ந்தியப் பெண்களுக்கு அவர்களது வீடுதான் மிக அபாயகரமானதாக இருப்பதாகச் சொல்கிறது, உலக சுகாதார நிறுவனத்தின் அறிக்கை. மூன்று பேரில் ஒரு பெண், தன் உடன் வசிக்கும் இணையால் உடல் அல்லது பாலியல் ரீதியிலான வன்முறைக்கு ஆளாவதாக 2017-ம் ஆண்டின் அறிக்கை கூறுகிறது. இந்தியாவில்தான் உடன் வசிக்கும் இணையால் பெண்கள் அதிக அளவில் வன்முறைக்கு ஆளாவதாகவும் உலக சுகாதார நிறுவனத்தின் அறிக்கை கூறுகிறது.

இது நாம் அன்றாடம் காணும் காட்சிதான் என்றாலும், மத்திய அரசின் தேசிய குற்ற ஆவண காப்பகத்தின் 2015-ம் ஆண்டுக்கான அறிக்கையிலும்கூட 95.5% பெண்களுக்கு எதிரான குற்றங்கள் தெரிந்த நபர்களாலே ஏற்படுவதாக சொல்லப்பட்டிருக்கிறது.

கடந்த வாரம் உலக சுகாதார நிறுவனம் Intimate partner violence (IPV) எனப்படும் நெருக்கமான இணையரின் வன்முறையை தடுப்பது எப்படி என்பது குறித்த சில யோசனைகளை கூறியிருந்தது.

அதன்படி சமூக காரணங்களான பாகுபாடுள்ள சட்டங்கள், ஆதரவளிக்காத அமைப்புகள், சாதி ரீதியிலான அபாயங்கள் மற்றும் தீங்கு விளைவிக்கும் பாலின நெறிகள், ஏழ்மை மற்றும் படிப்பறிவின்மை, உறவுகளில் உள்ள அதிக அளவிலான சமத்துவமின்மை, மேலும் சிறு வயதில் குடும்பத்துக்குள்ளேயே எதிர்கொள்ள நேரிடும் வன்முறை உள்ளிட்ட தனிப்பட்ட காரணங்கள் போன்ற பிரிவுகளில் இந்த வன்முறைகளை பிரித்துள்ளனர்.

மேற்கண்ட பிரிவுகளில் உள்ள ஒரு பொதுவான தன்மை வீட்டிலும் வெளியிலும் பெண்களின் நிலை அபாய கட்டத்தில் இருப்பதே ஆகும். அதாவது, வீட்டில் வன்முறைக்கு ஆளாகும் ஒரு பெண், வெளியில் அது குறித்து நம்பிக்கையுடன் பேசுவதில்லை. தன்னுடைய குரல் நிராகரிக்கப்படக்கூடும், தான் அவமானத்துக்கு உள்ளாகக்கூடும் அல்லது அதை வைத்து மற்றவர்கள் தவறாக நடக்கக்கூடும் என்கிற காரணங்கள் அதன் பின்னணியில் உள்ளன.

படிக்க:
தருமபுரி : பெண்கள் குழந்தைகள் மீதான பாலியல் குற்றங்களுக்கு எதிராக ஆர்ப்பாட்டம் !
♦ பாலியல் வன்கொடுமை : போராடாமல் விடிவில்லை ! பெ.வி.மு

வன்முறை அல்லது அச்சுறுத்தல் என்கிற ஆயுதமே பெண்களை அதே இடத்தில் இருத்தி வைத்துக்கொள்கின்றன. இந்த ஆயுதத்தை ஏவுகிறவர்கள் ஆண்களாகவே உள்ளனர். இந்தியாவில் குடும்பங்களுக்குள் பழக்கப்படுத்தப்பட்ட வன்முறை ஆண்களின் குணமாகவே உள்ளது.

குறிப்பாக, திருமணமான இணையர் இடையே இது பொதுவான குணமாகவும், கலாச்சாரம் என்ற பெயரில் ஆணாதிக்க சமூகத்தில் சமூகம், அரசு, சட்ட அமலாக்க முகமைகளால் புறக்கணிக்கப்பட்டதாகவோ இந்த வன்முறைகள் தொடர்ந்து கொண்டிருக்கின்றன.

திருமண உறவுகளில் நடக்கும் பாலியல் வன்கொடுமைகளை, வன்கொடுமைகளாக கருத முடியாது என நீதிமன்றமே சொல்கிறது எனில், நம்முடைய ‘கலாச்சாரம்’ எத்தகையது என்பதை புரிந்துகொள்ளலாம். திருமண உறவில் நிகழும் தனிப்பட்ட பிரச்சினைகளில் நீதிமன்றம் தலையிட முடியாது என்றும் வாதாடப்பட்டது. ஆனால், ஒவ்வொரு தனி மனிதருக்கும் தனிப்பட்ட உரிமை உள்ளது எனவும் உச்சநீதிமன்றம் சொல்லியிருக்கிறது. அதன் அடிப்படையில் திருமணத்தின் பேரில் நடக்கும் வன்கொடுமைகளை குற்றமாகக் கருத முடியும்.

ஆனால், 2015 -ம் ஆண்டு நாடாளுமன்றத்தில் கேட்கப்பட்ட இதுகுறித்த ஒரு கேள்விக்கு, சனாதன இந்துத்துவத்தை கொள்கையாகக் கொண்டிருக்கும் மோடி அரசு, “இந்திய சமூகத்தில் திருமணங்கள் ‘புனிதமானவை’ என கருதப்படுவதால், புனிதமான திருமணத்தில் நிகழும் வல்லுறவுகளை, ’வல்லுறவுகளாகக்’ கருதி சட்டத்தால் தண்டிக்க முடியாது” என சொல்லிவிட்டது.

குடிமக்களின் தனிப்பட்ட உரிமைகளை, சமத்துவத்தை பேணிக்காக்க வேண்டிய அரசு இத்தகைய இந்துத்துவ பிற்போக்குத்தனங்களுடன் நடந்துகொள்ளும்போது, மாற்றம் என்பது அத்தனை எளிதாக சாத்தியமில்லை.


அனிதா
நன்றி: டெலிகிராப் இந்தியா