Wednesday, October 4, 2023
முகப்புசெய்திதமிழ்நாடுசமூக வலைத்தள கணக்குகளுக்கும் ஆதார் ! மோடியின் அடுத்த அடி !

சமூக வலைத்தள கணக்குகளுக்கும் ஆதார் ! மோடியின் அடுத்த அடி !

சுவரொட்டி, நோட்டீசு என மக்களிடம் கருத்தைக் கொண்டு போய்ச் சேர்க்கும் அனைத்து வாயில்களையும் ஏற்கெனவே அடைத்துவிட்டு, இப்போது மூச்சுவிடுவதற்கு இருக்கும் வழியையும் அடைக்கப் பார்க்கிறது மோடி அரசு.

-

மூக வலைத்தளங்களைக் கட்டுப்படுத்தும் சட்டத்திருத்த வழிகாட்டுதல்களை ஜனவரி 15, 2020-க்குள் வெளியிடவிருப்பதாக உச்சநீதிமன்றத்தில் தெரிவித்திருக்கிறது மத்திய அரசு.

மோடி தமிழகத்தில் இருப்பதை டிவிட்டர் டிரெண்டிங்கை வைத்து கண்டுபிடித்துவிடலாம் என்ற அளவிற்கு சமூக வலைத்தளங்களின் ‘தாக்கம்’  சமீபகாலங்களாக அதிகரித்திருக்கிறது.

ஊடகங்களில் ஒரு செய்தி வெளியானதும், அடுத்த அரைமணிநேரத்தில் அதை பிரித்து மேய்ந்து தங்களது கருத்துக்களை உலகுக்கு அறிவிக்கின்றனர் இணைய பயனர்கள். அந்த அளவிற்கு சமூக வலைத்தளங்கள் மக்களின் கருத்துச் சுதந்திர மற்றும் கருத்துப் பரிமாற்ற இயங்குதளமாக செயல்பட்டு வருகின்றன.

மேலும் நாட்டின் ஏதேனும் ஒரு மூலையில் நடக்கும் சாதிய, மத ரீதியான ஒடுக்குமுறைகள், தாக்குதல்கள் மற்றும் கொலைகளை அம்பலப்படுத்துவதில் சமூக வலைத்தளங்களே முக்கியப் பங்கு வகிக்கின்றன.

இந்நிலையில் சமீபத்தில் முகநூல் நிறுவனம், பயனர் கணக்குகளோடு ஆதார் எண்ணை இணைக்கச் சொல்வதற்கு எதிர்ப்புத் தெரிவித்து வழக்குத் தொடர்ந்திருந்தது. அவ்வழக்கு உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது.

அதில் பயனர்களின் ஆதார் எண்ணை முகநூலோடு இணைப்பது அவர்களின் அந்தரங்க உரிமையைப் பாதிக்கும் என்றும் அதனால் அதனை அனுமதிக்கக் கூடாது என வாதாடியது அந்நிறுவனம்.

ஏற்கெனவே, சென்னை உயர்நீதிமன்றத்தில் நிலுவையில் இருக்கும் மற்றொரு வழக்கில் தமிழக அரசு, சமூக வலைத்தளங்கள் மேலதிகமாக வெளிப்படைத்தன்மையுடனும், போலீசுடன் ஒத்துழைக்கும் வண்ணமும் இருக்க வேண்டும் என்றும், இதன் மூலமாக போலீசு குற்ற நடவடிக்கைகளைக் கட்டுப்படுத்தி தேசப் பாதுகாப்பையும் உறுதி செய்யும் என்றும் வாதாடியது.

போலீசின் யோக்கியதைதான் ஊர் அறிந்ததாயிற்றே. குற்றவாளியிடமே பங்கு கேட்டுக் கொள்ளையடிக்கும் போலீசு பற்றிய செய்திகள் அன்றாடம் வந்து கொண்டுதான் இருக்கின்றன. இந்தக் கிரிமினல் போலீசின் கையில் சமூக வலைத்தள பயனர்களின் தனிப்பட்ட தகவல் கிடைத்தால் என்ன நடக்கும் ?

ஆதிக்க சாதிக் கும்பல்களுடன் கூட்டுச் சேர்ந்து கொண்டு சாதிய ஒடுக்குமுறையை அம்பலப்படுத்தி முகநூலில் பதிவு எழுதியவரின் வீட்டு முகவரியை போலீசே கிரிமினல் கும்பல்களிடம் வாங்க வேண்டியதை வாங்கிக் கொண்டு ‘போட்டுக் கொடுக்காது’ என்பதற்கு என்ன உத்தரவாதம் ?

தற்போது உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு கொடுத்துள்ள பதிலில், “கடந்த சில ஆண்டுகளாக சமூக வலைத்தளங்களின் வளர்ச்சி அதிகமாகியுள்ளது. மலிவு விலையில் இணையம், செல்பேசிகள் கிடைக்கும் சூழலில் இந்தியாவில் அதிகமானோர் சமூக வலைத்தளங்களை பயன்படுத்துகின்றனர்.

இணையம் வளர்ச்சியைக் கொண்டுவந்திருக்கிறது. ஆனால் அதன் கூடவே வெறுப்பையும் போலிச் செய்திகளையும் பரப்பும் தளமாக மாறி உள்ளது.”  என்று கூறியுள்ளது.

வெறுப்பையும், போலிச் செய்திகளையும் இணையத்தில் பயன்படுத்துவது யார், பரப்புவது யார் என்பது ஊரறிந்த உண்மை. நாட்டில் உள்ள சங்கிகளின் கைகளில் இருந்து இணையத்தைப் பறித்துவிட்டாலே, இந்தப் பிரச்சினை உடனடியாக தீர்ந்துவிடக் கூடியதுதான்.

தனது ட்ரோல் படைகள் செய்யும் அயோக்கியத்தனத்தையே காரணமாகக் கூறி சமூக வலைத்தளங்களில் மக்கள் சுதந்திரமாகக் கருத்துக்கூறுவதை முடக்க களமிறங்கியிருக்கிறது மோடி அரசு.

உச்சநீதிமன்றத்தில், “தனிநபர்களின் உரிமை மற்றும் தேசத்தின் ஒற்றுமை, இறையாண்மை, பாதுகாப்பு ஆகிவற்றிற்கு தொடர்ந்து வளரும் அச்சுறுத்தல்களைக் கணக்கில் கொண்டு இணையதளங்களை ஒழுங்குபடுத்த வேண்டிய அவசியம் இருக்கிறது” என்று குறிப்பிட்டிருக்கிறது மோடி அரசு.

ஏற்கெனவே ஊடகங்களை விலைக்கு வாங்கிவிட்டது பாஜக – சங்க பரிவாரக் கும்பல். தற்போது அக்கும்பலின் பொய்ச் செய்திகளுக்கும், சிறுபான்மையினருக்கு எதிரான அக்கும்பலின் தாக்குதல்களுக்கும் எதிரான போர்க்குரலை சமூக வலைத்தளங்களே எழுப்பிவருகின்றன.

படிக்க:
அயோத்தி பாபர் மசூதி வழக்கு :  நடுவர் குழுவின் தந்திரங்கள் | ராஜீவ் தவான்
ஆஸ்திரேலிய அரசுக்கு எதிராக செய்திகளை ‘இருட்டடிப்பு’ செய்த பத்திரிகைகள் !

தற்போது அதனை முடக்குவதற்குத்தான் ஜனவரி 15, 2020 என்ற தேதியை நிர்ணயித்திருக்கிறது. அதற்குள் இதற்கான சட்டத்திருத்த வரைவை மேற்கொள்ளவிருக்கிறதாம். மேலும் உச்சநீதிமன்றம், இதுவரையில் சமூக வலைத்தள கணக்குகளுடன் ஆதார் இணைப்பது தொடர்பாக மாநில உயர்நீதிமன்றங்களில் நிலுவையில் உள்ள வழக்குகள் அனைத்தையும் உச்சநீதிமன்றத்துக்கு மாற்றி ஒரே வழக்காக கொண்டுவர பதிவாளருக்கு உத்தரவிட்டிருக்கிறது.

சுவரொட்டி, நோட்டீசு என மக்களிடம் கருத்தைக் கொண்டு போய்ச் சேர்க்கும் அனைத்து வாயில்களையும் ஏற்கெனவே அடைத்துவிட்டு, இப்போது மூச்சுவிடுவதற்கு இருக்கும் வழியையும் அடைக்கப் பார்க்கிறது மோடி அரசு. ஜனவரி 15 – நமக்கு ஜல்லிக்கட்டை நினைவுபடுத்துகிறது. கருத்துரிமையை தகர்த்தெறிய வரும் டெல்லியின் கொம்பைப் பிடிக்குமா தமிழகம் ?


நந்தன்
செய்தி ஆதாரம் : தி இந்து

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க