கேள்வி : // அம்பேத்கர் புத்த மதத்திற்கு மாறிய பிறகு அனைத்து தலித் தலைவர்களும் புத்தமதத்தின் சித்தாந்தங்களை தலித் மக்களுக்கு கற்பிக்காதது ஏன்? இதுதான் உண்மையிலேயே நமது தலித் தலைவர்களின் தோல்வி. ஆகவே தலித் மக்களின் முன்னேற்றம் குறித்த எதிர்காலம் என்ன?//
குபேந்திரன்
அன்புள்ள குபேந்திரன்,
அம்பேத்கர் புத்தமதத்திற்கு மாறிய வரலாற்றுப் பின்னணியை, கீழ்க்கண்ட கட்டுரை விளக்குகிறது. படித்துப் பாருங்கள்!
தாழ்த்தப்பட்ட மக்களின் விடுதலைக்காக தளராது பாடுபட்ட அம்பேத்கர் தனது முயற்சிகள் தோல்வியுற்று தளர்ந்த இறுதி காலத்தில்தான் புத்த மதத்திற்கு மாறுகிறார். அது “நான் இந்துவாகச் சாகமாட்டேன்” எனும் எதிர்ப்பின் ஒரு பகுதி.
இருபத்தைந்து நூற்றாண்டுகளுக்கு முன்னர் தோன்றிய புத்த மதம் இருபத்தோராம் நூற்றாண்டின் பிரச்சினைகளுக்கு தீர்வல்ல. மனிதனின் ஆன்மீக வளர்ச்சிக்கு மதம் தேவை எனும் கருத்தைக் கொண்டிருந்த அம்பேத்கர், பார்ப்பனியத்தை எதிர்த்து தோன்றிய புத்த மதத்தை தெரிவு செய்தார்.
தாழ்த்தப்பட்ட மக்களின் சமூக, பொருளாதார, அரசியல் விடுதலைப் போராட்டத்தின் மூலம்தான் அவர்களை தீண்டாமைக் கொடுமைகளிலிருந்தும், ஆதிக்க சாதி அடக்குமுறைகளிலிருந்தும் விடுதலை செய்ய முடியும். அது மதம் எனும் நம்பிக்கையின் பாற்பட்டதல்ல. தலித் அரசியல் கட்சிகளைப் பொறுத்தவரை வாக்கு அரசியலில் சில தொகுதிகளைப் பெறுவதே பிரயத்தனமாக இருக்கிறது. அதன் பொருட்டு அவர்கள் பாஜக, காங்கிரசுடனோ இல்லை அதிமுக, திமுகவுடனோ கூட்டணி வைத்துக் கொள்கிறார்கள். அவர்களது பிரச்சினை மதம் அல்ல, தேர்தலில் வெற்றி பெறுவது.
பார்ப்பனியத்தின் கொடுங்கோன்மைக்கு எதிராக மதம் மாறுவது என்பது ஒரு எதிர்ப்பின் அடையாளம் மட்டுமே. அதுவே சமூக ரீதியான விளைவுகளை தோற்றுவிப்பதில்லை. வர்க்க ரீதியான உழைக்கும் மக்களின் அரசியல் – சமூகப் போராட்டம் எந்த அளவுக்கு வீச்சாக நடைபெறுகிறதோ அந்த அளவுக்கு தாழ்த்தப்பட்ட மக்களின் எதிர்காலம் ஒளிமயமாய் இருக்கும்.
பொருளாதார அடக்குமுறை அனைத்து சாதி ஏழைகளையும் பாதிக்கிறது. சமூக ரீதியான அடக்குமுறை தாழ்த்தப்பட்ட மக்களை மட்டும் பாதிக்கிறது. இந்த இரு அடக்குமுறைகளுக்கு எதிரான போராட்ட ஐக்கியத்தை, உழைக்கும் மக்களை திரட்டும் போக்கில் ஏற்படுத்த முடியும். தலித் அரசியல் கட்சிகளோ தேர்தலில் எத்தனை சீட்டுக்கள் பெற முடியும் என்பதாக சிறுத்துப் போய்விட்டன. தலித் அரசியல் பேசும் சித்தாந்தவாதிகளோ அனைத்துப் பிரிவு உழைக்கும் மக்களின் ஐக்கியத்திற்கு ஊறு விளைவுக்கும் வகையில் அடையாள அரசியலை முன்வைக்கின்றனர். இரண்டுமே தவறு என்கிறோம்.
நன்றி!
படிக்க :
♦ ஜே.என்.யூ : விடுதி கட்டண உயர்வைக் கண்டித்து தேர்வு புறக்கணிப்பு !
♦ சீமானின் எதிர்காலம் – மகாராஷ்டிரா தேர்தல் கூத்து | கேள்வி – பதில் !
♦ ♦ ♦
கேள்வி : //ஈரான் மீது அமெரிக்கா ஏன் வெறுப்பைக் காட்டுகிறது, எண்ணெய் வளத்தை பெற சவுதியை போல் பயன்படுத்திக் கொள்ளலாமே?//
கண்ணா
அன்புள்ள கண்ணா,
எழுபதுகளில் அமெரிக்க ஆதரவு மன்னனான ஷா, ஈரானில் தூக்கியெறியப்பட்ட நாள் முதல் ஈரான் ஆட்சியாளர்களும், மக்களும் அமெரிக்காவை எதிர்த்து வருகிறார்கள். மாறாக சவுதி மற்றும் இன்னபிற வளைகுடா நாடுகளில் ஜனநாயகவாதிகள் துடைத்தெறியப்பட்டு அமெரிக்க ஆதரவு ஷேக்குகள் ஆண்டு வருகிறார்கள்.
ஈரானில் ஷியா பிரிவு மக்களும், சவுதி முதலான வளைகுடா நாடுகளில் சன்னி பிரிவு மக்களும் வாழ்கின்றனர். இஸ்லாமிய உலகில் இந்தப் பிரிவு மதவாதிகளால் வெறுப்புடன் மேலும் வளர்க்கப்படுகிறது. இந்த வேறுபாட்டை அமெரிக்கா பயன்படுத்திக் கொள்கிறது.
வளைகுடாவில் தொடர்ந்து பதற்றமும், போரும் இருந்து வருவது அமெரிக்காவிற்கு மட்டுமல்ல, இஸ்ரேலுக்கும் அது நல்லது. ஈரானைப் பயமுறுத்திக் கொண்டே அமெரிக்கா பல பில்லியன் டாலர் மதிப்பிலான ஆயுதங்களை சவுதிக்கு விற்று வருகிறது. அதே போன்று இந்நாடுகளில் தனது இராணுவத் தளங்களையும் பராமரித்து வருகிறது.
இராக் – குவைத் போரையும் அமெரிக்கா அப்படித்தான் பயன்படுத்திக் கொண்டது. ஆரம்பத்தில் அமெரிக்க ஆதரவு அடியாளாக இருந்த சதாம் உசேன் அமெரிக்காவின் ஆசீர்வாதத்தோடு ஈரான் மீது போர் தொடுத்தார். பின்னர் ஒரு பிராந்திய வல்லரசாக வளர்ந்து குவைத்தை ஆக்கிரமித்தார். அதன் போக்கில் அமெரிக்காவையும் எதிர்த்தார். வளர்த்த கடாவை வெட்டும் விதமாக அமெரிக்கா சதாமைக் கொன்று ஈராக்கை ஆக்கிரமித்தது. உள்நாட்டுப் போரில் ஈராக்கை அமிழ்த்தும் விதமாக ஐ.எஸ்.ஐ.எஸ்-ஐ தோற்றுவித்து பின்னர் அழித்தது.
எனவே இந்த முரண்பாடுகள் அனைத்தும் அமெரிக்காவிற்கு ஏராளமான வருமானத்தையும், தொழில் முதலீடுகளையும் ஏற்படுத்திக் கொடுத்திருக்கின்றது. அவ்வகையில் ஈரானை பூச்சாண்டி காட்டி மற்ற வளைகுடா நாடுகளில் தனது ஆதிக்கத்தை நிலைநாட்டி வருகிறது.
நன்றி!
படிக்க :
♦ ஈரான் கச்சா எண்ணெய் : அமெரிக்காவின் மிரட்டலுக்கு அடிபணிந்த மோடி அரசு !
♦ உறவுகளுக்குள் திருமணம் செய்வதால் குறைபாட்டோடு பிறக்கும் குழந்தைகள் !
♦ ♦ ♦
கேள்வி : //சீனா பொருளாதாரத்தில் வளர்ந்த அளவு ருசியா (russia) 1990-க்கு பிறகு வளர்ச்சி பெற முடியவில்லையே ஏன்?//
ஹரினிவாஸ் வடிவேல்
ரசியா 1990-க்கு பிறகு இல்லை, 1970-களிலேயே நொடித்துப் போக ஆரம்பித்து விட்டது. 1950-களில் தோழர் ஸ்டாலின் மரணமடையும் போது சோவியத் யூனியன் தனது சோசலிச உற்பத்தியால் பலமான நாடாக இருந்தது. அதற்கு பிறகு பதவியை கைப்பற்றிய திரிபுவாதியான குருசேவ் முதல் பிரஷ்னேவ் வரை சோவியத் யூனியன் போலி சோசலிச நாடாக மாறியது.
அதன் பொருளாதார வளம் அனைத்தும் இராணுவத்திற்கு திருப்பப்பட்டு அமெரிக்காவுடன் கெடுபிடிப் போரில் ஈடுபட்டது ரசியா. இந்தப் பதிலிப் போர் கியூபா முதல் ஆப்கான் வரை உலகெங்கிலும் நடைபெற்றது. இந்த கெடுபிடிப் போரில் ரசியா தோற்றதோடு தனது பொருளாதார வளத்தையும் இழந்தது. இறுதியில் அதனிடம் அமெரிக்காவிற்கு ஈடான இராணுவ பலம் இருந்ததே ஒழிய பொருளாதார பலமில்லை.
மாறாக சீனாவில் 1970-களில் மாவோ மரணமடையும் போது அந்த நாடு பலமான அடிப்படைக் கட்டமைப்பு கொண்ட சோசலிச பொருளாதார நாடாக இருந்தது. அதற்கு பிறகு அதிகாரத்தைக் கைப்பற்றிக் கொண்ட டெங்சியோ பிங் தலைமையிலான அதிகாரவர்க்க கும்பல் சீனாவை முதலாளித்துவ பொருளாதார நாடாக மாற்றியது. ரசியா போல எந்தப் பதிலிப் போரிலும் ஈடுபடாமல் தனது வளமனைத்தையும் சந்தைப் பொருளாதாரத்தில் போட்டது. கிழக்கு கடற்கரைப் பகுதியில் உருவான சிறப்பு பொருளாதார மண்டலங்கள் மேற்குலகின் கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு மலிவான உற்பத்தி பின்னிலமாக விளங்கியன. சீனாவும் போலி சோசலிச நாடாக மாறினாலும் அதன் முதலாளித்துவ பொருளதாரம் சோசலிச சாதனைகளை அடிப்படையாக்கி வளர்ந்தது.
கோர்பசேவ் காலத்தில் சோவியத் யூனியன் தனது இறுதிக் கோவணத்தையும் வீசி விட்டு முழு முதலாளித்துவ நாடாக மாறியது. எனினும் அவருக்கு பிறகு வந்த எல்சின் காலத்தில் ரசியாவின் பொருளாதாரம் அதல பாதாளத்திற்கு வீழ்ந்தது. பின்னர் விளாதிமிர் புடீன் காலத்தில் அரசின் ஆதிக்கம் நிலை நாட்டப்பட்டு, இராணுவ பலம் மீட்கப்பட்டு இருந்தாலும் பொருளாதாரத்தில் அடைந்த வீழ்ச்சியில் இருந்து ரசியா எழவே முடியவில்லை.
ரசியா சொல்லில் சோசலிசம் செயலில் ஏகாதிபத்தியம் என்ற சமூக ஏகாதிபத்திய நாடாக மாறி பொருளாதாரத்தை இழந்தது. சீனா சொல்லில் சோசலிசம் செயலில் முதலாளித்துவம் என்று மேற்குல நாடுகளின் உற்பத்தி கூடமாக தன்னை வளர்த்துக் கொண்டது.
நன்றி!
♦ ♦ ♦
வினவு கேள்வி பதில் பகுதியில் நீங்களும் கேட்கலாம்:
கேள்விகளை பதிவு செய்யுங்கள்