பாரிஸ் கம்யூனின் புரட்சிப்பாதையில் பீடுநடைபோடுவோம்!

முதலாளிகளின் சொத்துகளை பறிமுதல் செய்யாதது, வங்கிகள் உள்ளிட்ட நிறுவனங்களைக் கைப்பற்றாதது, வெர்சாயிலிருந்து வரும் எதிரிகளை அழித்தொழிக்காமல் மிதவாதத்தை பின்பற்றியது போன்ற காரணங்களால் கம்யூன் ஈவிரக்கமின்றி நரவேட்டையாடப்பட்டது.

1871-ஆம் ஆண்டு மார்ச் 18-ஆம் நாளன்று உலகின் முதல் பாட்டாளி வர்க்க ஆட்சி அமைக்கப்பட்டது. அது பாட்டாளி வர்க்க சர்வாதிகாரத்தை நிறுவ மேற்கொள்ளப்பட்ட மாபெரும் முயற்சியாகும். நொறுக்கப்படும் அரசு எந்திரத்திற்கு பதிலாக அமைக்கப்பட வேண்டிய பாட்டாளி வர்க்க அரசியல் வடிவமே கம்யூன் என்பது அப்போதுதான் கண்டுபிடிக்கப்பட்டது.

பிரான்சில் 1852 – 1870 காலகட்டத்தில் ஏற்பட்டிருந்த முதலாளித்துவ பொருளாதாரம் மற்றும் அரசியல் வளர்ச்சியின் காரணமாக முன்னெப்போதும் அறியப்பட்டிராத வடிவில் பாட்டாளி வர்க்கத்தின் போராட்டங்கள் நடைபெற்றுக் கொண்டிருந்தன. முதலாவது கம்யூனிஸ்டு அகிலத்தின் கிளை பிரான்சில் இயங்கிக் கொண்டிருந்தது.

இது ஒருபுறமிருக்க, மற்றொரு புறம் பிரஞ்சு பொருளாதாரம் வங்கி மற்றும் நிதி மூலதான பெருச்சாளிகளின் கட்டுப்பாட்டில் சிக்கியிருந்தது. அந்நாட்டு மக்களிடையே கடும் அதிருப்தி நிலவியிருந்த இச்சூழலில், பிரஞ்சு – பிரஷ்ய போர் 1870-இல் தொடங்கியது. 1870 செப்டம்பரில் பாரிஸ் நகருக்கு வடக்கே இருந்த பகுதிகளை பிரஷ்ய பேரரசு (தற்போதைய ஜெர்மனி) கைப்பற்றிக் கொண்டது.

கம்யூனிஸ்டு அகிலம் இந்தப் போரை எதிர்த்தது. இப்போரின் போது தேசிய காவல் படையால் பாரிஸ் நகரம் பாதுகாக்கப்பட்டது. இப்படையின் உறுப்பினர்களாக பாரிஸ் நகர உழைக்கும் மக்களும் தொழிலாளர்களும் இருந்தனர். பாரிசின் அரசாங்கம் பிரஷ்ய ஆக்கிரமிப்பை விட தொழிலாளர் வர்க்கத்தைக் கண்டு தான் அஞ்சியது.

படிக்க: பாரிஸ் கம்யூன் 150 : உலகின் முதல் புரட்சிகர அரசு || கலையரசன்

1871 பிப்ரவரி இறுதியில் பிரஷ்யாவுடன் பிரான்சின் அடால்ப் தியர்ஸ் அரசாங்கம் போர் நிறுத்த ஒப்பந்தத்தை போட்டுக் கொண்டது. அவ்வொப்பந்தப்படி பாரிசின் கோட்டைகளை பிரஷ்ய படைகளுக்கு விட்டுக் கொடுப்பதோடு 5 மில்லியன் பிராங்குகள் இழப்பீடு தருவதாகவும் ஒப்புக்கொள்ளப்பட்டது. பாரிஸ் நகர உழைக்கும் மக்களும் தேசிய பாதுகாப்புப் படையும் இதனை ஏற்றுக் கொள்ள மறுத்தனர். மேலும் தங்களிடமிருந்த ஆயுதங்களை பறிமுதல் செய்வதற்கும் எதிர்ப்புத் தெரிவித்தனர்.

பிரெஞ்சு அரசு இப்படையினரின் ஆயுதங்களை பறிமுதல் செய்ய முயற்சித்த போது‌ தொழிலாளர்களும் உழைக்கும் மக்களும் அதற்கு எதிராக திரண்டெழுந்தனர். பாரிஸ் நகராட்சி மன்றமாக இருந்த ஓட்டல் வில்லி-யை முற்றுகையிட்டு கைப்பற்றி செங்கோடியால் அலங்கரித்தனர். பிரான்ஸ் தலைநகர் பாரிசின் அதிகாரம் தொழிலாளர்களின் கரங்களுக்குச் சென்றது; அன்றைய பிரெஞ்சு அரசாங்கம் பாரிசில் இருந்து வெர்சாய்-க்குத் தப்பி ஓடியது.

அதனைத் தொடர்ந்து மார்ச் 26 அன்று 20,000 பேருக்கு ஒரு பிரதிநிதி என்ற வகையில் நேரடி பிரதிநிதித்துவம் கொண்ட ஜனநாயக தேர்தல் நடத்தப்பட்டு 92 மக்கள் பிரதிநிதிகள் கம்யூனின் மத்திய கமிட்டிக்கு தேர்வு செய்யப்பட்டனர். மார்ச் 28 அன்று பாரிஸ் கம்யூன் அதிகாரப்பூர்வமாக பிரகடனம் செய்யப்பட்டது.

பாரிஸ் கம்யூன் புரட்சியானது பின்தங்கிய பாட்டாளி வர்க்க பிரிவுகளைக் கூட தட்டி எழுப்பியது. மார்செய்ல் (Marseille), லயான் (Lyon), செயிண்ட் எடியென் (Saint Etienne), பேசான்கான் (Basancon), லீ கிரோய்சாட் (Le Creusot), நார்போன் (Narbonne), லிமோகஸ் (Limoges) உள்ளிட்ட பிரான்சின் மற்ற பகுதிகளிலும் உழைக்கும் மக்களின் கம்யூன்கள் அமைக்கப்பட்டன.

படிக்க: பாரிஸ் கம்யூன் 150 : பிரான்சில் தோன்றிய பொதுவுடைமைப் புரட்சி || கலையரசன்

லூயிஸ் கூகெல்மானுக்கு (Louis Kugelmann) எழுதிய கடிதத்தில் மார்க்ஸ் “பிரஞ்சு புரட்சியின் அடுத்த முயற்சி அதிகார வர்க்க – ராணுவ எந்திரத்தை ஒரு கையிலிருந்து மற்றொன்றுக்கு மாற்றுவதாக இருக்காது; மாறாக அதை தகர்ப்பதாக இருக்கும்” என்று கூறியிருந்த பகுப்பாய்வை பாரிஸ் கம்யூன் நிரூபித்துக் காட்டியது.

உலகின் முதலாவது பாட்டாளி வர்க்க புரட்சியை நசுக்குவதற்காக ஜெர்மன் பிரெஞ்சு ஆளும் வர்க்கங்கள் ஒன்றிணைந்தன. மே 21 முதல் வரலாறு காணாத நரவேட்டை கட்டவிழ்த்து விடப்பட்டது. ஏறத்தாழ 30,000 உழைக்கும் மக்கள் பிரெஞ்சு ராணுவத்தால் சுட்டுக் கொல்லப்பட்டனர். 20,000 பாரிஸ் நகர மக்கள் விசாரணையின்றி தூக்கிலிடப்பட்டனர்; பலர் நாடு கடத்தப்பட்டனர். 72 நாட்கள் மட்டும் நீடித்திருந்த பாரிஸ் கம்யூன் மே 28 அன்று ரத்த வெள்ளத்தில் மூழ்கடிக்கப்பட்டு முடிவுக்குக் கொண்டுவரப்பட்டது.

“வர்க்கங்களின் ஆட்சியில் இருந்து மனித இனத்தை நிரந்தரமாக விடுவிக்கும் மாபெரும் சமுதாய புரட்சியின் விடியல்” என்று மார்க்சால் வர்ணிக்கப்பட்ட பாரிஸ் கம்யூன் பாட்டாளி வர்க்கத்திற்கு பல்வேறு படிப்பினைகளை வழங்கியது.

கம்யூனின் முதல் அரசாணையே நிரந்தரமான ராணுவத்தை அகற்றிவிட்டு உழைக்கும் மக்கள் அனைவருக்கும் ஆயுதமேந்தும் உரிமை அளித்து ஒரு மக்கள் படையை தோற்றுவிப்பதற்கானது தான். மேலும், கம்யூனானது செயலாற்றும் உறுப்பாக, அதாவது சட்டமன்றமாகவும் நிர்வாக குழுவாகவும் ஒருங்கே செயல்படும் உறுப்பாக, மாற்றி அமைக்கப்பட்டது. அனைத்து நிர்வாகம் மற்றும் அரசு அதிகாரிகளின் சம்பளங்களும் ஒரு தொழிலாளியின் சாதாரண கூலிக்கு நிகராக்கப்பட்டது. மதத்தையும் அரசையும் பிரித்து மத நிறுவனங்களின் சொத்துகளை பொதுவுடைமை ஆக்கியது. கெல்லட்டின் (guillotine) இயந்திரத்தை பகிரங்கமாக தீயிட்டுக் கொளுத்தியது. நெப்போலியன்-இன் வெண்கல சிலை தேசிய இன வெறியின் சின்னமாக அறிவிக்கப்பட்டு தொழிலாளர்கள் முன்னிலையில் உடைத்து நொறுக்கப்பட்டது. வட்டிக்கடைகள் அனைத்தும் மூடப்பட்டன.

படிக்க: சொந்த நாட்டு மக்களை ஒடுக்குவது மட்டுமே இராணுவத்தின் பணி !

முதலாளிகளின் சொத்துகளை பறிமுதல் செய்யாதது, வங்கிகள் உள்ளிட்ட நிறுவனங்களைக் கைப்பற்றாதது, வெர்சாயிலிருந்து வரும் எதிரிகளை அழித்தொழிக்காமல் மிதவாதத்தை பின்பற்றியது போன்ற காரணங்களால் கம்யூன் ஈவிரக்கமின்றி நரவேட்டையாடப்பட்டது.

பாரிஸ் கம்யூன் வழங்கிய படிப்பினைகளை, கம்யூனிஸ்ட் அறிக்கையில் ஒரு முக்கியமான திருத்தத்தை புகுத்தும் அளவுக்கு முக்கியத்துவம் வாய்ந்ததாக மார்க்சும் எங்கெல்சும் கருதினர். பாரிஸ் கம்யூன் குறித்து மார்க்ஸ் வழங்கிய படிப்பினைகளை லெனின் ரஷ்யாவின் பருண்மையான நிலைமைகளுக்குப் பயன்படுத்தினார். 1917-ஆம் ஆண்டு ரஷ்ய சோசலிச புரட்சியின் மூலம் அதை நடைமுறையில் செயல்படுத்திக் காட்டினார்.

பாரிஸ் கம்யூன் தோற்றுவித்த புரட்சிகர வழியில் பாட்டாளி வர்க்க சர்வாதிகாரத்தை – சோசலிசத்தை – நிறுவுவதை நமது நோக்கமாக பிரகடனப்படுத்துவோம்! பாரிஸ் கம்யூனின் புரட்சிப் பாதையில் தொடர்ந்து பீடுநடைபோட்டு முன்னேறுவோம்!

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க