டந்து முடிந்த நாடாளுமன்ற குளிர்காலக் கூட்டத்தொடரில் ‘அமளியில்’ ஈடுபட்டதன் மூலம் ‘இல்லாத ஜனநாயகத்தை’ அவமதித்துவிட்டனர் என்று எதிர்க்கட்சிகளைச் சேர்ந்த 12 மாநிலங்களவை உறுப்பினர்கள் கூட்டத்தொடர் முழுவதும் இடைநீக்கம் செய்யப்பட்டனர். நாடாளுமன்ற ‘விவாத சுதந்திரம்’ பறிக்கப்படுவதற்கு எதிராக எதிர்க்கட்சியினரால் செய்ய முடிந்த ‘உச்சபட்ச நடவடிக்கை’ கூக்குரலிடுவது மட்டும்தான். மாநிலங்களவையில் சொற்பப் பெரும்பான்மை கொண்ட மோடி அரசு (பா.ஜ.க. கூட்டணி – 119 இடங்கள், எதிர்க்கட்சிகள் – 118 இடங்கள்) இம்முறை தனது இடைநீக்க நடவடிக்கையின் மூலம் அக்கூக்குரலின் சத்தங்களையும் குறைத்துவிட்டது. இடைநீக்கத்திற்கு எதிராக எதிர்க்கட்சிகள் தொடர் போராட்டங்களில் ஈடுபட்டுவந்த நிலையில்தான் இரு அவைகளிலும் – டிசம்பர் 20, 21 ஆகிய தேதிகளில் – தேர்தல் சட்டங்கள் (திருத்த) மசோதா 2021 நிறைவேற்றப்பட்டுள்ளது.
“ஒரே நபர் இரண்டு இடங்களில் வாக்களிக்கும் ‘தில்லுமுல்லுகளை’ ஒழித்துக்கட்டவே இச்சட்டத்திருத்தம் கொண்டு வரப்படுகிறது. வாக்காளர் அட்டையுடன் ஆதார் அட்டையை இணைப்பதன் மூலம் கள்ள ஓட்டினை தடுத்து ‘நியாயமான ஒரு தேர்தல் முறையை’ உருவாக்க முடியும். இதற்கு எதிர்க்கட்சிகள் ‘தடையாக’ இருக்கின்றனர்” என்ற ஒரு தோற்றத்தை பாசிச மோடி அரசு உருவாக்கியுள்ளது.
இந்த சட்டம் நிறைவேற்றப்படுவதற்கு முன்னதாக, சி.பி.ஐ., அமலாக்கத்துறை, என்.ஐ.ஏ. உள்ளிட்ட பல அரசு நிறுவனங்களையும் போல தேர்தல் ஆணையமும் காவி பாசிஸ்டுகளின் கைப்பாவைதான் என்பதை நிரூபிக்கும் வகையில் டிசம்பர் 18-ம் தேதியன்று, இந்திய தேர்தல் ஆணையர்களுடன் பிரதமரின் முதன்மைச் செயலர் சந்திப்பு நடத்தினார். தேர்தல் ஆணையர்கள் தங்களுக்கு தேவையான தகவல்களை மற்ற அதிகாரிகளை அழைத்துப் பெறுகின்ற வழக்கத்துக்கு மாறாக இச்சந்திப்பு நடைபெற்று, அது பலத்த எதிர்ப்புக்குள்ளான போதும் சட்டை செய்யாமல் இருந்துவருகிறது மோடி அரசு.
ஆதார் இணைப்பு : கண்காணிப்பு சட்டப்பூர்வமான வரலாறு
ஆதார் என்பது என்ன? எதற்கு உருவாக்கப்பட்டது? ஆதார் சட்டம் 2016 என்பது (Targeted delivery of financial and other subsidies, Benefits and services) Act 2016 – “மானியங்களும் சலுகைகளும் நாட்டின் ஏழை மக்களுக்கு ஒழுங்காகப் போய் சேர்வதில்லை. ஆகவே அதில் நடைபெறும் ஊழல்களையும் முறைகேடுகளையும் தடுப்பதற்காக உருவாக்கப்பட்டது” என்று சொல்லப்படுகிறது. ஆதார், அனைத்து மக்களுக்குமான ஒன்றல்ல என்பதனை இவ்விளக்கமே தெளிவுபடுத்தும்.
படிக்க :
ஆதார் – வாக்காளர் அட்டை இணைப்பு : மோடியின் பாசிச நடவடிக்கை | தோழர் சுரேசு சக்தி
ஆதார் அபாயம் : காங்கிரஸ் பிஜேபி கள்ளக் கூட்டணியும் இடதுசாரிகள் செய்யத் தவறியதும் || மு. இக்பால் அகமது
இன்போசிஸ் (Infosys) என்ற கார்ப்பரேட் நிறுவனத்தின் துணைத்தலைவரான நந்தன் நீலகேனியை தலைவராகக் கொண்டு 2009-ல் அப்போதைய காங்கிரசு அரசால் ஆதார் ஆணையம் (யு.ஐ.டி.ஏ.ஐ – UIDAI) உருவாக்கப்பட்டது. “ஆதார் சட்டப்பூர்வமானதா” என்ற கேள்வி எழுந்தபோது தனியாக சட்டம் இயற்றப்படாமல், 2016-ல் நிதி மசோதாவாகவே கொண்டு வரப்பட்டது.
ஆதார் அரசியலமைப்புக்கு உட்பட்டதா என்ற பொது நல வழக்கை விசாரித்த உச்சநீதிமன்ற நீதிபதிகளில் பெரும்பான்மையோர் ஏற்றுக்கொண்டதாலேயே ஆதார் சட்டப்படி செல்லும் தன்மையுடையதாகி இருக்கிறது. மேலும் ஆதாரை மானியங்கள், சலுகைகள் தவிர மற்றவற்றுக்கு கட்டாயமாக்கக் கூடாது என்றும் ஆதார் இல்லாததால் யாரும் எதற்காகவும் பாதிக்கப்படக் கூடாது என்றும் வங்கிக் கணக்கை தொடங்கவும், பள்ளியில் சேர்க்கவும், மொபைல் எண்ணைப் பெறவும் ஆதார் கட்டாயமில்லை என்றும் தீர்ப்பு அளிக்கப்பட்டது.
அதே நீதிமன்றம், பொதுநல வழக்குகள் தாக்கல் செய்யும் போது “ஆதார் கட்டாயம்” என்ற தீர்ப்பையும் பின் நாட்களில் வழங்கியது. தீர்ப்பு வருவதற்குள் 99% மக்களை ஆதார் தனது வளையத்திற்குள் கொண்டு வந்துவிட்டது. 2010 முதல் 2019 வரை சட்டப்பூர்வமற்ற வகையில் கட்டாயப்படுத்திப் பெறப்பட்ட ஆதார் உச்சநீதிமன்றத் தீர்ப்பினால் சட்டப்பூர்வமாக்கப்பட்டது.
காவி – கார்ப்பரேட் கும்பலிடம் நமது அந்தரங்கத்தின் சாவி!
“ஆதார் பாதுகாப்பானதா” என்ற கேள்விக்கு பதில் இதுவரை கிடைக்கவே இல்லை.  புதுச்சேரி, லாஸ்பேட்டையைச் சேர்ந்த ஒருவருக்கு பா.ஜ.க.வில் உறுப்பினர் சேர்வதற்கான லிங்க் அனுப்பப்படுகிறது. அதை அவர் கிளிக் செய்த உடன், அந்த லிங்க் லாஸ்பேட்டையில் உள்ள வாக்காளர்கள் அனைவரையும் இணைக்கும் வாட்ஸப் குழுவிற்கு செல்வதை அறிகிறார். செல்போன் எண்ணிற்கு வந்த இனைப்பை (லிங்க்) அழுத்தியவுடன், அவர் எந்தத் தொகுதி, எந்த பூத்தில் இருப்பவர் என்பதை எப்படி பாஜக-வால் அறிய முடிந்தது? செல்போன் எண் வாங்குவதற்குப் பயன்படுத்திய ஆதாரில் உள்ள தமது முகவரி எப்படி இவர்களுக்குத் தெரிந்தது என்ற கேள்வி எழுந்தது. மார்க்சிஸ்டு கட்சியின் இளைஞர் (டி.ஒய்.எப்.ஐ – DYFI) அமைப்பைச் சேர்ந்த அவர் இது குறித்து மார்ச் 2021-ல் பொதுநல வழக்கொன்றை தாக்கல் செய்தார். இது குறித்து ‘அதிர்ச்சியடைந்த’ நீதிமன்றம் ஆதார் ஆணையத்திடம் விளக்கம் கேட்டு வழக்கை ஒத்தி வைத்தது.
உருவானதில் இருந்தே ஆயிரத்தெட்டு ஓட்டைகளையும் சட்டவிரோதங்களையும்  தன்னகத்தே கொண்ட ஆதார் அட்டையைத்தான் இப்போது வாக்காளர் அட்டையோடு இணைக்க தேர்தல் சட்டங்களில் திருத்தம் கொண்டுவரப்பட்டுள்ளது.
வாக்காளர் அட்டை என்பது பொது ஆவணம். அதில் உள்ள தகவல்களை அனைத்து கட்சிகளின் ஏஜெண்டுகள் போல யாரும் பயன்படுத்த முடியும். ஆனால் ஆதார் என்பது கைவிரல் ரேகை, கண் ரேகை என தனிப்பட்ட விவரங்களை உள்ளடக்கியுள்ளது. அது ஒரு மனிதனின் தனிப்பட்ட அடையாளங்களும் தகவல்களும் பதியப்பட்ட அந்தரங்க ஆவணம். அதை பொது ஆவணமாக்குவது அரசியல் சாசன விரோதமானது.
தேர்தல் சட்டங்கள் (திருத்த) மசோதா 2021, டிசம்பர் 20-ம் தேதி காலையில் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டு அன்று மாலையே நிறைவேற்றப்பட்டது. “ஒரு சட்டம் கொண்டுவரும் முன்னர் அது தொடர்பாக மக்களிடமும் கருத்து கேட்கவில்லை. மக்கள் பிரதிநிதிகளான எங்களிடமும் கருத்துக் கேட்கவில்லை. ‘தேர்தல் சீர்திருத்தம்’ என்கிறார்கள், தேர்தலில் தொடர்புடைய அரசியல் கட்சிகள், மக்கள் என யாரிடமும் கருத்து கேட்காமல் இச்சட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது.” என்கிறார் தி.மு.க.வின் நாடாளுமன்ற குழுத்தலைவர் டி.ஆர்.பாலு எம்.பி.
“வாக்காளர் அட்டையுடன் ஆதாரை இணைக்க வேண்டும் என்பது கட்டாயமல்ல” என்று மோடி அரசு தெரிவிக்கிறது. ஆனால் எச்சூழலில் அதிகாரிகள் ஆதாரை கேட்க முடியும், எச்சூழலில் மக்கள் ஆதார் கொடுக்க மறுக்க முடியும் என்ற விவரங்கள் இல்லாத இச்சட்ட திருத்தம் ஆதாரை கட்டாயமாக்கவே செய்யும். அடிப்படை தேவைகளுக்கு ஆதார் கட்டாயம் இல்லை என்று ஏற்கெனவே உச்சநீதிமன்றம் கூறியிருக்கிறது. ஆனால் நடப்பது என்ன? செல்போன் எண் வாங்க, பத்திரப்பதிவு செய்ய, கேஸ் சிலிண்டர் வாங்க, பள்ளியில் சேர்க்க, இப்படி எல்லாவற்றுக்கும் ஆதார் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. கொரோனா தடுப்பூசிக்கே ஆதார் அட்டை கேட்கப்படுகிறது. ஆக, ‘கட்டாயமில்லை’ என்று சொல்லியே எல்லாவற்றுக்கும் ஆதாரை கட்டாயமாக்கிவிட்டது மோடி அரசு.
மளிகைப் பொருள் முதல் மாட்டுச்சாணி வரை அனைத்தும் ஆன்லைன் வர்த்தகத்திற்கு கொண்டுவரப்பட்டுள்ளது. ஆண்ட்ராய்டு போனில் ஒரு பொருளைத் தேடினோம் என்றால் அப்பொருள் பற்றிய விளம்பரங்கள் இணையத்தில் நாம் எங்கே சென்றாலும் துரத்துகின்றன. ஒரு வீடியோவை பார்த்தால் அது தொடர்பான வீடியோக்கள் பல நாட்கள் நம் அனுமதியின்றி நம் முகத்தில் வந்து தெறிக்கின்றன. மருத்துவமனை, வங்கிக்கணக்கு, பள்ளி, கல்லூரி, லைசென்ஸ், தடுப்பூசி, கடன் அட்டை, ஜி-மெயில், யூடியூப், முகநூல் என எல்லாவற்றுக்கும் ஆதார் எனும் போது தனி மனிதனின் எல்லா தகவல்களும் ஆதார் என்ற ஒரு அச்சாணியைச் சுற்றி இணைக்கப்படுகிறது.
இதை வைத்து ஒரு மனிதனின் விருப்பங்கள் என்ன, தேவைகள் என்ன அவரிடம் எதைப் பேசினால் எந்த பொருளை வாங்க வைக்கலாம் என்பது கார்ப்பரேட்டுகளுக்கு இப்போது எளிதாகிவிட்டது. அந்த கார்ப்பரேட்டுகள் தனக்கான அடியாள் படையை ஆட்சியில் அமர்த்துவதற்காக செய்தி ஊடகங்கள், இணையம், சமூக ஊடகங்கள் என அனைத்தின் மூலமாகவும் வாக்களர்களிடம் துல்லியமாக கருத்துருவாக்கம் செய்ய உதவியாக இருக்கும்.
வாக்களர் அட்டையுடன் ஆதார் இணைப்பு:
பாசிச கொடுங்கோன்மைக்கு அடிகோலிடுவதே!
2024-ல் இந்துராஷ்டிரத்தை அமைப்பதில் முழுமூச்சோடு இருக்கும் மோடி – அமித்ஷா பாசிச கும்பல் எதிர்க்கட்சிகளின் வேர்களையே அறுத்தெறிந்து அனாதைகளாக்க இந்த தேர்தல் சீர்திருத்தச் சட்டத்தைப் பயன்படுத்துவார்கள். தனிப்பட்ட தகவல்கள் உள்ள ஆதாரை வாக்காளர் அட்டையோடு இணைத்தால் அத்தகவல்கள் பா.ஜ.க.வின் கைகளுக்கே செல்லும். அத்தகவல்களைப் பெற்றுக்கொண்டு அரசின் சலுகைகள், மானியங்களை பெற்றவர்களை மிரட்டி தங்களுக்கு ஓட்டுப் போட வைக்கவும்; ஒரு வாக்காளர் முகநூலில் என்ன தேடுகிறார், என்ன படிக்கிறார், எதை விரும்புகிறார் என்பதை அறிந்து அதற்கேற்றவற்றை அறிவிப்புகள் செய்து மொத்த வாக்காளர்களையும் கவரவும் முடியும்.
தங்களுக்கு தேவையற்ற அதாவது பா.ஜ.க.வை மறுக்கின்ற வாக்காளர்களை மிரட்டவும் வாக்காளர் பட்டியலிலிருந்து நீக்கவும், தேவைப்பட்டால் ஒழித்தே கட்டவும் இச்சட்டத் திருத்தம் பயன்படும். குறிப்பாக சொல்வதானால், தேசிய மக்கள் தொகைப் பதிவேட்டின் (NPR) மூலமாக தனக்கு வேண்டப்படாதவர்களின் குடியுரிமையைப் பறித்து பாசிஸ்டு முகாமில் தள்ளுவதற்கு திட்டமிட்டதைப் போல, தமக்கு வாக்களிக்காத தொகுதி மக்கள் மீது துல்லியமான தாக்குதல் தொடுக்க இது பயன்படும்.
2015-ல் ஆந்திரா மற்றும் தெலுங்கானாவில் வாக்காளர் அட்டையை ஆதாருடன் இணைக்கும் திட்டம் நாட்டிலேயே முதன்முறையாக நடைமுறைப்படுத்தப்பட்டது. வாக்காளர் யார் என்பதை முடிவு செய்யும் பொறுப்பினை துறந்த தேர்தல் ஆணையம், ஆதார் அட்டையை வாக்காளர் அட்டையுடன் இணைத்து வாக்காளரே தன்னுடைய உறுதித் தன்மையை நிரூபிக்க வேண்டும் என்றது. ஆதார் விவரங்களோடு பொருந்தாத வாக்காளர் அட்டைகள் இலட்சக்கணக்கில் நீக்கம் செய்யப்பட்டன. வாக்காளர் அட்டையை நீக்குவதற்கு முன்னர் எவ்வித சோதிப்புகளும் நேரிலோ, கடிதங்கள் மூலமோ கூட நடைபெறவில்லை. அனைவரும் தேவையற்றவர்களாக நீக்கப்பட்டனர். உச்சநீதிமன்றத்தின் உத்தரவின் பேரிலேயே அந்த வாக்காளர் நீக்க நடவடிக்கை கைவிடப்பட்டது. இப்போது நீதித்துறையின் யோக்கியதைக்கு பாபர் மசூதி முதல் மாரிதாஸ் வரையிலான பல தீர்ப்புகள் சான்றுகளாக உள்ளன. தேர்தல் சட்ட திருத்தத்திற்கு பிறகு இப்படி யாராவது வழக்கு தொடர்ந்தால் நீதி கிடைக்குமா என்பது அந்த ‘பகவானுக்கே வெளிச்சம்’.
000
1935-ல் ஹிட்லரின் ஜெர்மனியில் ஆரியர் அல்லாதோருக்கு குடியுரிமை ரத்து செய்யப்பட்டது. இதன்மூலம் இலட்சக்கணக்கான யூதர்கள் அகதிகளாக்கப்பட்டு முகாமிற்கு அனுப்பப்பட்டனர். அவர்கள் பின்னாட்களில், பல சித்திரவதைகளின் ஊடாக படுகொலை செய்யப்பட்டதை கண்டு உலகமே பதறியது. 1938-ல் யூதர்களை கட்டாயமாக பதிவுசெய்ய நிர்பந்திக்கும் சட்டம் கொண்டுவரப்பட்டது. அதன்மூலம் யூதர்களின் எண்ணிக்கை கணக்கிடப்பட்டு அவர்களின் வசிப்பிடங்கள், வியாபாரத் தலங்கள் உட்பட அனைத்துமே சூறையாடப்பட்டன. ஜெர்மனியில் யூதர்களை மட்டும்தான் பதிவு செய்தான் ஹிட்லர். மோடியோ மொத்த நாட்டு மக்களையும் பதிவு செய்கிறார்.
ஆயிரக்கணக்கான முசுலீம் மக்களை கொன்று குவித்த குஜராத் கலவரத்தில் ஆர்.எஸ்.எஸ். – சங்கப்பரிவாரங்கள் வாக்காளர் பட்டியலை வைத்திருந்தனர். அதைப் பயன்படுத்தியே முசுலீம்களை வீடு தேடிச் சென்று கொள்ளையிட்டார்கள்; கொன்றார்கள்; தாய்மார்களை பாலியல் வன்கொடுமைகளுக்கு ஆளாக்கினார்கள்.
இனி ஆதார் தகவல்கள் கிடைத்துவிட்டால் முசுலீம்கள் மட்டுமல்ல, கிறித்தவர்கள், தலித்துகள், நாத்திகர்கள், கம்யூனிஸ்டுகள், மாற்றுக்கட்சியினரின் அனைத்து தகவல்களும் ஆர்.எஸ்.எஸ். – பாஜக-வினரின் கைகளில் இருக்கும். நாம் எங்கே வேலைக்குப்போகிறோம்? நம்முடைய குழந்தை எந்த பள்ளியில் படிக்கிறது? நமக்கு என்ன நோய்? யார் மருத்துவர்? ஆகிய அனைத்து தகவல்களும் அவர்கள் கைகளில் இருக்கும். நாம் எங்கேயும் தப்பிக்க முடியாது. பாசிச குண்டர் படை நம்மை பின் தொடர்ந்து வரும்!
படிக்க :
ஆதாரோடு வாக்காளர் அடையாள அட்டையை இணைக்கும் தேர்தல் சட்ட திருத்த மசோதா – 2021 !
கையில மைய வச்சா வந்திடுமா மாற்றம் ? || தேர்தல் பாடல் || மக்கள் அதிகாரம்
நாடாளுமன்றம் ஒரு பன்றித்தொழுவம் என்றார் ஆசான் லெனின். ‘இல்லை நாடாளுமன்றம் புனிதமானது’ என்றும் ‘அச்சாக்கடையை தூய்மை செய்ய வேண்டும்’ என்றும் பலர் அதிலேயே உழன்று கொண்டேதான் இருக்கின்றனர். அப்படி கூறியவர்கள்தான் குடியுரிமை திருத்தச் சட்டம், வேளாண் திருத்தச் சட்டம், தேர்தல் சட்டங்கள் திருத்தம் ஆகியவை பற்றி கருத்துக்கூற ‘எங்களுக்கு உரிமை கொடுக்கவில்லை’ என்று புலம்புகிறார்கள். “ஆதார் அட்டையை வாக்காளர் அட்டையோடு இணைத்தால் தனிப்பட்ட தகவல்களை யார் யாரெல்லாம் பயன்படுத்தக் கூடாது என்ற உட்பிரிவை அச்சட்டத்தில் சேருங்கள்” என்று பாசிச மோடி அரசிடம் மன்றாடுகிறார்கள்.
மோடி – அமித்ஷா பாசிச கும்பலின் நோக்கம் 2024-ல் மீண்டும் ஆட்சியைக் கைப்பற்றி தனது இந்துராஷ்டிரக் கனவை நிறைவேற்றிக் கொள்வதுதான். அதற்கேற்ற தயாரிப்புகளை சட்டங்களாகவும் சட்டவிரோத நடவடிக்கைகளாகவும் மேற்கொண்டு வருகின்றனர். வாக்காளர்கள் அனைவரையும் கண்காணிப்பு வளையத்திற்குள் கொண்டுவந்து எதிர்க்கட்சிகளின் வேர்களை அறுத்து நாடாளுமன்றத்தைக் குழிதோண்டி புதைத்துக் கொண்டிருக்கிறார் மோடி. அதை புலம்பியபடியே வேடிக்கை பார்த்துக்கொண்டு இருக்கிறார்கள் எதிர்க்கட்சிகள்.
ஒன்று பாசிஸ்டுகளின் முன் மண்டியிட வேண்டும் அல்லது பாசிஸ்டுகளுக்கு எதிராகப் போரிட வேண்டும். நடுவில் வேறு வழியே இல்லை. நாடாளுமன்ற கூக்குரல் மூலமோ, நீதிமன்ற முறையீடுகள் மூலமோ பாசிஸ்டுகளை பணியவைக்க முடியாது என்ற எதார்த்த உண்மையில் நாம் ஊன்றி நிற்க வேண்டும். பாசிஸ்டுகள் நீடித்ததாக என்றுமே வரலாறு இல்லை. மக்கள் சக்தியின் முன் மண்டியிட்டே தீர வேண்டும் இது காலத்தின் கட்டாயம். வேளாண் சட்டங்களுக்கு எதிராகப் நடைபெற்ற “டெல்லிச் சலோ” விவசாயிகளின் போராட்டம் அதற்கு சமீபத்திய ஒரு சான்றாகும். ஆர்.எஸ்.எஸ். – பா.ஜ.க. மற்றும் அம்பானி – அதானி உள்ளிட்ட காவி – கார்ப்பரேட் பாசிச கும்பலை வீழ்த்த அனைத்து உழைக்கும் மக்களையும் உள்ளடக்கிய பாசிச எதிர்ப்பு மக்கள் கூட்டணியை கட்டிப் போராடுவது ஒன்றே தீர்வு!

புதிய ஜனநாயகம்

1 மறுமொழி

  1. ஆதார் சட்டம் 2016ல் நிதி மசோதாவாக கொண்டுவரப்பட்டது என்று இக்கட்டுரையில் தவறாக கூறப்பட்டிருக்கிறது.
    அச்சட்டம் மாநிலங்கள் அவையை புறக்கணிக்கும் நோக்கோடு “பண மசோதா”வாகவே கொண்டுவரப்பட்டது.

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க