“எந்த வித ஆதாரமும் இன்றி சட்ட விரோதச் செயல்பாடுகள் தடுப்பு (உபா) என்னும் கொடூரமான சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்ட மக்கள் கவிஞர் வரவர ராவை அதிகாரிகள் உடனடியாக விடுதலை செய்ய வலியுறுத்தி எழுதப்பட்ட கடிதம் இது:

உலகப் புகழ் பெற்ற கவிஞரும் இதழியலாளரும் இலக்கியவாதியுமான வரவர ராவ் தெலங்கானாவைச் சேர்ந்தவர். ‘விரசம்’ என்ற புரட்சிகர எழுத்தாளர்கள் சங்கத்தை நிறுவியவர். வரலாறு நெடுகிலும் பல ஆட்சியாளர்களால் பல்வேறு பொய்க் குற்றச்சாட்டுகள் சுமத்தப் பட்டு கைது செய்யப்பட்டுத் துன்புறுத்தப்பட்டவர். பிறகு விடுவிக்கப்பட்டவர். ஆட்சிக் கட்டிலில் இருப்பவர்களை நெளியச் செய்தவை அவருடைய புரட்சிகரமான எழுத்துகள் என்பதைத்தான் இது சுட்டுகிறது.

அவருடைய கவிதைகளின் வீரியம் ஆட்சியாளர்களுக்கு சிம்ம சொப்பனமாக விளங்கியது. பெயரைச் சுட்டிக் காட்டாமலே பெயரற்றவர்களுக்குப் பெயர் சூட்டுபவரே கவிஞர். அப்படியான கவிஞர்களைக் கைது செய்தல் அல்லது குற்றவாளியாக முன்னிறுத்த முனைதல் என்பது தங்களைக் குறித்த கவிதைகள்தாம் அவை என்பதை அதிகாரம் படைத்தவர்கள் ஏற்றுக் கொள்வதன்றி வேறில்லை.

மகாராஷ்டிராவில் உள்ள பீமா-கோரேகானில் 2018ஆம் ஆண்டு நிகழ்ந்த வகுப்புவாத வன்முறையில் தொடர்பிருப்பதாகப் பொய்யாகக் குற்றம் சாட்டப்பட்டுக் கைது செய்யப்பட்டார் வரவர ராவ். கடந்த இரண்டு ஆண்டுகளில் அவருக்கு நியாயமான நீதி விசாரணை நடத்தப்படவில்லை. துடிப்பு மிக்க சமூக செயற்பாட்டாளர்கள், எழுத்தாளர்கள் மற்றும் வழக்கறிஞர்களுடன் இவரும் அநியாயமாக இத்தனை காலம் சிறைத் தண்டனை அனுபவித்து வருகிறார்.

80 வயது மனிதர் அவர். செய்திக் குறிப்பாக அவருடைய குடும்பத்தினர் வெளியிட்டதுபோல, “சிறையில் வரவர ராவைக் கொன்று விடாதீர்கள்”. நினைவிழந்த நிலையில் கடந்த மே மாதம் ஜேஜே மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நாளிலிருந்து அவருடைய உடல் நிலை மிகவும் மோசமாக உள்ளது. அவருக்கு உடல்ரீதியாகவும் மனரீதியாகவும் உடனடி சிகிச்சை தேவைப்படுகிறது என்பதை அவருடன் இருக்கும் சிறைவாசி ஒருவர் தெரிவித்துள்ளார்.

அதிகார மையத்துக்கு எதிராகக் குரல் எழுப்பியவர் என்ற ஒரே காரணத்துக்காகக் கைது செய்யப்பட்டவர் வரவர ராவ் என்பது தெள்ளத் தெளிவாகிறது. மக்களுக்காகப் பேச வேண்டிய அவசியத்தையும் முக்கியத்துவத்தையும் இளம் கவிஞர்களான நாங்கள் உணர்ந்திருப்பது மட்டுமல்லாமல் அதிகாரத்தைத் தட்டிக் கேட்க வேண்டிய கடமையும் எங்களுக்கு உள்ளது என்பதையும் உணர்கிறோம்.

வரவர ராவை போன்ற மக்கள் கவிஞர்கள் வாழ்வதனால்தான் சமூகத்துக்காகப் பேசவும் எழுதவும் இளம் கவிஞர்களால் முடிகிறது. இந்நாட்டின் இளம் கவிஞர்கள் என்ற முறையில் ராவ் மீதான தாக்குதலை எங்கள் மீது, எங்கள் மனங்கள் மீது, எங்களுடைய பேனாக்கள் மீது, எங்களுடைய கருத்துக்கள் மீது தொடுக்கப்பட்டத் தாக்குதலாகவே கருதுகிறோம் என்பதைத் திட்டவட்டமாகத் தெரிவித்துக் கொள்கிறோம்.

படிக்க:
தோழர் வரவர ராவை சிறையிலேயே கொல்லத் துடிக்கும் மோடி அரசு !
சாத்தான்குளம் படுகொலை : காவலர்களல்ல, கிரிமினல்களே !

எங்களுடைய குரல்கள் இப்படியாகத் தொடர்ந்து நெரிக்கப்பட்டால், எங்களுக்கென்று குரல்கள் இல்லாமலேயே போய்விடும். இறுதியில் இரண்டு குரல்கள் மட்டுமே எஞ்சும். ஒன்று அரசனுடையது மற்றொன்று புரவலரின் அரசவையில் நியமிக்கப்பட்ட புலவருடையது. கட்டுக்கடங்காத சிந்தனை மலர நம்முடைய போராட்ட குணத்தை உயிர்ப்புடன் வைத்திருத்தல் வேண்டும். ஜனநாயகத்துக்குக் கடைசியாக நம்மால் இயன்றது அது மட்டுமே.

பெருந்திரளாகக் குடிமக்கள் கிளர்ந்தெழுந்த பிறகே வரவர ராவ் சிகிச்சைக்காக ஜேஜே மருத்துவ மனைக்கு அழைத்துச் செல்லப்பட்டு இருப்பதாகச் செய்திகள் வெளி வந்திருக்கின்றன. அவருக்கு அவசியமான மருத்துவ சிகிச்சை உடனடியாக அளிக்கும்படி அரசுக்கும் நீதித் துறையினருக்கும் முன்பாகக் கோரிக்கை வைக்கிறோம். அவர்தம் குடும்பத்தினர் உடனிருக்க அனுமதியுங்கள். ஜாமீனில் அவரை உடனடியாக வெளியே விடுங்கள். இவற்றைச் செய்தால் மட்டுமே அச்சமின்றிக் குரலெழுப்பும் தருணங்களில் இளம் கவிஞர்களின் குரல்களை ஆளும் அரசு நெரிக்காது என்ற உத்தரவாதம் எங்களுக்குக் கிட்டும்.

நம்முடைய கற்பனைச் சிறகுகளை விரித்துக் கவிதை எழுத வெளி அமைத்துத் தந்த கவிஞர் வரவர ராவுக்காக நாடு முழுவதும் உள்ள சக இளம் கவிஞர்கள் ஒன்றிணையும்படி அழைப்பு விடுக்கிறோம்”

தமிழில் : சுசித்ரா மஹேஸ்வரன்.

நன்றி : ஃபேஸ்புக்கில்Susithra Maheswaran

1 மறுமொழி

  1. பல தேசிய இனங்களின் கைது கூடாரமாக உள்ள இந்திய,முதல் சுதந்திர போராட்டம் முதல் ஒப்பந்த சுதந்திரம் பெற்று ஆண்டுவரும் இன்றுவரை என்னற்ற பல கவிஞர்கள்,எழுத்தாளர்கள், அறிஞர்கள்,தொழிளாலர்கள் உள்ளிட்ட மக்களும் ஆட்சியாளர்களின் இன்னல்களால் உயிர்த்துறந்துள்ளனர்…ஆனால் இந்நவீன டிஜிட்டல் ஆன்ட்ராய்டு உலகில் இவ்வென்பது வயது மூத்த கவிஞரை வதைப்பது காவி பாசிசம்/பார்ப்பனிய அகங்காரம்/முதலாளித்துவ கொடுங்கோன்மை… உலகத்தையே
    உழைக்கும் மக்களின் சிறையாக்க துடிக்கும் மறுகாலனியாதிக்கம் கவிஞரை தனிச்சிறைப்படுத்தியிருப்பது கண்டனத்திர்க்குறியதே..

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க