யோத்தியில் பாபர் மசூதியை இடித்துவிட்டு கட்டுக் கதைகளை பரப்பி இந்திய நீதிமன்றங்களின் மூலம் அந்த இடத்தை அபகரித்து கொண்டது இந்துத்துவ கும்பல்கள். அயோத்தியில் ராமர் கோவில் கட்ட உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டதை அடுத்து அதுவரை பாபர் மசூதி மட்டும் அல்ல காசி, மதுரா, தாஜ்மஹால் போன்ற இடங்கள் அனைத்தும் இந்துக்களுக்கு சொந்தம் என்றும் அதை நாங்கள் கைப்பற்றிக் கொள்வோம் என்று வெளிப்படையாக பேசியதோடு மட்டுமல்லாமல் அதை நிகழ்ச்சி நிரலுக்கும் கொண்டவர அப்போதே தொடங்கிவிட்டனர் சங் பரிவார அமைப்புகள். தற்போது அந்த நிகழ்ச்சி நிரலை செயல்பட்டுக்கு கொண்டுவருவதை உறுதிபடுத்துகிறது, வடஇந்தியாவில் இஸ்லாமியர்களின் வழிபாட்டு தளங்களையும் நினைவு சின்னங்களையும் அபகரிக்க இந்நிகழ்வுகள்.
உத்தரப்பிரதேச மாநிலம் வாரணாசியில் உள்ள காசி விஸ்வநாதர் கோவிலுக்கு அருகில் கியான்வாபி என்ற மசூதி அமைந்துள்ளது. அவுரங்கசீப் என்ற முகலாய மன்னனால் கட்டப்பட்ட இந்த மசூதிக்கு அந்த பகுதியில் இருக்கும் இஸ்லாமிய மக்கள் தொழுகை நடத்தி வந்தனர். இந்த நிலையில் மசூதியின் வெளிப்புறச் சுவரில் உள்ள சிங்காரகவுரி அம்மனை தரிசனம் செய்ய அனுமதிகோரி சங் பரிவார அமைப்புகள் வாரணாசியில் உள்ள கீழமை நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். அதையடுத்து ஓர் ஆண்டுக்கு மட்டும் அந்த கோயிலை வழிபாடு செய்ய அனுமதி பெற்றனர்.
இந்த நிலையில் சுவற்றில் உள்ள அம்மனை நிரந்தரமாக தரிசிக்க அனுமதி அளிக்க வேண்டும் என்று இந்துத்துவ கும்பல் மீண்டும் நீதிமன்றத்தை நாடியது. ஆனால் இந்துத்துவ கும்பல் எழுப்பு பிரச்சினையை பற்றி பேசாமல், மசூதி முழுவதும் ஆய்வு செய்ய தொல்லியல் துறையினருக்கு நீதிபதி ரவிக்குமார் திவாகர் உத்தரவிட்டுள்ளார்.
படிக்க :
பாபர் மசூதி இடிப்பு தீர்ப்பு : இந்து ராஷ்டிரத்தின் முன்னறிவிப்பு | தோழர் சுரேசு சக்தி
பாபர் மசூதி இடிப்பு : வரலாறு சொல்லும் புகைப்படங்கள் !
மசூதியில் நடக்கும் ஆய்விற்கு தடைவிதிக்க வேண்டும் என்று மசூதி நிர்வாகம் சார்பில் அவசர வழக்காக விசாரிக்க உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். அந்த வழக்கை அவசர வழக்காக விசாரிக்க முடியாது என்றும் ஆய்விற்கு இடைக்கால தடைவிதிக்க முடியாது என்றும் கூறியுள்ளது உச்ச நீதிமன்றம்.
இந்த வழக்கை உச்சநீதிமன்றம் விசாரிப்பதற்குள் வாரணாசியில் காவி கும்பல்கள் அனைத்து வேலைகளையும் செய்து முடித்துவிடுவார்கள்.
பாபர் மசூதி அருகே முதலில் நம்பிக்கையின் அடிப்படையினல் ராமனை வணங்க அனுமதி வாங்கிய காவி கும்பல், பின்னர் படிப்படியாக தனது இழிவான செயல்களை அரங்கேற்றி மசூதியை இடித்து உச்ச நீதிமன்றத்தின் மூலம் தற்போது கோவிலை கட்ட அனுமதி வாங்கியுள்ளது. அதேபோல்தான் இனிவரும் அனைத்து நிகழ்வுகளும் நடைபெறவிருக்கிறது.
கடந்த 3 நாட்களாக கியான்வாபி மசூதியில் கள ஆய்வு செய்யப்பட்ட அறிக்கை நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்படுவதற்கு முன்பே ஆய்வில் கலந்து கொண்ட ஒருநபரின் மகன் சில தகவல்களை வெளியிட்டுள்ளார். அதனை காரணமாக வைத்து மசூதியின் ஒசுகானாவில் உள்ள கை கால்கள் கழுவதற்கான குளத்தில் சிவலிங்கம் இருப்பதாகவும் அதனால் உடனடியாக மசூதியை அரசு கட்டுப்பாட்டுகுள் கொண்டு வரவேண்டும் என்றும் மனுதாரர் தரப்பில் நீதிமன்றத்தில் வாதிடப்பட்டது.
இதற்கு, மசூதியில் ஒசுகானாவின் மைய பகுதியில் இருப்பது நீர் ஊற்றுக்கான கல் என்று மசூதி நிர்வாகம் தரப்பில் பதில் மனு தாக்கல் செய்யபட்டது. ஆனால், நீதிபதி மசூதி நிர்வாகம் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுக்களை பரிசீலிக்காமல் இந்துத்துவ அமைப்புகளின் வாதத்தை மட்டும் ஏற்றுக்கொண்டு, மசூதியின் மையப் பகுதியில் இருக்கும் ஒசுகானாவை உடனடியாக ஜப்தி செய்த வாராணசி மாவட்ட நிர்வாகத்திற்கு உத்தரவிட்டுள்ளது. மேலும், அந்த மசூதியின் ஒசுகானா இருக்கும் இடத்திற்குள் இஸ்லாமியர்கள் நுழைவதற்கு தடைவித்தும், மசூதியின் வளாகத்திற்குள் 20 பேரை மட்டுமே தொழுகை நடத்த அனுமதிக்க வேண்டும் என்றும் அந்த உத்தரவில் கூறியுள்ளது. ஒசுகானாவில் பாதுகாப்பிற்காக மத்திய பாதுகாப்புப் படை போலீசை பணியில் அமர்த்த வேண்டும் என்று கூறியுள்ளது.
இது தொடர்பாக விஷ்வ வேதிக் சனாதன் சங் என்ற சங் பரிவார அமைப்பின் தலைவர் ஜிதேந்தர் சிங் கூறும்போது, ஒசுகானாவில் உள்ள குளத்தில் சுமார் 13 அடி அளவுள்ள சிவலிங்கம் இருப்பதாகவும், இதை மறுக்கும் இஸ்லாமியர்கள் மீது கலவரத்தை நடத்துங்கள் என்றும் இந்தியாவில் உள்ள இந்துக்களுக்கு மறைமுகமாக மதவெறி பிரச்சாரம் செய்துள்ளார். மேலும் நீதிமன்றம் மூலம் நமக்கு சாதகமான முடிவுகளை பெறலாம் என்றும் அவர் கூறியுள்ளார். இதன்மூலம் ஒன்றியத்தில் ஆளுவதும் நம்ம அரசுதான். அதன் கட்டுப்பாட்டில் இயங்கும் நீதிமன்றமும் நமது அடியாள்தான் என்று வேறுவார்த்தையில் நமக்கு தெளிவுபடுத்தியுள்ளார்.
கடந்த காலங்களில் இஸ்லாமியர்களிடம் நாம் இழந்ததை பெறும் காலம் நெருங்கிவிட்டது என்று அவர் கூறியதும், இந்தப் பட்டிலில் காசி, மதுரா, தாஜ்மஹால் மற்றும் குதுப் மினார் ஆகியவை உள்ளன என்று அவர் தெரிவித்ததும் இனி அவர்களின் நோக்கம் என்ன என்பதை நமக்கு  புலப்படுத்துகிறது.
***
கி.பி.1206 முதல் 1526 வரை சுல்தான்கள் டெல்லியை தலைநகராக கொண்டு வடஇந்தியா மற்றும் தக்காகன் பீடபூமி வரை தனது ஆட்சியை நிறுவினர். சுமார் 300 ஆண்டு காலம் ஆட்சி செய்த இவர்கள் அடிமை, துக்ளக், கில்ஜி, சையது, லோடி என 5 வம்சகளாக இருந்தனர். இந்தியாவில் நேரடியாக ஆட்சியமைத்த முதல் இஸ்லாமிய வம்சத்தினர் இவர்கள்தான். அடிமை வம்சத்தை சேர்ந்த குப்புதின் ஐபக் என்பவர் டெல்லியில் குதுப் மினாரை 1193–ம் ஆண்டு கட்ட தொடங்கினார். பின்னர் அவர் மரணமடையவே அவரது மருமகன் இல்துமிஷ் என்பவர் இதனை கட்டி முடித்தார். குதுப் மினார் என்பது கூம்பு வடிவில் அமைக்கப்பட்ட பள்ளிவாசல் ஆகும். தற்போது டெல்லியின் மெஹரோலி பகுதியில் அமைந்துள்ள வரலாற்று புகழ் பெற்ற இந்த குதுப் மினார் சங்கிகளின் தற்போதைய இலக்காகியுள்ளது.
கடந்த சில நாட்களுக்கு முன்பு சங் பரிவார கும்பல் காவி கொடிகளுடன் வந்து குதுப் மினார் முன்பு அனுமன் மந்திரத்தை ஓதினர். பின்னர் குதுப் மினாரின் பெயரை ‘விஷ்ணு மினார்’ என மாற்ற வேண்டும் என்று கூறினர். வேறு ஒருவன் பெற்ற பிள்ளைக்கு தனது பெயரை அப்பனாக சேர்க்க வேண்டும் என்று சங்களில் கூறுவதை நாம் நகைச் சுவையாக எடுத்துகொண்டு கடந்துவிட முடியாது. இஸ்லாமிய மக்களின் மீதும் உழைக்கும் மக்களின் மீதும் கோமாளிகள் தொடுக்கும் தாக்குதல் என்பது கொடூரமானது.
ஆர்.எஸ்.எஸ்.ன் கிளை அமைப்பான மஹாகால் மானவ் சேவா என்ற அமைப்பினர் இந்த கொடூரமான செயலை கையில் எடுத்துள்ளனர். குதுப் மினார் முன்பு அமர்ந்து ‘ஜெய் ஸ்ரீராம்’ என கோஷமிட்டபடி அங்கு வரும் சுற்றுலா பயணிகளிடம், இந்து கோயில்களை இடித்து இந்த கட்டிடம் கட்டப்பட்டுள்ளது. எனவே இந்த இடம் இந்துக்களுக்குதான் சொந்தம் என்று கூறிவருகின்றனர். மேலும் டெல்லியில் இஸ்லாமியர்களின் பெயரில் இருக்கும் ஊர்கள், சாலைகள், தெருக்கள், பூங்காக்கள் ஆகியவற்றை இந்துக்களின் பெயர்களாக மாற்றும் வரை போராட்டம் தொடரும் என்று கூறிவருகின்றனர்.
குதுப்மினாரை காவிகள் சொந்தம் கொண்டாடுவது இது முதல்முறை அல்ல. கடந்த 2020–ம் ஆண்டு டிசம்பர் மாதம் ரிஷப் தேவ் என்ற ஆர்.எஸ்.எஸ் சாமியார் குதுப்மினாரை இந்து கோவில்களாக அங்கிகரிக்க வேண்டும் என்று நீதிமன்றத்தை நாடினார். குதுப்மினாரின் நுழைவு வாயிலில் உள்ள ஒரு மசூதி 27 இந்து கோயில்களை இடித்து கட்டப்பட்டதாகவும் அங்கு இருக்கும் சிலைகள் தரையில் வைத்து அவமானப் படுத்தபடுவதாகவும் ஒரு கட்டுக்கதையை கட்டமைத்து குதுப்மினாரை கைப்பற்ற பலவாறு முயற்சிகள் முன்னர் மேற்கொள்ளப்பட்டது. தற்போதும் அதை அபகரிக்க அனைத்து விதமான வேலைகளையும் செய்ய தொடங்கியுள்ளனர்.
ரிஷப் தேவ் என்பவர் மீண்டும் குதுப்மினாரை இந்து கோயிகளாக அங்கிகரிக்க கோரி டெல்லி மாவட்ட நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளார். இந்த வழக்கும் விரைவில் விசாரணைக்கு வர உள்ளது.
இதேபோல், தாஜ்மஹால் நிறுவப்பட்டுள்ள இடம் தங்களுக்கு சொந்தமானது என்கிறார் பாஜக நாடாளுமன்ற உறுப்பினர் தியா குமாரி. மேலும், முகலாயர்கள் இந்தியாவை ஆட்சி செய்யும்போது தங்கள் பரம்பரையின் நிலத்தை அபகரித்துவிட்டதாகவும், அந்த நிலத்தின்மீதுதான் தாஜ்மஹால் கட்டப்பட்டதாகவும் கூறியுள்ளார். கேட்பவன் கேனையன் என்றால் எதுவேண்டுமானானும் சொல்லலாம் என்பதே சங்கிகளின் செயல்பாடு.
படிக்க :
சிறப்புக் கட்டுரை : பாபர் மசூதி இடிப்பு வழக்குத் தீர்ப்பு : நரியைப் பரியாக்கிய காவித் திருவிளையாடல் !
ஹத்ராஸ் பாலியல் வன்கொலை – பாபர் மசூதி இடிப்பு தீர்ப்பு : நெருங்கி வரும் பாசிசம் !
அயோத்தியில் பாஜகவை சேர்ந்த ரஜ்னீஷ் சிங் எனபவர் தாஜ்மஹாலில் மூடப்பட்டு கிடக்கும் 20 அறைகளில் இந்து கடவுள்களின் சிலைகள் இருக்க வாய்ப்பு இருப்பதாகவும் உடனடியாக அந்த அறைகளை திறக்க உத்தரவிட வேண்டும் என்றும் கூறி அலகாபாத் உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். அதனை விசாரித்த நீதிமன்றம் அந்த மனுவை தள்ளுபடி செய்துள்ளது.
***
காவி கும்பல் பாபர் மசூதியை இடித்து ராமர் கோயில் கட்டுவதில் பெற்ற வெற்றிவைத்து தற்போது அடுத்தடுத்து மசூதிகள், இஸ்லாமியர்கள் கட்டிய கட்டிடங்களை குறிவைத்து அதை கைப்பற்ற தீவிரமாக செயல்பட்டு வருகின்றனர்.
ராமர் கோயில் கட்டுவதற்கு அவர்கள் 20 ஆண்டுகாலம் காத்திருக்க வேண்டிய நிலை இருந்தது. ஆனால் தற்போது இந்தியாவில் அனைத்து துறைகளையும் கைப்பற்றிவிட்ட ஆர்.எஸ்.எஸ் கும்பல் தனது இலக்கை நோக்கி தீவிரமாக முன்னேறி வருகிறது.
உழைக்கும் மக்களை ஒடுக்கியும் இஸ்லாமியார்கள், கிறித்துவர்கள், தலித்துக்களை அடக்கியும் வைக்கும் இந்த காவி – கார்ப்பரேட் பாசிசத்திற்கு எதிரான நடவடிக்கைகளை ஒழுங்கமைத்து, அதை ஒருங்கிணைத்து கொண்டு செல்ல வேண்டிய கடமை தற்போது நம்முன் வந்து நிற்கிறது.

வினோதன்

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க