மெரிக்காவின் சான்பிரான்சிஸ்கோ-வில் வெளிநாட்டு வாழ் இந்தியர்கள் சங்கம் நடத்திய பாராட்டு விழாவில் கலந்து கொண்டு உரையாற்றினார் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி என்.வி.ரமணா.

“இந்த ஆண்டு இந்தியா 75-வது சுதந்திர தினவிழா கொண்டாடுகிறது. இந்தியா குடியரசாகி 72 ஆண்டுகள் ஆகின்றன. அப்படி இருந்தும் அரசியலமைப்பின் படி, ஒவ்வொரு அமைப்புக்கும் வழங்கப்பட்ட பணிகள் குறித்து நாம் இன்னும் முழுமையாக அறிந்து கொள்ளவில்லை. ஆட்சியில் இருக்கும் கட்சிகள் அரசின் ஒவ்வொரு செயல்பாட்டுக்கும், நீதி அமைப்புகளின் ஒப்புதலைப் பெற வேண்டியது தங்களின் உரிமை என நினைக்கின்றனர். ஆனால் எதிர்கட்சிகளோ தங்கள் நலனையும், அரசியல் செல்வாக்கையும் விரிவுப்படுத்துவதற்காகவும் நீதிமன்றங்கள் பயன்பட வேண்டும் என எதிர்பார்க்கின்றனர்.

அரசியல் சட்டம் மற்றும் ஜனநாய அமைப்புகள் குறித்து மக்களிடம் போதுமான புரிதல் இல்லை. பொதுமக்களிடம் போதுமான விழிப்புணர்வு இல்லாததை பயன்படுத்தியே இதுபோன்ற சக்திகள் சுதந்திரமான அமைப்பான நீதித்துறையை கீழே தள்ளிவிட வேண்டும் என்று நினைக்கின்றனர். நீதிமன்றங்கள் அரசியலைப்பு சட்டத்திற்கு மட்டுமே பதிலளிக்க கடமைப்பட்டுள்ளன.

பலதரப்பட்ட மக்களை வரவேற்பதாலும் அவர்களை ஊக்குவிப்பதாலும் அமெரிக்காவிற்கு ஏராளமான இந்தியர்கள் வருகின்றனர். மக்களின் சகிப்புத்தன்மை மற்றும் உள்ளடக்கிய சிறப்பியல்புகளால் உலகம் முழுவதிலும் இருந்து திறன் வாய்ந்தவர்கள் வருகிறார்கள். இவர்கள் நாட்டின் வளர்ச்சிக்கு முக்கிய பங்காற்றுகிறார்கள். அனைவரையும் உள்ளடக்கிய கொள்கை சர்வதேச அளவிலானது. இதை இந்தியா உட்பட அனைத்து நாடுகளும் பின்பற்ற வேண்டும்” என்றார்.


படிக்க : வரவர ராவின் நிரந்தர மருத்துவப் பினையை மறுக்கும் பாசிச நீதிமன்றம்!


நமது நாட்டின் தலைமை நீதிபதி ஒருவர் தனது பதவி காலத்தில் வெளிநாட்டிற்கு சென்று நமது நாட்டின் அரசியல் நிலைமை குறித்து விமர்சிப்பது அல்லது பேசுவது பலருக்கு அதிர்ச்சி அளிக்கலாம். ஆனால், நம் நாட்டின் நீதித்துறையின் பின்னணியை அறிந்தவர்கள் நிச்சயம் அதிர்ச்சி அடையப் போவதில்லை.

ஒரு ஏகாதிபத்திய நாட்டிற்குச் சென்று நமது நாட்டின் நீதிமன்றத்தின் நிலையையும், அரசியல் நிலையையும் பற்றி பாசிச மனோபாவத்திலிருந்து விமர்சித்துப் பேசி இருப்பது மேலோட்டமாக பார்த்து, ஒரு சங்கியின் பிரச்சாரம் என்று ஒதுக்கித்தள்ளிவிட முடியாது.

இந்தியா குடியரசாகி 72 ஆண்டுகள் ஆகியும் இன்னும் அரசியலைப்பிற்கு வழங்கப்பட்ட பணிகள் குறித்து நாம் இன்னும் புரிந்து கொள்ளவில்லை என்று கூறுகிறார் நீதிபதி என்.வி ரமணா. அப்படியானால் இதற்கு யார் பொறுப்பு என்பதை இவர் பேசியிருக்க வேண்டும். அனைவருக்கும் கல்வி என்பதே இன்னும் முற்றுப் பெறாத நிலையில் புதிய கல்விக் கொள்கையைக் கொண்டு வந்து இருக்கின்ற கல்வியையும் பறிக்கப்படுகின்ற சூழலில் ஏற்கனவே இருக்கின்ற சொல்லப்படுகின்ற ஜனநாயக உரிமைகளான சங்கம் சேரும் உரிமை, 8 மணி நேர வேலை உரிமை, போராடும் உரிமை, இலவச மருத்துவம்., சுகாதாரம், வாழ்விடம் போன்றவை எல்லாம் மறுக்கப்படுகின்ற நிலையில் அரசியல் சாசனத்தின் ஒவ்வொரு துறைக்கும் கொடுத்துள்ள பணிகள் குறித்து மக்கள் அறிந்து கொள்ளவில்லை என்று இந்த ஜனநாயகத்தின் தோல்வியாகும். இதை நேர்மையாக அவர் ஒப்புக்கொண்டிருக்க வேண்டும்.

எளிமையாக சொன்னால், நாட்டில் சரிபாதிக்கும் மேலான மக்கள் அன்றாட தேவைக்கும், அடிப்படை வாழ்வாதரத்திற்கே அலைந்து திரிகிற அவலநிலை குறித்து அவருக்கு அக்கறையில்லை என்றுதான் சொல்ல வேண்டும்.

சட்டத்தின் முன்னே அனைவரும் சமம் என்று சொல்கிறது அரசியல்சாசனம். ஆனால் ஒன்றிய அரசு அறிவித்திருக்கும் CAA, NRC போன்றவை அரசியலமைப்பிற்கு எதிரானதாக இவருக்குத் தோன்றவில்லையா? குறிப்பிட்ட மதத்தினரை, சிறுபான்மையினரை நாட்டை விட்டே துரத்தும் அரசின் நடவடிக்கை, நாட்டில் பிரிவினைவாதத்தை உண்டாக்குவது. சிறுபான்மையினரை தனிமைப்படுத்துவதாகும். காஷ்மீர் சிறப்பு அந்தஸ்து ரத்து, பாபர் மசூதி நிலம் தொடர்பான தீர்ப்பு, குஜராத் படுகொலைக் குற்றங்களில் இருந்து அமித்ஷா-மோடி கும்பல் விடுவிப்பு போன்றவை அனைத்தும் நீதிமன்றத்தின் வழியே நிறைவேற்றப்படுகின்ற பயங்கரவாத தீர்ப்புகள் அல்லவா?

ஆனால், ஜனநாயகத்தின் பாதுகாவலன் போல நீதிமன்றம் தன்னைக் காட்டிக்கொள்வதைவிட வெட்க்கக்கேடு எதுவுமில்லை.


படிக்க : அமெரிக்கா : கருக்கலைப்புக்கு தடை – உச்ச நீதிமன்றத்தின் பெண் அடிமை தனத்திற்கு எதிராக போராட்டம் !


அடுத்து, “ஆட்சியில் இருக்கும் கட்சிகள் அரசின் ஒவ்வொரு செயல்பாட்டுக்கும், நீதி அமைப்புகளின் ஒப்புதலைப் பெற வேண்டியது தங்களின் உரிமை என நினைக்கின்றனர்” என்கிறார் தலைமை நீதிபதி.

உண்மையில் அப்படிதான் உள்ளதா? காவிரி நீரில் தமிழகத்தின் உரிமை, ஐயப்பன் கோவில்களுக்கு பெண்கள் செல்ல அனுமதி, முல்லை பெரியாறில் 142 அடி நீர் தேக்குவதற்கான அனுமதி போன்ற உச்ச நீதிமன்றம் வழங்கிய தீர்ப்புகளை ஆளும் கட்சிகளே நடைமுறைப்படுத்தாமல் நீதிமன்றத் தீர்ப்புகளையே துளியும் மதிக்காமல் தூக்கி வீசிவிட்டன. ஆனால் பச்சையாக ஆளுங்கட்சிகள் நீதிமன்றத்தை மதிப்பது போல் பொய் பேசுகிறார் தலைமை நீதிபதி.

மேலும், நீதிமன்ற தீர்ப்பை நடமுறைப்படுத்த சொல்லி எதிர்கட்சிகளும் ஜனநாய சக்திகளும் போராடினால் கூட வழக்கு என்னவோ போராடுபவர்கள் மீது தான் பாய்கிறது. ஆனால் நீதிபதி சொல்வதோ எதிர்கட்சிகளின் போராட்டத்திற்கு நீதிமன்றம் அடிபணிந்து போவதாக கூறுகிறார். அதாவது ஆளும் ஒன்றிய அரசு எப்படி இசுலாமிய மக்களை ஒடுக்கிக் கொண்டே, ஒருபுறம் அவர்களால் நாட்டிற்கு அச்சுறுத்தல் என்று கூறி அஞ்சுவது போல் இசுலாமியர்கள் மீது பாசிசத்தை ஏவுகிறதோ, அது போல் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி என்.வி.ரமணா வின் பேச்சு பாசிச மனோபாவத்தின் வெளிப்பாடாகும்..

”ஜனநாயக சக்திகள் குறித்து மக்களுக்கு போதுமான விழிப்புணர்வு இல்லாததால் இது போன்ற சக்திகள் நீதிமன்றத்தை கீழே போட்டு தள்ளிவிட வேண்டும் என்று நினைக்கிறார்கள்” என நீதிபதி என்.வி.ரமணா கூறுகிறார். தன்னுடைய உரிமை மறுக்கப்படும்போதோ அல்லது மக்களின் உரிமை மறுக்கப்படும் போதோ அதை எதிர்த்து போராடும் போது ஒரு ஜனநாயக சக்திகள் அடையாளம் காணப்படுகின்றனர். இது போன்ற கருத்து உடையவர்கள் ஒன்றிணைந்து ஒரு அமைப்பாகவும் செயல்படுகிறார்கள்.

அப்படியானால் மக்களில் ஒரு பகுதியினர் தான் ஜனநாயக சக்திகள். மக்களுக்கு என்றுமே ஆதரவானவர்கள். ஆனால் போராடுபவர்களால் நீதிமன்றத்தின் அதிகாரம் கீழிறக்கபடுவதாக நீதிபதி சொல்லும் கருத்து மக்களிடமிருந்து ஜனநாயக சக்திகளை தனிமைப்படுத்தும் ஆபத்தான கருத்தாகும். இஸ்லாமியர்கள் குறித்து இதே அணுகுமுறையை தான் காவி பாசிஸ்டுகள் கையாளுகிறார்கள்.


படிக்க : ‘புல்லி பாய்-சுல்லி டீல்ஸ்’: முஸ்லீம் பெண்களை இழிவுபடுத்திய குற்றவாளிகளுக்கு ஜாமீன் வழங்கிய ‘அ’நீதிமன்றம்!


உரிமைகள் மறுக்கப்படும் போது போராடுவது, சங்கம் வைத்துக் கொள்வது போன்றவை அரசியலைப்பு சட்டத்தின் பிரிவு 19(1)C வழங்கியிருக்கும் உரிமையாகும்.

இந்த உரிமையையே மறுப்பதாக உள்ளது நீதிபதியின் பேச்சு. உச்ச நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியே அரசியலமைப்பு சட்டத்திற்கு எதிராக பேசுகிறார். ஆனால் மக்கள் மத்தியில் இவற்றை எடுத்து சொல்லும் ஜனநாயக சக்திகளை எதிரிகளாக சித்தரிக்கிறார்.

ஆளும் பாசிச பா.ஜ.க-வின் அடியாள் போல் நீதிபதி பேசுகிறார். போராடும் ஜனநாயக சக்திகளை தனிமைப்படுத்தி ஒடுக்குவதுதான் இவர்களது நோக்கம்.

நகர்ப்புற நக்சல்கள் என்று சமூக செயல்பாட்டாளர்களைக் கைது செய்து சிறையில் அடைப்பது, அரசுக்கு எதிராகக் குரல் கொடுப்பவர்கள், செய்தியாளர்களை ஊபா சட்டங்கள் மூலம் கைது செய்வது, இசுலாமியர்கள் மீதான சங்கப் பரிவார கும்பல் நடத்தும் அடக்குமுறைகளை வேடிக்கைப் பார்ப்பது, அந்த குற்றவாளிகளை விடுவிப்பது என மொத்த நீதித்துறையே சங்கப்பரிவார கும்பலின் அடியாள் படையாக மாறியுள்ளது.

இதன் தொடர்ச்சியாகத்தான், நமது நாட்டின் தலைமை நீதிபதி, அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் அடிமைகள் அவையொன்றில் சென்று, மேற்கண்டவாறு அறிவித்திருப்பதைப் பார்க்க வேண்டும். ஆம், இது பாசிசத்தின் அரங்கேற்றத்தைப் பறைச்சாற்றுகிறது!

ஓவியா

1 மறுமொழி

  1. இதற்கு என்ன மாற்று. சிந்தியுங்கள். என் சிற்அறிவில் தோன்றியது. பள்ளிகளில் இருந்தே நம் அரசியல் அமைப்பு சட்டங்களை கற்பிப்பது ஒரு தீர்வாக இருக்கலாம் என நம்புகிறேன்.

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க