பாரிஸ் கம்யூனிஸ்ட் அரசு உருவாகி 150 ஆண்டுகள்

1870-ம் ஆண்டு நடந்த பிரான்ஸ், ஜெர்மன் யுத்தத்தின் பின் விளைவாக கம்யூன் உருவானது. பிரான்ஸ் நாட்டின் சக்கவர்த்தி மூன்றாம் நெப்போலியன், அவரது படையினரால் சிறை பிடிக்கப் பட்டிருந்தார். அன்று பிரஷியன் என அழைக்கப்பட்ட ஜெர்மன் படைகள் பாரிஸ் நகரை சுற்றி வளைத்தன. மன்னராட்சி சரணடைந்த படியால், செப்டம்பர் 4-ம் தேதி குடியரசு பிரகடனப் படுத்தப்பட்டது. அதற்கு பாரிஸ் உழைக்கும் வர்க்க மக்களின் அழுத்தமும் ஒரு காரணம்.

ஜெர்மன் படையினரால் சுற்றிவளைக்கப் பட்டிருந்த பாரிஸ் நகரில் பல மாத கால பட்டினிக்கு பின்னர் தொழிலாளர்கள் புதிய குடியரசை ஒரு ஜனநாயகக் கம்யூனாக மாற்றும் நடவடிக்கைகளில் இறங்கினார்கள். ஆனால் அதுகுறித்து பூர்ஷுவா குடியரசு அக்கறைப் படவில்லை . 22 ஜனவரி நடந்த தொழிலாளர்களின் ஆர்ப்பாட்டம் கடுமையாக அடக்கப் பட்டது.

28 ஜனவரி, பிரான்சின் குடியரசும் ஜெர்மனியர்களிடம் சரணடைந்தது. பிரெஞ்சுப் படையினரிடமிருந்த ஆயுதங்கள் களையப் பட்டன. ஆனால் தொழிலாளர்களை பெரும்பான்மையாகக் கொண்டிருந்த பாரிஸ் இராணுவப் பிரிவு ஆயுதங்களை ஒப்படைக்க மறுத்தது.

படிக்க :
♦ மூலதனத்தின் நோயை முறியடிப்பது எப்படி ?
♦ ஒரு ஆட்சிக் கவிழ்ப்பின் திரைக்கதை – ஆவணப்படம்

18 மார்ச், வெர்சேய் நகரில் இருந்து இயங்கிய பிரெஞ்சு பூர்ஷுவா அரசு தனது இராணுவத்தை அனுப்பி பாரிஸ் பிரிவின் ஆயுதங்களை களையுமாறு உத்தரவிட்டது. ஆனால் அங்கு ஒரு மோதல் நிலையை எதிர்கொண்ட படையினர் பாரிஸ் மக்கள் மீது துப்பாக்கிப் பிரயோகம் செய்ய மறுத்தனர். அந்தக் கணத்தில் இருந்து ஆயுதமேந்திய தொழிலாளர்கள் பாரிஸ் நகரின் அரசு அதிகாரத்தை தமது கைகளில் எடுத்துக் கொண்டனர்.

வெற்றிகரமான தொழிலாளர் புரட்சிக்கு பாரிஸ் கம்யூன் ஓர் உதாரணம். சர்வதேச சோஷலிச இயக்கங்களை பொறுத்த வரையில், பாரிஸ் தொழிலாளர்கள் தமது முதலாளித்துவ, மன்னராட்சி ஒடுக்குமுறையாளர்களுக்கு எதிரான துணிகரமான எழுச்சியை நடத்திக் காட்டினார்கள். இதைத் தான் கார்ல் மார்க்ஸ் பாட்டாளிவர்க்க சர்வாதிகாரம் என்று சொன்னார். அதாவது உண்மையான பெரும்பான்மை மக்களின் ஜனநாயகம். மேல்தட்டு வர்க்கத்தை சேர்ந்த சிறுபான்மையினரின் ஆட்சிக்கு மாறாக, பெரும்பான்மையான சாதாரண உழைக்கும் வர்க்க மக்கள் அதிகாரத்தை கைப்பற்றுவதே உண்மையான ஜனநாயகம் ஆகும்.

பாரிஸ் கம்யூன் ஒரு குறுகிய காலம் மட்டுமே நீடித்த போதிலும் அன்று அது பல முற்போக்கான திட்டங்களை நடைமுறைப் படுத்தியது. உதாரணத்திற்கு இரவு வேலைகளும், சிறுவர்களை வேலையில் ஈடுபடுத்துவதும் இரத்து செய்யப் பட்டன. கல்வித்துறையில் கத்தோலிக்க திருச் சபை கொண்டிருந்த இரும்புப் பிடி துண்டிக்கப் பட்டது. அத்துடன் பெண்களும் கம்யூன் உருவாக்குவதில் பெரும் பங்கு வகித்தனர்.

அனைத்து மக்களுக்குமான பொது வாக்குரிமை மூலம் தெரிவு செய்யப் பட்ட உறுப்பினர்கள் கம்யூன் நிர்வாகத்தை நடத்தினார்கள். அவர்கள் எந்த நேரத்திலும் அகற்றப் படலாம். மேலும் அவர்களது வேலைக்கு தொழிலாளர்களுக்கு கொடுக்கும் அளவிற்கு சமமான ஊதியம் வழங்கப் பட்டது. போலிஸ், இராணுவம் இல்லாதொழிக்கப் பட்டு, ஆயுதபாணிகளான மக்கள் பாதுகாப்புக் கடமைகளில் ஈடுபட்டனர்.

கம்யூன் நிர்வாகம் குறித்து கார்ல் மார்க்ஸ் எழுதியதாவது:
” மூன்று அல்லது ஆறு வருடங்களுக்கொரு தடவை பாராளுமன்றத்தில் பிரதிநிதித்துவப் படுத்தவும், அடக்குவதற்கும் அதிகார வர்க்கத்தை சேர்ந்த எவரை அனுப்பலாம் என்பதற்குப் பதிலாக, பொதுவான வாக்குரிமை கம்யூன் ஒருங்கமைத்த மக்களுக்கு சேவையாற்றும்.”

பழைய முதலாளித்துவ அரசை அகற்றி விட்டு அதனை உழைக்கும் வர்க்கத்தின் தன்னாட்சி அதிகாரமாக மாற்றியமைப்பதில் கம்யூன் மிகப் பெரிய அடியெடுத்து வைத்துள்ளது. இருப்பினும் அது இந்த விடயத்தில் நீண்ட தூரம் செல்லாத படியால், அதுவே வீழ்ச்சிக்கான காரணங்களில் ஒன்றாகியது. உதாரணத்திற்கு முதலாளித்துவ பணப் பரிவர்த்தனையை நிறுத்தும் நோக்கில் தேசிய வங்கியை கம்யூன் பொறுப்பெடுத்திருக்க வேண்டும். அது நடக்கவில்லை. அது மட்டுமல்ல, கம்யூன் எதிர்ப்பாளர்களுக்கும் சுதந்திரம் கொடுக்கப் பட்டிருந்தது.

அவர்கள் எந்த விதத் தடையும் இல்லாமல் கம்யூனைக் கவிழ்க்கும் சூழ்ச்சிகளில் ஈடுபட முடிந்தது. அதே நேரம் கம்யூன் தொழிலாளர்கள், நாட்டுப்புறங்களில் இருந்து முற்றாகத் துண்டிக்கப் பட்டிருந்தனர். அங்கே வாழ்ந்த விவசாயிகள் அவர்களது கூட்டாளிகள் என்பது மட்டுமல்லாது ஒரே ஆளும் வர்க்கத்தினரால் ஒடுக்கப்பட்டு வந்தனர்.

இதற்கிடையே, யுத்த சூழ்நிலை நிலவிய போதிலும் ஜெர்மன், பிரெஞ்சு ஆளும் வர்க்கங்கள் தமக்கிடையிலான பகைமையை ஒரு பக்கம் ஒதுக்கி வைத்தன. இல்லாவிட்டால் அவர்களுக்கு பொதுவான வர்க்க எதிரியான பாரிஸ் கம்யூன் இலகுவாக தோற்கடிக்க முடியாது எனக் கண்டு கொண்டனர். வேர்செயில் இருந்த பிரெஞ்சு அரசு புதிய இராணுவத்தை உருவாக்குவதற்கு உதவியாக, அதுவரை காலமும் ஜெர்மன் சிறைகளில் அடைக்கப்பட்டிருந்த பிரெஞ்சுப் படையினர் ஜெர்மன் சக்கரவர்த்தியின் உத்தரவின் பேரில் விடுதலை செய்யப் பட்டனர்.

மே மாதம் 21 ம் தேதி, கம்யூன் கட்டுப்பாட்டில் இருந்த பாரிஸ் நகரைக் கைப்பற்றுவதற்காக புதிய பிரெஞ்சு இராணுவம் படையெடுத்து வந்தது. அப்போதும் பாரிஸ் நகரை சுற்றிவளைத்து நின்று கொண்டிருந்த ஜெர்மன் படையினர், அவர்களுக்கு வழிவிட்டனர். அடுத்து வந்த எட்டு நாட்களும், கம்யூன்வாதிகளின் கடும் எதிர்ப்புக்கு மத்தியிலும், பிரெஞ்சுப் படையினர் ஏராளமான தொழிலாளர்களை கொன்று குவித்தனர்.

1871ம் ஆண்டு மே மாதம் 28 ம் தேதி, பாரிஸ் கம்யூன் ஒரு துயர முடிவுக்கு வந்தது. அங்கு ஓர் இனப்படுகொலை நடந்தது மட்டுமல்ல, பாரிஸ் கம்யூன் இருந்தமைக்கான தடயங்கள் அனைத்தும் அழிக்கப் பட்டன. இன்று எஞ்சியிருப்பது நிராயுதபாணிகளான கம்யூன்வாதிகளை சுட்டுக் கொல்ல பயன்படுத்திய ஒரு மதில் சுவர் மாத்திரமே. அந்த இடம் இன்றும் சுடுகாடாகவே காட்சியளிக்கிறது.

கலையரசன்
நன்றி : கலையகம்

disclaimer

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க