பெண்களுக்கு பாதுகாப்பற்ற நாடுகளில் இந்தியாதான் முதலிடம். பெண்கள் மீதான குற்றங்களுக்கு வேடிக்கை பார்க்காமல் ஒன்றுபட்டு போராடுவோம்! என்ற கோரிக்கைகளோடு, பெண்கள் குழந்தைகள் மீதான பாலியல் வக்கிரத் தாக்குதலுக்கு எதிரான கண்டன ஆர்ப்பாட்டம், பெண்கள் விடுதலை முன்னணியின் சார்பில் கடந்த 04.08.2018 அன்று, தருமபுரி மாவட்டம் பென்னாகரம் டெம்போ நிறுத்தம் அருகில் நடைபெற்றது.

தோழர் பழனியம்மாள் தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில், புரட்சிகர மாணவர் – இளைஞர் முன்னணி மாவட்ட அமைப்பாளர் தோழர் அன்பு மற்றும் மக்கள் உரிமை பாதுகாப்பு மையத்தின் வழக்கறிஞர் ஜானகிராமன் ஆகியோர் பங்கேற்று உரை யாற்றினர்.

முன்னணியாளர்கள் தமது உரையில், ”காஷ்மீரில் 8 வயது ஆசிபா , அயனாவரத்தில் 11 வயது சிறுமி, புதுக்கோட்டையில் 17 வயது சிறுமி, அரியானாவில் வேலை கேட்டு சென்ற இளம்பெண் என சிறுமிகளையும், பெண்களையும் 10, 20, 40 பேர் சேர்ந்து குதறும் கொடூரம் தினந்தோறும் நடக்கிறது. செய்திகளைக் கேட்டாலே நெஞ்சம் பதறுகிறது.

எந்த மிருகமும் கூட்டு வல்லுறவில் ஈடுபடுவதில்லை. அவற்றை விடவும் மோசமானவனாக மனிதன் தாழ்ந்து போகக் காரணம் என்ன? 20 வயது கூட நிரம்பாத இளைஞனும், 60 வயதைத் தாண்டிய கிழவனும் சேர்ந்து சூறையாடுகிறார்களே யார் இவர்கள்? ஏன் இப்படி நடந்து கொள்கிறார்கள்? எந்தக் கேள்விக்கும் பதில் தேடாமல், குழந்தைகளையும், பெற்றவர்களையும் எச்சரிக்கையாக இருக்கச் சொல்லி விளம்பரம் போடுவது அயோக்கியத் தனமில்லையா?

பெண்கள் வாழத்தகுதியற்ற நாடுகளில் இந்தியா தான் முதலிடம் என்பதற்கு இந்த சம்பவங்களை விட வேறு சாட்சி என்ன வேண்டும்? எச்ச ராஜா கும்பல் இது பற்றி வாய் திறக்க மறுப்பது ஏன்? கோவிலுக்குள் வைத்து வல்லுறவு செய்யும் இந்துமத வெறியர்கள், பாவமன்னிப்பு கேட்க சென்ற பெண்ணைச் சீரழிக்கும் பாதிரிகள், ஒடுக்கப்பட்ட பெண்களைச் சூறையாடும் ஆதிக்க சாதிவெறிக் கும்பல் என ஆணாதிக்க, காமவெறி நிரம்பி வழியும் மூளைகளைத்தான் சாதி, மதங்கள் உருவாக்கி வருகின்றன. பெண்கள் என்றாலே நுகர்ந்து தள்ள வேண்டிய இன்பம் தரும் பண்டம் என்ற வெறியை உருவாக்கும் இன்டர்நெட், ஸ்மார்ட் போன் வடிவத்தில் சனியன் சட்டைப்பையில் உட்கார்ந்திருக்கிறது.

ஆபாசச் சீரழிவுகளைத் தடுக்க மறுக்கும் அரசிடம், சாராயக் கடைகளை நடத்தும் அரசிடம் கெஞ்சிக் கூத்தாடினால் என்ன நடக்கும்? வீதி, வீதிக்கு, வாசலுக்கு வாசல் சி.சி.டி.வி. கேமரா வைக்கச் சொல்லுவான்.

வீதியில் கேமரா வைப்பதால் சிந்தனை சீரழிவதைத் தடுக்க முடியுமா? கேப்பையில் நெய் வடிகிறது என்பதை நம்பும் கேனைகளாக எத்தனை நாட்களுக்கு இருக்கப் போகிறோம்? சாராய போதையில் தன்னை மறந்து, இண்டர்நெட் காம வெறியில் திளைத்து சமூகத்தின் கேடுகளாக மாறுவது நின்றுவிட்டால், எல்லாரும் சிந்திக்க ஆரம்பித்தால் என்ன நடக்கும்? கார்ப்பரேட் கம்பெனிகள் அடிக்கும் கொள்ளையை, காவிக்கூட்டம் நடத்தும் கலவரங்களைக் கேள்வி கேட்கும் திறன் மக்களின் மூளைகளுக்கு வந்துவிடும். அப்படி நடந்து விடாமல் தடுக்கத்தான் எல்லா அசிங்கங்களையும் அரசே பாதுகாத்துக் கொண்டிருக்கிறது.

பெண்களை இழிவுபடுத்தி சிதைக்கும் ஆணாதிக்கத்தை, பாலியல் வக்கிரத்தை உருவாக்கிப் பரப்பும் சாதி – மத பிற்போக்கினையும், நுகர்வு வெறியை – காமவெறியைத் தாண்டிவிடும் ஆபாசக் குப்பைகளையும் ஒழிக்காமல், எந்த வீட்டிலும் தாய், மகள், மனைவி, சகோதரி என யாரையும் பாதுகாக்க முடியாது. வலுவான சட்டம், கடுமையான தண்டனை எதுவும் நிரந்தரத் தீர்வாகாது என்பதை உணர்வோம்!

பிற்போக்கு, ஆபாசக் குப்பைகளை ஒழித்து, பெண்ணை சக மனுசியாக மதிக்கும் புதிய வகைப்பட்ட, சமத்துவமான பண்பாட்டை உருவாக்க, அனைவரும் போராட்டக்களத்தில் கரம் கோர்ப்போம்! பல இலட்சம் பேர் கூடிய மெரீனா போராட்டத்தில் பெண்கள் பாதுகாப்பாக இருந்தார்கள். பல மாதம், வருடம் என்று நீண்ட எல்லாப் போராட்டங்களிலும் பெண்கள் பாதுகாப்பாகவே இருந்தார்கள். ஆம், போராட்டங்களே பெண்களை, சமூகத்தைப் பாதுகாக்கும். வாருங்கள் போராடுவோம்!” என அறைகூவல் விடுத்தனர்.

தகவல் :
பெண்கள் விடுதலை முன்னணி, தமிழ்நாடு.

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க