கோவை மாவட்டம், மதுக்கரை வட்டத்தில் உள்ள மலுமிச்சம்பட்டி பகுதியை சேர்ந்த தாழ்த்தப்பட்ட மக்கள் வீடு மற்றும் வீட்டுமனை பட்டா வேண்டி மூன்றாவது நாளாக பந்தல்(டெண்ட்) அமைத்து இரவு பகலுமாக போராடி வருகின்றனர்.
ஜேஜே நகர், அன்பு நகர், பிரகாஸ் நகர், அவ்வை நகர், மதுரை வீரன் கோவில் போன்ற பகுதியை சேர்ந்த 80 குடும்பத்திற்கும் மேற்பட்ட தாழ்த்தப்பட்ட மக்கள் வீடு இல்லாமல் 15 வருடத்திற்கும் மேலாக வாடகை வீட்டில் வசித்து வருகின்றனர்.
வாடகை கட்ட முடியாமல் பல்வேறு இன்னல்களை அனுபவித்த மக்கள் கடந்த 15 வருட காலமாக கலெக்டர் மற்றும் தாசில்தாரிடம் மனு கொடுத்து வந்துள்ளனர். கடந்த 3 வருடமாக தொடர்ச்சியாகவே கலெக்டர், தாசில்தார், பஞ்சாயத்து அலுவலகம் என மாறி மாறி மனுவை கொடுத்து வந்துள்ளனர். அரசு, வீடு ஒதுக்கும் போது உங்களில் 36 பேருக்கு முன்னுரிமை கொடுப்பதாக துணை தாசில்தார் கூறினார். அதன்பின் வீடு கேட்டு செல்லும் மக்களை பல வருடங்களாக அலைக்கழித்து வருகின்றனர் அதிகாரிகள்.
படிக்க :
♦ சேலம் மாவட்டம் – வடகுமரை தலித் மக்களின் ஆலய நுழைவுப் போராட்டம் ! அனைத்து தரப்பு உழைக்கும் மக்களும் ஆதரிப்போம் !
♦ தாளவாடி வனப்பகுதி : பழங்குடி மக்களை அச்சுறுத்தும் புலிகள் காப்பகமும் – கார்ப்பரேட் நலனும் !
இந்த மாதம் 06.06.2022 அன்று கலெக்டரிடம் மனுவை கொடுக்க சென்றுள்ளனர். அங்கு தாசில்தாரிடம் கலெக்டர் முன்னிலையில் மனுவும் கொடுக்கப்பட்டுள்ளது. CM CELL-க்கும் மனு தொடர்ச்சியாக அனுப்பி வைக்கப்படுள்ளது. இதுவரை அனுப்பிய மனுவிற்கு யாரும் எந்த பதிலும் தெரிவிக்காததால் போராட்டமே ஒரேவழி என 12.06.2022 இரவு முதல் காலியான பகுதியில் சாலை அமைத்து போராட்டத்தை தொடங்கியுள்ளனர்.
எந்த அரசியல் ஓட்டுக் கட்சிகளும் நேரில் வரவில்லை. தாசில்தாரும் போலீசும் மட்டுமே வந்து போராட்டத்தை கைவிட வேண்டுமென கூறியுள்ளனர். வீடு மற்றும் வீட்டுமனை பட்டா வேண்டி போரடியவர்களில் வீட்டுமனை பட்டா வேண்டி போரடிய மக்களை மட்டும் மிரட்டி போராட்டத்திலிருந்து கலைத்துள்ளனர் அதிகாரிகள்.
பயன்பாட்டில் இல்லாத நிலம் ஒன்றில் தங்களுக்கான இடத்தை அளவிட்டு பந்தல்களை அமைத்து போராடி இரண்டு நாட்களாக வருகின்றனர். வீடு வழங்கும் வரை இங்கேயே குழந்தைகளுடன் போராட்டம் தொடரும் என மக்கள் அறிவித்துள்ளனர்.
***
ஆண்கள் கட்டிட வேலைகளுக்கும், பெண்கள் நூறு நாள் வேலைக்கும் மேலும் அன்றாட கூலி வேலைகளுக்கும் சென்றுதான் குடும்பத்தை நடத்தி வருகின்றனர். இதில் மாதம் ரூ.3500 முதல் ரூ.6000 வரை வாடகை செலுத்துகின்றனர். வருமானத்தில் பாதிக்குமேல் வாடகைக்கே செல்கிறது குழந்தைகளை படிக்க வைத்து குடும்பத்தை பராமரிப்பது என்பது சிரமமாக உள்ளது என்கின்றனர்.
மனு கொடுக்க சென்ற மக்களிடம் “நாங்களே வாடகை வீட்டில்தான் இருக்கிறோம் உங்களுக்கென்ன” என அதிகார திமிரோடு கூறியிருக்கின்றனர் கலெக்டர், தாசில்தார். மனு கொடுத்த பெண் ஒருவர் கூறுகையில், “நான் கொடுத்த பெட்டிசன எனக்கு பொட்டலமா கட்டி கொடுத்தாங்க டீக்கடை அன்னாச்சி, இனிமேல் பெட்டிசன் கொடுப்பதாக இல்லை கடைசியாக உட்கார்ந்து போராட உள்ளோம்” என்றார்.
இதுவரை நடந்த அ.தி.மு.க, தி.மு.க ஆட்சியில் 4 முறை அரசால் இலவச வீடு வழங்கப்பட்டுள்ளது. அதில், ஆளுங்கட்சிக்கு ஆதரவான நபர்கள் நிலத்தை சுருட்டி கொள்ளவதே அரங்கேறியிருக்கிறது. பலர் 2-3 வீடுகள் கட்டி வைத்திருக்கின்றனர், அதை வாடகைக்கு விடுவதும், பின்னால் விற்று கொள்ளலாம் என கருதும் வசதி படைத்தவர்களுக்கே நிலத்தை தாரைவார்த்து வந்திருக்கிறது அரசு.
இவர்கள் வசிக்கும் பகுதிக்கு அருகிலே, அரசு நல வாரிய குடியிருப்பு சார்பில் அப்பார்ட்மெண்ட் கட்டிவைத்து அழகு பார்க்கிறது அரசு. 1 இலட்சம் முதல் 2 இலட்சம் வரை பணம் கொடுத்தால் மட்டுமே அப்பார்ட்மெண்டில் வீடு வழங்குவோம் என அதிகாரிகள் கூறியிருக்கின்றனர். தினந்தோறும் கூலிக்கு வேலை செய்து வாடகை கொடுத்து வாழ்வதற்கு கூட வழியில்லாமல் இருக்கும் உழைக்கும் மக்களுக்கு இந்த இலட்ச ரூபாய் லஞ்சம் சாத்தியமா? எட்டாக்கனி தான். அதை தெரிந்தே பணம் படைத்தவர்களுக்கே நிலம், பணம் இல்லாதவர்களுக்கு ஒரு துண்டு நிலத்தை கூட கொடுக்க மாட்டோம் என மறுக்கிறது அரசு.
15 வருடமாக மாறி மாறி ஓட்டு போட்டு ஏமாந்தது தான் மிச்சம் இதுவரை எங்களை யாரும் கண்டுகொள்ளவில்லை. “ஓட்டுக்காக மட்டும் குழந்தை காலுல கூட விழுந்தாங்க ஆனா எங்களுக்கு ஒரு பிரச்சினைனா பார்க்கக் கூட வர மாட்டாங்க” என்று ஓட்டு கட்சிகள் மீதான அவநம்பிக்கையை வெளிபடுத்துகின்றனர்.
***
வாடகை வீட்டில் இருந்த பெண் ஒருவர் கூறுகையில், “குழந்தைகளுடன் இருக்கிறேன் இரவில் பாம்பு என் மீது ஏறி செல்கிறது, 3 முறை பாம்பை பிடித்திருக்கிறோம். கடந்த மாதம் கூட பக்கத்து வீட்டு பெண்ணை கட்டு விரியன் பாம்பு கடிச்சு இறந்துட்டாங்க” என்கிறார்.
“தூத்துக்குடியில 13 பேத்த தான் சுட்டாங்க எங்கல்ல 15 பேத்த வேனும்ன சுட்டு கொல்லுங்க எங்க ஜனத்துக்காக செத்தாலும் பரவாயில்ல எங்களுக்கு நிலம் கொடுங்க” என்கிறார் போராடும் பெண் ஒருவர்.
வீட்டில் வசிப்பவர்களை காலிச்செய்யுங்கள் இல்லையென்றல் “புல்டோசர்களை விட்டு காலி பன்னிடுவோம்” என்று அதிகாரிகள் மிரட்டியுள்ளனர்.
இனி மனுகொடுத்த பலனில்லை உட்கார்ந்து போராடியே தீர வேண்டும் என்ற முடிவுக்கு தங்களது சொந்த அனுபவங்களில் இருந்து உணர்ந்து பின்னரே களத்தில் உறுதியாக போராட தொடங்கியுள்ளனர்.
***
பத்தாண்டுகளாக மக்களை ஏமாற்றி வந்த அதிமுக-வும் சரி நேரில் மனு கொடுப்பதை “CM CELL”ற்கு என நவீனமாக்கியிருக்கும் திமுக-வும் சரி மக்களை நம்பவைத்து கழுத்தறுத்திருப்பதுதான் இந்த ஆட்சியாளர்களின் யோக்கியதை.
படிக்க :
♦ மறுகாலனியாக்க சுரண்டலுக்கு நவீன பண்ணை அடிமைகளாக மாற்றப்படும் செவிலியர்கள் !
♦ மதுரை : தொடர்ந்து வஞ்சிக்கப்படும் தூய்மைப் பணியாளர்கள் !
பட்டியலின மக்களுக்கு இலவசமாக கிடைக்க வேண்டிய பஞ்சமி நிலத்தை ஆட்சியாளர்களும் அதிகாரிகளும் கூறுப்போட்டு விற்று பணம் பார்த்து கொழுத்து வருகின்றனர். தங்களுக்கு கிடைக்க வேண்டிய பஞ்சமி நிலத்தை போராடிதான் பட்டியலின சமூகம் பெற வேண்டியுள்ளது.
மலுமிச்சம்பட்டியின் இந்த வீடு மற்றும் வீட்டுமனை பட்டா வேண்டிய போராட்டத்தை உழைக்கும் மக்களாகிய நாம் ஆதரித்தாக வேண்டும். கோவை சுற்றுவட்டார பகுதியில் வசிக்கும் மக்கள் அனைவரும் இப்போராட்டதை வெற்றி பெற செய்வதே கடமையாகும்!
கோவை மாவட்டம்,
வினவு களச் செய்தியாளர்.

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க