டேவிட் அலெக்சான்ட்ரோவிச் டஷ்மான் (David Aleksandrovich Dushman) 1.4.1923 – 4.6.2021

“நாங்கள் அங்கே சென்றபோது முகாமை சுற்றி போடப்பட்டு இருந்த மின்சார வேலியை எங்கள் டாங்குகளை ஏற்றி உடைத்து முன்னேறினோம். பின்னர்தான் அந்த ஜீவன்களை கண்டோம். தடுமாறியபடியே அந்த மனித எலும்புக்கூடுகள் வெளியே வந்தன. ஏற்கனவே செத்து மடிந்தவர்கள் மீது அந்த எலும்புக்கூடுகள் உட்கார்ந்தும் சாய்ந்தும் கிடந்தன.

எல்லோரும் சீருடை அணிந்து இருந்தார்கள். அவர்களிடம் நாங்கள் பார்த்தது எல்லாம் வெறும் கண்கள், கண்கள், ஒடுங்கிய கண்கள் மட்டுமே. கொடூரம், மிகக் கொடூரம். எங்களிடம் இருந்த உணவு டப்பாக்களை அந்த மனிதர்களை நோக்கி எறிந்தோம். அடுத்த கணம் ஃபாசிஸ்ட்டுகளை வேட்டையாட முன்னேறினோம். அப்போது வரையிலும் ஆஸ்விட்ஸ் Auschwitz என்ற நாஜி சித்ரவதை முகாம் என்ற ஒன்று இருப்பதே எங்களுக்கு தெரியாது”.

படிக்க :
♦ கொரோனா பெருந்தொற்று : முதலாம் அலையும் பாடமும் || இக்பால் அகமது
♦ சோவியத் யூனியனின் வீரன் விருதுபெற்ற உண்மை மனிதன் !

“என்னால் நடக்க முடியாது, ஏனெனில் என்னால் மூச்சுவிட முடியாது. எனது ஒருநாள் உடற்பயிற்சி என்பது ஒரே ஒரு நிமிடம் மட்டுமே என்றுதான் இருந்தது. மிக மிக மெதுவாக, மிக மிக மிதமாக எனது உடற்பயிற்சியை தொடர்ந்து செய்தேன். ஒரு கட்டத்தில் நான் ரஷ்யாவின் வாள்வீச்சு சாம்பியன் ஆனேன் (1951இல்)”.

000

போலந்தில் நாஜி ஹிட்லரால் கட்டப்பட்டு இருந்த கொலைக்கூடமான ஆஸ்விட்ஸ் வதைமுகாமை 1945 ஜனவரி 27 அன்று சோவியத் செம்படை வீரர்கள் முற்றுகை இட்டு அழித்தனர். சோவியத் டாங்கு படையில் அப்போது முன்னணியில் இருந்த டேவிட் டஷ்மான் ஜெர்மனியின் மியூனிக் நகரில் 4.6.2021 அன்று தான் 98-ஆவது வயதில் காலமானார். அவர் கூறியதுதான் மேலே உள்ளவை.

உண்மையில் அவரே காலத்தின் அடையாளம்தான். இந்த 98 ஆண்டுகளில் உலகத்தின் எத்தனை எத்தனை அரசியல் நகர்வுகளையும் போர்களையும் பார்த்திருப்பார்!

டேவிட் அலெக்சான்ட்ரோவிச் டஷ்மான்

செஞ்சேனை விடுதலை செய்த ஐரோப்பா ஒரு காலத்தில் சோசலிச உலகமாக இருந்தது, அதை பார்த்திருப்பார், 1990-களுக்கு பிறகு சோவியத்தின் சிதைவையும் அதன் விளைவாக நிகழ்ந்த ஐரோப்பிய சோசலிச முகாமின் தகர்வையும் பார்த்திருப்பார். சோவியத்தின் சிதைவு எண்ணற்ற ஐரோப்பிய நாடுகளின் தத்துவார்த்த தழுவல்களையும் ஆட்டிப்படைத்தது எனில், 1945 தொடங்கி 1990 வரை ஒரு 45 வருட காலத்திய அரசியல் அமைப்பு பலமான அஸ்திவாரத்தில் கட்டப்பட்டு இருந்ததா, வெறும் ஊதிப்பெருக்கப்பட்ட உள்ளீடு அற்ற போலி கட்டமைப்பாகவே இருந்ததா, பொலபொலவென உதிர்ந்து போகும் அளவுக்கு, என்பது விவாதத்துக்கு உரியது.

ஐரோப்பாவின் பல நாடுகளில் இருந்தும் ஹிட்லரின் படைகளால் கடத்தப்பட்டும், பிடிக்கப்பட்டும் இருந்த பத்து லட்சத்துக்கும் மேற்பட்ட மக்கள் Auschwitz- Birkenau வதை முகாமில் அடைக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்டார்கள். இவர்களில் பெரும்பகுதியினர் யூத இன மக்கள். பிறர் ஹிட்லரால் போரில் பிடிக்கப்பட்ட சோவியத் படை வீரர்கள், சமூகத்தின் விளிம்பு நிலை மக்கள், குழந்தைகள், பெண்கள், நாடோடிகள், ஓரின சேர்க்கையாளர்கள். 1940 முதல் 1945 வரை இங்கு நடந்த வதைகள், படுகொலைகள் கற்பனைக்கு எட்டாதவை.

சோவியத்தின் டாங்கு படை முகாமின் சுற்றுசுவரை தகர்க்க, சோவியத்தின் 322-ஆவது துப்பாக்கி படை பிரிவு முகாமின் உள்ளே நுழைந்தது. அங்கு அவர்கள் நுழைந்த பின்னர்தான் அது ஒரு சித்ரவதை முகாம் என்பதே அவர்களுக்கு தெரிந்தது, பின்னர் உலகத்துக்கும் தெரிந்தது.

செஞ்சேனையின் ஒரு வீரராக ஜெர்மனிக்கு வரும் முன்னர், டஷ்மான் இரண்டாம் உலகப்போரின் கொடூரமான போர்க்களங்கள் பலவற்றில் பங்கு பெற்றார். புகழ்பெற்ற ஸ்டாலின்கிராட் முற்றுகைப்போர், Kursk போர்க்களம் ஆகியவை முக்கியமானவை. போரின்போக்கில் மூன்றுமுறை மிக மோசமான காயங்களுக்கு உள்ளானார். அவரது நுரையீரலின் ஒரு பகுதி அறுவைசிகிச்சை மூலம் அகற்றப்பட்டது. 12,000 போர் வீரர்கள் கொண்ட அவரது டாங்கு படைப்பிரிவில் போர் முடியும்போது உயிருடன் இருந்தவர்கள் 69 வீரர்கள் மட்டுமே, அவரும் ஒருவர்.

20 கோடி சோவியத் மக்களில் 2 கோடி மக்கள் இரண்டாம் உலகப்போரில் உயிரிழந்தார்கள் என்பது வெறும் உயிரிழப்பு மட்டுமே அல்ல, ஃபாசிச சக்திகளிடம் இருந்து உலகை காக்க அவர்கள் செய்த உயிர்த்தியாகம் என்றுதான் நாம் அதை புரிந்துகொள்ள வேண்டும்.

000

போரின் பிறகு வாள்வீச்சுக்கலையை கற்றுக்கொண்டார். நுரையீரலின் ஒரு பகுதியை அறுவை சிகிச்சையில் இழந்த அவர் இயல்பு வாழ்க்கையை அவ்வளவு எளிதில் மீட்டுவிடவில்லை. ஒரே ஒரு நிமிடம் கூட என்னால் உடற்பயிற்சி செய்ய முடியாது என்று சொன்னவர்தான் தன் மனஉறுதியை மட்டுமே துணையாக கொண்டு மிக மிக மெதுவாக முன்னேறுகின்றார். 1951-இல் ரஷ்யாவின் வாள்வீச்சு சாம்பியன் பட்டத்தை வெல்கின்றார்!

பின்னர் 1952 முதல் 1988 வரை சோவியத் யூனியன் பெண்கள் வாள்வீச்சு அணிக்கு பயிற்சியாளர் ஆக இருந்தார்! 1976 ஒலிம்பிக்கில் தங்கப்பதக்கம், 1980 ஒலிம்பிக்கில் வெள்ளிப்பதக்கம் வென்ற வீராங்கனை Valentina Sidrova உள்ளிட்ட பல புகழ்பெற்ற வீரர்களுக்கு அவர் பயிற்சி அளித்துள்ளார். 90 வயதுக்குப் பிறகும் பயிற்சி அளிப்பதை தொடர்ந்துள்ளார்!

1972 மியூனிக் ஒலிம்பிக் போட்டியின்போது இஸ்ரேலிய விளையாட்டு அணியின் மீது பாலஸ்தீன போராளிகள் நிகழ்த்திய தாக்குதலின்போது மிக அருகில் இருந்து உயிர் தப்பினார். சர்வதேச ஒலிம்பிக் கமிட்டியின் தலைவரான Thomas Bach தன் இரங்கற்செய்தியில் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்: “தலைசிறந்த வாள்வீச்சு பயிற்சியாளர் அவர். ஆஸ்விட்ஸ் வதை முகாமை விடுவித்த வீரர்களில் நம்மிடையே வாழ்ந்த கடைசி வீரர் அவர்”. 1970-இல் மேற்கு ஜெர்மனிக்காகதான் போட்டியில் பங்கு பெற்றபோது டஷ்மான் தனக்கு நட்புரீதியில் ஆலோசனைகள் அளித்ததை நினைவுகூர்கின்றார்.

“டஷ்மான் யூத வம்சத்தை சேர்ந்தவர் என்பதும் இரண்டாம் உலகப்போரில் பங்குபெற்றவர், ஆஸ்விட்ஸ் முகாமை நேரில் கண்டவர் என்பதும் குறிப்பிடத்தக்கது என்றாலும் அவர் அனைத்தையும் புறந்தள்ளி மிகப்பெரிய மனிதாபிமானமிக்க மனிதராக நடந்து கொண்டார், என்னால் அவரது இந்த உயரிய குணத்தை ஒருபோதும் மறக்க முடியாது” என்றும் கூறுகின்றார்.

“வரலாற்றின் சாட்சியங்களாக இருப்போரின் ஒவ்வொருவரின் மறைவும் நமக்கு இழப்புத்தான். அதிலும் டேவிட் டஷ்மானின் இழப்பு என்பது தனிப்பட்ட வேதனையை ஏற்படுத்துகின்றது. நாஜிகளின் மரண ஆட்சியை நேருக்கு நேர் நின்று அழித்தவர்களில் அவர் முன்னணியில் இருந்தார். இரண்டாம் உலகப்போரில் தாங்கள் நேரில் கண்டவற்றை நமக்கு சொல்லிக்கொடுத்தவர்களில் எஞ்சி இருந்தவர்களில் அவரும் ஒருவர்” என ஜெர்மனியின் யூத சமூகத்தவரின் மத்திய கவுன்சிலின் முன்னாள் தலைவரான Charlotte Knobloch தன் இரங்கற்செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.

000

பால்டிக் கடலோரம் வடக்கு போலந்தில் உள்ள Danzig என்ற நகரில் பிறந்தவர் அவர். போருக்குப்பிறகு சோவியத் ஒன்றியத்தின் நாற்பதுக்கும் மேற்பட்ட வீரப் பதக்கங்கள், பாராட்டு சான்றுகளை பெற்றவர். ஜெர்மன்-சோவியத் போரில் ஈடுபட்டோருக்கு அளிக்கப்படும் உயரிய The Order of The Patriotic War விருதைப் பெற்றவர். 60 லட்சம் மக்களின் மரணத்திற்கு காரணமாக இருந்த ஹிட்லரின் ஹோலோகாஸ்ட் எனப்படும் பெரும் இன அழிப்பு குறித்து பள்ளி மாணவர்களுக்கு எடுத்துரைப்பது, தனது பெருமைக்குரிய பதக்கங்களை அணிந்து கூட்டங்கள், கலந்துரையாடல்களில் பங்கேற்பது என சுறுசுறுப்பான வாழ்க்கை வாழ்ந்து கொண்டு இருந்தார்.

ஆஸ்திரியாவில் சில ஆண்டுகள் வாழ்ந்த பின், 1996 முதல் 4.6.2021 வரை ஜெர்மனியின் மியூனிக் நகரில் வாழ்ந்தார். அவர் மனைவி Zoja பல வருடங்களுக்கு முன் மறைந்தார்.

படிக்க :
செருப்புக் காலிகளை சுட்டு வீழ்த்திய சோவியத் படையணிகள் !

சோவியத் யூனியனுக்கு வேலை தேடிச் சென்ற அமெரிக்கர்கள் ! | கலையரசன்

ஜெர்மனி சரண் அடைந்த 1945 மே 9ஆம் நாள் வெற்றித்திருநாள் Victory Day என சோவியத் அரசு அறிவித்து கொண்டாடியது, இப்போதும் தொடர்கின்றது. அந்த நாளில் ரஷ்ய ஜனாதிபதி புடின் தனை அழைத்து வாழ்த்துவதை வழக்கமாக கொண்டு இருந்தார் என டஷ்மான் சொல்வார்.

டேவிட் டஷ்மான்! அவர் காலமானார் என்பது சம்பிரதாயமான அஞ்சலி அல்ல, அவர் மானிட குல விடுதலை வரலாற்றின் செதுக்கப்பட்ட பக்கங்களில் ஒன்றென நிரந்தரமாக வாழ்வார்.

மு இக்பால் அகமது

முகநூலில் : Iqbalahamed Iqbal

disclaimer

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க