புரட்சிகர எழுத்தாளர் தோழர் வரவர ராவ் உடல்நிலை தொடர்ந்து மோசமடைந்துவந்த சூழலில், மும்பை உயர்நீதிமன்ற உத்தரவின் பெயரில் அவர் மும்பை நானாவதி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு அவரைச் சந்தித்த அவரது குடும்பத்தினருக்கு இதுவரை அவரது உடல்நிலை குறித்த அறிக்கை எதுவும் கொடுக்கப்படவில்லை.

பீமா கொரேகான் வன்முறை தொடர்பான எல்கர் பரிஷத் சதி வழக்கில், ஆந்திராவைச் சேர்ந்த புரட்சிகர கவிஞரும் எழுத்தாளருமான வரவர ராவையும் கைது செய்து சிறையிலடைத்தது அன்றைய பாஜக தலைமையிலான மராட்டிய அரசு.

கடந்த ஆண்டில் மராட்டிய மாநிலத்தில் சிவசேனா- தேசியவாத காங்கிரஸ்- காங்கிரஸ் கூட்டணி ஆட்சி அமைந்ததையடுத்து, புனே போலீசின் கையில் இருந்த இந்த வழக்கை பாஜக தனது கட்டுப்பாட்டில் இருக்கும் என்.ஐ.ஏ.வின் வசம் ஒப்படைத்தது.

படிக்க :
♦ கவிஞர் வரவர ராவின் விடுதலையைக் கோரி இளம் கவிஞர்கள் கடிதம் !
♦ இன்று ஸ்டான் சுவாமி, நாளை நாம் !

அதன் பின்னர், பல்வேறு சமூகச் செயற்பாட்டாளர்களையும் இந்த வழக்கின் கீழ் கைது செய்து சிறையில் அடைத்தது என்.ஐ.ஏ. இந்த வழக்கில் கைது செய்யப்பட்டவர்கள் பெரும்பாலும் 70 வயதைக் கடந்தவர்களாக இருக்கும் சூழலில், கொரோனா தொற்று பரவத் துவங்கிய நேரத்திலும் இவர்கள் யாருக்கும் பிணை கொடுக்க எதிர்ப்பு தெரிவித்தது.

கடந்த மே மாதத்தில் உடல்நிலை பாதிக்கப்பட்ட வரவர ராவ்-க்கு முறையான மருத்துவ உதவிகள் எதுவும் வழங்காமல் இழுத்தடித்து வந்தது சிறை நிர்வாகம். மே மாதத்தில்,  சிறையில் சுயநினைவிழந்து கடுமையான உடல்நலக் குறைவால் பாதிக்கப்பட்டார் வரவர ராவ்.

அதனைத் தொடர்ந்து அவரது குடும்பத்தினர் அவரது உடல்நிலையை முன் வைத்து அவருக்கு பிணை வழங்குமாறு நீதிமன்றத்தில் கோரிக்கை வைத்தனர். இவ்வழக்கில் பதில்மனு தாக்கல் செய்த  என்.ஐ.ஏ. அவருக்கு பிணை வழங்க எதிர்ப்பு தெரிவித்தது.

அவர் மீது ஏற்கெனவே 24 வழக்குகள் நிலுவையில் இருப்பதாக நீதிமன்றத்தில் கூறி வாதாடியது. அவர் மீதான அந்த வழக்குகளில் 23 வழக்குகளில் அவர் குற்றமற்றவர் என விடுவிக்கப்பட்டதைச் சுட்டிக்காட்டி அவரது வழக்கறிஞர் வாதாடிய பின்னரும் அவருக்குப் பிணை வழங்க மறுத்துவிட்டது உயர்நீதிமன்றம்.

அவரது உடல்நிலை கடும் பாதிப்புக்குள்ளாகி வந்திருந்த சூழலில், அவருக்கு அடிப்படை மருத்துவ வசதிகளை சிறை நிர்வாகம் ஏற்பாடு செய்து தருவதற்கே அவரது குடும்பத்தினரும், சமூக செயற்பாட்டாளர்களும் கடுமையாக போராட வேண்டியது இருந்தது.

தோழர் வரவர ராவ்

இந்தியா மட்டுமல்லாமல், உலக அளவிலான சமூக செயற்பாட்டாளர்களும், அறிவுத்துறையினரும் கடுமையான கண்டனங்களைப் பதிவு செய்தைத் தொடர்ந்துதான், அவருக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்க மும்பை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.

பாஜக-வின் அடியாளாக என்.ஐ.ஏ செயல்படுவது என்பது பகிரங்கமாகவே தெரிந்த விசயம் தான் என்றாலும் வெறும் என்.ஐ.ஏ. மட்டும்தான் வர வர ராவின் உடல்நிலை மோசமடைந்ததற்கான காரணமா ?

புனே போலீசின் கீழ் இந்த விசாரணை சென்று கொண்டிருந்த நிலையில், அதனை என்.ஐ.ஏ-விற்கு மத்திய பாஜக அரசு மாற்றியது. அதற்கு ஆட்சியதிகாரத்தில் இருந்த கூட்டணி கட்சிகளான காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் மற்றும் சிவசேனா ஆகிய கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்தன. சமூகச் செயற்பாட்டாளர்களை பழிவாங்கும் செயல் என்றும் மாநில உரிமையில் தலையிடும் போக்கு என்றும் விமர்சித்தன.

அன்று பாஜகவையும், என்.ஐ.ஏ.-வையும் கடுமையாக விமர்சித்த இக்கூட்டணி ஆட்சியில் இருக்கும் இந்த நிலையில்தான், வரவர ராவுக்கு சிறையில் முறையான மருத்துவம் கொடுக்கப்படவில்லை. அதுமட்டுமல்லாமல், அவரது உடல்நிலை குறித்த அறிக்கைகளை அவரது குடும்பத்தினருக்குக் கொடுக்க மறுக்கின்றது மருத்துவமனை நிர்வாகமும் சிறைத்துறையும்.

வரவர ராவ் தற்போது சிறைத்துறையின் பொறுப்பில் இருக்கிறார். சிறைத்துறை மாநில அரசின் பொறுப்பில் இருக்கிறது. சமூகச் செயற்பாட்டாளரான வரவர ராவிற்கு முறையான மருத்துவ உதவிகள் வழங்காதது மட்டுமல்லாமல்,  அவரது உடல்நிலை குறித்து அவரது குடும்பத்தினர்கள் தெரிவித்த கருத்துக்களை உண்மைக்குப் புறம்பானவை என்றும் கூறி மறுத்திருக்கிறது மாநில அரசு.

மராட்டிய அரசு, தோழர் வரவர ராவை மருத்துவமனையிலும், ஒழுங்காகப் பராமரிக்கவில்லை. கோவிட் -19 நோயால் பாதிக்கப்பட்டு ஜே.ஜே. மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட வரவர ராவை சந்தித்த அவரது குடும்பத்தினர், மருத்துவமனையில் அவரது மோசமான நிலைமையில் பரமாரிக்கப்படுவதைக் கண்டு அதிர்ச்சியடைந்தனர். அவர் சிறுநீர் போனதைக் கூட சுத்தம் செய்யாமல் அவரை அதிலேயே இருத்தி வைத்திருந்தனர்.

தொடர்ந்து அவரது குடும்பத்தினரின் தொடர்ச்சியான வலியுறுத்தலைத் தொடர்ந்து  அவர் நானாவதி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.  அங்கு அவரது உடல்நிலை முன்னேற்றம் அடைந்ததா இல்லையா என்பது குறித்து எவ்வித தகவலும் இல்லாமலேயே, அவரை மீண்டும் தாலேஜா சிறைக்கு மாற்றியது மராட்டிய அரசு. வரவர ராவை அவரது குடும்பத்தினர் சென்று சந்திக்கவும் அனுமதி மறுத்து வந்தது.

படிக்க :
♦ 101 இராணுவத் தளவாடங்கள் இறக்குமதி ரத்து : ஆத்மநிர்பாரா ? கார்ப்பரேட் நிர்பாரா ?
♦ “ஸ்வாட்டிங்” : சமூக செயற்பாட்டாளர்களை அச்சுறுத்தும் அமெரிக்க இராணுவம்!

தற்போது வரவர ராவின் உடல்நிலை குறித்து மும்பை உயர்நீதிமன்றத்தில், வழக்கறிஞர் இந்திரா ஜெய்சிங் வாதாடுகையில், அவர் கடுமையான சிறுநீர்ப் பாதைத் தொற்றால் துன்பப்படுவதையும் , மறதி நோயால் பாதிகப்பட்டிருப்பதையும்  சுட்டிக் காட்டி, சிறையில் சிறுநீரக மற்றும் நரம்பியல் மருத்துவர் இல்லாததையும் எடுத்துக் கூறியதைத் தொடர்ந்து உயர்நீதிமன்றம் அவரை 15 நாட்கள் நானாவதி மருத்துவமனையில் அனுமதிக்கவேண்டும் என உத்தரவிட்டது.

நானாவதி மருத்துவமனையில் வரவர ராவ் சேர்க்கப்பட்டு சிகிச்சையளிக்கப்பட்டு வரும் சூழலில் அவரைச் சந்தித்த அவரது மனைவியும் அவரது மூத்த மகளும், அவரது உடல்நிலையில் தற்போது சிறிது முன்னேற்றம் ஏற்பட்டிருப்பதாகத் தெரிவித்துள்ளனர். அவர் தங்களை அடையாளம் காண்பதாகவும் தெரிவித்துள்ளனர். இது நமக்கு ஆறுதலளிக்கும் செய்தி.

தற்போதும், அவரது பாதங்களிலும் முட்டியிலும் பூஞ்சைத் தொற்று ஏற்பட்டுள்ளதைச் சுட்டிக்காட்டியுள்ள அவரது குடும்பத்தினர், வரவர ராவின் உடல்நிலை குறித்த வெளிப்படையான அறிக்கையை கொடுக்க நானாவதி மருத்துவமனை மறுத்து வருவதாக தெரிவித்துள்ளனர்.

மக்கள் பிரச்சினைகளுக்காக குரல் கொடுப்பவர்களை முடக்குவதிலும் ஒழித்துக் கட்டுவதிலும் ஆளும் வர்க்கக் கட்சிகள் அனைத்தும் ஒன்றுதான் என்பதையே இது அப்பட்டமாகக் காட்டுகிறது !


கர்ணன்
செய்தி ஆதாரம் : Mid Day, The Wire

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க