பீமா கோரேகான்-எல்கர் பரிஷத் வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட வரவர ராவ் தனது மனு ஏப்ரல் 13 அன்று பம்பாய் உயர் நீதிமன்றத்தால் நிராகரிக்கப்பட்டதையடுத்து நிரந்தர மருத்துவ ஜாமீன் கோரி உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார். இந்த வழக்கு ஜூலை 11-ம் தேதி விசாரணைக்கு பட்டியலிடப்பட்டுள்ளது.
***
கடந்த டிசம்பர் 31, 2017 அன்று புனேவில் நடைபெற்ற எல்கர் பரிஷத் மாநாட்டில் பேசியது மற்றும் மேற்கு மகாராஷ்டிரா நகரத்தின் புறநகரில் அமைந்துள்ள கோரேகான்-பீமா போர் நினைவிடம் அருகே அடுத்த நாள் வன்முறை வெடித்தது தொடர்பாக வழக்கு பதிவு செய்தது புனே போலீசுத்துறை. மாவோயிஸ்ட் தொடர்புகள் இருப்பதாகக் கூறப்படும் நபர்களால் இந்த மாநாடு ஏற்பாடு செய்யப்பட்டது என்றும் குற்றச்சாட்டுக்களை அடுக்கியது.
கவிஞர் வரவர ராவ் ஆகஸ்ட் 28, 2018 அன்று, ஹைதராபாத்தில் உள்ள அவரது வீட்டில் கைது செய்யப்பட்டார். பீமா கோரேகான் வழக்கில் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டவர். ஜனவரி 8, 2018 அன்று விஷ்ரம்பாக் போலீசு நிலையத்தில் அவர்மீது முதல் தகவல் அறிக்கை (எஃப்.ஐ.ஆர்) பதிவு செய்யப்பட்டது.
படிக்க :
♦ வரவர ராவின் கவிதையில் இருந்து ‘இந்துத்துவா’ ‘காவிமயமாக்கல்’ போன்ற வார்த்தைகளை நீக்கும் சங் பரிவார கும்பல் !
♦ தோழர் வரவர ராவிற்கு 6 மாத நிபந்தனைப் பிணை ! எல்கார் பரிஷத் வழக்கிலிருந்து அனைவரையும் விடுவி !
ஆரம்பத்தில், உச்ச நீதிமன்றத்தின் உத்தரவின் பேரில் அவர் வீட்டுக் காவலில் வைக்கப்பட்டார், பின்னர் நவம்பர் 17, 2018 அன்று அவர் போலீஸ் காவலில் வைக்கப்பட்டார், இறுதியில் அவர் தலோஜா சிறையில் அடைக்கப்பட்டார்.
பிப்ரவரி 22, 2021 அன்று, பம்பாய் உயர் நீதிமன்றம் அவருக்கு மருத்துவ காரணங்களுக்காக ஜாமீன் வழங்கியது. மார்ச் 6, 2021 அன்று சிறையில் இருந்து விடுவிக்கப்பட்டார்.
மார்ச் 6, 2021 முதல் ஹைதராபாத்தில் உள்ள தனது சொந்த ஊரில் ஜாமீனில் வெளியில் இருக்கும் ராவ், நிரந்தர மருத்துவ ஜாமீன் பரிசீலிக்கப்பட வேண்டும் என்று வலியுறுத்தினார். மார்ச் 2021-ல் அவர் பெற்ற ஜாமீன் அவரது உடல்நிலை மற்றும் அவர் மேற்கொள்ள வேண்டிய மருத்துவ நடைமுறைகள் காரணமாக பலமுறை நீட்டிக்கப்பட்டுள்ளது.
மனுதாரரின் உடல்நிலை மோசமடைந்தது மற்றும் அவருக்கு குடலிறக்கம் நோய்க்கான அறுவை சிகிச்சை செய்ய வேண்டியிருந்தது. அவரது இரண்டு கண்களிலும் கண்புரை அறுவை சிகிச்சை செய்யப்பட வேண்டியிருந்தது. மும்பையில் மருத்துவ செலவு அதிகமாக இருப்பதால் இந்த சிகிச்சைகளை அவர் மேற்கொள்ளவில்லை. அவர் நரம்பியல் நோயால் பாதிக்கப்பட்டுள்ளார்.
***
ராவ் தனது மேல்முறையீட்டில், விசாரணை 10 ஆண்டுகளுக்கு குறையாமல் நடக்கும் என்று சமர்ப்பிக்கப்படுகிறது. இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர்களில் ஒருவரான தந்தை ஸ்டான் சுவாமி, மனுதாரரை போன்ற பல நோய்களால் பாதிக்கப்பட்டு, விசாரணை தொடங்குவதற்கு முன்பே இறந்துவிட்டார். அரசியலமைப்பின் பிரிவு 21 (உயிர் மற்றும் தனிப்பட்ட சுதந்திரத்தைப் பாதுகாப்பதற்கான உரிமை)-ன் கீழ் மனுதாரருக்கு உடல்நலம் மற்றும் மருத்துவ சிகிச்சைக்கு உரிமை உண்டு என்றும், அவர் தலோஜா சிறையில் அடைக்கப்பட்டால் அது மீறப்படும் என்றும் மனுவில் குறிப்பிட்டிருந்தார்.
“குற்றம் சாட்டப்பட்டவர் அவர் செய்ததாகக் கூறப்படும் குற்றத்தில் குற்றவாளி அல்ல என்று அறிவிக்கப்படும் வரை குற்றத்தில் தீவிரத்தன்மை இருக்கும்” என்று உயர் நீதிமன்றம் குறிப்பிட்டது.
தலோஜா சிறைச்சாலையில் மருத்துவ வசதிகள் இல்லாதது மற்றும் அங்குள்ள மோசமான சுகாதார நிலைமைகள் குறித்து ராவின் வழக்கறிஞர் கூறிய பல கோரிக்கைகளில் ஆதாரம் இருப்பதாக உயர் நீதிமன்றம் கருதியது. எனவே, “குறிப்பாக தலோஜா சிறைச்சாலையில்” மற்றும் மாநிலம் முழுவதும் உள்ள அனைத்து சிறைகளிலும் இத்தகைய வசதிகள் எவ்வாறு உள்ளன என்பது குறித்து அறிக்கையை சமர்ப்பிக்குமாறு மகாராஷ்டிர சிறைத்துறை இன்ஸ்பெக்டர் ஜெனரலுக்கு நீதிமன்றம் உத்தரவிட்டது.
பம்பாய் உயர் நீதிமன்றத்தின் ஏப்ரல் 13 உத்தரவு, நிரந்தர ஜாமீனுக்கான அவரது மனுவை நிராகரித்தது, ஆனால் 83 வயதான வரவர ராவ் தலோஜா சிறை அதிகாரிகளிடம் சரணடைவதற்கு மூன்று மாதங்களுக்கு நேரத்தை நீட்டித்தால் மட்டுமே அவருக்கு கண்புரை அறுவை சிகிச்சை செய்ய முடியும் என்ற நிலை உருவானது. அவர் சரணடைய மூன்று மாதங்கள் வரை கால அவகாசம் நீட்டிக்கப்பட்டது. அவர் ஜூலை மாதம் சரணடைய வேண்டும்.
படிக்க :
♦ வரவர ராவ் உடல்நிலை மோசமானதற்கு என்.ஐ.ஏ. மட்டும்தான் காரணமா ?
♦ தலோஜா சிறையின் சித்திரவதைகளை எதிர்த்து போராடும் சாகர் தத்யாராம் கோரகே !
இந்தப் பின்னணியில், உச்ச நீதிமன்ற நீதிபதிகள் சூர்ய காந்த் மற்றும் ஜே.பி. பர்திவாலா ஆகியோர் அடங்கிய விடுமுறைக்கால பெஞ்ச் முன்பு மூத்த வழக்கறிஞர் ஆனந்த் குரோவர், ராவ் 83 வயது முதியவர் பல்வேறு நோய்களால் பாதிக்கப்பட்டவர் என்று கூறினார்.
“இந்த வழக்கை அவசரமாகப் பட்டியலிடக் கோரி மனுதாரர் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் வாய்மொழியாகக் குறிப்பிட்டதை அடுத்து, இந்த வழக்கை ஜூலை 11, 2022 அன்று பொருத்தமான பெஞ்ச் முன் பட்டியலிட பதிவுத்துறைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது” என்றது விடுமுறைக்கால பெஞ்ச்.
***
கவிஞர் வரவர ராவை இன்னும் எத்தனைக் காலம்தான் இந்த நீதிமன்றம் விசாரிக்கும் என்று தெரியவில்லை. ஸ்டான் சுவாமியை போன்று முற்போக்காளர்களை சிறையிலும், மருத்துவ ஜாமின் வழங்காமலும் கொல்ல முயற்சிக்கும் சிறைத்துறையையும், நீதித்துறையையும் வன்மையாகக் கண்டிப்போம். ராவை போன்ற பல முற்போக்காளர்களை, சமூக செயற்பாட்டாளர்களை வாழ்நாள் முழுவதும் சிறையில் அடைத்து வதைக்கும் இந்த பாசிச மோடி அரசை (நீதிமன்றம், சிறை) எதிர்த்து போராட வேண்டியது நம் அனைவரின் கடமையாகும்.

சந்துரு

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க