இன்றைய அமெரிக்காவில் வலதுசாரி மாற்று (Alt-Right) அமைப்பினரை எரிச்சலூட்டினால், நீங்கள் அதிரடி இராணுவக் குழுவின் அச்சுறுத்தலுக்கு ஆளாவீர்கள்!

(07-11-2020 தேதியிட்ட தி இந்து (ஆங்கிலம்) நாளேட்டில், “Annoy the Alt-Right in the U.S. today, and you could get ‘swatted” என்ற தலைப்பில் விநாயக் சதுர்வேதி எழுதிய கட்டுரையின் தமிழாக்கம்)

★★★

அமெரிக்காவில் “ஸ்வாட்டிங்” (SWATTING) என்பது ஒரு புதிய டிஜிட்டல் காலத்திய குற்றமாகும். இதில் ஒரு அநாமதேய தொலைபேசி அழைப்பாளர், ஒரு போலி வன்முறைக் குற்றத்தைப்  பற்றி போலீசில் புகார் செய்கிறார் என்றால், உடனே ஒரு சிறப்பு ஆயுதந்தரித்த தந்திரோபாயக் குழு ஸ்வாட் ( Special Weapons and Tactics team – SWAT ) என அழைக்கப்படும் இராணுவமயமாக்கப்பட்ட பிரிவின் வருகையை அது வெளிப்படுத்தும்.

ரு வாரங்களுக்கு முன்பு எனது 84 வயதான தந்தையுடன் தொலைபேசியில் பேசிக் கொண்டிருந்தபோது, ஷெரிப் (sheriff – அமெரிக்க உள்ளாட்சிப் பகுதி ஒன்றின் சட்ட அமலாக்க அதிகாரி) என்று கூறிக்கொண்டு வேறொரு தொலைபேசி வழியாக யாரோ ஒருவர் அழைப்பதாகவும், இயல்புக்கு மாறான கேள்விகளைக் கேட்கிறார் என்றும் கூறினார். அந்த எண் ‘தனியார் அழைப்பாளர்’ என்று தொலைபேசியில் பட்டியலிடப்பட்டதால், இது ஒரு குறும்புத்தனமான அழைப்பு என்று எனது தந்தை கருதியிருக்கிறார். பின்னர், “வீட்டுக்கு வெளியே நிறைய போலீசார் உள்ளனர்” என்று பின்னணியில் எனது தாயார் சொல்வதைக் கேட்டேன்.

எனது தந்தை என்னைத் திரும்ப அழைப்பதாகக் கூறிவிட்டு, வீட்டின் முன் பக்கக் கதவைத் திறந்ததும், தாழ்வாரத்தில் பல அதிரடி இராணுவக் குழுவினர் அவரை நோக்கி அதிநவீன ஆயுதங்களுடன் கதவருகே நிற்பதைக் கண்டார். அவர் அந்த நேரத்தில் கதவைத் திறந்திருக்காவிட்டால், அதிரடி இராணுவக் குழுவினர் கதவை உடைத்திருக்கக் கூடும்.

எனது தாயார் ஒரு நபரை கைத்துப்பாக்கியால் சுட்டுக் கொன்றதை யாரோ ஒருவர் கண்டதாக, ஷெரிப் அலுவலகத்திற்கு “ஜூம்” தொலைபேசி அழைப்பில் ஒரு செய்தி வந்ததாம்.  அதைத் தொடர்ந்து ஸ்வாட் குழுவின் அதிகாரிகள் எனது வீட்டைச் சோதனையிட்டார்கள். பின்னர், அவர்களுக்கு வந்தது ஒரு தவறான தகவல் என்பதை உணர்ந்தார்கள்.

எனது பெற்றோர் ‘குற்றவாளிகளாகிவிட்டார்கள்’. ஸ்வாட்டிங் என்பது அமெரிக்காவில் ஒரு புதிய டிஜிட்டல் காலத்தியக் குற்றமாகும். இதில் ஒரு அநாமதேய அழைப்பாளர் ஒரு போலி வன்முறைக் குற்றத்தைப் பற்றி போலீசில் புகார் அளிக்கிறார் என்றால், உடனே, சிறப்பு ஆயுதந்தரித்த தந்திரோபாயக் குழு (ஸ்வாட்) என அழைக்கப்படும் இராணுவமயமாக்கப்பட்ட குழுவினது வருகையை அது வெளிப்படுத்துகிறது.

இந்தக் குறிப்பிட்ட அநாமதேய தொலைபேசி அழைப்பானது, ஐரோப்பாவின் பிரான்சிலுள்ள இன்டர்போல் (INTERPOL) தலைமையகத்துக்கு அனுப்பப்பட்டதாகவும், பின்னர் இன்டர்போல் போலீசார், மாநில நெடுஞ்சாலை ரோந்துப் பணிப் போலீசாரைத் தொடர்பு கொண்டதாகவும், அவர்கள் ஷெரிப் அலுவலகத்தைத் தொடர்பு கொண்டதாகவும் அங்கிருந்த போலீசு துணையதிகாரி ஒருவர் எனது பெற்றோரிடம் விளக்கியுள்ளார். உண்மை என்னவென்றால், எனது தாயாரின் பெயரும் சரியான வீட்டு முகவரியும் அவர்களுக்கு எப்படிக் கிடைத்தது என்று அரைகுறையாகக்கூட அவர்களுக்குச் சொல்லத் தெரியவில்லை.

ஆரம்ப இலக்குகள்

ஆன்லைன் ஆபாச விளையாட்டுக் (கேமிங்) கலாச்சாரத்தை விமர்சிக்கும் பெண்ணியவாதிகளும், மாற்று ஆன்லைன் விளையாட்டுகளை உருவாக்கி மேம்படுத்தும் பெண்களுமே ஆரம்ப காலத்தில் “ஸ்வாட்டிங்”கால் பாதிக்கப்பட்டவர்களில் சிலராவர். ஆனால் இந்த நிகழ்ச்சிப் போக்கானது, எனது தாயாரைப் போல மூத்த குடிமக்கள் உள்ளிட்டு, யாரையும் குற்றவாளிகள் என்று குறிவைப்பதாக வளர்ந்துவிட்டது.

அமெரிக்கப் புலனாய்வுத்துறையின் (F.B.I. -எஃப்.பி.ஐ.) கூற்றுப்படி, 2008-ஆம் ஆண்டில் அரசாங்கம் இந்த நிகழ்ச்சிப் போக்கை அதிகாரப் பூர்வமாகக் கண்காணிக்கத் தொடங்கியதிலிருந்து அமெரிக்காவில் ஸ்வாட்டிங் வழக்குகளின் எண்ணிக்கை வியத்தகு முறையில் அதிகரித்துள்ளது. இப்போது 1,000-க்கும் மேற்பட்ட வழக்குகள் பதிவாகியுள்ளதாக மதிப்பிடப்பட்டுள்ளது.

எனது தாயார் ஏன் தனிச்சிறப்பாகக் குறிவைக்கப்பட்டார் என்பது இன்னமும் எனக்குப் புரியவில்லை.

எனது பெற்றோர் ஐம்பதாண்டுகளுக்கும் மேலாக இந்த பகுதியில் வசித்து வருகின்றனர். இந்தப் பகுதியானது, வெள்ளை நிறவெறி மேலாதிக்கக் குழுக்களின் நீண்ட வரலாற்றைக் கொண்டுள்ளது. எங்கள் பள்ளி ஆசிரியர் ஒருவர், அவர் உறுப்பினராக உள்ள நவ-நாஜி அமைப்பின் செய்தி மடலை எங்கள் வகுப்பில் காட்டிய நிகழ்வு எனக்கு இன்னமும் நினைவிருக்கிறது.

ஸ்வாட்டிங் என்பது வலதுசாரி மாற்று (Alt-Right) அமைப்பினரால் அண்மைக் காலங்களில் மேற்கொள்ளப்படும் தந்திரமாகும். (வலதுசாரி உறுப்பினர்கள் அதிக எண்ணிக்கையில் சட்ட அமலாக்க நிறுவனங்களில் சேருவதற்கு இது உதவப் போவதில்லை.) புலம்பெயர்ந்தோர் மீதான எதிர்ப்பு உணர்வுகள், வெள்ளை இனவெறி ஆகியவற்றின் வளர்ச்சியைக் கருத்தில் கொண்டு, இப்பகுதியில் அவற்றுக்கு ஏதேனும் தொடர்புகள் உள்ளதா என்று நான் யோசிக்க ஆரம்பித்தேன்.

படிக்க :
♦ அமெரிக்கா : நீதியில்லையேல், அமைதியில்லை !

♦ கருப்பின இளைஞர் மீது துப்பாக்கிச் சூடு : பற்றி எரியும் அமெரிக்கா !

தொழில்நுட்ப அரங்கில் பணியாற்றும் ஒரு நண்பருடன் நான் இதைப் பற்றி விவாதித்தபோது, ஆன்லைன் விளையாட்டுகளின் பெண்ணிய வடிவமைப்பாளரான கரோலின் சிண்டர்ஸ்-இன் கட்டுரையை நான் படிக்க வேண்டும் என்று அவர் கூறினார். அதன்படி, “அந்த நேரத்தில் இணையம் எனது தாயாரின் வீட்டிற்கு ஒரு ஸ்வாட் குழுவை அனுப்பியது” – என்ற தலைப்பில், 2015-இல் கரோலின் சிண்டர்ஸ் எழுதிய கட்டுரையை நான் படித்தேன்.

எனது நண்பர் ஏன் அதை பரிந்துரைத்தார் என்று உடனடியாக எனக்குப் புரிந்தது. சிண்டர்ஸ்-இன் தாயார் என்பதைத் தவிர, இந்த விவரங்கள் மிகவும் ஒத்ததாக இருக்கின்றன. ஒரு வன்முறைக் குற்றம் நடந்துள்ளதாகவும், அப்பகுதியில் மக்கள் பணயக் கைதிகளாக்கப்பட்டுள்ள நிலைமை உள்ளதாகவும் ஒரு தொலைபேசி அழைப்பாளர் கூறியிருக்கிறார். அத்தொலைபேசி அழைப்பாளர் உள்ளூர் போலீசைத் தொடர்பு கொண்டார்; ஆனால், எனது அம்மாவின் விசயத்தில் அது இன்டர்போல் போலீசைத் தொடர்பு கொண்டதாகத் தெரிவிக்கப்பட்டது. விளைவு ஒரே மாதிரியாகத்தான் இருந்தது. அதாவது, ஒரு ஸ்வாட் குழு அவர்களின் வீடுகளுக்கு வந்தது.

ஸ்வாட்டிங் சம்பவத்திற்கு சற்று முன்பு, இணையவழி விளையாட்டுக் (கேமிங்) கலாச்சாரத்தில் நிலவும் ஆணாதிக்க – பெண்ணின வெறுப்பாளர்கள் பற்றி அவர் கட்டுரை எழுதியபோது, இணைய வழியாகத் தொல்லைதரும் பிரச்சாரத்தால் அவர் பாதிக்கப்பட்டார். எனது விசயத்தில், இது இன்னுமொரு ஒத்திசைவாக இருந்தது.

ஏனெனில், இந்த ஆண்டின் தொடக்கத்தில், நானும் இத்தகைய இணையவழி அநாமதேய துன்புறுத்தலுக்கு ஆளானேன். இதைப் பற்றி நான் ஒரு போலீசு புலனாய்வாளரிடம் பேசியபோது, என்னைக் குறிவைத்து தாக்க விரும்பும் யாரையாவது எனக்குத் தெரியுமா என்று போலீசார் கேட்டார்கள்.

இதுவொருபுறமிருக்க, எனது பெற்றோர் அச்சுறுத்தப்பட்டு தொல்லைக்கு ஆளாவதென்பது இப்போது முதன்முறையாக நடப்பதல்ல. 1991-ஆம் ஆண்டின் தொடக்கத்தில், நான் பட்டதாரி மாணவனாக இருந்தபோது, எனது பெற்றோருக்கு அநாமதேய தொலைபேசி அழைப்புகள் வந்தன. இந்து தேசியவாதம் தொடர்பான தலைப்புகளில் நான் கட்டுரை எழுதுவதை நிறுத்துமாறு அந்த அழைப்புகள் கூறின.

மிக அண்மைக் காலங்களில்கூட, எனது எழுத்துக்கள் காரணமாக எனது பெற்றோருக்குத் தொடர்ந்து அநாமதேய தொலைபேசி அழைப்புகள் வந்துள்ளன. அமெரிக்காவைச் சேர்ந்த இந்துத்துவ அமைப்பின் தலைவர் ஒருவர் எனது குடும்பம் – அதாவது, எனது பெற்றோர், எனது மாமியார், மாமனார் என்று நீட்டிக்கப்பட்ட எனது குடும்பம் – குறித்து விசாரணை நடத்தியதாக என்னிடம் கூறினார். பின்னர், அவர் தனது அமைப்பின் கருப்புப் பட்டியலில் ஒருங்கே திரட்டி வைத்துள்ள அறிஞர்களின் விவரத்தை என்னிடம் பகிர்ந்து கொண்டார். அவர்களின் குறிக்கோளானது, மார்க்சியம், பெண்ணியம், கீழ்நிலை மக்கள், விமர்சனக் கோட்பாடுகள் – ஆகியவற்றைப் பற்றிய ஆய்வுகளை மேற்கொள்வோருக்கு எதிராகப் பிரச்சாரம் செய்வதாகும். ஆனால், அடிப்படையில் இவை எனக்கு ஆர்வமுள்ள துறைகளாகும்.

எங்கும் விரவியுள்ள டிஜிட்டல் தொழில்நுட்பமானது, உலகின் எந்தவொரு போலீசு நிறுவனத்திற்கும் அநாமதேயத் தொலைபேசி அழைப்புகளை அனுமதிக்கிறது. அது, ஒரு போலீசு நடவடிக்கையைத் தொடங்குவதை எளிதாக்குகிறது. சமீபத்திய பத்தாண்டுகளில், சட்ட அமலாக்கத்தின் இராணுவமயமாக்கல்தான் ஸ்வாட் குழுக்கள் என்பதும், சந்தேகத்திற்கு இடமில்லாத நபர்களின் வீட்டு வாசல்களில் இந்த ஸ்வாட் குழுவானது அடுத்த சில நிமிடங்களில் வந்து நின்று அச்சுறுத்தும் என்பதும், இந்த அநாமதேயத் தொலைபேசி அழைப்பாளர்களுக்குத் தெரியும்.

போலீசுத் துறையானது முடுக்கிவிடப்படும்போது, போலீசுக்கு தெரிந்தது ஒரு வழி மட்டும் தான். இந்த அநாமதேய அழைப்பாளர்களுக்கு போலீசாரை எவ்வாறு தூண்டுவது என்பதும் தெரியும்.

ஸ்வாட்டிங் நடவடிக்கையானது, சில சமயங்களில் அப்பாவி நபர்களைக் கொல்வதற்கு வழி வகுக்கிறது என்பதை இந்த அநாமதேய தொலைபேசி அழைப்பாளர்கள் முழுமையாக அறிந்தவர்கள்தான். இருப்பினும், இந்த அநாமதேய தொலைபேசி அழைப்புகள் குறிப்பிடுவது போல யாராவது உண்மையிலேயே சுட்டுக் கொல்லப்படாவிட்டால், சட்ட அமலாக்க நிறுவனங்களின் மேலதிக விசாரணைக்கு இத்தகைய ஸ்வாட்டிங் தொலைபேசி அழைப்புகளுக்கு முன்னுரிமை தருவதில்லை என்பதையும் அவர்கள் அறிவார்கள். பெரும்பாலும் இத்தகைய ஸ்வாட் அதிரடி குழுவின் நடவடிக்கைகள் மரணங்களை விளைவிப்பதில்லை. எனவே, அநாமதேய அழைப்பாளர்களைப் பொறுத்தவரை மிரட்டலுக்கும் துன்புறுத்தலுக்குமான ஒரு சிறந்த வடிவம் ஸ்வாட்டிங் ஆகும்.

தற்போதைய ஸ்வாட்டிங் அல்லது அதற்கு முந்தைய துன்புறுத்தல்களானது, எனது எழுத்துக்களுடன் தொடர்புடையவை என்பதற்கு நேரடி ஆதாரங்கள் இல்லை என்பதை நான் முழுமையாக அறிவேன். இதேபோன்ற ஆதாரங்கள் சிண்டர்ஸ் விவகாரத்திலும் இல்லை. எனினும், எல்லாவற்றுக்கும் மேலான பிரச்சினை இதுதான்.

அமெரிக்காவில் போலீசுத் துறைகளுடன் பணிபுரியும் ஒரு இணையப் பாதுகாப்பு நிபுணரை நான் தொடர்பு கொண்டபோது, இதுவரை நடந்த அனைத்து விவரங்களையும் அவரிடம் நான் தெரிவித்த போது அவர் கவனமாகக் கேட்டுக் கொண்டார். எங்களது உரையாடலின் போது, மேலதிக தகவல்கள் அல்லது வழிவகைகளுக்காக தனது தரவுத்தளங்கள் வாயிலாக அவர் தேடினார். நன்கு திட்டமிடப்பட்டதும், இலக்கு வைக்கப்பட்ட தாக்குதல்களும் உள்ளிட்டு, ஆன்லைன் ட்ரோலிங்-கும் எழுத்தாளர்களுக்கு எதிரான வன்முறை அச்சுறுத்தல்களும் இப்போது அன்றாட நிகழ்வுகளாக இருக்கின்றன என்பதை அவர் எனக்கு நினைவூட்டினார்.

ஆனால் ஸ்வாட்டிங் என்பது வேறுபட்டதொரு உத்தரவின் விரிவாக்கம் ஆகும். அதற்கு வழிவகுத்திருக்கக்கூடிய வேறு ஏதேனும் சாத்தியப்பாடுகளைப் பற்றி விவரிக்குமாறு அவர் என்னிடம் கேட்டார். எனக்கு நேர்ந்த ஸ்வாட்டிங் சம்பவத்திற்குப் பின்னர் மட்டுமே, நான் கருத்தில் கொள்ளத் தொடங்கிய இதர பிற தற்செயலான நிகழ்வுகள் நடந்தேறியுள்ளன என்பதை நான் சுட்டிக் காட்டினேன்.

பேய்த்தனமாகத் தொல்லை கொடுத்தல் (Spectral harassment)

அறிவுத்துறையைச் சார்ந்தவரும் இந்துத்துவாவின் நிறுவனர்களில் ஒருவருமான வி.டி. சாவர்க்கர் (விநாயக் தாமோதர் சாவர்க்கர்) குறித்து 2019-ஆம் ஆண்டின் பிற்பகுதியில் சோசலிசப் பத்திரிகையான ஜேகோபின் (Jacobin)-னுக்கு நான் ஒரு நேர்காணல் கொடுத்தேன் என்று அப்போது அவரிடம் விளக்கினேன்.

ஒருவர் இந்துவாக இருப்பதற்கான சாவர்க்கரின் வாதத்தில், வன்முறை என்பது மையப் பொருளாக உள்ளது என்று நான் அந்த நேர்காணலில் குறிப்பிட்டிருந்தேன். எனது வாதத்தை முன்வைத்து இந்திய ஊடகங்களும் நாளேடுகளின் கட்டுரைகளும் விவாதிக்கும் அளவுக்கு ஓரளவுக்கு இந்த நேர்காணல் கவனத்தைப் பெற்றது. அதன் பிறகு மிகக் குறுகிய காலத்திலேயே, எனக்கு முதலாவது அநாமதேய இணைய துன்புறுத்தல் நிகழ்வானது தொடங்கியது.

“வன்முறையே இந்து நயநாகரிகம்” (“violence as Hindu civility”) எனும் சாவர்க்கரின் விளக்கம் குறித்து கோட்பாட்டளவிலான ஒரு கட்டுரையை நான் வெளியிட்ட பின்னர், இந்த ஸ்வாட்டிங் விவகாரம் தொடங்கியது. இதே தலைப்பில் ஒரு நேர்காணலை இடதுசாரி இணையப் பத்திரிகையான கவுன்டர் கரண்ட்ஸ்(Countercurrents)-க்கு அளித்தேன். அதைத் தொடர்ந்து, மீண்டும் இந்தியாவில் சில கருத்துரையாளர்கள் தேசிய பத்திரிகைகளில் இதைப் பற்றி எழுதினர்.

இந்த நேர்காணல்களைப் பற்றி நான் குறிப்பிட்டவுடன், அந்த இணையப் பாதுகாப்பு நிபுணர் அவற்றைத் தொடர்பில்லாத நிகழ்வுகள் என நிராகரிப்பார் என்று நான் கருதினேன். ஆனால், அவர் அவ்வாறு செய்யவில்லை. அவரது மதிப்பீட்டின்படி, “இது சீரற்றதாக இருப்பதற்கு, பெரும் எண்ணிக்கையிலான தரவு அம்சங்கள் உள்ளன.” அதேவேளையில், நான் ஒரு சர்ச்சைக்குரிய அரசியல் நபரான சாவர்க்கரைப் பற்றி எழுதுகிறேன் என்பதையோ, இந்த ஒத்திசைவான தற்செயல் நிகழ்வுகளையோ பொதுவில் ஒரு இணையப் பாதுகாப்பு நிபுணர் தனது முதன்மையான பணியில் இவற்றையெல்லாம் கருத்தில் கொள்ள மாட்டார் என்பதையும் அவர் குறிப்பிட்டார்.

படிக்க :
♦தன் மீது கருணை காட்டுமாறு மன்றாடிய சாவர்க்கர் !

♦ சாவர்க்கர், இரு தேசக் கோட்பாடு மற்றும் இந்துத்துவா | ராம் புனியானி

முகமற்ற, பெயரில்லாத, கண்ணுக்குத் தெரியாத குற்றவாளிகளால் தொடங்கப்பட்ட இந்த நிகழ்வுகளுக்கு ஒரு பேய்த்தனமான இயல்பு உள்ளது. வெறுமனே தொல்லைப்படுத்தும் இத்தகைய செயல்கள், இன்றைய அமெரிக்காவில் நிச்சயமாக சாத்தியமானதுதான்.

ஒருவேளை, சாவர்க்கரை இந்திய தேசத்தின் “Ghost father” என்று நான் அடையாளம் காட்டியதன் விளைவுகளாக இவை இருக்கலாம்.

ஆயினும்கூட, தனிப்பட்ட முறையில் எனக்கு இது புரியாத புதிராக இருக்கிறது. சாவர்க்கருடைய சீடர்களில் ஒருவரால் எனக்கு பெயரிடப்பட்டதை எனது பெற்றோர் மூலம் அறிந்த பிறகு, அந்த நாள் முதல் நான் சாவர்க்கர் மீது ஆர்வம் காட்டினேன். அந்தச் சீடர், நூற்றுக்கணக்கான இதர ஆண் குழந்தைகளுக்கும் இதே பெயரைச் சூட்டியுள்ளார்.

சாவர்க்கரின் படைப்புகளை நான் ஆழ்ந்த அக்கறையுடன் பாவிக்கிறேன். ஏனெனில், அவர் 20-ஆம் நூற்றாண்டின் மிக முக்கியமான இந்திய அரசியல் சிந்தனையாளர்களில் ஒருவராக இருந்தார். சாவர்க்கரின் கருத்துக்களுடன் அடிப்படையிலேயே உடன்படவில்லை என்றாலும், இன்றைய இந்தியாவிலுள்ள மக்கள் சாவர்க்கரைப் படிக்க வேண்டும் என்று நான் வாதிட்டேன். அதன் பிறகுதான் நாம் முழுமையாக இந்துத்துவாவை விளக்க இயலும். அவர் செல்வாக்குச் செலுத்தி, வடிவமைக்கவும் உதவி செய்த இந்தியா என்ற கருத்தாக்கத்தையும் விளக்க இயலும்.

முடிவாக, இத்தகைய தொல்லைப்படுத்தலானது, கண்ணுக்குத் தெரியாத வலதுசாரிகளது  கைவரிசையின் தடயங்களைக் கொண்டிருக்கிறது. இந்த வலதுசாரிகள் அறிவார்ந்த விவாதத்தில் ஒருபோதும் ஆர்வம் காட்டாமாட்டார்கள்.

★★★

 சொற்பொருள் விளக்கம்:

  • Alt-Right என்பது Alternative Right என்பதன் சுருக்கமாகக் குறிப்பிடப்படுகிறது. வலதுசாரி மாற்று என்ற இந்த இயக்கம், அமெரிக்காவின் அதிதீவிர வலதுசாரி மற்றும் வெள்ளை நிறவெறி தேசியவாதத்துடன் தொடர்புடைய இயக்கமாகும்.
  • இண்டர்போல் – INTERPOL – International Criminal Police Organization – உலகின் மிகப் பெரிய போலீசு அமைப்பான இதில் 194 நாடுகள் இணைந்துள்ளன. நாடு கடந்த குற்றங்கள், பயங்கரவாதம், இணையவழிக் குற்றங்கள், மனித இனத்துக்கு எதிரான குற்றங்கள், ஆபாசப் படமெடுத்துப் பரப்புதல், போதை மருந்து கடத்தல், அரசியல் ஊழல் குற்றங்கள், வங்கி – பங்குச்சந்தைக் குற்றங்கள், காப்புரிமைச் சட்ட மீறல் முதலானவற்றைக் கண்காணித்து தடுக்கும் பணியில் அங்கம் வகிக்கும் நாடுகளுடன் இந்த அமைப்பு ஒத்துழைத்து ஒருங்கிணைக்கும்.
  • ஆன்லைன் ட்ரோலிங் – இணையத்தின் வழியாக உள்நோக்கத்துடன் ஒருவரை அல்லது குழுவை இழிவுபடுத்துவது, எரிச்சலூட்டுவது, அச்சுறுத்துவது, ஆத்திரமூட்டுவது, நையாண்டி செய்வது.

கட்டுரையாளரைப் பற்றி…

விநாயக் சதுர்வேதி, கலிபோர்னியா பல்கலைக்கழகத்தின் இர்வின் கல்லூரியில் வரலாற்றுத்துறை இணை பேராசிரியராகப் பணியாற்றுகிறார். இவர், வி.டி. சாவர்க்கரின் அறிவுசார் வரலாற்றை எழுதிக் கொண்டிருக்கிறார்.

✼ ★ ✼


கட்டுரையாளர் : விநாயக் சதுர்வேதி
தமிழாக்கம் : நவீன்குமார்
செய்தி ஆதாரம் : The Hindu

2 மறுமொழிகள்

  1. சிறப்பான கட்டுரை… கருத்துக்களோடு மோத முடியாத, அறிவுப்பூர்வமான வாதங்களை வைக்க முடியாத வலதுசாரிகள் எதிர்கருத்து உள்ளோரை அச்சுறுத்த அரசு எந்திரத்தை எந்தெந்த வகைகளில் தூண்டி துன்புறுத்துகிறார்கள் என்பதை கட்டுரையாசிரியர் சிறப்பாக எடுத்துரைத்துள்ளார்.

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க