ஆதாரே ஆபத்தானது : காங்கிரஸ் பிஜேபி கள்ளக் கூட்டணியும் இடதுசாரிகள் செய்யத் தவறியதும்
வாக்காளர் அட்டையை ஆதாருடன் இணைப்பதால் ஆபத்து என்று இடதுசாரிகளுடன் சேர்ந்து காங்கிரஸ் கட்சியும் கூச்சல் போடுவது கள்ளத்தனம்.
அன்றைய காங் மன்மோகன் அரசுதான் மக்களை உளவுபார்க்கும் கருவியாக ஆதாரை பிடிவாதமாக சட்டமாக்கியது. அன்று அதன் அபாயத்தை இடதுசாரிகள் குறைத்து மதிப்பிட்டார்கள் அல்லது உணரவே இல்லை என்பதில் எனக்கு ஐயமில்லை. ஆதார் குடிமக்கள் அட்டை அல்ல, வெறும் அடையாள அட்டை மட்டுமே, கட்டாயம் அல்ல, விருப்பத்தின் பேரில் பெற்றுக்கொள்வது என்றெல்லாம் ஏமாற்றினார்கள்.
இப்போது கழிப்பறை தவிர அனைத்து பயன்பாட்டுக்கும் அல்லது உயிர் வாழ்வதற்கும் ஆதாரை கட்டாயமாக்கியுள்ளது பாஜக அரசு. இதை தொடங்கி வைத்தது காங்கிரஸ், அதன் அபாயத்தை உணர்ந்து தடுப்பதற்கான முயற்சி எதையும் செய்யாமல் இருந்தவர்கள் இடதுசாரிகள். நான் நேரடியாக குற்றம்சாட்ட காரணம் உள்ளது.
ஒன்பது வருடங்களுக்கு முன்பே பேச வேண்டிய இடத்தில் பேசினேன், பதிவு செய்ய வேண்டிய இடத்தில் எழுத்திலும் பதிவு செய்தேன். பாறை போன்ற மவுனம் மட்டுமே பதிலாக வந்தது கண்டு சோர்வுற்றேன், வெறுப்பே மிஞ்சியது. ஒரு படி மேலே சென்று, இடதுசாரி நாடாளுமன்ற உறுப்பினர்கள், சட்ட மன்ற உறுப்பினர்கள் அனைவரும் ஆதார் கார்டு பெற்றுவிட்டதால் அமைதியாக இருக்கின்றீர்களா என்றும் எழுத்தில் கேட்டுவைத்தேன், அதற்கும் பதில் இல்லை. இப்போது தும்பைவிட்டுவிட்டு வாலைப்பிடிக்க ஓடுவது அறிவான செயல் அல்ல.
படிக்க :
“ஆதார் முதல் ஆரோக்கிய சேது வரை” – மக்களை கண்காணிக்கும் அரசு !
ஆதாரோடு வாக்காளர் அடையாள அட்டையை இணைக்கும் தேர்தல் சட்ட திருத்த மசோதா – 2021 !
இடதுசாரிகள் எதிர்ப்பு தெரிவித்து இருந்தால் மட்டும் ஆதாரை தடுத்து நிறுத்தி இருக்க முடியுமா என்று தோழர்கள் கேட்க கூடும். உண்மை என்னவெனில், இப்படிப்பட்ட ஒரு அடையாள அட்டை குறித்து இடதுசாரி இயக்கத்துக்கு இருக்க வேண்டிய குறைந்தபட்ச எச்சரிக்கை உணர்வு கூட அன்று இடதுசாரி கட்சிகளுக்கு இல்லாமல் இருந்தது, அதனால்தான் அவர்கள் எதிர்ப்பு ஏதும் தெரிவிக்கவில்லை. இதுவன்றி வேறு காரணங்கள் எதுவும் எனக்கு தெரியவில்லை.
இப்போது ஆதாரை வாக்காளர் அட்டையுடன் இணைப்பது ஆபத்து என்று இடதுசாரிகள் கொந்தளிப்பது அர்த்தம் இல்லாதது. ஆதார் என்பதே இந்த அரசுகள் மக்களையும் ஜனநாயக சக்திகளையும் உளவு பார்ப்பதற்கு பயன்படுத்தும் ஆபத்தான ஒரு கருவி என்பதை பெரும் இடதுசாரி அறிவாளிகளும் அறிவுஜீவிகளும் காலத்தில் உணர்ந்து குரல் எழுப்பாமல், இப்போது வாக்காளர் அட்டையுடன் இணைப்பதுதான் ஆபத்து என்று அலறுவது அர்த்தம் இல்லாதது, காலம் கடந்தது. நான் சொன்னது இன்று நடக்கின்றது.
தமிழ்ச்செல்வன் சொல்வது ஆதாருக்கும் பொருந்தும்: அமைதிக்காலங்களில்தான் எதிர்கால வகுப்பு கலவரங்களுக்கான விதைகள் தூவப்படுகின்றன, ஆனால் அப்போது நாம் பார்த்துக்கொண்டு சும்மா இருக்கின்றோம்.
ஆதாரின் பின்னால் மறைந்திருக்கும் அபாயங்கள் என்ற கட்டுரையை தனியே பதிவிட்டுள்ளேன், 2013-ல் எழுதியது

000

ஆதாரின் பின்னால் மறைந்திருக்கும் அபாயங்கள் (2013-ல் எழுதியது, மீள்பதிவு)
1. குற்றப்பரம்பரைச்சட்டம் (Criminal Tribes Act) :
இந்தியாவில் ஆங்கிலேயர் ஆட்சியின்போது வெவ்வேறு காலகட்டங்களில் நிறைவேற்றப்பட்ட குறிப்பிட்ட சமூகத்தினருக்கு எதிரான சட்டம் ஆகும்.
முதன்முதலாக 1871-ல் இயற்றப்பட்ட இச்சட்டம் பெரும்பாலும் வட இந்திய சமூகத்தவரையே அதிக அளவில் குறிவைத்து உருவாக்கப்பட்டதாகும். பின்னாளில் வங்கமாகாணத்திற்கும் 1876-ல் அமலாக்கப்பட்டது. அதன்பின் 1911-ல் சென்னை மாகாணத்தில் அமலாக்கப்பட்டு பல திருத்தங்களுக்கு உள்ளாகி கடைசியாக குற்றப் பரம்பரைச் சட்டம் (1924-ம் ஆண்டின் ஆறாவது திருத்தம்) என இந்தியா முழுவதும் அமலானது.
குறிப்பிட்ட சமூகத்தவரை ஒடுக்கவும் குலத்தொழிலாக திருட்டு போன்ற சமூக விரோத காரியங்களில் ஈடுபடுவோரை சிறையில் அடைக்கவும் இச்சட்டம் வழிசெய்தது. இச்சட்டத்தின் கீழ் வரும் சமூகத்தவர் குழந்தைகள் தவிர்த்த ஆண்கள் அனைவரும் அருகில் உள்ள போலீசு நிலையத்தில் வாரம் ஒருமுறை தங்கள் இருப்பை பதிவு செய்ய வேண்டும்.
தமிழகத்தில் முக்குலத்தோர் என்று சொல்லப்படும் கள்ளர், மறவர், பிரமலைக்கள்ளர், வலையர், கேப்மாரி, அகமுடையோர் என 89 சாதிகள் குற்றப் பரம்பரைச் சட்டத்தின் பட்டியலில் இருந்தனர்.
2. கைரேகைச் சட்டம்:
குற்றப் பரம்பரைப் பட்டியலில் கொண்டுவரப்பட்ட சாதி ஆண்கள் 16 முதல் 60 வயதானவர்கள் போலீசு கண்காணிப்பில் இருப்பார்கள்.அவர்களிடம் நாள்தோறும் கைரேகை பதிவு செய்யப்படும். பெரும்பான்மையான நேரங்களில் அவர்கள் போலீசு நிலையத்திலேயே தூங்குமாறும் அங்கேயே இருக்குமாறும் கட்டாயப்படுத்தப்பட்டனர்.
இச்சட்டத்தை எதிர்த்து பல்வேறு கட்டங்களில் தனிநபர்களும் இயக்கங்களும் தொடர்ந்து போராட்டங்களை நடத்தியுள்ளனர், போலீசுத்துறை அடக்குமுறையில் உயிர் இழந்துள்ளனர். இறுதியாக 1947 ஏப்ரலில் சென்னை மாகாண உள்துறை அமைச்சராக இருந்தவரும் பெரியாரின் ஆதரவாளரும் சுயமரியாதை இயக்கத் தலைவர்களில் ஒருவருமான டாக்டர் பி.சுப்பராயன்தான் இக்கொடிய சட்டத்தை ஒழிக்கும் சட்டமுன்வடிவை ஆளுனருக்கு சமர்ப்பித்து 1947 ஜூன் 5-ம் நாளில் ஆளுனர் ஒப்புதலுடன் குற்றப் பரம்பரைச் சட்டத்தை ஒழித்தார்.
3. தென் ஆப்பிரிக்காவில் ஆசியர்கள் பதிவுச் சட்டம் 1906 (The Asiatic Registration Act):
நூறு வருடங்களுக்கு முன்பான தென் ஆப்பிரிக்க வரலாறு இது. இச்சட்டத்தின்படி இந்தியர்களும் சீனர்களும் அரபு மக்களும் துருக்கியரும் ஆசியர்களாக கருதப்பட்டனர்; இவர்கள் ஒவ்வொருவரும் தம்மை அரசிடம் பதிவு செய்துகொள்ள வேண்டும்; ஒரு அடையாள அட்டையில் கையின் பெருவிரல்ரேகை பதிவுசெய்யப்பட்ட சான்றிதழை எப்போதும் தன் கைவசம் வைத்திருக்க வேண்டும்.
எட்டு வயதிற்கு மேற்பட்ட ஆசிய ஆண்கள் பெண்கள் ட்ரான்ஸ்வால் நகரில் குடியிருக்கவேண்டுமெனில் ஆசியர்களுக்கான பதிவாளரிடம் தம்மைப் பதிவுசெய்துகொள்ள வேண்டும். பதிவு செய்யாதவர்கள் தண்டிக்கப்படுவார்கள்; அபராதம் விதிக்கப்படும்; சிறையில் அடைக்கப்படுவார்கள், நாடுகடத்தப்படுவார்கள்.
மஹாத்மா காந்தி அப்போது தென் ஆப்பிரிக்காவில் இருந்தார்; 1906 செப்டம்பர் 11 அன்று காந்தி 3000 இந்தியர்களைத் திரட்டி இச்சட்டத்திற்கு எதிராக ஒரு பொதுக்கூட்டத்தை கூட்டினார். “இச்சட்டம் இந்தியர்களுக்கு எதிரான வெறுப்புணர்வை மையமாகக்கொண்டது; இச்சட்டத்தை ஏற்றுக்கொண்டால் தென் ஆப்பிரிக்க இந்தியர்கள் வேரோடு அழிவார்கள்; இச்சட்டத்தை எதிர்ப்பதானது வாழ்வா சாவா என்ற போராட்டமே” என அறிவித்தார். நீண்ட ஏழு வருடங்கள் போராட்டத்திற்குப்பின் ஜெனரல் ஜான் கிறிஸ்டியன் ஸ்மட்ஸ் காந்தியுடன் பேச்சுவார்த்தை நடத்த ஒப்புக்கொண்டார்.
1871-ல் இந்தியாவில் வந்த சட்டம், 1906-ல் தென் ஆப்பிரிக்காவில் வந்த சட்டம் இரண்டுமே மனிதர்களின் தன்மானத்தில் கைவைத்த அடக்குமுறைகளே; ஒரு மனிதனின் கைரேகை இன்னொரு மனிதனின் ரேகையை ஒத்திருப்பதில்லை; அடிப்படையில் கிரிமினல் குற்றவாளிகளை கண்டுபிடிக்க உதவும் ஒரு உத்திதான் கைரேகை என்பது.
ஒரு மனிதனின் கைரேகையை அடக்குமுறையால் அரசு ஆவணத்தில் பதிவுசெய்வது என்பது ‘நீ குற்றவாளியோ இல்லையோ, அது பற்றி கவலை இல்லை, உன் கைரேகை அரசிடம் உள்ளது, எனவே எல்லா நேரங்களிலும் அரசின் கண்காணிப்பில் உள்ளாய் என்பதை மறக்காதே; நீ குற்றவாளியாக இல்லாமல் இருக்கலாம், ஆனால் குற்றம் நடக்கின்ற இடங்களில் பெறப்படும் கைரேகையோடு உன் கைரேகையும் ஒப்பிட்டுப்பார்க்கப்படும்’ என்று அச்சுறுத்துவதோடு தனிமனிதனை அவமானப்படுத்துவதும் ஆகும். அதாவது எப்போதும் முதுகுக்குப்பின்னால் ஒரு போலீஸ்காரன் நின்றுகொண்டு ஒரு மனிதனின் எல்லா நடவடிக்கைகளையும் 24 மணி நேரமும் கண்காணிப்பதன்றி இது வேறில்லை.
4. ஆதார் அடையாள அட்டை:
தற்போதைய மன்மோஹன் சிங், சிதம்பரம், மாண்டேக்சிங் அலுவாலியா கும்பலால் நடத்தப்படும் மத்திய அரசு ஆதார் அடையாள அட்டை என்ற ஒரு அட்டையை கூவிக்கூவி வாங்கச்சொல்கின்றது; கைரேகையோடு, கண்ணின் கண்மணியையும் பதியச்சொல்கின்றது; ஆதார் அடையாள அட்டை இல்லாமல் இனி எந்த ஒருமனிதனும் இந்தியாவில் சாப்பிட முடியாது, மலஜலம் கழிக்க முடியாது, தூங்க முடியாது, தெருவில் நடமாட முடியாது, மனைவியுடன்/கணவனுடன் உறவுவைத்துக்கொள்வது கூட கஷ்டம்தான் என்ற ரீதியில் பரப்பப்படும் பிரச்சாரத்தை காணும்போது தலை சுற்றுகின்றது; ‘நாங்கள்தான் உலகத்திலேயே ஆகப்பெரும் ஜனநாயக நாடுங்கோ’ என்ற காதைக்கிழிக்கும் குடுகுடுப்பைச் சத்தம் வெறும் வெத்துவேட்டுச்சத்தம் என்று மீண்டும் ஒருமுறை நிரூபிக்கப்படுகின்றது.
♠ ஆதார் நாடாளுமன்ற நிலைக்குழுவால் (Parliament Standing Committee) நிராகரிக்கப்பட்ட ஒன்று
♠ ஆதார் என்பது கட்டாயம் அல்ல; அது தனி நபரின் விருப்பத்தைப் பொறுத்தது (It is voluntary) என்று ஆதார் குறித்த இணையதளமே சொல்கின்றது.
♠ ஆதார் அட்டையில் ஒரு நபரின் உயிரியல் கூறுகளான கைரேகையோடு கண்ணின் கண்மணியும் பதியப்படும்.
5. இந்திய அரசியலமைப்புச் சட்டத்துக்கு எதிரானது:
இந்திய அரசியலமைப்புச் சட்டம் சரத்து 21 கூறுவது: No person shall be deprived of his life or personal liberty except according to procedure established by law. ‘எந்த ஒரு மனிதருக்கும் அவர் உயிருடன் வாழும் உரிமையையோ அவரது சுதந்திரத்தையோ பறித்தலாகாது; சட்டத்தின் அடிப்படையிலான நடவடிக்கைகளின் பேரில் மட்டுமே இந்த உரிமையோ சுதந்திரமோ மறுக்கப்படலாம்’. ஆதார் நாடாளுமன்றத்தால் ஒப்புதல் வழங்கப்படாத ஒரு அட்டை, ஆதார் நிறுவனம் ஒரு அரசு நிறுவனமே அல்ல என்ற நோக்கில் பார்த்தாலும் சரி, ஒப்புதல் வழங்கப்பட்ட ஒன்று, அரசு நிறுவனமே என்று வைத்துக்கொண்டாலும் கூட இச்சரத்தின்படி ஒரு தனிமனிதனின் கைரேகையையோ கண்மணியின் பதிவையோ பதிவு செய்வது என்பது அவனது தனி மனித சுதந்திரத்தில் தலையிடுவதும் 21ஆவது சரத்தை மீறுவதும் ஆகும்.
இத்தகைய பின்னணியில் அடிப்படையான கேள்விகள் சில எழும்புகின்றன:
♣. ஆதார் அட்டை கொடுக்கும் பொறுப்பை ஏற்றுள்ள நிறுவனம் ஒரு அரசு நிறுவனமே இல்லை என்பது முக்கியம்; இத்தகைய ஒரு அமைப்பை ஏற்படுத்த வேண்டும் என்பதை கொள்கை அளவிலே கூட மத்திய நிதியமைச்சகத்தின் நாடாளுமன்ற நிலைக்குழு நிராகரித்துவிட்டது என்பதை அழுத்தமாக சொல்லவேண்டியுள்ளது. இன்ஃபொசிஸ் என்ற தகவல்தொழில் நிறுவனத்தில் வேலை செய்த நந்தன் நீல்கேணி என்பவர் இந்த நிறுவனத்தின் தலைவராம். அரசு நிறுவனமே இல்லை என்றால் இவர் அரசு ஊழியரும் இல்லைதானே? அப்படியெனில் இந்தியாவில் குடியிருக்கும் ஒவ்வொரு மனிதரின் கைரேகையையோ விழிப்பதிவையோ பதிவு செய்யும் உரிமையை அரசியலமைப்பு சட்டத்தை மீறி அவர் எங்கிருந்து பெறுகின்றார்?
♣. இந்த நீலகேணி என்ற தனிநபர் தான் திரட்டும் தகவல்களை எங்கே வைக்கின்றார்? தகவல்களைத் திரட்ட அவரால் நியமிக்கப்படும் நபர்களும் அரசு ஊழியர்கள் இல்லை என்றால் திரட்டப்படும் தகவல்களுக்கு இவர்கள் எந்த வகையில் எந்த அளவுக்கு பொறுப்பாளி ஆகின்றார்கள்?
♣. நீலகேணி உள்ளிட்ட இந்த காண்ட்ராக்ட் தொழிலாளிகளிடம் இந்திய மக்களை வற்புறுத்தி கைரேகை விழிப்பதிவு ஆகியவற்றை பதிவு செய்யச்சொல்லும் அரசு சட்டத்தை மீறும் அரசு ஆகாதா?
♣. இந்த காண்ட்ராக்ட் தொழிலாளிகள் தாங்கள் திரட்டும் தகவல்களை பிற தனியார் நிறுவனங்களுக்கோ பிற நாடுகளுக்கோ விற்க மாட்டார்கள் என்பது என்ன நிச்சயம்?
♣. போலீஸ், ராணுவம், உளவுத்துறை போன்ற அமைப்புக்கள் இத்தகைய தகவல்களைப் பெற முடியுமா? கேட்டும் கேட்காமலும் பெறலாம் என்றால் இத்தகவல்களை எதற்காகவெல்லாம் பயன்படுத்த முடியும்?
♣. தனது தனிபட்ட உயிரியல் தகவல்களைக் கொடுத்த ஒருவர் பிற்பாடு தனது தகவல்களை அழிக்க வேண்டும் என விண்ணப்பித்தால் அழிக்கப்படுமா?
6) உச்ச நீதிமன்றத் தீர்ப்பு :
ஆதார் அடையாள அட்டை பெறுவதை கட்டாயமாக்குவதை எதிர்த்து கர்நாடகா மாநிலத்தின் உயர்நீதிமன்ற நீதிபதியாக இருந்த புட்டஸ்வாமி அவர்களும் பிறரும் உச்ச நீதிமன்றத்தில் தொடுத்த வழக்கில் உச்ச நீதிமன்றம் சரியாகவே தீர்ப்புச் சொல்லியுள்ளது.
அவர்களின் வாதம் இவ்வாறு இருந்தது: ”ஆதார் என்பது அரசியலமைப்புச் சட்டத்துக்கு எதிரானது, ஏனெனில் அடிப்படை உரிமையான உயிர் வாழ்வதற்கான உரிமையை வழங்குகின்ற இந்திய அரசியலமைப்புச் சட்டம் சரத்து 21-க்கு எதிரானது என்பதால் ஒரு மனிதனின் தனிப்பட்ட விவகாரத்திற்குள் அத்து மீறுவதாகும். ஆதார் அட்டை வாங்குவது ஒருவரின் விருப்பத்தைப் பொருத்தது என்று அரசு ஒரு பக்கம் சொல்லிக்கொண்டே மறுபுறம் உணவுப் பாதுகாப்பு, சமையல் எரிவாயு, தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி (ப்ராவிடெண்ட் ஃபண்ட்) நிதி, அரசு நிதி உதவி நேரடியாக பயனாளியின் கணக்கிற்கு வருகின்ற திட்டங்கள் ஆகியவற்றுக்கு ஆதார் அட்டை அவசியம் என்று சொல்வது முரணானது.”
கட்டாயம் இல்லாத ஒரு அட்டையை சமையல் எரிவாயு சிலிண்டர் பெறவும், அரசின் உதவித் திட்டங்கள் பெறவும் கட்டாயமாக்குவது செல்லாது என்பதே அத்தீர்ப்பு. கட்டாயம் இல்லாத ஒரு அட்டையை சமையல் எரிவாயு பெற கட்டாயப்படுத்துவது மறைமுகமாக மானிய எரிவாயு சிலிண்டர்களையும், ரேசன் முறையையும், கல்விக்கடன், விவசாயிகளுக்கான கடன், இன்னபிற சாமானிய மக்களுக்கான அரசின் உதவித் திட்டங்களையும் ஒழித்துக்கட்டும் ஒரு முயற்சிதான் என்பதையும் எச்சரிக்கையுடன் கவனிப்போம்.
7) எட்வர்ட் ஸ்னோடென்னும் சல்மான் குர்ஷித்தும்… :
அமெரிக்க உளவு நிறுவனமான சி.ஐ.ஏ.(CIA)யில் 2009 வரை தொழினுட்ப உதவியாளராக வேலை செய்தவர்; மேலும் அதிரகசிய அமெரிக்க உளவு நிறுவனமான நேஷனல் செக்யூரிட்டி ஏஜென்சி (NSA)யின் காண்ட்ராக்ட் கம்பெனிகளான பூஸ் ஆல்லன் ஹாமில்டன் உள்ளிட்டவற்றில் வேலை செய்தவர்;

எட்வர்ட் ஸ்னோடென் ஒரு நாள் தன் வேலையை உதறிவிட்டு வெளி உலகுக்கு சொன்ன சேதிகள் அதிர்ச்சி அளிப்பவை: ”என் ஒரே நோக்கம் என்னவெனில் அமெரிக்க மக்களின் பெயரால் அமெரிக்க அரசு என்னவெல்லாம் செய்து கொண்டிருக்கின்றது, உண்மையில் அவர்களுக்கு எதிராக அந்த அரசு என்ன செய்து கொண்டிருக்கின்றது என்பதை பகிரங்கப்படுத்த வேண்டும்”.

ஒரு நிலையான வேலையும் நிறைவான ஊதியமும் அமைந்த வாழ்க்கையை உதறித்தள்ள முடிவு செய்ததற்கு அவர் சொன்ன காரணம்: “அனைத்தையும் உதறித்தள்ள நான் தயார்; இப்படியான ஒரு பிரமாண்டமான ரகசிய ஒற்றறியும் அரசு எந்திரத்தை உருவாக்கி, உலக மக்கள் அனைவரது அடிப்படை சுதந்திரத்தையும் தனிநபர் விவகாரங்களையும் உலகத்தில் உள்ள அனைத்து மக்களையும், தனக்கு வேண்டப்பட்டவர்கள் எதிரிகள் என யாரையும் விட்டுவைக்காமல் அவர்களை எப்போதும் உளவு பார்த்துகொண்டே இருக்கின்றது; தன் சொந்த நாட்டு மக்களையும் எப்போதும் கண்காணித்துக் கொண்டே இருக்கின்றது. இத்தகைய ஒரு பணியில் அமெரிக்காவுக்கு உதவ என் மனச்சாட்சி இடங்கொடாது”.
ஸ்னோடென் இப்போது அமெரிக்காவால் வேட்டையாடப்படும் ஒரு நபர், ரஷ்யாவில் தஞ்சம் புகுந்துள்ளார். சமீபத்தில் ஜெர்மனிய அதிபரின் கைபேசியை பல வருடங்களாக அமெரிக்கா ஒட்டுக்கேட்டதாக செய்திகள் வந்துள்ளன; உலக ரட்சகன் ஒபாமா இது குறித்து சற்றும் அலட்டிகொள்ளவில்லை; ‘அப்படியா?’ என்று கொட்டாவி விட்டுக்கொண்டுள்ளார்; உண்மையில் அவரது உத்தரவின்பேரில்தான் இந்த ஒட்டுகேட்கும் வேலைகள் நடந்துள்ளன; இப்படி ஒரு செய்தி வெளியானதும் நேரடியாக ஒபாமாவிடம் தொடர்பு கொண்ட ஜெர்மனிய அதிபர் ஏஞ்ஜெலா மெர்கெல் தனது கண்டனத்தை தெரிவித்ததுடன், ஜெர்மன்-அமெரிக்க உறவுகளை புதிய ஒரு புள்ளியில் இருந்து தொடங்க வேண்டிய கட்டாயம் இருப்பதாகவும் பகிரங்கமாக தெரிவித்துள்ளார்; ஐரோப்பிய யூனியனில் உள்ள பெரும்பான்மை நாடுகளும் இதேபோன்ற கவலையில் ஆழ்ந்துள்ளன.
ஃப்ரான்ஸ் நாட்டின் ஏழு கோடிக்கும் மேற்பட்ட தொலைபேசிகள் அமெரிக்க உளவு நிறுவனத்தால் ஒட்டுக்கேட்கப்பட்ட்தாக செய்திகள் வருகின்றன்; அதனைத் தொடர்ந்து அமெரிக்க தூதரை அழைத்து ஃப்ரான்ஸ் அரசு விளக்கம் கேட்டுள்ளது.
இத்தாலிய மக்களின் தொலைபேசிகள், ஈமெயில்கள், எஸ் எம் எஸ் ஆகியவை அமெரிக்காவால் ஒட்டுக்கேட்கப்படுவதாக செய்திகள் வந்தபோது இத்தாலிய பிரதமர் அமெரிக்க வெளியுறவுத்துறை செயலாளரிடம் விளக்கம் கேட்டுள்ளார்.
பிரேசில் நாட்டவர்களையும் அமெரிக்கா உளவு பார்த்ததாக செய்திகள் வந்தன; பிரேசில் குடியரசுத்தலைவர் டில்மா ரூசெஃப்பின் அலுவலகமும் இதில் இருந்து தப்பவில்லை என டேவிட் ஃப்ளீஸர் என்ற அரசியல் விஞ்ஞானி கூறுகின்றார். இதனைக் கண்டிக்கும் விதமாக அமெரிக்காவுக்கு செல்ல இருந்த திட்டத்தையே பிரேசில் குடியரசுத்தலைவர் ரத்து செய்தார்.
இந்திய அரசின் முக்கியமான அரசுத்துறை நிறுவனங்களும், குறிப்பாக இந்திய விண்வெளித்துறை உள்ளிட்ட தேசப்பாதுகாப்பு தொடர்புடைய நிறுவனங்கள் அமெரிக்காவால் ஒற்றறியப்படுகின்றன, இந்தியாவின் முக்கிய அரசு அதிகாரிகள், அரசியல்வாதிகள், விஞ்ஞானிகள் ஆகியோரின் தொலைபேசிகளும் அவர்களது இ-மெயில் தொடர்புகளும் ஆன்லைனில் ஒற்றறியப்படுவதாக செய்திகள் வந்தன;
மேலும் தலைநகர் டெல்லியில் உள்ள முக்கிய அரசு அலுவலகங்கள், அதிகாரிகளின் இணையதள இணைப்புக்கள், ஈமெயில்கள் யாவும் நேரடியாக அமெரிக்காவால் உளவு பார்க்கப்படுகின்றன; அமெரிக்காவில் இருந்து இங்கு இறக்குமதியாகும் கம்ப்யூட்டர்கள், அதிலுள்ள முக்கிய சிப்கள் யாவற்றிலும் ரகசிய கட்டளைகள் பதியப்பட்டுள்ளன என்றும், இவற்றைப் பயன்படுத்துவோருக்கு இது குறித்து தெரியாது என்றும், இக்கம்ப்யூட்டர்களில் பதிவாகும் தகவல்களை தேவைப்படும் நேரத்தில் அமெரிக்க உளவு நிறுவனங்கள் இறக்குமதி செய்து கொள்ள முடியும் என்றும் தகவல்கள் வருகின்றன.
அமெரிக்காவால் அதிகம் உளவறியப்பட்ட நாடுகளின் பட்டியலில் ஐந்தாவதாக இந்தியா உள்ளதாக செய்திகள் வந்தபோது ”இது உளவு வேலை இல்லை; செய்யப்பட்ட அழைப்புக்கள், அனுப்பப்படும் ஈமெயில்கள் பற்றிய ஒரு கம்ப்யூட்டர் பகுப்பாய்வு மட்டுமே; இத்தகைய ஆய்வின் உதவியால் கிடைத்த சில தகவல்கள் அடிப்படையில் பல நாடுகள் மீது திட்டமிடப்பட்ட மோசமான தீவிரவாத தாக்குதல்களை அமெரிக்கா தடுத்து நிறுத்தியுள்ளது” என இந்திய அரசின் வெளியுறவுத்துறை மந்திரியான சல்மான்குர்ஷித் அமெரிக்க வெள்ளை மாளிகையின் ஆகவிசுவாசமான ஒரு வேலையாள் போல கருத்து தெரிவித்துள்ளார்.
அதாவது தனது வீடு, அண்டை அயலார் வீடு என பாகுபாடு இல்லாமல் உளவறியும் நிலைமைக்கு அமெரிக்கா வந்துவிட்டால் அதன் நிலைமை உச்சகட்டப்பரிதாப நிலையில் உள்ளது என்றே பொருள், அதாவது ஒரு மனநோயாளியின் மனநிலைக்கு அமெரிக்க அதிபரும் அவரது உளவு நிறுவனங்களும் வந்துவிட்டார்கள் என்பதே பொருள்; இது மிக அபாயகரமான ஒரு திருப்பமாகும். ஒரு மனநோயாளியின் கையில் மிகப்பயங்கரமான ஆயுதங்கள் இருப்பதை நாம் ஒப்புக்கொண்டாக வேண்டும். கோழைகள்தான் ஆயுதங்களை தேவைக்கு அதிகமாக சேர்த்துக்கொண்டே போகின்றார்கள் என்பதை வரலாற்றில் நாம் படித்துள்ளோம்; காந்தியடிகளுக்கு ஒரு கைத்தடி நடப்பதற்கு மட்டும் தேவைப்பட்டது, நாதுராம் கோட்சே போன்ற கொலைகாரர்களுக்கே ஆயுதங்கள் தேவைப்படுகின்றன.
தனது குடிமக்கள் மீதே நம்பிக்கையற்று ஒற்றறியும் ஒரு நாடு உலகமக்கள் அனைவரையும் தீவிரவாதிகளாகப் பார்ப்பதில் வியப்பேதும் இல்லை; அரண்டவன் கண்ணுக்கு இருண்டதெல்லாம் மட்டுமல்ல, வெளுத்ததெல்லாம் கூட பேயாகத்தெரிகின்றது; உலக மக்கள் 400 கோடிப்பேரின் தனிப்பட்ட விவரங்கள், அங்க, உயிரியல் அடையாளங்கள் உலகரட்சகன் அமெரிக்காவுக்கு பல்வேறு காரணங்களுக்காக தேவைப்படுகின்றது என்பதையே தொடர்ந்து வரும் செய்திகள் உறுதிப்படுத்துகின்றன. ஆனால் அமெரிக்காவிலும் பிரிட்டனிலும் இத்தகைய ஒரு அடையாள அட்டையை அரசு கொண்டுவர முயற்சித்தபோது மக்களின் எதிர்ப்பால் கைவிடப்பட்டது என்பதை மறக்க வேண்டாம்.
8. என்ன செய்ய வேண்டும்?
வாக்காளர் அடையாள அட்டை, ரேசன் அட்டை, வாகன ஓட்டுனர் உரிமம், சொத்துள்ளவர் எனில் அவரது சொத்துவரி ரசீது, ஊதியம் பெறுபவர் எனில் வருமானவரி எண் அட்டை (அரசு ஊழியர்களுக்கு இது கட்டாயம்), வங்கிக் கணக்கு புத்தகம், பிறப்புச் சான்றிதழ், அரசு ஊழியர் எனில் அவரது நிறுவனத்தால் வழங்கப்படும் அடையாள அட்டை என எத்தனையோ அடையாள அட்டைகள் இந்தியாவில் இருக்க, ’பெறுவது கட்டாயம் இல்லை’ என்ற அளவில் உள்ள ஒரு சாதாரண அட்டையில் இந்திய மக்கள் ஒவ்வொருவருடைய அடிப்படையான தனிப்பட்ட அடையாளங்கள், உயிரியல் விவரங்களை பதிவு செய்ய இந்திய அரசு ஒரு திட்டத்தை தீட்டி அதனையும் ஒரு தனியார் நபரிடம் கொடுத்துள்ளது என்பது அபாயகரமான ஒன்றாகும்.
படிக்க :
ஏழைகளை பட்டினிச் சாவுக்குத் தள்ளும் ஆதார் !
சமூக வலைத்தள கணக்குகளுக்கும் ஆதார் ! மோடியின் அடுத்த அடி !
இந்தியாவில் ஆங்கிலேயர் ஆட்சியின்போது 1871-ல் நிறைவேற்றப்பட்ட குற்றப் பரம்பரைச் சட்டம், அதன் துணைச்சட்டமான கைரேகைச் சட்டம், தென் ஆப்பிரிக்காவில் கொண்டுவரப்பட்ட ஆசியர்களை இழிவுபடுத்தும் ஆசியர்கள் பதிவுச்சட்டம் ஆகியவை சகமனிதர்களை இழிவுபடுத்துகின்ற சட்டங்கள், நூறு வருடங்களுக்கு முற்பட்ட காலத்தில், அதாவது காலனிய ஆட்சிக்காலத்தில் தம்மை எதிர்த்துப் போராட்டங்களை நடத்திய மண்ணின் மைந்தர்களை அடக்கவும் ஒடுக்கவும் ஆக்கிரமிப்பாளர்களான அன்னியர்கள் கொண்டுவந்த சட்டங்கள் அவை என்பதை நம்மால் புரிந்துகொள்ள முடிகின்றது.
எனில் உலகின் ஆகப்பெரிய ஜனநாயக நாடு நாங்களே என்று மார்தட்டிக்கொள்கின்ற நமது நவீனகால ஆட்சியாளர்களுக்கு சொந்த நாட்டின் மக்களுடைய கைரேகை, விழிப்படலம் உள்ளிட்ட பதிவுகள் எதற்கு என்ற கேள்வியை நாம் எழுப்ப வேண்டியுள்ளது.
இத்தகைய ஒரு சூழலில் இந்திய மக்கள் ஒவ்வொருவரின் தனிப்பட்ட உயிரியல் அடையாளங்களை அரசுக்கு பதில் சொல்லவேண்டிய எந்த ஒரு பொறுப்பும் இல்லாத ஒரு நபரிடம் ஒப்படைப்பதானது எந்த அளவுக்கு அறிவார்ந்த ஒரு செயல், கட்டாயமற்ற ஒரு அட்டை எனில் இதன் உள்நோக்கம் என்ன, இத்தனை விளம்பரம் எதற்கு என்ற அடிப்படைக் கேள்விகளுக்கு அரசு பதில் சொல்ல வேண்டும்; பதில் சொல்லுமாறு கட்டாயப்படுத்த வேண்டிய கடமை பொறுப்புள்ள அரசியல் கட்சிகளுக்கும் மனித உரிமைக்காகப் போராடும் அமைப்புக்களுக்கும் உண்டு.

முகநூலில் : மு இக்பால் அகமது
disclaimer

1 மறுமொழி

  1. ஆதார் கார்டு அபாயகரமானது என்று சமுக ஆர்வலர்கள் மக்களுக்கு சொல்லிவந்த நிலையிலும் ஒன்றிய அரசு அதை கட்டாயமாக்கி கிட்டத்தட்ட மக்கள் அனைவரின் உடல் கூறு ரீதியாக பதிவு செய்து கொண்டது.சொல்வது போல இடது சாரிகள் தொலைநோக்கு பார்வையோ இயங்கியல் சிந்தனையோ இல்லாமல் சீட்டுக்கு பேரம் பேசுவதில் காலம் கழித்து வருகின்றனர்.மக்களின் அறியாமையை மோடி அரசு எல்லாவற்றிலும் தனக்கு சாதகமாக பயன்படுத்திவருகிறது.இது எங்கே கொண்டுபோய் விடும் என்பதை நினைத்தாலே பயமாக இருக்கிறது.புரட்சிகர அமைப்புகளில் மக்கள் திரளவேண்டிய அவசியம் முன்னெப்போதும் இல்லாத அளவு முக்கியத்துவம் வாய்ந்ததாக மாறிவருகிறது.பாழாப்போன பாராளுமன்ற ஜனநாயகம் மக்களை ஒடுக்குவதற்கான கருவியே என்பது மேலும்மேலும் அம்பலமாகி வருகிறது.

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க