மூகச் செயற்பாட்டாளரும் புரட்சிகர கவிஞருமான தோழர் வரவர ராவை, கடந்த 2018-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் கைது செய்து சிறையிலடைத்தது புனே போலீசு. எல்கர் பரிஷத் மாநாட்டை ஒட்டி ஆதிக்கசாதி கிரிமினல்கள் மற்றும் ஆர்.எஸ்.எஸ். கும்பலால் திட்டமிட்டு நடத்தப்பட்ட பீமா கொரேகான் வன்முறைச் சம்பவத்தை முகாந்திரமாக வைத்து வட இந்தியா முழுவதும் பல்வேறு முற்போக்காளர்களை ஊபா சட்டப் பிரிவின் கீழ் கைது செய்து சிறையில் அடைத்தது புனே போலீசு.

2018-ம் ஆண்டு மராட்டிய மாநிலத்தை ஆண்ட பாஜக அரசு, இந்தச் சம்பவத்தைப் பயன்படுத்தி பல்வேறு பிரிவு நலிவுற்ற மக்களின் முன்னேற்றத்திற்காகவும் உரிமைக்காகவும் போராடிக் கொண்டிருக்கும் செயற்பாட்டாளர்களையும், அவர்களுக்கு சட்டப் பாதுகாப்பு கொடுக்கும் முற்போக்கு வழக்கறிஞர்களையும் கைது செய்து சிறையில் அடைத்தது.

அதில் ரோனா வில்சன் என்பவரது கணிணியில் இருந்து எடுக்கப்பட்டதாகக் கூறி ஒரு போலிக் கடிதத்தை ஆதாரமாக வைத்து மோடியைக் கொல்ல சதி என்று கூறி மாவோயிஸ்ட் தொடர்பில் இருப்பவர்கள் என்ற முத்திரை குத்தி இந்தச் செயற்பாட்டாளர்கள் கைதை நியாயப்படுத்தியது. ஊடகங்களும் “அர்பன் நக்சல்கள்” என்ற கவர்ச்சிகரமான பதத்தைப் பயன்படுத்தி இந்தச் செயல்களுக்கு முட்டுக் கொடுத்தன.

படிக்க :
♦ எல்கார் பரிஷத் வழக்கு : மாவோயிஸ்ட் பட்டம் கட்டி செயல்பாட்டாளர்களை முடக்கும் பா.ஜ.க!
♦ எல்கார் பரிஷத் முதல் டெல்லி கலவரம் வரை : அறிவுத்துறையினரைக் குறிவைக்கும் மோடி அரசு !

இந்நிலையில் மராட்டிய மாநிலத்தில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டு, காங்கிரஸ் கூட்டணி அரசு வந்ததும், இந்த வழக்கை மத்திய அரசின் எடுபிடியாகச் செயல்படும் என்...-வின் கையில் ஒப்படைத்தது உள்துறை அமைச்சகம்.

அதன் பின்னர் கைதுகள் அதிகரிக்கப்பட்டன. மாணவர்கள் போராட்டம், சி... என்.ஆர்.சி எதிர்ப்புப் போராட்டங்களை ஆதரித்த முற்போக்காளர்கள், பழங்குடியின மக்களின் உரிமைக்காகப் பணியாற்றிய ஸ்டான்சாமி பாதிரியார் உள்ளிட்டுப் பலரையும் கைது செய்தது மோடி அரசு.

சிறையில் அடைக்கப்பட்டவர்களில் பெரும்பாலானவர்கள் 60 வயதுக்கு மேற்பட்டவர்களே. சிலர் 70, 80 வயதைக் கடந்தவர்கள். கடந்த 2020-ம் ஆண்டின் இரண்டாம் காலாண்டில் பற்றிப் பரவத் துவங்கிய கொரோனா பிரச்சினையை ஒட்டி, சிறையில் இருக்கும் கைதிகளை விடுவிக்க வேண்டும் என்றும் குறைந்தபட்சம் 50 வயதுக்கு மேற்பட்டவர்களை விடுவிக்க வேண்டும் என்றும் நாடு முழுவதும் பல்வேறு மனித உரிமை செயற்பாட்டாளர்கள் கோரிக்கை விடுத்து வந்தனர்.

வரவர ராவ்

தோழர் வரவர ராவுக்கு வயது 82. அவரது உடல்நிலை மோசமடைந்து சுயநினைவிழந்து அவர் துன்புற்ற நிலையிலும் அவருக்கு பிணை வழங்காமல், முறையாக மருத்துவமும் வழங்காமல் இழுத்தடித்தது சிறை நிர்வாகமும், என்... – பாஜக கூட்டுக் கும்பலும். அதன் பிறகு வழக்கு தொடுக்கப்பட்டு குறைந்தபட்சமாக மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சையளிக்கப்பட்டு மீண்டும் உள்ளே சேர்க்கப்பட்டார். செயற்பாட்டாளர் ஸ்டான் சுவாமி அவர்கள், கை நடுக்கம் காரணமாக தன்னால் கையில் டம்ளரைப் பிடித்து நீர் குடிக்க இயலவில்லை என்றும், அதனால் தமக்கு சிப்பர் வேண்டும் என்றும் கேட்டு கோரிக்கை விடுத்திருந்தார். அதனை அளிப்பதற்கு ஒரு மாதத்திற்கும் மேலாக இழுத்தடித்தன நீதிமன்றமும், என்...-வும்.

மேலும் சிறையில் அடைக்கப்பட்ட செயற்பாட்டாளர்களுக்கு கண் கண்ணாடி வழங்க மறுப்பது, அடிப்படை உதவிகள் வழங்க மறுப்பது என அவர்களை மன அளவிலும் உடல் அளவிலும் கடுமையாகத் துன்புறுத்தியது அரசு.

இந்நிலையில் தோழர் வரவர ராவின் உடல்நிலையை சுட்டிக் காட்டி, அவருக்கு உடனடியாக மருத்துவப் பிணை வழங்கப்பட வேண்டுமென்று கோரி தொடரப்பட்ட அனைத்து வழக்குகளும் என்...-வுடன் கூட்டுச் சேர்ந்து நீதிமன்றத்தால் மறுக்கப்பட்டன.

இந்நிலையில் தோழர் வரவர ராவின் துணைவி ஹேமலதா தொடுத்த ரிட் மனுவில், தேவையான மருத்துவம் மறுக்கப்படுவது அடிப்படை உரிமைகளுக்கு எதிரானது என்று சுட்டிக் காட்டப்பட்டது. இந்நிலையில் இந்த மனுவின் மீதான விசாரணையும் பிணை மனு மீதான விசாரணையும் கடந்த பிப்ரவரி 1, 2021 அன்று மும்பை உயர்நீதிமன்றத்தில் நிறைவடைந்தது.

இந்நிலையில் இந்த வழக்கில் இன்று தீர்ப்பளித்த மும்பை உயர்நீதிமன்றம், ரூ. 50,000 சொந்த பிணைத் தொகை, மும்பையிலிருந்து வெளியேறக் கூடாது, 15 நாட்களுக்கு ஒருமுறை போலீசு நிலையத்தில் வாட்சப் கால் மூலமாக இருப்பைப் பதிவு செய்தல் உள்ளிட்ட நிபந்தனைகளுடன் ஆறு மாத கால தற்காலிகப் பிணையை மருத்துவத் தேவையை ஒட்டி வழங்குவதாக அறிவித்தது.

தமது பிணை உத்தரவில் நீதிபதிகள் ஸ்.எஸ். ஷிண்டே மற்றும் மனீஷ் பிடேல் ஆகிய இருவரும் குறிப்பிடுகையில், கடுமையான உடல்நலக் குறைபாடு இருக்கும் நிலையில், அவர் இருக்கும் தலொஜா சிறையில் போதுமான மருத்துவ வசதி இல்லாததாலும், வயதானதாலும் அவருக்கான பிணையை மனிதநேய அடிப்படையில் வழங்குவதாகவும் தெரிவித்துள்ளது.

தண்ணீரை கையில் பிடித்து குடிக்க முடியாத நிலையில் ஒரு சிப்பர் கேட்டதற்கு ஒரு மாத காலம் இழுத்தடித்த நீதிமன்றம் தற்போது மனிதநேய அடிப்படையில் பிணை வழங்கியிருப்பதாகக் கூறியிருப்பது கேலிக் கூத்து.

படிக்க :
♦ உலக வர்த்தகக் கழகத்தை அடித்து ஓட விடுவாரா சச்சின் ?
♦ விவசாயப் போராட்டத்தை திசைத் திருப்பும் ஊடகங்கள்!!

தோழர் வரவர ராவ் உள்ளிட்ட முற்போக்காளர்களை ஊபா சட்டத்தின் கீழ் இவர்கள் கைது செய்ததற்கு அடிப்படையாக அமைந்த ஆதாரம், தோழர் ரோனா வில்சனின் கணிணியில் இருந்து கைப்பற்றப்பட்டதாகச் சொல்லப்பட்ட கடிதத்தைப் பரிசோதித்த அமெரிக்க நிறுவனம், அக்கடிதங்கள் அனைத்தும் திருட்டுத்தனமாக அவரது கணிணிக்குள் ஸ்பைவேர் மூலமாக திணிக்கப்பட்டவை என்பதை ஆணித்தரமாக ஆதாரப் பூர்வமாகக் கூறிவிட்டது.

நியாயமுள்ளவனாகத் தன்னைக் காட்டிக் கொள்ள விரும்பும் யாரும் இதனை இனி மறுக்க முடியாது. அந்தக் கடிதத்தின் அடிப்படையிலேயே கைது செய்யப்பட்டிருக்கின்ற தோழர் வரவர ராவ் மீதிருந்து இந்த வழக்கையே வாபஸ் பெற வேண்டிய அடிப்படை இருக்கும் போது ஆறு மாதத்திற்கு தற்காலிகப் பிணை கொடுப்பதாகச் சொல்லியிருப்பதே கண்துடைப்பு நடவடிக்கைதான்

ஆனாலும் இந்த தீர்ப்பு உடல் நலிவுற்று மரணத்தை நோக்கிச் சென்று கொண்டிருக்கும் தோழர் வரவர ராவைக் காப்பாற்றுவதற்குக் கிடைத்த ஒரு இடைக்கால வாய்ப்பு என்ற அளவில் நாம் மகிழ்ச்சியுறக் கூடியதே.

உலகம் முழுவதும் பல்வேறு சமூகச் செயற்பாட்டாளர்கள், கவிஞர்கள் மனித உரிமை அமைப்புகள் கொடுத்த தொடர் நெருக்கடியும் இந்தத் தீர்ப்பு இந்த அளவிற்காவது வந்ததற்கு ஒரு காரணம்.

பீமா கொரேகான் வழக்கில் பொய்யாக புனையப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் அனைத்து செயல்பாட்டாளர்களையும் விடுதலை செய் என்று வீதியில் இறங்கிப் போராடினால்தான் நம் உரிமைகளைக் காப்பதற்கான போராட்டத்தில் முன் நின்று போராடிய முன்னணி வீரர்களை நாம் காப்பாற்ற முடியும் !! நமக்கான செயற்பாட்டாளர்களைக் காக்க வீதியில் இறங்குவோம் !

சரண்
செய்தி ஆதாரம் :
Indian Express

 

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க