உண்மை மனிதனின் கதை | ஆசிரியரின் பின்னுரை – 03

“நம்பிக்கைத் துரோகம் செய்து சோவியத் யூனியன் மீது நீங்கள் படையெடுத்தீர்கள். அதன் விளைவாக ஜெர்மனி முறியடிக்கப்பட்டுப் படுதோல்வி அடைந்தது. இவ்வாறு செய்ததன் மூலம் நீங்கள் மிகப் பெரிய குற்றம் இழைத்து விட்டீர்கள் என்பதை ஒப்புக் கொள்கிறீர்களா?” என்று கோயெரிங்கிடம் கேட்டார் சோவியத் தரப்பு வழக்குரைஞர் ரொமான் ருதேன்கோ.

“இது குற்றம் அல்ல, அழிவு விளைவிக்கும் தவறு” என்று விழிகளைக் கடுப்புடன் தாழ்த்திக் கொண்டு கம்மிய குரலில் விடையிறுத்தான் கோயெரிங்க். ”ஒன்று மட்டும் நான் ஒப்புக் கொள்ள முடியும்: நாங்கள் ஆய்ந்தோய்ந்து பாராமல் காரியம் செய்துவிட்டோம். ஏனெனில் எத்தனையோ விஷயங்களை நாங்கள் அறியாதிருந்தோம், பலவற்றை அனுமானிக்கவே இயலாதிருந்தோம் என்பது போர் நடக்கையில் எங்களுக்கு விளங்கிற்று. முதன்மையாக சோவியத் ருஷ்யர்களை நாங்கள் அறியவும் இல்லை. அவர்கள் எங்களுக்குப் புதிராக இருந்தார்கள், இருக்கிறார்கள். சோவியத் நாட்டின் உண்மையான போர் ஆற்றலை மிக மிகச் சிறந்த உளவுநிறுவனம் கூடக் கண்டறிய முடியாது. நான் குறிப்பிடுவது பீரங்கிகள், விமானங்கள், டாங்கிகள் ஆகியவற்றின் எண்ணிக்கையை அல்ல. இதை நாங்கள் கிட்டத்தட்டச் சரியாக அறிந்திருந்தோம். இயந்திரத் தொழிலின் திறனையும் இயங்கு ஆற்றலையும் நான் குறிப்பிடவில்லை. நான் கூறுவது மனிதர்களைப் பற்றி. ருஷ்ய மனிதன் வெளி நாட்டினருக்கு எப்போதுமே விளங்காத புதிராக இருந்து வந்திருக்கிறான். நெப்போலியனும் ருஷ்யனை புரிந்து கொள்ளவில்லை. நெப்போலியன் செய்த தவற்றையே திரும்பச் செய்தோம், அவ்வளவுதான்.”

“விளங்காப் புதிரான ருஷ்ய மனிதனை”, “சோவியத் நாட்டின் உண்மையான போர் ஆற்றலைப்” பற்றி கோயெரிங் வேறு வழியின்றி வெளிப்படையாக கூறியதை நாங்கள் பெருமையுடன் செவிமடுத்தோம். எவனது திறமையும் மேதையும் தியாகமும் வீரமும் போர் நாட்களில் உலகம் அனைத்தையும் பிரமிக்கச் செய்தனவோ, அந்தச் சோவியத் மனிதன் இந்த கோயெரிங்க் போன்ற பேர்வழிகளுக்கு நாசம் விளைவிக்கும் புதிராக இருந்தான், இருந்து வருகிறான் என்பதை நம்ப முடிந்தது. ஜெர்மானியர் “ஆளும் வர்க்கத்தினர்” என்ற ”அவலச் சித்தாந்தத்தைக்” கண்டுபிடித்தவர்கள், சோஷலிச நாட்டில் பிறந்து வளர்ந்த மனிதனின் ஆன்மாவையும் ஆற்றலையும் புரிந்து கொள்வது எங்கே? அப்போது நான் சட்டென அலெக்ஸேய் மாரெஸ்யோவை நினைவு கூர்ந்தேன்.

ஓக் பலகை முகப்பிட்ட இந்த ஆடம்பரமற்ற ஹாலில் அவனது பாதி மறந்துவிட்ட உருவம் பளிச்சென, இடைவிடாது என் முன் ஒளிர்ந்தது. கெய்த்தலின் தரைப் படையையும் கோயெரிங்கின் விமானப் படையையும் தகர்த்து நொறுக்கி, ரேடரின் போர்க்கப்பல்களைக் கடலின் அடித்தரையில் புதைத்து, தங்கள் விறல்மிக்க அடிகளால் ஹிட்லரின் கொள்ளைக்கார அரசைத் தூள் தூளாக்கிய கோடானுகோடி சாதாரண சோவியத் மக்களில் ஒருவனைப் பற்றிய கதையை இங்கேயே, நாசிசத்தின் வளர்ப்புப் பண்ணையாக விளங்கிய இந்த நியூரம்பெர்க் நகரிலேயே எழுதிவிட எனக்கு ஆசை உண்டாயிற்று.

மஞ்சள் அட்டை போட்ட நோட்டுப் புத்தகங்களை (இவற்றில் ஒன்றின் மேல் “மூன்றாவது ஸ்குவாட்ரனின் போர்ப் பறப்புகள் பற்றிய நாட்குறிப்பு” என்ற தலைப்பு மெரேஸ்யெவின் கைப்பட எழுதப்பட்டிருந்தது) நியூரம்பெர்க் நகருக்கும் நான் உடன் கொண்டு வந்திருந்தேன் . விசாரணைமன்ற அமர்விலிருந்து திரும்பியதும் பழைய குறிப்புக்களைப் படித்துத் தெளிவுபடுத்திக் கொள்வதில் முனைந்தேன். அலெக்ஸேய் மெரேஸ்யெவின் கதையை அவனுடைய தோழர்களிடமிருந்து கேட்டு அறிந்தவற்றையும் அவனது சொற்களையும் ஆதாரமாகக் கொண்டு எழுத முயன்றேன்.

எத்தனையோ விவரங்களை உரிய காலத்தில் குறித்து வைத்துக் கொள்ள எனக்கு இயலவில்லை. இந்த நான்கு ஆண்டுகளில் எத்தனையோ விஷயங்களை அலெக்ஸேய் மெரேஸ்யெவ் அப்போது சொல்லாமல் விட்டுவிட்டான். அரைகுறை விவரங்களை ஊகித்து இட்டு நிரப்ப நேர்ந்தது. அன்று இரவு அலெக்ஸேய் தன் நண்பகளைப் பற்றி எவ்வளவோ கனிவுடனும் விளக்கமாகவும் விவரித்தான். ஆனால் அவர்களது உருவச் சித்திரங்கள் காலப்போக்கில் நினைவிலிருந்து அழிந்து விட்டன. இவற்றைப் புதிதாக தீட்டவேண்டியிருந்தது. மெய் விவரங்களைக் கண்டிப்பாகப் பின்பற்ற இங்கே எனக்கு வாய்ப்பு இல்லாமையால் நான் கதாநாயகனின் குலப் பெயரைச் சிறிது மாற்றினேன். அவனுக்கு வழித்துணையாக இருந்தவர்களுக்கு, அருஞ்செயலை நிறைவேற்றும் கடினமான பாதையில் அவனுக்கு உதவி செய்தவர்களுக்குப் புதுப் பெயர்கள் இட்டேன். இந்த நவீனத்தில் தங்களை கண்டுகொண்டால் அவர்கள் என்மேல் மனத்தாங்கல் கொள்ளாதிருப்பார்களாக.

நவீனத்துக்கு “உண்மை மனிதனின் கதை” என்று பெயரிட்டேன். ஏனெனில் அலெக்ஸேய் மெரேஸ்யெவ் தான் உண்மையான சோவியத் மனிதன். எவனை கெர்மன் கோயெரிங்க் ஒருபோதும் புரிந்து கொள்ளவில்லையோ, வரலாற்றின் படிப்பினை மறந்து விடும் போக்குள்ளவர்கள், நெப்போலியனும் ஹிட்லரும் போன வழியில் செல்ல இப்போதுங்கூட இரகசியமாக ஆசைப்படுவர்கள் அனைவரும் எவனை இன்றளவும் புரிந்து கொள்ளவில்லையோ, அந்த சோவியத் மனிதனே அலெக்ஸேய் மெரேஸ்யெவ்.

படிக்க :
அம்பேத்கர் பவுத்தரானது | ஈரான் – அமெரிக்கா சண்டை | ரசிய பொருளாதாரம் | கேள்வி – பதில் !
மேட்டுப்பாளையம் : இது தீண்டாமைச் சுவர் இல்லை என்றால் வேறு எதுதான் தீண்டாமைச் சுவர் ?

இவ்வாறு பிறந்தது இந்த “உண்மை மனிதனின் கதை.” புத்தகம் எழுதப்பட்டு அச்சிடத் தயாரானதும், அது வெளியாவதற்க்கு முன் கதாநாயகனுக்கு அதைப் படித்துக் காட்ட எனக்கு விருப்பம் உண்டாயிற்று. ஆனால் முடிவற்ற போர்முனைப் பாதைகளின் சிடுக்குப் பின்னலில் எங்கோ அவன் காண முடியாதவாறு மறைந்து விட்டான். எங்கள் இருவருக்கும் பரிச்சயமான விமானி நண்பர்களிடமும் அதிகாரபூர்வமான வட்டாரங்களிலும் விசாரித்துப் பார்த்தேன். அப்படியும் அலெக்ஸேய் மெரேஸ்யெவைத் தேடிக் காண எனக்கு உதவ அவர்களால் முடியவில்லை .

நவீனம் சஞ்சிகையில் வெளியாகிவிட்டது. அப்போது ஒரு நாள் காலை என் வீட்டு டெலிபோன் மணி அடித்தது.

“நான் உங்களை சந்திக்க விரும்புகிறேன்” என்றது கரகரத்த ஆண்மைக் குரல். அது பழக்கமானது போலிருந்தது, ஆனால் யாருடையது என்பது நினைவில்லை.

“பேசுவது யாரோ?”

“மேஜர் அலெக்ஸேய் மெரேஸ்யெவ்.”

சில மணி நேரத்துக்குப் பின் அவன் என் வீட்டுக்கு வந்தான். முன் போலவே குதூகலமும் சுறுசுறுப்பும் செயலார்வமும் அவனிடம் பொங்கின. ஒரு சிறிது சாய்ந்தாடும் கரடி நடை நடந்தான். நான்கு போர்க்கால ஆண்டுகள் அவனிடம் அநேகமாக ஒரு மாறுதலையும் விளைவிக்கவில்லை.

“நேற்று நான் வீட்டில் உட்கார்ந்து ஏதோ படித்துக் கொண்டிருந்தேன். வானொலி முழங்கிக் கொண்டிருந்தது. ஆனால் என்ன ஒலிபரப்பப்படுகின்றது என்று கவனிக்காமலே நான் படிப்பில் ஆழ்ந்திருந்தேன். திடீரென்று அம்மா கிளர்ச்சி பொங்க ஓடிவந்து வானொலிப் பெட்டியைக் காட்டி, “கேள் மகனே, உன்னைப் பற்றியது தான் இந்த நிகழ்ச்சி” என்றாள். நான் உற்றுக் கேட்டேன். உண்மைதான். இந்த நிகழ்ச்சி என்னைப் பற்றியதே. எனக்கு நேர்ந்தது எல்லாம் விரிக்கப்பட்டது. நான் வியப்படைந்தேன், என்னைப் பற்றி இதை யார் எழுதியிருக்க முடியும் என்று. இதைப் பற்றி நான் யாருக்குமே சொன்னதில்லையே என்று நினைத்தேன். சட்டென்று நினைவு வந்தது நாம் அர்யோல் நகருக்கு அருகே சந்தித்ததும், நிலவறையில் இரவு முழுவதும் உங்களை உறங்கவிடாமல் நான் பேசிக் கொண்டிருந்ததும்… இது எப்போதோ, அநேகமாக ஐந்து ஆண்டுகளுக்கு முன் நடந்ததாயிற்றே என்று எண்ணினேன். நவீனத்தின் ஒரு பகுதி படிக்கப்பட்டு, இயற்றியவர் பெயர் கூறப்பட்டதும் உங்களைத் தேடி காண்பது என்று தீர்மானித்தேன்……”

இவ்வாறு அவன் மளமளவென்று விவரித்தான். ஓரளவு கூச்சமுள்ள, மலர்ந்த புன்னகை, மெரேஸ்யெவுக்கு இயல்பான அதே புன்னகை அவன் முகத்தில் தவழ்ந்தது.

நெடுங்காலமாக ஒருவரையொருவர் காணாத இராணுவத்தினர் மறுபடி சந்திக்கும் போது பேசிக் கொள்வது போலவே நாங்கள் போர்களைப் பற்றியும் அதிகாரிகளைப் பற்றியும் இருவருக்கும் பழக்கமான இராணுவ அதிகாரிகள் பற்றியும் வெகு நேரம் உரையாடினோம். அலெக்ஸேய் மெரேஸ்யெவ் தன்னைப் பற்றி முன்போலவே விருப்பமின்றி விவரித்தான். அவன் இன்னும் நிறைய வெற்றிகரமாகப் போர் புரிந்தான் என்பதைத் தெரிந்து கொண்டேன். 1943 முதல் 1945 வரை நடந்த தாக்குப் போர் நடவடிக்கைகளில் அவன் தன் ரெஜிமென்டுடன் பங்காற்றினான். எங்கள் முந்திய சந்திப்புக்குப் பிறகு அவன் அர்யோல் அருகே மூன்று பகை விமானங்களை வீழ்த்தினான். அப்புறம் பால்டிக் பிரதேசப் போரில் பங்கு கொண்டு இன்னும் இரண்டு பகை விமானங்களைச் சுட்டுத் தள்ளினான். சுருங்கச் சொன்னால், அவன் தன் கால்களின் இழப்புக்கு ஈடாகப் பகைவர்களிடம் வட்டியும் முதலுமாக கணக்குத் தீர்த்துக் கொண்டான். அரசாங்கம் அவனுக்கு “சோவியத் யூனியனின் வீரன்” என்ற பட்டம் அளித்து கௌரவித்தது.

அலெக்ஸேய் மெரேஸ்யெவ் தன் குடும்ப விஷயங்களையும் சொன்னான். இந்த அம்சத்தில் நவீனத்தை இன்பியலாக முடிக்க வாய்த்தது குறித்து மகிழ்கிறேன்.

போர் முடிந்த பிறகு அவன் காதலித்த மங்கையை மணந்து கொண்டான். அவர்களுக்கு வீக்தர் என்ற ஒரு மகன் இருக்கிறான். மெரேஸ்யெவின் முதிய தாய் கமீஷினிலிருந்து மகனிடம் வந்து இப்போது மகனையும் மருமகளையும் கண்டு ஆனந்தித்துக் கொண்டு, பேரன் வீக்தரைச் சீராட்டியவாறு வாழ்ந்து வருகிறாள்.

இவ்வாறு, உண்மையான சோவியத் மனிதன் மெரேஸ்யெவின் வரலாற்றை, அயல் நாட்டில் எழுதிய இந்த நவீனத்தை வாழ்க்கையே தொடர்ந்து எழுதிவிட்டது.

மாஸ்கோ , நவம்பர் 28, 1950.

* முற்றும் *

(தொடரும்)

முந்தைய பகுதிகளை படிக்க: உண்மை மனிதனின் கதை

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க