அண்மையில் நடந்த 106-வது இந்திய அறிவியல் மாநாடு, புராண புரட்டு மாநாடாக நடந்து முடிந்திருக்கிறது. ஜனவரி 4 முதல் ஜனவரி 7-ம் தேதி வரை நடக்கவிருக்கிற இந்திய அறிவியல் மாநாட்டில் கலந்துகொண்ட பல ‘பேச்சாளர்கள்’, இந்துத்துவ புராண புரட்டை அறிவியல் என பேசினர்.
இவர்களின் ‘கண்டுபிடிப்பின்’படி, ஐன்ஸ்டீனின் சார்பியல் கோட்பாடு, நியூட்டனின் புவி ஈர்ப்பு விசை, ஸ்டீபன் ஹாக்கிங்கின் கருந்துளைகள் அனைத்தும் பொய்யாம். மகாபாரதத்தில் வரும் கௌரவர்கள் சோதனைக் குழாய் குழந்தைகளாம். ராவணனிடம் 24 வகையான விமானங்கள் இருந்தனவாம்…
ஜனவரி 4-ம் தேதி, குழந்தைகளுக்கான அறிவியல் மாநாட்டில் பேசிய தமிழ்நாட்டைச் சேர்ந்த கண்ணன் ஜகத்தள கிருஷ்ணன் ஐன்ஸ்டீன், நியூட்டன், ஹாக்கிங் எல்லாம் அறிவியலாளர்களே கிடையாது என்கிறார். மேலும் 20-ம் நூற்றாண்டு ஐன்ஸ்டீனின் நூற்றாண்டு என்றால், இது தன்னுடைய நூற்றாண்டு என்கிறார். தமிழ்நாட்டிலிருந்து இப்படியொரு ‘மேதை’ இருப்பதே இத்தனை நாள் தெரியாமல் போய்விட்டதே என பின்னணியைத் தேடினால், வியப்பு…வியப்பு!
எலக்ட்ரிக்கல் இன்ஜினியரிங் துறையில் ‘புதுப்பிக்கத் தக்க ஆற்றல் அமைப்புகள்’ (Renewable Energy Systems) குறித்து ஆய்வு செய்து, ஆஸ்திரேலியாவின் விக்டோரியா பல்கலைக்கழக்கத்தில் பட்டம் வாங்கியிருப்பதாக சொல்லும் இவர், இயற்பியல் ஆய்வுகள் தவறு என்கிறார். எலக்ட்ரிக்கல் இன்ஜினியரிங் படித்த நீங்கள் இயற்பியல் குறித்த ஆய்வுகள் தவறு என எப்படி சொல்கிறீர்கள் என கேட்டால், “அறிவுக்கு பட்டம் வாங்க வேண்டுமா?” என பதில் கேள்வி போடுகிறார்.
தற்போது ‘பிரபஞ்சத்தின் தோற்றம்’ குறித்து ஆய்வு செய்து வருகிறாராம். ஆய்வுக்கூடம் இருப்பது மகிரிஷி வேதாந்த்ரி ஆசிரமத்தின் உள்ளே. ஆய்வு வழிகாட்டி, லேப் டெக்னீஷியன் படித்த யோகா டீச்சர் சத்தியமூர்த்தி! இத்தகைய பின்னணியில், “நான் ஜன்ஸ்டீனைக் காட்டிலும் சிறந்த இயற்பியலாளர். என்னுடைய ஆய்வு அனைத்து இயற்பியல் கேள்விகளுக்கும் பதில் அளிக்கும்” என சவால் விடுகிறார். புவி ஈர்ப்பு விசை கோட்பாட்டுக்கு மாற்றாக தனது புதிய கோட்பாட்டுக்கு ‘மோடி அலை’ என பெயரிடப்போவதாகவும் மாநாட்டில் அறிவித்தார். ஆஸ்திரேலியா குடியுரிமை பெற்றுள்ள இவர், தனது ஆராய்ச்சிக்காக இந்தியா திரும்ப இருக்கிறாராம். தன்னுடைய கண்டுபிடிப்பால் இந்தியா பெருமையடையப் போகிறது என்கிறார். இந்தச் சொற்பொழிவின் மூலம் இந்தியா அடைந்த பெருமையே போதுமையா சாமி !
பாரதியார் பல்கலைக்கழகத்தில் இன்ஜினியரிங் பட்டம் பெற்றவுடன் ஆஸ்திரேலியாவில் தகவல் அமைப்பு மேலாண்மையில் மேற்படிப்பும் எம்.பி.ஏ-வும் முடித்து அங்கேயே தொழில் தொடங்கியுள்ளார். தன்னுடைய ஆய்வுகளை பெயர் குறிப்பிடாத ஆய்வு இதழ்களில் வந்துள்ளதாக சொல்லும் கிருஷ்ணன், 400-க்கும் மேற்பட்ட உலக அறிவியலாளர்களுக்கு தன்னுடைய ஆய்வை மின்னஞ்சலில் அனுப்பியிருப்பதாக சொல்கிறார்.
இதே மாநாட்டில், ஆந்திர பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த துணை வேந்தர் பேராசிரியர் ஜி. நாகேஸ்வர ராவ், கௌரவர்கள் ஸ்டெம் செல் தொழிற்நுட்பத்தை பயன்படுத்தி உருவாக்கப்பட்ட சோதனை குழாய் குழந்தைகள் என்கிறார். மேலும் இராவணன் 24 வகையான விமானங்களை வைத்திருந்ததாகவும் அள்ளிவிட்டிருக்கிறார்.
கடந்த 25 ஆண்டுகளாக இந்தியாவில் டைனோசர்களின் தோற்றமும் மறைவும் குறித்து ஆய்வு செய்துவரும் பஞ்சாப் பல்கலைக்கழக புவியியலாளர் அசு கோஸ்லா, “இந்த பிரபஞ்சத்தின் சிறந்த அறிவியலாளர் பிரம்மாதான். அவருக்கு டைனோசர்கள் பற்றி தெரிந்திருந்தது. வேதங்களில் அது குறித்த தகவல் உள்ளது” என்கிறார்.
“இந்த பிரபஞ்சத்தை உருவாக்கிய பிரம்மனுக்குத் தெரியாமல் எதுவும் இல்லை. எவரும் அறியும் முன்பே பிரம்மாவுக்கு டைனோசர்கள் இந்த உலகில் இருப்பது தெரிந்திருந்தது. இந்தியாதான் டைனோசர்கள் நிறைந்திருந்த இடமாகவும் பரிணாமம் கண்ட இடமாகவும் இருந்தது. இந்தியாவைச் சேர்ந்த ஒரு டைனோசருக்கு ‘ராஜ அசுரா’ என பெயர் வைத்து அழைத்தார்கள்” என்கிறார். இதற்கே மூச்சு வாங்கினால் எப்படி, இன்னும் நிறைய புராண புரட்டுகளை அள்ளி வீசுகிறார்…
படிக்க:
♦ கழுதை மூத்திரத்தால் ஓடிய வேத விமானம்
♦ ஆர்.எஸ்.எஸ் மாட்டு மூத்திர விஞ்ஞானிகளின் அரிய கண்டுபிடிப்புகள் !
“நம்முடைய வேதங்களிலிருந்துதான் அமெரிக்கர்களும் ஐரோப்பியர்களும் டைனோசர்கள் என்ற பதத்தை உருவினார்கள். 6.5 கோடி ஆண்டுகளுக்கு முன்பு டைனோசர்கள் அழிந்து போனபோது, பிரம்மா கண்களை மூடி வேதம் எழுதிக் கொண்டிருந்தார். அந்த இமைப் பொழுதில் டைனோசர்கள் அழிந்துவிட்டன. இந்த உலகத்தில் உள்ள எவரும் இந்த கருத்தை ஏற்றுக்கொள்ளமாட்டார்கள். ஆனால், வேதங்களில் டைனோசர்கள் குறித்து சொல்லப்பட்டிருப்பது உண்மை. டைனோ- சர் என்பதே சமஸ்கிருத சொல். டைனோ என்றால் சூனியக்கார என பொருள்; சர் என்றால் ராட்சசன் என பொருள். எனவே, இந்த பூமியில் உள்ள அனைத்தும் வேதங்களில் சொல்லப்பட்டிருக்கிறது” என புராண ஆராய்ச்சியை அவிழ்த்து விடுகிறார்.
மத்திய அரசின் அறிவியல் மற்றும் தொழிற்நுட்பத் துறை அமைச்சகம் நடத்தி வரும் அறிவியல் மாநாட்டில், கடந்த ஐந்தாண்டுகளாக இப்படிப்பட்ட இந்துத்துவ புராண அபத்தங்களை அறிவியல் என்ற பெயரில் இந்த அமைச்சகம் மேடை ஏற்றிவருகிறது . அதிக அளவில் கல்லூரி-பள்ளி மாணவர்கள் கலந்து கொள்ளும் மாநாட்டில் அறிவியலை கேலியாக்கி, மூளையற்ற மூடர்களின் உளறலை திணித்து வருகிறது இந்தக் கேடுகெட்ட அரசு. இன்னும் ஐந்தாண்டுகள் இவர்களுடைய ஆட்சி நீடிக்குமானால், நிச்சயம் இந்தியா ஆயிரம் நூற்றாண்டுகள் பின்னோக்கித்தான் போகும்!
அனிதா
செய்தி ஆதாரங்கள் :
♦ Meet the scientists: Einstein was wrong, Ravan had 24 aircraft
♦ Lord Brahma first to discover dinosaurs, mentioned them in Vedas: PU geologist
உங்களின் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் குப்பைகளை விட எங்கள் வேதங்கள் ஆயிரம் மடங்கு உயர்வானது தான்.
டார்வினிலிருந்து ஐன்ஸ்டீன் வரை சகல அறிவியல் விதிகளையும் தவிடுபொடியாக்கி தகர்த்தெறிந்த “நித்யானந்தா”வை இம்மாநாட்டிற்கு அழைக்காமல் போனதின் “அரசியல்” எனக்குப் புரியவில்லை.
இந்த ஆட்சியில் படித்த “கண்ணன் ஜெகஜால கிருஷ்ணன்” போன்ற “விஞ்சாணி”களுக்கு மட்டுமே இடமா ?
படிக்காத மேதைகளான “நித்தி” மற்றும் “ஜக்கி”களுக்கு இடமில்லையா ?
Ethavathu puthusa kandupidicha athuvum vethathula irukkunnu sollluvanaga. sariyana dubakoor group ivununga.