“காங்கிரசில் வாரிசு அரசியல்” அல்லது “திமுகவில் வாரிசு அரசியல்” என்கிற குற்றச்சாட்டுகள் நமக்குப் புதிதல்ல. நமது காதுகளில் “வாரிசு அரசியல்” என்கிற வார்த்தை விழுந்தவுடன் காங்கிரசு, திமுக, மற்றும் சில மாநிலக் கட்சிகளின் பெயர் மனதில் நிழலாடும்.

அவ்வாறு சிந்திக்க நாம் பழகியிருக்கிறோம் – அல்லது பழக்கப்படுத்தப்பட்டு இருக்கிறோம். உதயநிதியோ அல்லது ஓ.பி.ஆரோ – அரசியல் ரீதியில் தகுதியே இல்லாதவர்கள் வாரிசுகளாக முன்னிறுத்தப்படுவதும், அவர்கள் தேர்தல் அரசியலில் வென்று அதிகாரத்திற்கு வருவதும் வெகு மக்களுக்கான ஜனநாயக வெளி மறுக்கப்படுவதைக் காட்டுகிறது என்பதை மறுப்பதற்கில்லை.

ஆனால், வாரிசு அரசியலே இல்லாத ஒரு கட்சி இங்கே உள்ளதா? வாரிசு அரசியலுக்கு என்ன தான் காரணம்?

2016-ம் ஆண்டு காஞ்சன் சந்திரா எழுதிய நூல் ஒன்றில் உள்ள விவரங்களை முன்வைத்தும், நடந்து முடிந்த பாராளுமன்றத் தேர்தலில் களமிறங்கிய வேட்பாளர்களின் பின்னணியை ஆராய்ந்தும் சில விசயங்களை முன் வைக்கிறார் பேராசிரியர் கிஸ்ரோஃப் ஜெஃப்ரெலோட்.

அதன்படி, நடந்து முடிந்த பாராளுமன்றத் தேர்தலில் வெற்றி பெற்றவர்களில் சுமார் 30 சதவீதமானோர் அரசியல் வாரிசுகள் என்பது தெரியவந்துள்ளது. இதுவரை நடந்த தேர்தல்களிலேயே இப்போதுதான் அதிக சதவீதத்தில் அரசியல் வாரிசுகள் வெற்றி பெற்றுள்ளனர்.

தேசிய சராசரியான 30 சதவீதத்தை விட கூடுதலாக அரசியல் வாரிசுகள் வென்றுள்ள மாநிலங்கள் இவை : ராஜஸ்தான் – 32%, ஒதிசா – 33%, தெலுங்கானா – 35%, ஆந்திர பிரதேசம் – 36%, தமிழ்நாடு – 37%, கர்நாடகம் – 39%, மகாராஷ்டிரம் – 42%, பீகார் – 43% மற்றும் பஞ்சாப் – 62%. வாரிசு அரசியல் என்பது இந்தியாவின் குறிப்பிட்ட பிரதேசத்தில் நிலவும் பிரச்சினை அல்ல என்பதை இந்தப் புள்ளிவிவரங்கள் உணர்த்துகின்றன.

அடுத்து, வாரிசு அரசியல் என்றாலே வழக்கமான “குற்றவாளிகளாக” அறியப்பட்ட (அல்லது அப்படி நமக்குச் சொல்லப்பட்ட) மாநிலக் கட்சிகளை விட தேசியக் கட்சிகளிலேயே அதிக வாரிசுகள் களமிறக்கப்பட்டுள்ளனர் என்கிறது இந்த ஆய்வு.

பீகாரைப் பொருத்தவரை தேசியக் கட்சிகளில் 58 சதவீதமும், மாநிலக் கட்சிகளில் 14 சதவீதமும் வாரிசுகள் களமிறக்கப்பட்டுள்ளனர். பிற மாநிலங்களில் முறையே இந்த சதவீதம் எப்படி உள்ளது ?

அரியானா – 50% எதிர் 5%, கருநாடகம் – 35% எதிர் 13%, மகாராட்டிரம் 35% எதிர் 19%, ஒதிசா 33% எதிர் 15%, தெலுங்கானா 32% எதிர் 22%, உத்திரப் பிரதேசம் 28% எதிர் 18%. மாநிலக் கட்சிகளைப் பொருத்தவரை ஜே.டி.எஸ் 66%, சிரோன்மணி அகாலி 60%, தெலுங்கு தேசம் 52%, ராஷ்ட்ரீய ஜனதா தளம் 38%, பிஜூ ஜனதாதளம் 38% சமாஜ்வாதி 30% என்கிற அளவுக்கு வாரிசுகளுக்கு முன்னுரிமை கொடுத்துள்ளன.

படிக்க:
கலைஞர் குடும்பம், நேரு குடும்பம்: பெயர்களின் அரசியல் !
♦ விகாஷ் பார்லா : ஹரியாணா பாஜக தலைவரின் மைனர் வாரிசு !

வாரிசு அரசியலைப் பொருத்தவரை “வழக்கமான” குற்றவாளியான காங்கிரசு கட்சி களமிறக்கிய வாரிகளின் சதவீதம் 31 என்றால், காங்கிரசை வறுத்தெடுக்கும் பாஜக 22 சதவீதம். இத்தனைக்கும் கடந்த பாராளுமன்றத்தில் பங்கேற்ற தனது 282 உறுப்பினர்களில் சுமார் நூறு பேருக்கு இம்முறை அக்கட்சி சீட்டு வழங்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

காங்கிரசுக் கட்சியையும் இன்னபிற மாநிலக் கட்சிகளையும் ‘குடும்ப கம்பேனிகள்’ எனக் குற்றம் சுமத்தும் பாரதிய ஜனதா, தனது வேட்பாளர்களில் ஐந்தில் ஒருவரை அரசியல் வாரிசுகளாக பார்த்துப் பார்த்து களமிறக்கி விட்டிருப்பதை பெரும்பாலான ஊடகங்கள் சுட்டிக்காட்டவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

சரி, ஏன் அரசியல் கட்சிகள் வாரிசுகளுக்கு வாய்ப்பு வழங்குகின்றன?

முதலாவதாக, வாரிசு அரசியல் குறித்து பிலாக்கணம் வைக்கும் ஓட்டுக்கட்சிகளுக்கு அரசியலில் ஜனநாயகத்தை நிலைநாட்டுவதை விட முக்கியமானது தேர்தல் வெற்றி. இதற்கு உள்ளூரளவில் முகம், தெரிந்த பெயர், செலவு செய்யத் தயங்காதவர்களாக இருப்பது அவசியம்.

அந்த வகையில் ஏற்கெனவே அரசியலில் பதவிகள் பெற்ற அதிகாரத்தை சுவைத்து புறங்கையை நக்கியவர்களே பொருத்தமானவர்களாக உள்ளனர். சாதாரண கடைமட்டத் தொண்டனுக்கு ஓட்டுக்கு ஆயிரம் இரண்டாயிரம் கொடுப்பதோ வாக்குச் சாவடிகளைச் சுற்றி “சிங்கங்களை” நிறுத்தி வைப்பதோ சாத்தியமாக இருப்பதில்லை.

இரண்டாவதாக, அரசியல் வாரிசுகளில் பெரும்பான்மையினர் பெண்களாக இருக்கின்றனர். பீகாரில் ஊழல் மற்றும் கொலை கொள்ளை குற்றங்களுக்காக சிறைகளில் இருக்கும் அரசியல் “சேவகர்கள்” தங்கள் வீட்டுப் பெண்களை களமிறக்கியுள்ளனர்.

தங்கள் குடும்பத்தில் உள்ள பெண்கள் பதவி அதிகாரத்திற்கு வரும்போது தங்களுக்குக் கட்டுப்பட்டவர்களாக இருப்பார்கள் என்கிற நிலபிரபுத்துவ கண்ணோட்டத்திலிருந்தே இந்தியத் தேர்தல் அரசியலில் பெண்களுக்கு “சம வாய்ப்பு” வழங்கப்படுகின்றது. ”எல்லா உயிர்களுக்குமான” அரசியலை தான் முன்னெடுத்து வருவதாகச் சொல்லி வரும் அண்ணன் சீமான் கூட கடந்த சட்டமன்றத் தேர்தலில் தனது பதிலி வேட்பாளராக தன்னுடைய மனைவியையே நிறுத்தினார் என்கிற செய்தி இங்கே நினைவுகூரத்தக்கது.

படிக்க:
பெண்கள் மீதான பாலியல் வன்முறைகள் குடும்பத்தில்தான் அதிகம் !
♦ நூல் அறிமுகம்: கம்யூனிசமும் குடும்பமும் !

உள்ளாட்சித் தேர்தல்களில் பெண்களுக்கென இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதால் அரசியல் குடும்பங்களில் இருந்து பெண் வாரிசுகள் களமிறக்கப்படுவது அதிகம் என்பதை நமது அனுபவத்தில் பார்த்திருக்கிறோம்.

இந்திய ஓட்டுக்கட்சி ஜனநாயகமே அடிப்படையில் மக்களின் மேல் ஏவி விடப்பட்டுள்ள சர்வாதிகாரம் என்கிற நிலையில் அதற்குள்ளும் அதிகாரத்தில் அமர்ந்து மக்களை ஒடுக்கும் உரிமையை வாரிகளே வைத்துக் கொள்கின்றனர். இதில் உலகிலேயே முதலாவது பெரிய ஜனநாயகம் என்கிற பீற்றலுக்கு ஒன்றும் குறைச்சலில்லை – விளக்குமாத்துக்கு பட்டுக்குஞ்சம் கட்டி அழகு பார்க்கிற கதைதான்.


சாக்கியன்
நன்றி: இந்தியன் எக்ஸ்பிரஸ்