பரீஸ் பொலெவோய்

உண்மை மனிதனின் கதை | நான்காம் பாகம் | அத்தியாயம் – 04a

“கவனியுங்கள்! நான் சிறுத்தை மூன்று, நான் – சிறுத்தை மூன்று, நான் – சிறுத்தை மூன்று. வலப்புறம் ‘செருப்புக் காலிகள்’, ‘செருப்புக் காலிகள்’!”.

முன்னே எங்கோ கமாண்டரது விமானத்தின் சிறுவரையுரு அலெக்ஸேய்க்குப் புலனாயிற்று. வரையுரு அசைந்தாடிற்று. “நான் செய்கிற படிச் செய்” என்று இதுகுறித்தது.

மெரேஸ்யெவ் தனது குழுவினருக்கு அதே உத்தரவை அளித்தான். அவன் பின்னே பார்த்தான். பின்னோடி அவனை விட்டு விலகாமல் அருகாகத் தொடர்ந்தான் பெத்ரோவ். சபாஷ்!

“உறுதியாயிரு, தம்பி! என்று அவனைக் கத்தி உற்சாகப்படுத்தினான் மெரேஸ்யெவ்.”

“உறுதியாயிருக்கிறேன்!” என்ற பதில் குழப்பத்துக்கும் கீச்சொலிகளுக்கும் இரைச்சலுக்கும் ஊடாக அவனுக்குக் கேட்டது.

“நான் – சிறுத்தை மூன்று, நான் சிறுத்தை மூன்று. என்னைத் தொடர்க!” என்ற உத்தரவு ஒலித்தது.

பகை விமானங்கள் அருகே இருந்தன. ஜெர்மானியருக்குப் பிடித்த இரட்டைத் தாரா வரிசையில் அணிவகுத்து சோவியத் விமானங்களுக்கு சிறிது கீழே பறந்தன. “யூ-87” ரக ஒற்றை எஞ்சின் முக்குளி வெடி விமானங்கள். இவற்றின் சக்கரச் சட்டங்கள் மடிந்து கொள்ளக் கூடியவை அல்ல. பறக்கும் போது இந்தச் சட்டங்கள் விமானத்தின் வயிற்றுக்கு அடியில் தொங்கும். சக்கரங்கள் காற்று வழிவு மூடியினால் காக்கப்பட்டிருக்கும். விமானத்தின் வயிற்றிலிருந்து மரவுரிச் செருப்புக்கள் அணிந்த கால்கள் தொங்குவது போலத் தோன்றும். எனவேதான் எல்லாப் போர்முனைகளிலும் விமானிகள் வழக்கில் இவற்றுக்குச் “செருப்புக்காலிகள்” என்ற பெயர் சூட்டப்பட்டிருந்தது.

போலந்து, பிரான்ஸ், ஹாலாந்து, டென்மார்க், பெல்ஜியம், யூகோஸ்லோவியா ஆகியவற்றிற்கு மேலே நடந்த சண்டைகளில் வழிப்பறிக் கொள்ளைக்காரர்களுக்குரிய அபகீர்த்தியைப் பெற்று விட்ட இந்தப் பிரபல முக்குளி வெடி விமானங்கள் குறித்து எத்தனையோ பயங்கரக் கதைகள் போர்த் தொடக்கத்தில் உலகச் செய்தித்தாள்கள் அனைத்தாலும் பரப்பப்பட்டிருந்தன. ஆனால் சோவியத் யூனியனின் பரந்த வானில் அவை மிகு விரைவிலேயே பழையதாகி விட்டன. பற்பல சண்டைகளில் சோவியத் விமானிகள் இவற்றின் பலவீமான இடங்களை சோதித்து அறிந்து கொண்டார்கள். சிறப்பான திறமை எதுவும் இன்றியே வேட்டையாடக் கூடிய காட்டுக் கோழிகளையோ முயல்களையோ போன்றே “செருப்புக் காலிகளைத்” தாக்கி வீழ்த்துவதும் தேர்ந்த சோவியத் விமானிகளால் அற்பமாக மதிக்கப்பட்டது.

காப்டன் செஸ்லோவ் தமது ஸ்குவாட்ரனை நேரே பகை விமானங்களை நோக்கிச் செலுத்தாமல் ஒதுக்குப் புறமாக இட்டுச் சென்றார். முன்ஜாக்கிரதையுள்ள காப்டன் “சூரியனுக்கு அடியில்” போய், கண்களை குருடாக்கும் அதன் கிரணங்களின் முகமூடி மறைவில் பார்வைக்குப் புலப்படாது இருந்து திடீரெனப் பாய்ந்து தாக்கத் திட்டமிடுகிறார் என மெரேஸ்யெவ் தெரிந்து கொண்டான். அவனுக்குச் சிரிப்பு வந்தது. இவ்வளவு சிக்கலான பாய்ச்சல் காட்டுவது “செருப்புக் காலிகளுக்கு” மட்டுமீறிய மரியாதை செய்வது ஆகாதா? ஆனால் ஜாக்கிரதை கெடுதல் அல்ல. மெரேஸ்யெவ் மறுபடி பின்னேப் பார்த்தான். பெத்ரேவ் தொடர்ந்து வந்து கொண்டிருந்தான். வெண் முகிலின் பின்னணியிலிருந்து அவனது விமானம் நன்றாக தென்பட்டது.

இப்போது பகைவிமானங்கள் சோவியத் விமானங்களின் வலப்புறம் தாழப் பறந்தன. ஜெர்மன் விமானங்கள் அழகாக, நேர் வரிசையாக, கண்ணுக்குத் தெரியாத நூல்களால் இணைக்கப்பட்டவை போலப் பறந்தன. அவற்றின் மேற்பகுதிகள் மேலிருந்து பட்ட வெயிலொளியில் கண்கள் கூசுமாறு மின்னின.

“…சிறுத்தை மூன்று. தாக்கு!” கமாண்டரது வாக்கியத்தின் துணுக்கு மெரேஸ்யெவின் காதுகளில் பாய்ந்தது.

செஸ்லோவும் அவருடைய பின்னோடிகளும் பனிக்கட்டி மலையிலிருந்து வெறியுடன் வழுகுவது போல, வலப்புறம் உயரேயிருந்த பகையணியின் விலாப்புறத்தில் பாய்ந்ததை அவன் கண்டான். எல்லாவற்றிலும் அருகிலிருந்த “செருப்புக்காலி” மீது குண்டு வரிசைகள் தாக்கின. அது உடனே குப்புற வீழ்ந்தது. செஸ்லோவும் அவருடைய பின்னோடிகளும் இவ்வாறு ஏற்பட்ட இடைவெளியில் புகுந்து ஜெர்மானிய அணியைக் கடந்து பறந்து போய் விட்டார்கள். ஜெர்மன் விமான வரிசை அவர்கள் பின்னே நெருக்கமாயிற்று. “செருப்புக்காலிகள்” முன்போலவே சிறந்த ஒழுங்குடன் தொடர்ந்து சென்றன.

தனது அழைப்புக் குறிப்பெயரைச் சொல்லிவிட்டு, “தாக்கு!” என்று கத்த வாயெடுத்தான் மெரேஸ்யெவ். ஆனால் உணர்ச்சிப் பெருக்குக் காரணமாக அவன் குரலிலிருந்து “தா-ஆ-ஆ!” என்ற சீழ்கையொலி மட்டுமே வெளிப்பட்டது. அதற்குள் அவன் ஒழுங்காகப் பறந்த பகை விமான அணி தவிர வேறு எதையும் காணாதவனாகக் கீழ் நோக்கிப் பாய்ந்தான். செஸ்லோவால் வீழ்த்தப்பட்ட விமானத்தின் இடத்தில் இப்போது பறந்த ஜெர்மன் விமானத்தை அவன் தன் இலக்காகக் கொண்டான். அவனுடைய காதுகளில் பொய்யென்ற ஒலி கனத்தது. இருதயம் தொண்டை வழியாக வெளியே வந்துவிடும் போல் இருந்தது. பகை விமான இலக்கு மையத்துக்கு வந்ததும் மெரேஸ்யெவ் சுடு விசைகளை இருகைப் பெரு விரல்களாலும் பற்றியவாறு அதை நோக்கிப் பாய்ந்தான். சாம்பல் நிறத் தூவியடர்ந்த கயிறுகள் அவனுக்கு வலப்புறம் பளிச்சிட்டனபோல் இருந்தது. ஓகோ! சுடுகிறார்கள்! குறி தவறிவிட்டார்கள். மறுபடியும், இன்னும் அருகாக. மெரேஸ்யெவ் சேதமின்றித் தப்பிவிட்டான். பெத்ரோவோ? அவனும் சேதமடையவில்லை. அவன் இடப்புறம். அப்பால் விலகிவிட்டான். பையன் கெட்டிக்காரன்! இலக்குக் காட்டியின் மையத்தில் “செருப்புக்காலியின்” சாம்பல் நிறப் பக்கப் பகுதி பெரிதாகிக் கொண்டுபோயிற்று. மெரேஸ்யெவின் விரல்கள் சுடுவிசைகள் சில்லென்ற அலுமினியத்தை உணர்ந்தன. இன்னும் கொஞ்சம்…..

தனது விமானத்துடன் தான் முற்றிலும் கலந்து ஒன்றாகி விட்டதை அப்போது தான் அலெக்ஸேய் முற்றிலும் உணர்ந்தான். விமான எஞ்சின் தன் நெஞ்சில் துடிப்பது போல அவனுக்குப்பட்டது. விமான இறக்கைகளையும் வால் சுக்கானையும் அவன் தன் உடல், உள்ளம் அனைத்தாலும் உணர்ந்தான். பாங்கற்ற பொய்க்கால்கள் கூட நுண்ணுணர்வு பெற்றுவிட்டன போன்றும், வெறிப் பாய்ச்சல் கொண்ட இயக்கத்தில் விமானத்துடன் தான் ஒன்றாகிவிடுவதற்குத் தடையாக இல்லை போலவும் அவனுக்குத் தோன்றியது. பாசிஸ்ட் விமானம் இலக்குக் காட்டியின் மையத்திலிருந்து நழுவியது, பின்பு அகப்பட்டுவிட்டது. அதை நோக்கி நேரே பாய்ந்த படியே மெரேஸ்யெவ் சுடுவிசையை அழுத்தினான். வெடியோசைகளை அவன் கேட்கவில்லை. குண்டு வரிசைகளையும் அவன் காணவில்லை.

எனினும் குண்டுகள் இலக்கில் பட்டுவிட்டன என்பதை உணர்ந்தான். எனவே பகை விமானம் விழுந்து விடும், தான் அதனுடன் மோத நேராது என்று உறுதியுடன் நிற்காமல் நேரே பகை விமானத்தை நோக்கிப் பறந்தான். இலக்குக் காட்டியிலிருந்து விலகிவிட்ட மெரேஸ்யெவ் பக்கத்தில் இன்னும் ஒரு விமானம் அடிபட்டு விழுவதைக் கண்டு வியப்படைந்தான். அதையும் அவனே தற்செயலாக அடித்து வீழ்த்திவிட்டானா என்ன? இல்லை. இது பெத்ரோவின் வேலை. அவன் வலப்புறமிருந்து திரும்பினான். சபாஷ், புதியவனே! தனது இளம் நண்பனின் வெற்றியால் மெரேஸ்யெவ் தன் சொந்த வெற்றியால் அடைந்ததைக் காட்டிலும் அதிகக் களிப்பு அடைந்தான்.

இரண்டாவது அணி ஜெர்மன் விமான வரிசையில் ஏற்பட்ட பிளவு வழியாகப் பறந்து போயிற்று. ஜெர்மன் விமான வரிசையில் அதற்குள் பெருங் குழப்பம் ஏற்பட்டது. இரண்டாவது வரிசை விமானங்களை ஓட்டியவர்கள் அனுபவம் குறைந்த விமானிகள் போலும். அவை சிதறி ஓடின, வரிசை கலந்து விட்டது. செஸ்லோவ் அணியின் விமானங்கள் இவ்வாறு சிதறிக் கலைந்த “செருப்புக் காலிகளுக்கு” இடையே பாய்ந்தன, பகை விமானங்கள் தங்கள் சொந்தக் காப்பகழ்கள் மீதே வெடிகுண்டுப் பெட்டிகளை மளமளவென்று காலியாக்குமாறு செய்தன. ஜெர்மானியர் தங்கள் காப்பு அரண்களைக் குண்டுகளால் தகர்க்கும் படி செய்வதே காப்டன் செஸ்லோவ் கணக்கிட்டுத் தயாரித்திருந்த திட்டம். சூரியனுக்கு அடியில் சென்றது இதற்கு ஒத்தாசையாக இருந்தது.

ஆனால் ஜெர்மன் விமானங்களின் முதல் வரிசை மறுபடி குறுகி ஒன்று சேர்ந்துவிட்டது. “செருப்புக்காலிகள்” சோவியத் டாங்கிகள் உடைத்துப் புகுந்த இடத்தை நோக்கி முன்னேறின. மூன்றாவது சோவியத் சண்டை விமான அணியின் தாக்கு பயன் அளிக்கவில்லை. ஜெர்மானியர் ஒரு விமானத்தை கூட இழக்கவில்லை. ஒரு சோவியத் சண்டை விமானம் பகைக் குண்டுத்தாக்குக்கு இலக்காகி விழுந்துவிட்டது. டாங்கித் தாக்கு தொடங்கிய இடம் அருகே வந்துவிட்டது. மறுபடி உயரே எழ நேரமில்லை. ஆபத்தை மதியாமல் கீழிருந்துத் தாக்குவது என்று செஸ்லோவ் தீர்மானித்தார். மெரேஸ்யெவ் மனதுக்குள் அவரை ஆதரித்தான். செங்குத்துப் பாய்ச்சலில் “லா-5 ரக விமானத்திற்கு உள்ள போர்ப் பண்புகளைப் பயன்படுத்திக் கொண்டு வயிற்றில் ‘குத்த’ அவனுக்கே ஆசையுண்டாயிற்று. முதல் அணி மேல் நோக்கிப் பாய்ந்தது. பீரங்கிக் குண்டுகள் ஊற்றுக்களின் கூரிய பீச்சு நீர்த் தாரைகள் போல கிழித்துச் சென்றன. இரண்டு ஜெர்மன் விமானங்கள் சரிந்து விழுந்தன. ஒன்று இரு பாதிகளாக வகிரப்பட்டது போலும், திடீரென வானில் உடைந்து சிதறியது. மெரேஸ்யெவின் விமான எஞ்சின் அதன் வாலினால் நசுக்கப்படாமல் மயிரிழையில் தப்பிற்று..

“பின் தொடர்!” என்று கத்தினான் மெரேஸ்யெவ். பின்னோடி விமானத்தின் நிழலுருவை ஒரு பார்வை பார்த்து விட்டு இயக்கு விசைப்பிடியைத் தன் பக்கம் இழுத்தான்.

படிக்க:
சிறுவன் சுஜித் மரணம் உணர்த்துவது என்ன ? | தோழர் ராஜு உரை | காணொளி
வாட்சப் மூலம் செயல்பாட்டாளர்களை உளவு பார்த்த இந்திய அரசு !

தரை குப்புறக் கவிழ்ந்தது. கனத்த அடி அவனை இருக்கையில் நெரித்து அதோடு அழுத்தியது. வாயிலும் உதடுகளிலும் இரத்தத்தின் சுவையை அவன் உணர்ந்தான். அவன் விழிகளில் செந்திரை படர்ந்தது. விமானம் அநேகமாகச் செங்குத்தாய் நின்றவாறு மேல் நோக்கிப் பாய்ந்தது. இருக்கையின் முதுகுப் பாகத்தில் கிடந்தபடியே மெரேஸ்யெவ் இலக்குக் காட்டியில் “செருப்புக்காலியின்” புள்ளிகளிட்ட வயிற்றையும் பருத்த சக்கரங்களை மூடியிருந்த நகைப்புக்கிடமான “செருப்புகளையும்” அவற்றில் ஒட்டியிருந்த விமானநிலையக் களிமண் கட்டிகளைக் கூடக் கண்டான்.

இரண்டு சுடுவிசைகளையும் அவன் அழுத்தினான். அவன் சுட்ட குண்டுகள் பெட்ரோல் கலத்திலா, எஞ்சினிலா, வெடி குண்டுப் பொட்டிலோ எதில் பட்டனவோ அவனுக்குப் புரியவில்லை. ஆனால் வெடிப்பின் பழுப்புப்படலத்தில் ஜெர்மன் விமானம் மறைந்துவிட்டது.

(தொடரும்)

முந்தைய பகுதிகளை படிக்க: உண்மை மனிதனின் கதை

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க