிடந்துள்ளனர்.

சாவித்ரியின் குடும்பத்துக்கு ரேஷன் அட்டை கொடுக்காமல் இழுத்தடிக்கப்பட்டதே இதற்கு முக்கியக் காரணமாகும். சாவித்ரி குடும்பம் உட்பட அக்கிராமத்தைச் சேர்ந்த சுமார் 120 குடும்பங்களுக்கு இன்றளவும் ரேஷன் அட்டைகள் வழங்கப்படவில்லை. அவர்களது விண்னப்பங்கள் கிடப்பில் போட்டுவைக்கப்பட்டுள்ளன.

கடந்த 2017-ம் ஆண்டு செப்டெம்பர் மாதம் வரைமட்டுமே, சுமார் 11.6 லட்சம் ரேசன் கார்டுகளை ரத்து செய்திருக்கிறது ஜார்கண்ட் அரசு. இவை அனைத்தும் ஆதாரோடு இணைக்கப்படாத காரணத்தால் ரத்து செய்யப்பட்ட ரேஷன் அட்டைகள். மகன்களுக்கு வேலையில்லாத, இக்கட்டான oரு சூழலில் ரேசன் அட்டை கிடைக்கப்பெறாமல் மரணமடைந்துள்ளார்.

கடந்த ஆண்டு நிகழ்ந்த கொடூரமான பட்டினிச்சாவுகளில், சந்தோஷி என்ற 11 வயது சிறுமி பட்டினிக்கு பலியானதுதான் முதன்முதலில் வெளிவந்தது. இத்தகவல் கசிய ஆரம்பித்த்தும், இது மலேரியா சாவு எனக் கூறிய மாநில பாஜக அரசு, சமூக ஆர்வலர்கள் பலரும் உண்மை நிலையை அம்பலப்படுத்திய பின்னர் அதனை பட்டினிச் சாவு என ஏற்றுக் கொண்டது.

சந்தோஷியின் குடும்பத்தினருக்கு, ஆதாரோடு ரேசன் அட்டையை இணைக்காததைக் காரணம் காட்டிதான் உணவுப் பொருள் மறுத்துள்ளனர். கடந்த ஆண்டில் பட்டினிக் கொடுமையால் மரணித்த மற்ற மூவரும், ஆதார் தொடர்பான பிரச்சினைகளின் காரணமாகவே ரேசன் பொருள்கள் மறுக்கப்பட்டு, பட்டினிக் கொடுமையால் தங்கள் உயிரை இழந்தனர்.

இந்திய உணவுக் கழகத்தின் சேமிப்புக் கிடங்கில் எலிகளுக்கு உணவாகி, மழையில் நனைந்து கெட்டுப் போய் வீணாகும் உணவுப் பொருட்களை, தப்பிப்தவறியும் கூட பசித்தவர்களுக்கு இலவசமாக வழங்கக் கூடாது என்பதுதான் உலகவங்கியின் உத்தரவு. அந்த உத்தரவை, ராமனின் பாதரட்சையாகப் பாவித்து தலைமேல் வைத்து நிறைவேற்றி வருகிறது மத்திய அரசு. முந்தைய காங்கிரசு ஆட்சிக் காலத்திலிருந்தே இதுதான் நிலைமை.

’பாசக்கயிற்றை’ இன்னமும் இறுக்கிப் பிடித்து மக்களை ரேசன் மானியத்திலிருந்தே அடித்து வெளியேற்ற கொண்டு வரப்பட்ட திட்டங்கள்தான் மோடியின், ‘உங்கள் பணம் உங்கள் கையில்’, ’ஜன்தன் யோஜனா’, ’ஆதார்’ ஆகியவை.

சில நூறு கோடிகள் செலவு செய்து, மக்கள் அனைவருக்கும் உணவுப் பொருள் மானியம் கொடுக்காத இந்த அரசுதான் – இலட்சக்கணக்கான கோடிகளை இராணுவத்திற்காகச் செலவு செய்து தன்னை வல்லரசு என்று பீற்றிக் கொள்கிறது.

மேலும் படிக்க:
Two More Suspected Starvation Deaths Stain Jharkhand’s Track Record Further

1 மறுமொழி

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க