திராவிடம், சமூகநீதி போன்ற கொள்கைகளை முன்னிறுத்தி செயல்படும் கட்சியாக தி.மு.க. தன்னைக் காட்டிக் கொண்டாலும், உண்மையில் கொள்கை கோட்பாடற்ற, கவர்ச்சிவாதத்தை முன்வைக்கின்ற கட்சியாவே இருக்கிறது என்றும், ஆவின் பால் விலைக்குறைப்பு, பெண்களுக்கு பேருந்துகளில் இலவச பயணம் போன்ற அறிவிப்புகள் கூட மக்கள் நலத் திட்டங்களைப் போலத் தோன்றினாலும் அவை ‘‘கவர்ச்சிவாத திட்டங்களே’’ என்றும் சென்ற புதிய ஜனநாயகத்தில் எழுதியிருந்தோம்.
அதைப் படித்துவிட்டு, சில வாசகத் தோழர்கள் தி.மு.க.வின் ‘‘கவர்ச்சிவாத அரசியல்’’ குறித்து விளக்கி விரிவாக எழுதுமாறு கோரியிருந்தார்கள். அவர்களது கோரிக்கைக்காக மட்டுமல்லாமல், தி.மு.க.வின் கார்ப்பரேட் பாணியிலான நடவடிக்கைகளும் அக்கட்சி தொடர்ச்சியாக அறிவித்துவரும் கவர்ச்சிவாதத் திட்டங்களும் சமூகநீதி வாய்சவாடல்களும் மக்களிடையே ஒருவித ‘‘மயக்க நிலை’’யைத் தோற்றுவித்திருக்கும் இத்தருணத்தில் உண்மை நிலையை புரியவைக்கும் நோக்கத்திலும் இத்தலைப்பிலான கட்டுரையை எழுதுகிறோம்.
– புதிய ஜனநாயகம்
கவர்ச்சிவாத அரசியல் : முதலாளித்துவ ஜனநாயகத்தின் இழிந்த இறுதிநிலை
முதலாளித்துவ ஜனநாயகத்தின் (தேர்தல் அரசியலின்) இழிந்த, இறுதிநிலை வடிவமே கவர்ச்சிவாத அரசியல். திராவிடம், தமிழ்த் தேசியம், இந்திய தேசியம், தலித்தியம், கம்யூனிசம் என தங்களுடைய அரசியல் கொள்கைகளை முன்னிறுத்தி, அதை பரந்துபட்ட மக்களிடம் பிரச்சாரம் செய்து அணிகளை − அமைப்புகளை கட்டுவது, இதன் மூலம் கிடைக்கும் மக்கள் ஆதரவிலிருந்து தேர்தல்களில் போட்டியிட்டு வெற்றிபெறுவது என்ற முறைகளெல்லாம் எப்போதோ கேலிக்கூத்தாக்கப்பட்டு விட்டது.
பிற்போக்கு சித்தாந்தங்களை வைத்து பரந்துபட்ட மக்களை இனிமேலும் ஈர்க்க முடியாது என்கிற அரசியல் ஓட்டாண்டித்தனம் தேர்தல் அரசியல் கட்சிகளுக்கு ஏற்படும்போது, பாமர மக்களின், குறிப்பாக உதிரித் தொழிலாளர்கள், ஓட்டாண்டிகளான கிராமப்புற ஏழைகளின் அன்றாடத் தேவைகள், விருப்பங்கள், சுவைகளுக்கு ஏற்ப தமது கொள்கைகளை வகுத்துக் கொண்டு அரசியல் நடத்துவதே கவர்ச்சிவாதமாகும்.
சோசலிசம், கம்யூனிசம் பற்றிய பாமர மக்களின் மிகமிக மோசமான கருத்துகளுக்கு ஏற்ப கவர்ச்சிவாத நடவடிக்கைகளை மேற்கொள்வது, கவர்ச்சிவாத ஒளிவெள்ளத்தில் மக்களின் கண்களைக் குருடாக்குவது, பாசிச, குரூர, கோமாளித்தனமான ஆட்சியாக இருந்தாலும் சத்துணவு, சைக்கிள், மிக்சி, கிரைண்டர், சேலை, தண்ணீர் குடம் முதலான இலவசத் திட்டங்களால் நல்லாட்சி நடப்பதாக பிரமையை உருவாக்குவது, போராடும் மக்களை ஈவிரக்கமின்றி ஒடுக்குவது என்பதே கவர்ச்சிவாத அரசியலாகும்.
படிக்க :
திமுக அரசு பட்ஜெட்டும் அரசுப் பள்ளிகளின் நிலைமையும் || சிறப்புக் கட்டுரை
திமுக அரசே வேலை கொடு : சென்னையில் தூய்மைப் பணியாளர்கள் போராட்டம் !
நிலவுகின்ற அரசியல் கட்டமைப்புக்குள் தங்களது கொள்கைகளை நிறைவேற்ற முடியாமல் அம்பலப்பட்டு போய் பிழைப்புவாதத்தில் வீழ்ந்துவிட்ட அரசியல் கட்சிகள், கொள்கை − கோட்பாடுகள் என்ற ‘சுமைகளை’யெல்லாம் தூக்கியெறிந்து விட்டனர். பிற கட்சிகளிலிருந்து தங்களை தனித்துக் காட்டிக் கொள்ளவதற்கான ‘‘அடையாள அட்டை’’யாகவே கொள்கைகளை வைத்துள்ளனர். இந்த நிலையில் மக்கள் ஆதரவைப் பெற்று தொடர்ந்து தங்கள் பிழைப்புவாதத்தை நடத்த அவர்கள் தேர்ந்தெடுத்த அஸ்திரம்தான் ‘‘கவர்ச்சிவாதம்’’, இதையே ஒரு ’அரசியலாக’ (தேர்தல் அரசியல்) செய்வதுதான் ‘‘கவர்ச்சிவாத அரசியல்’’. சுருக்கமாக சொன்னால் பிழைப்புவாதம் என்னும் பித்தளை நாணயத்தை மினுமினுக்கச் செய்யும் தங்கமுலாம்தான் ‘‘கவர்ச்சிவாத அரசியல்’’.
தங்கள் அரசியல் கொள்கைகளுக்கு பதிலாக தனிநபரை முன்னிறுத்தி ‘புரட்சித் தலைவர்களையும் தலைவிகளையும் தளபதிகளையும்’ உருவாக்குவது; ‘தலைவர்’ புகழ்பாடுவதையே கட்சித் தொண்டர்களின் ’கொள்கைப் விளக்கப் பிரச்சாரமா’க மாற்றுவது; விரிவாகவும் வீச்சாகவும் ஊடகங்களின் மூலம் துதிப் பிரச்சாரங்களை மேற்கொள்வது போன்றவை இக்கவர்ச்சிவாத அரசியலின் முக்கியமான கூறுகளாகும்.
இப்படி கட்டியமைக்கப்படும் தலைவர்களின் இமேஜை ஒவ்வொரு பகுதிக்கும் கொண்டுசேர்ப்பதற்காகவே தோன்றும் குட்டித் தலைவர்கள்தான் ‘‘ரத்தத்தின் ரத்தங்கள்’’, ‘‘உடன்பிறப்புகள்’’ ஆகிய கட்சிகளின் தூண்கள். இக்கவர்ச்சிவாத அரசியலின் மூலம்தான் உழைக்கும் மக்களின் போராட்டங்களையும் புரட்சிகர அமைப்புகளையும் ஒடுக்கி தமிழகத்தில் போலீசு ராஜ்ஜியத்தை நிறுவிய பாசிஸ்ட்டுகளான எம்.ஜி.ஆர். ‘‘பொன்மனச் செம்மலானதும்’’ ஜெயா ‘‘இதய தெய்வம் அம்மா’’−வாக ஆனதும் நடந்தது.
பணம் சம்பாதிப்பதற்கான ஒரு தொழிலாகக் கருதி இயங்கும், தரகு வேலை செய்யும் அரசியல் அமைப்புகளேயே பிழைப்புவாத அமைப்புகள் என்கிறோம். மேல்மட்டத்திலிருந்து கீழ்மட்டம் வரை பிழைப்புவாதத்தையே தொழிலாகக் கொண்ட கட்சி அமைப்புகள், தரகு வேலையை ஒரு தொழிலாக, அதற்கே உரிய விதிமுறைகளுடன் செய்வது, கட்டப் பஞ்சாயத்து செய்வது, தேர்தல் காலங்களில் ஆள் பிடிப்பது, மற்ற காலங்களில் நலத் திட்டங்களில் அதிகாரிகளுடன் சேர்ந்து கூட்டுக் கொள்ளையடிப்பது என்கிற அமைப்பு முறையைக் கொண்டுள்ளதாக பிழைப்புவாதம் வேரூன்றியுள்ளது.
தேர்தல் நேரத்தில் ஓட்டுக்கு கொடுக்கப்படும் பணம், ஆண்களுக்கு விநியோகிக்கப்படும் குவாட்டர் – கோழி பிரியாணி, இல்லத்தரசிகளுக்கு வீடு தேடி வரும் குத்துவிளக்கு, புடவைகள் உள்ளிட்ட ‘அன்பளிப்புகள்’ மற்றும் பல்வேறுபட்ட மக்கள் பிரிவுகளையும், குறிப்பாக, பெரும்பான்மையாக உள்ள அடித்தட்டு மக்களைக் கவர்வதற்காக அறிவிக்கப்படும் ‘கலைஞர்’ தொலைக்காட்சிப் பெட்டி, மிதிவண்டி, அம்மா மிக்ஸி−கிரைண்டர், லேப்டாப், ஆடு−மாடு திட்டம், பொங்கல் பரிசு போன்ற அற்பமான இலவசக் (விலையில்லா) கவர்ச்சித் திட்டங்கள் எல்லாம் பிழைப்புவாதிகளின் கவர்ச்சிவாத அரசியலில் தோன்றிய கலாச்சாரங்கள்தான்.
கார்ப்பரேட் சூறையாடலுக்கு அழைப்பு : “முதலீட்டாளர்களின் முதல் முகவரி தமிழ்நாடு” – விழா.
இத்திட்டங்கள் எதுவும் மக்களுடைய வாழ்வாதாரத்தில் எந்த முன்னேற்றத்தையும் கொண்டுவந்ததில்லை. மாறாக, இத்திட்டங்களை முன்னிறுத்தி ‘‘பொற்கால ஆட்சி’’ நடப்பதாக பிரச்சாரங்களை செய்துகொண்டு மறைமுகமாக ஆளும் வர்க்கத்திடமும் அதிகார வர்க்கத்திடமும் கூட்டுவைத்துக் கொள்ளையடிப்பதற்குத்தான் இவை துணை புரிந்திருக்கின்றன.
இவற்றிற்கெல்லாம் தி.மு.க. எந்த வகையிலும் விதிவிலக்கல்ல. சொல்லப்போனால், தமிழகத்திலேயே இக்கவர்ச்சிவாத அரசியலைத் தோற்றுவித்த பெருமை கருணாநிதிக்குத்தான் உண்டு. ஆனால், அதை சிறிதும் ’கொள்கைக் கலப்பட’மில்லாமல் தூய்மையாக வளர்த்தெடுத்த பெருமை எம்.ஜி.ஆருக்கும் ஜெயாவுக்கும் உண்டு. இவர்களுக்கு பின்னர் வந்த மு.க.ஸ்டாலினோ கவர்ச்சிவாத அரசியலையே கார்ப்பரேட் பாணியில் திறம்பட மேற்கொள்கிறார்.
கார்ப்பரேட் பாணி கவர்ச்சிவாத அரசியலின் தோற்றம்
நம் நாட்டில் ‘‘கவர்ச்சிவாத அரசியல்’’ என்பது இன்று நவீன தொழில் நுட்பங்களுடன் இணைந்து வீரியமான வடிவத்தை எடுத்துள்ளது. 1990−களில் தகவல் − தொழில்நுட்ப புரட்சி தோற்றுவித்த இணைய வசதியின் நீட்சியாக டிவிட்டர், பேஸ்புக், வாட்ஸ்−அப் உள்ளிட்ட சமூக ஊடகங்கள் ஆகியன உலக மக்களிடையே பெருமளவில் பயன்பாட்டுக்கு வந்துள்ளன. இதனோடு ‘‘தரவுப் பகுப்பாய்வு’’ (data analysis) எனும் தொழில்நுட்பமும் வளர்ந்துள்ளது. நமது சமூக ஊடக செயல்பாடுகளையும் இணைய உலாவலையும் தரவுகளாக (datas) சேகரித்து வைத்து, அதிலிருந்து நமது சொந்த விருப்பு−வெறுப்புகள், எண்ணங்கள் போன்றவைகளையும் கூட அறிந்துகொள்ள முடியும் என்ற நிலைக்கு இது இட்டுச் சென்றுள்ளது.
இதே காலத்தில் இத்தகவல் பகுப்பாய்வைப் பயன்படுத்தி மக்களின் தேவைகளையும் அரசியல் விருப்பங்களையும் தெரிந்துகொண்டு அதற்கேற்ப நேர்த்தியான வியூகங்களையும் கொள்கைகளையும் அரசியல் கட்சிகளுக்கு வகுத்துக் கொடுப்பதற்கென்றே தேர்தல் வியூக நிறுவனங்கள் பல தோன்றின. முதன் முதலில் இத்தகைய தேர்தல் வியூக நிறுவனங்கள் தோன்றியதும் தேர்தல் வெற்றிகளில் தாக்கம் செலுத்தியதும் அமெரிக்காவில்தான். படிப்படியாக இந்த முறை ஐரோப்பிய நாடுகளிலும் மற்ற நாடுகளிலும் அறிமுகத்துக்கு வந்தது.
இதேபோல, இந்தியாவில் முதன்முதலில் தோன்றிய நிறுவனம்தான் நமக்கெல்லாம் அறிமுகமான பிரஷாந்த் கிஷோரின் ஐ−பேக் (i−pac) நிறுவனம். 2014 நாடாளுமன்றத் தேர்தலில் இந்து மதவெறி பாசிஸ்டான மோடியை ’வளர்ச்சியின் நாயகனாக’ உருமாற்றம் செய்து ‘‘மோடி அலையை’’ உருவாக்கியது பிரஷாந்த் கிஷோர் தலைமையிலான குழுதான். அந்த அளவிற்கு நவீன தொழில் நுட்பங்களைப் பயன்படுத்திய அதன் பிரச்சார உத்திகள் இருந்தன. 2015−ல் பீகாரில் நிதிஷ் குமாருக்காகவும், 2017−இல் பஞ்சாபில் அமரீந்தர் சிங்குக்காகவும், 2019−ல் ஆந்திராவில் ஜெகன்மோகன், மகாராஷ்டிரத்தில் உத்தவ் தாக்கரேவுக்காகவும் தேர்தல் வியூகங்கள் வகுத்துக் கொடுத்து வெற்றியடைச் செய்தது ஐ−பேக் நிறுவனம்.
மு.க.ஸ்டாலினின் கார்ப்பரேட் பாணி கவர்ச்சிவாத அரசியல்
நடைபெற்று முடிந்த 2021 சட்டமன்றத் தேர்தல்களில் தமிழகத்தில் தி.மு.க.வுக்காகவும் மே.வங்கத்தில் திரிணாமுல் காங்கிரசுக்காகவும் ஐ−பேக் நிறுவனம் வியூகங்களை வகுத்துக் கொடுத்துள்ளது. தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் சிறந்த தலைவராக தன்னை முன்னிறுத்திக் கொள்வதற்கும் பெரும்பான்மை இடங்களில் வென்றதற்கும் தமிழகத்தின் பா.ஜ.க. எதிர்ப்பு அலையோடு ஐ−பேக் நிறுவனத்திற்கும் குறிப்பிட்ட பங்கு உள்ளது. அவர்கள் வகுத்துக் கொடுத்த உத்திகள் தமிழக மக்களிடையே மிகப்பெரிய கவனத்தை ஈர்க்கக்கூடியதாக இருந்தன.
ஐ−பேக் நிறுவனம் தி.மு.க.விற்கு செய்த சிறப்பு என்னவென்றால், தமிழகத்தின் அரசியல் சூழலுக்கு பொருத்தமாக தி.மு.க.வின் தேர்தல் பிரச்சார உத்திகளை வடிவமைத்துக் கொடுத்ததுதான். தமிழகத்தில் உள்ள பல்வேறு பிரிவு மக்களின் தேவைகள், விருப்பங்கள் மற்றும் அவர்களின் அரசியல் கருத்துகளை தரவுப் பகுப்பாய்வு (data analysis) செய்து மிக நேர்த்தியாக உருவாக்கப்பட்டதுதான் தி.மு.க.வின் பிரச்சாரங்களும் தேர்தல் அறிக்கையும்.
தொடர்ச்சியாக மக்கள் விரோத காவி− கார்ப்பரேட் பாசிசத் திட்டங்களை அமல்படுத்திக் கொண்டிருக்கும் பா.ஜ.க.வின் மீதும், அதற்கு அடிமைச் சேவகம் புரிந்த அ.தி.மு.க.வின் 10 ஆண்டுகால ஆட்சியின் மீதும் தமிழக மக்களுக்கு ஏற்பட்டுள்ள வெறுப்பையும் ஆத்திரத்தையும் பயன்படுத்திக் கொள்ளும் வண்ணமும், பா.ஜ.க.−அ.தி.மு.க. கூட்டணிக்கு எதிராகவும் மாற்றாகவும் விளங்குவது தி.மு.க.வும் மு.க.ஸ்டாலினும்தான் என்றும் வீரியமான கார்ப்பரேட் பாணி பிரச்சாரங்களை மேற்கொண்டது தி.மு.க.
மு.க.ஸ்டாலின் தனது உரைகளிலெல்லாம் நீட், புதிய கல்விக் கொள்கை, எட்டுவழிச்சாலை, ஹைட்ரோகார்பன், பொள்ளாட்சி பாலியல் வன்கொடுமை, ஸ்டெர்லைட் படுகொலை, ஏழுபேர் விடுதலை போன்ற பிரச்சனைகளைத் தவறாமல் பேசியது, இணைய வழியில் ‘‘ஆதிக்கவாதிகளும் வேண்டாம், அடிமைகளும் வேண்டாம்’’ என்ற பெயரில் கொடுக்கப்பட்ட விளம்பரங்கள், பாசிச ஹிட்லராக மோடியும் அவரை வீழ்த்தும் ஜோசப் ஸ்டாலினாக மு.க.ஸ்டாலினும் இருப்பது போன்ற கருத்துப் படங்கள் எல்லாம் மக்கள் மனவோட்டத்திற்கேற்ப தயாரிக்கப்பட்ட விளம்பரங்கள்.
மேலும் ‘‘அ.தி.மு.க.வை நிராகரிப்போம்’’ என்ற முழக்கத்தை முன்வைத்து கிராமசபைகள் தோறும் மக்கள் கூட்டங்களை நடத்தியது; அ.தி.மு.க. அமைச்சர்களுக்கு எதிராக ஊழல் குற்றப் பத்திரிக்கையை தயாரித்து கவர்னரிடம் வழங்கியது; ‘‘விடியலை நோக்கி ஸ்டாலின் குரல்’’ என்ற பெயரில் தமிழகத்தின் மூலைமுடுக்குகள் எங்கும் பொதுக்கூட்டங்களை நடத்தியது; அதில் ஸ்டாலினது பேச்சுக்களை மக்களிடம் திரையிட்டுக் காட்டியது − போன்றவைகளெல்லாம் கார்ப்பரேட் பாணியில் மேற்கொள்ளப்பட்ட தேர்தல் பிரச்சாரங்களாகும்.
2014−ல் மோடி பிரதமர் வேட்பாளராக நின்றபோது தேநீர் கடையில் தேநீர் குடித்துக்கொண்டே மக்களுடன் உரையாடுவது போன்று நடத்திய நிகழ்ச்சியான ‘‘சாய் பே சர்ச்சா’’ என்ற நிகழ்ச்சி; 2017−இல் பஞ்சாபில் அம்ரீந்தர் சிங் முதல்வர் வேட்பாளராக நின்றபோது காஃபி குடித்துக் கொண்டே மாணவர்களுடன் அரசியல் உரையாடுவது போல அமைக்கப்பட்ட ‘‘காஃபி வித் கேப்டன்’’ என்ற நிகழ்ச்சி; 2019−ல் ஆந்திராவில் ஜெகன்மோகன் ரெட்டி முதல்வர் வேட்பாளராக நின்றபோது அவர் மேற்கொண்ட மாநிலத்தில் 3,648 கிலோமீட்டர் பயணம் செய்து 2 கோடி மக்களை சந்தித்த ‘‘பாத யாத்திரை’’ என்ற நிகழ்ச்சி − போன்றவைகளெல்லாம் தேர்தல் வியூக நிறுவனங்களால் வகுக்கத்து கொடுக்கப்பட்ட கார்ப்பரேட் பாணி பிரச்சாரங்களே.
‘‘உங்கள் தொகுதியில் ஸ்டாலின்’’ என்ற பெயரில் ஒவ்வொரு தொகுதியிலுமுள்ள மக்களின் கோரிக்கைகளையும் சேகரித்து, ஆட்சிக்கு வந்த 100 நாட்களில் நிறைவேற்றுவதாக தி.மு.க. கொடுத்த வாக்குறுதியெல்லாம் புத்தம் புதிய விஷயங்கள் அல்ல; அச்சு பிசகாமால் 2017 பஞ்சாப் தேர்தலில் ‘‘ஹல்கே விச் கேப்டன்’’ (சட்டமன்றத்தில் கேப்டன்) என்ற பெயரில் மேற்கொண்ட பிரச்சார வடிவம் தான். இன்னும் கூட பல சான்றுகளை இப்படி சொல்லிக் கொண்டே போகலாம்.
விரிவான மக்கள் பகுதியை தன்னை நோக்கி ஈர்ப்பதற்காகவும் முன்னிறுத்தப்படும் வேட்பாளரின் மீது ஒரு கவர்ச்சியைத் தோற்றுவிப்பதற்காகவும் தேர்தல் வியூக வகுப்பாளர்களால் இதுபோன்ற நிகழ்ச்சிகள் பரிந்துரைக்கப்படுகின்றன. 68 வயதான மு.க.ஸ்டாலினை வயதானாலும் இளமை குன்றா நாயகன் போல முடியையும் முகத்தையும் அழகுபடுத்தியதற்கும் அதுதான் காரணம்.
எதிர்ப்புகளை நீர்த்துப்போகச் செய்து நிறுவனமயமாக்க முயற்சிக்கும் தி.மு.க :
தேர்தலுக்கு பின்னர், தான் உருவாக்கி வைத்துள்ள கவர்ச்சியான பிம்பங்கள் உடைந்துவிடாமல் மிகவும் கவனமாக தி.மு.க. பராமரிக்கிறது. தன் மீதான எதிர்கருத்துக்கள் அனைத்தையும் மிகவும் கூர்ந்து கவனித்து வருகிறது; அதை சரிகட்ட முனைகிறது. சமூகத்திலுள்ள பல்வேறு பிரிவு மக்களையும் தனது ஆதரவு சக்திகளாக மாற்றத் தொடர்ந்து முனைந்து வருகிறது. இந்த விசயங்களையெல்லாம் செய்வதற்காக, தனக்கு பின்னணியில் மிகப்பெரிய தகவல் தொழில்நுட்பப் பிரிவையே வைத்துள்ளது.
இந்துசமய அறநிலையத்துறை மூலம் கோயில் நிலங்களை மீட்பது என்ற நடவடிக்கையை மிகப் பெரிய விளம்பரத்தோடு செய்து வருகிறது தி.மு.க., பழைய − பராமரிப்பில்லாத கோயில்களைப் புனரமைப்பதற்காக பலகோடி ரூபாய் நிதிகளை ஒதுக்கியிருக்கிறது. சரிவர பூசைகள் நடக்காத கோயில்களில் ஆறுகால பூசைகள் நடப்பதற்கு ஏற்பாடுகளைச் செய்கிறது.
சமீபத்தில் அனைத்துக் கோயில்களிலும் பக்தர்களுக்கு ‘‘இலவச மொட்டை’’ திட்டத்தை தொடங்கி வைத்திருக்கிறது. சுருக்கமாக சொன்னால், தமிழகத்தில் ஒரு நவீன பக்தி இயக்கத்தை ‘‘பெரியாரின் வாரிசுகள்’’ என்று சொல்லிக்கொள்ளும் தி.மு.க. தொடங்கி வைத்திருக்கிறது, இவையெல்லாம் எதற்காக? தி.மு.க.வை இந்து விரோத சக்தியாக காட்டும் ஆர்.எஸ்.எஸ். − பா.ஜ.க. கும்பலுக்கு தானும் ‘‘இந்துக்களின் காவலன்’’தான் என்று காட்டும் வேலையே தவிர வேறல்ல.
இப்பேர்பட்ட தி.மு.க.தான் ‘‘சமூகநீதி, திராவிட பாரம்பரியம்’’ கொண்ட கட்சி என்று தன்னை விளம்பரப்படுத்திக் கொள்கிறது. இந்த அடிப்படையில் தன்னை ஆதரித்த சக்திகளின் நம்பிக்கையைத் தொடர்ந்து தக்கவைத்துக் கொள்வதற்காக சில விசயங்களை செய்துவருகிறது. அதில் ஒன்றாக, பெரியாரின் பிறந்த நாளை ‘‘சமூகநீதி நாளா’’க அறிவித்திருக்கிறது. மேலும் வ.உ.சி., கட்டபொம்மன், அயோத்திதாசர் ஆகியோருக்கு சிலை வைப்பது உள்ளிட்ட திட்டங்களையும் அறிவித்துள்ளது,
இந்தத் தலைவர்களை முன்னிறுத்தி சாதி அரசியல் செய்யும் பிழைப்புவாத சாதிச் சங்கங்களையும் அதன் கீழுள்ள மக்களையும் அணிதிரட்டும் முயற்சியாகவும் கூட இதை பார்க்க வேண்டியிருக்கிறது. ஏனெனில், தி.மு.க. ஆட்சிக்கு வந்த பிறகு, அமைச்சரவையில் ‘‘எங்கள் சமூகத்தைச் சேர்ந்தவர்களுக்கு இடம் கொடுத்து கவுரவித்த முதல்வருக்கு நன்றி’’ என்று பல்வேறு சாதிச் சங்கங்கள் சுவரொட்டி ஒட்டியதும், தி.மு.க.வின் வெற்றியைத் தொடர்ந்து சாதிச் சங்கங்கள் நடத்தும் பாராட்டு விழாக்களில் தி.மு.க.வினர் வெளிப்படையாக கலந்துகொண்டு தங்கள் சாதியை முன்னிறுத்திக் கொண்டதெல்லாம் நாம் கண்ட காட்சிகள்தானே!
எதிர்கட்சியாக இருந்தபோது வன்னியர்களுக்கு கொடுத்த 10 சதவிகித இடஒதுக்கீட்டினை சாதிவாரிக் கணக்கெடுப்பு நடத்தாமல் அறிவித்தது தவறு என கருத்து தெரிவித்ததுவிட்டு, ஆட்சியைப் பிடித்த பின்பு 10 சதவிகித இடஒதுக்கீட்டை அனுமதித்தது தி.மு.க. மேலும் 1987−ல் வன்னியர்கள் தங்களுக்கு 20 சதவிகித இடஒதுக்கீடு கோரிய போராட்டத்தில் சுட்டுக்கொல்லப்பட்ட 21 பேருக்கு மணிமண்டபமும் அவர்கள் குடும்பத்திற்கு அரசு வேலையும் கொடுக்கப் போவதாக அறிவித்துள்ளது. இதுபோன்ற அறிவிப்புகளின் மூலம் அந்த பகுதியிலுள்ள ஆதிக்க சாதிகளிடம் தன்னுடைய ஆதரவு தளத்தை தி.மு.க. விரிவுபடுத்த முயற்சிக்கிறது. வாய்கிழியப் பேசும் ‘சமூகநீதி அரசியலின்’ யோக்கியதை இதுதான்.
அடிப்படைக் கோரிக்கையை மூடிமறைக்கும் கவர்ச்சிவாத அரசியல் :
அ.இ.அ.தி.மு.க.வும் தற்போது தி.மு.க.வும் மாறி மாறி ஆட்சி செய்த கடந்த 38 வருடங்களில் எந்த அடிப்படை ஜனநாயக உரிமைகளோ மிக மிக அடிப்படையான சமூக வசதிகளோ இன்றி முகாம்களில் வாழும் ஆயிரக்கணக்கான ஈழத் தமிழ்க் குடும்பங்களின் வாழ்க்கை அழிவின் விளிம்புக்கு தள்ளப்பட்டிருக்கின்றன. தமிழ்நாட்டின் 28 மாவட்டங்களில் 115 முகாம்களில் 70,000 க்கும் மேற்பட்ட ஈழத் தமிழர்கள் தங்க வைக்கப்பட்டுள்ளனர். மேலும் 34,135 இலங்கைத் தமிழ் அகதிகள் தமிழ்நாட்டில் முகாமில் இல்லாத அகதிகளாகத் தங்கியுள்ளனர்.
சாதிய அரசியலும் கவர்ச்சிவாத அரசியலும் கலந்த கலவை தி.மு.க.
சில அகதிகள், விடுதலைப் புலிகளுடனான உறவு தொடர்பாக இந்திய அரசாங்கத்தால் சந்தேகிக்கப்பட்டு, செங்கல்பட்டு, பூந்தமல்லி, திருச்சி உட்பட பல இடங்களில் தனி முகாம்களில் அடைத்து வைக்கப்பட்டுள்ளனர். இந்த ‘சிறப்பு முகாம்கள்’ உண்மையில், சிறைச்சாலைகளைப் போன்றது. அவர்களுக்கு வெளியில் சென்றுவர உரிமை இல்லை. இந்த முகாம்கள் மாவட்ட நகரங்களில் இருந்து வெகு தொலைவில் உள்ள கிராமப்புறங்களில் அமைக்கப்பட்டு, 24 மணி நேரமும் போலீசு மற்றும் தமிழ்நாடு கியூ பிரிவு உளவு அமைப்பால் கண்காணிக்கப்படுகிறது. முகாமில் உள்ள உறவினர்களைப் பார்க்க வருவோர் போலீசு மற்றும் உளவுத்துறையால் விசாரணைக்கு உள்ளாக்கப்படுகிறார்கள்.
2009−ல் இலங்கை அகதிகளால் தங்களுக்கு இந்திய குடியுரிமை வழங்க உத்தரவிட வேண்டுமென மதுரை உயர்நீதிமன்றத்தில் தொடுத்த வழக்கின் மேல்விசாரணை 2021 ஆகஸ்டில் நடக்கையில், மோடி தலைமையிலான மத்திய அரசாங்கம், இலங்கையில் இருந்து தமிழ்நாட்டுக்கு வந்த அகதிகள் சட்டவிரோதமாகக் குடியேறியவர்கள் என வகைப்படுத்தியது. இது, இலங்கை அகதிகள் மத்தியில் இருந்துவந்த நீண்டகால எதிர்பார்ப்பை தகர்த்ததோடு, தொடர்ச்சியான போராட்டங்களையும் தூண்டிவிட்டுள்ளது.
திருச்சி சிறப்பு அகதிகள் முகாமில் தடுத்து வைக்கப்பட்டுள்ள 80 இலங்கைத் தமிழர்கள் தங்களை விடுவிக்கக் கோரி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். தங்களை விடுவிக்கவும், தங்கள் குடும்பத்துடன் வாழவும் அனுமதி கோரி பல்வேறு உண்ணாவிரதப் போராட்டங்களையும் நடத்தி வருகின்றனர். கடந்த மாதம், ‘சிறப்பு முகாமில்’ உண்ணாவிரதம் தொடர்பாக 20 பேர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது. மேலும், தூக்க மாத்திரைகளை உட்கொண்ட, தூக்கில் தொங்க அல்லது வயிற்றை கிழிக்க முயன்ற 16 பேரின் கூட்டு தற்கொலை முயற்சி தமிழகத்தை அதிர்ச்சிக்குள்ளாக்கியது.
இந்நிலையில், ‘‘இலங்கைத் தமிழர் அகதிகள் முகாம்’’ என்பதை இனி ‘‘இலங்கைத் தமிழர் மறுவாழ்வு முகாம்’’ என அழைக்க வேண்டும் என ஒரு அரசாணையை தமிழக அரசு வெளியிட்டுள்ளது. இதன் மூலம் இலங்கையில் உள்ள தமிழ் அரசியல் கட்சிகள், அதிகாரிகள், ஈழத்தமிழின ஆதரவு அமைப்புகள் ஆகியோரின் பாராட்டுக்களையும் பெற்றது. ‘‘ஈழத் தமிழர் படுகொலைக்கு காரணம் தி.மு.க.’’, ‘‘தமிழினத்தின் துரோகி தி.மு.க.’’ என்று சீமான் உள்ளிட்ட தமிழ்த் தேசியவாதிகள் தி.மு.க. மீது தொடுக்கும் உணர்ச்சிகர போர்களை தவிடுபொடியாக்கி அவர்கள் வாயை அடைப்பதற்காகவே இலங்கைத் தமிழர்களின் நலத்திட்டங்களுக்காக 317 கோடியே 40 லட்சம் ரூபாய்களை ஒதுக்கியிருக்கிறது தி.மு.க. அரசு. ஆனால், எந்த இடத்திலும் இலங்கைத் தமிழர்களின் அடிப்படை கோரிக்கையான இரட்டை வாக்குரிமை குறித்து வாய்திறக்கவில்லை!
மன்னர்கள் வாழ்க, பொற்கிழிகள் வாழ்க, பொற்கால ஆட்சி வாழ்க !
தமிழகத்தில் ஒரு ‘‘பொற்காலத்தை’’ உருவாக்கும் முயற்சியில் இறங்கியுள்ள ‘மன்னர்’ மு.க.ஸ்டாலின், தன் அரசை புகழ்ந்து பாடி பரிசில் பெறும் புலவர்களையும் உருவாக்கி வருகிறார். சாகித்ய அகாடாமி, ஞானபீட விருது மற்றும் மத்திய − மாநில அரசுகளால் மிக உயர்ந்த விருதுகள் பெரும் தமிழ் அறிஞர்கள் மற்றும் எழுத்தாளர்களுக்கு தமிழக அரசு சார்பில், அவர்கள் விரும்பும் இடத்தில் ‘‘கனவு இல்லம்’’ கட்டித் தருதல்; தமிழ் அறிஞர்கள், எழுத்தாளர்கள் ஆகியோருக்கு ஆண்டுக்கு மூன்று பேருக்கு ஐந்து இலட்ச ரூபாய் ரொக்கப் பணத்துடன் கூடிய ‘‘இலக்கிய மாமணி’’ விருது; தமிழ்நாட்டிற்கும் தமிழினத்தின் வளர்ச்சிக்கும் பங்காற்றியவர்களை பெருமைப்படுத்தும் வகையில், ‘‘தகைசால் தமிழர்’’ என்ற புதிய விருது போன்ற அடுக்கடுக்கான அறிவிப்புகளின் மூலம் பொற்கிழிகளை தி.மு.க. அரசு தயாராக வைத்துள்ளது.
தேர்தல் வியூக வகுத்துக் கொடுத்த ஐ-பேக் நிறுவனத்தின் பிரசாந்த் கிஷோருடன் (இடது) மு.க.ஸ்டாலின் மற்றும் சபரீசன்.
திரை உலகினருக்குப் பொதுவாக சலுகைகள் வழங்கியது மட்டுமல்ல, சில திரை உலக பிரபலங்களின் தனிப்பட்ட பிரச்சினைகளையும் தீர்த்துக் கொடுத்துள்ளார் மு.க.ஸ்டாலின். இதனால், விஜய்சேதுபதி, வடிவேலு, சத்தியராஜ், விஷால், பாக்கியராஜ் போன்ற திரை பிரபலங்கள் தி.மு.க. ஆட்சியையும் முதல்வர் ஸ்டாலினையும் பாராட்டி வருகின்றனர்.
சட்டமன்றத்தில் செந்தில் பாலாஜி போன்ற அமைச்சர்கள், தமிழகத்தின் முன்னாள் முதல்வர் கலைஞர் முதல் தற்போதைய முதல்வர் ஸ்டாலின், உதயநிதி என ஒவ்வொருவரைப் பற்றியும் மணிக்கணக்கில் வரிசையாக வானளாவ புகழ்ந்து துதிபாடுவதை அமைதியாக ரசித்துவிட்டு, உரை முடிந்த பின்னர், ‘‘தனிப்பட்ட புகழ்ச்சிகளை செய்ய வேண்டாம்’’ என ‘பெருந்தன்மை’யாக ‘மறுத்தார்’ முதல்வர் ஸ்டாலின். கவர்ச்சிவாத துதிபாடும் அரசியலின் எடுப்பான சான்றுதான் இந்நிகழ்வுகள்.
தி.மு.க.வின் ஐ.டி. பிரிவு மற்றும் தினகரன், தமிழ் முரசு, குங்குமம் போன்ற தி.மு.க. ஆதரவு ஊடகங்கள் மட்டுமல்லாது தினமணி, தமிழ் இந்து உள்ளிட்ட பார்ப்பன பத்திரிகைகளும் தி.மு.க. அரசின் ஒவ்வொரு அறிவிப்புகளையும் புகழ்ந்து விளம்பரம் செய்வதை வாடிக்கையாக கொண்டுள்ளன.
முந்தைய அ.தி.மு.க. ஆட்சியில் பாட நூல்களில் பதிப்பிக்கப்பட்டிருந்த முன்னாள் முதல்வரின் படங்களை அகற்றாமல் அப்படியே வினியோகிக்கலாம், இதன் மூலம் அரசு நிதி 13 கோடியை மிச்சப்படுத்தலாம் என மானியக் கோரிக்கை மீதான விவாதத்தில் அறிவித்தார் முதல்வர் ஸ்டாலின். இந்த அறிவிப்பு பெரிய அளவில் ஊடகங்களில் விளம்பரப்படுத்தப்பட்டது. அ.தி.மு.க.வினரைப் போல ஸ்டிக்கர் ஒட்டுவதன் மூலம் மக்களிடையே இழிசொற்களைத் தான் சம்பாதிக்க முடியும் என்பதை நன்கு உணர்ந்திருந்த தி.மு.க. ‘‘விளம்பரம் வேண்டாம்’’ என்பதையே மிகப்பெரிய விளம்பரமாக்கிவிட்டது.
அரசின் நகரப் பேருந்துகளில் பெண்களுக்கு இலவச பயணம் அறிவித்ததைப் போல நின்றுகொண்டே கடைகளில் வேலைபார்க்கும் தொழிலாளர்களுக்கு நாற்காலி கொடுக்க வேண்டும் என்று மசோதா நிறைவேற்றி அவர்களின் ‘நெஞ்சை’த் தொட்டுவிட்டார் ஸ்டாலின். ஆனால், ஆயிரக்கணக்கான தூய்மைப் பணியாளர்கள் தங்களது வேலைகள் பறிக்கப்பட்டதையும் காண்டிராக்ட் மயமாக்கப்பட்டதையும் கண்டித்துப் போராடும்போது, அதைக் கண்டுகொள்ள மறுக்கிறது, போலீசை வைத்து மிரட்டுகிறது, தி.மு.க. அரசு.
எச்சரிக்கை!
நீட், வேளாண் திருத்தச் சட்டங்கள், குடியுரிமைத் திருத்தச் சட்டம் போன்றவைகளுக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றியிருக்கிறது தி.மு.க. அரசு. இந்த காகித நடவடிக்கைகள் தான் கவர்ச்சி அரசியலின் உச்சபட்சவரம்பு. இதற்கு மேல் திமுக−வால் செல்ல இயலாது. இக்காகிதங்கள் காவி −கார்ப்பரேட் பாசிசத் தாக்குதல்களிலிருந்து நம்மை எந்தவகையிலும் காப்பாற்றப் போவதில்லை.
படிக்க :
ஆர்.எஸ்.எஸ் – பாஜகவின் நிகழ்ச்சிநிரலுக்கு பின் செல்லும் திமுக || மக்கள் அதிகாரம்
‘சிங்காரச் சென்னை’ : ஆர்.கே நகர் வீடுகளை இடித்த திமுக அரசு !
’சட்டப்போராட்டங்களின்’ மூலம் நீட் தேர்வை தடுக்க முடியவில்லை என்ற அனுபவம் இருந்தபோதும், ‘‘அடுத்த ஆண்டிற்குள் சாதித்துக் காட்டுவோம்’’, ‘‘சட்டப் போராட்டம் தொடரும்’’ என்று தோற்றுப்போன பாதையையே மாற்றாக காட்டுகிறது தி.மு.க. அதைத் தாண்டி மோடி அரசை நிர்பந்திக்கும் வகையிலான எந்த களப் போராட்டங்களையும் தி.மு.க. மேற்கொள்ளத் தயாரில்லை. உண்மையில், அத்தகைய போராட்டங்களை தடுக்கும் வேலையைத்தான் தி.மு.க. செய்து வருகிறது.
தி.மு.க. அரசின் செயல்பாடுகளை இவ்வாறு விமர்சனப் பூர்வமாக பார்க்கும் போதுதான், நீட், புதிய கல்விக் கொள்கை, ஏழு தமிழர் விடுதலை, ஜி.எஸ்.டி. வரி நிலுவை, பெட்ரோல் − டீசல் − காஸ் விலையுயர்வு போன்ற பிரச்சினைகளுக்காகவும், மோடி அரசின் காவி − கார்ப்பரேட் பாசிச நடவடிக்கைகளுக்கு எதிராகவும் தி.மு.க.வின் வெற்று சவடால் ‘சட்டப் போராட்டங்களை’ நம்பி இருக்காமல் மக்கள்திரள் போராட்டங்களின் மூலம் வென்றுகாட்டும் துணிவு பிறக்கும்.
கவர்ச்சிவாத அரசியலுக்கு ஒரு எல்லை உண்டு. மக்களின் உண்மையான பிரச்சினைகளைத் தீர்க்காமல் மேற்கொள்ளப்படும் மேற்கண்ட கவர்ச்சிவாத நடவடிக்கைகள் விரைவில் அம்பலப்பட்டு போவதை தி.மு.க.வால் தடுக்க இயலாது. இப்போது தி.மு.க.விற்கு ஆதரவு கொடுத்து வருகின்ற கூட்டணி கட்சிகளும், பார்ப்பன ஊடகங்களும் ஒருசேர தி.மு.க.விற்கு எதிராகத் திரும்பி, ‘குடும்ப அரசியல்’, ‘ஊழல் ஆட்சி’, ‘துதிபாடிகளின் கட்சி’ என்று தூற்றும் நாள் வெகுவிரைவில் வந்துசேரும்.
அப்போது, மோடி அரசின் காவி − கார்ப்பரேட் பாசிச நடவடிக்கைகளுக்கு எதிரான போராட்டங்களையும் தமிழக மக்களின் உரிமைகளுக்கான போராட்டங்களையும் 2021−இல் தி.மு.க. ஆட்சி அமைவதற்கு முன்பு நாம் விட்டுச் சென்ற இடத்தில் இருந்து மீண்டும் தொடங்க வேண்டியிருக்கும். அதுமட்டுமல்ல, பாசிச பா.ஜ.க. கூட்டணி ஆட்சியதிகாரத்தைக் கைப்பற்றிக் கொள்ளும் காரிருளும் சூழ்ந்திருக்கும். எச்சரிக்கை!

பால்ராஜ்

5 மறுமொழிகள்

  1. திமுக செய்வது கவர்ச்சிவாத அரசியல்தான் என்பதை தெளிவாக அறிவோம்…ஆனால் வினவு செய்வது மக்களைக் குழப்பும் போக்கு என்பதையும் உணர்ந்து கொள்கிறேன்.
    மகளிருக்கான இலவசப் பயணம், கலகஞரின் பெரும்பாலான திட்டங்களை குறைகூறும் தாங்கள் நல்ல திட்டங்கள்.எது என்பதை கூற முடியுமா?…

    இந்த இந்திய சட்ட அமைப்பைத் தாண்டி புரட்சிகர பாதைக்கு திமுக வை நிர்பந்திக்க முடியாது ஏனெனில் அவர்கள் முதலாளித்துவ சித்தாந்தத்தை. ஏற்றவர்கள்…

    ஆனால் தாங்கள் புரட்சிகர கட்சிதானே எத்தனை இடங்களில் நேரடிப் புரட்சி செய்துள்ளீர்கள்?

  2. //இதன் மூலம் அரசு நிதி 13,000 கோடியை மிச்சப்படுத்தலாம் என மானியக் கோரிக்கை மீதான விவாதத்தில் அறிவித்தார் முதல்வர் ஸ்டாலின். //

    13 கோடி.

    • சுட்டிக்காட்டியமைக்கு நன்றி ! தவறுக்கு வருந்துகிறோம். இனி நேராமல் பார்த்துக் கொள்கிறோம். நன்றி !

  3. எல்லாம் சரிதான். கம்யூனிசம் கூட கவர்ச்சி அரசியல்தானே. கம்யூனிச நாட்டில் வசிக்கும்போதுதான் பழைய பேயைவிட மோசமான பிசாசாக இருக்கிறது என்பது புரியும். எல்லா பிரச்னைக்கும் தீர்வு கம்யூனிசம் என்று சொல்லி நாட்டை பிடித்து பிறகு நாட்டை பிச்சைக்கார நாடாக்கியதுதானே கம்யூனிச சரித்திரம். வினவில் என்றாவது கம்யூனிச நாடுகளின் தோல்விக்கு என்ன காரணம் என்று ஆய்வுக்கட்டுரை வந்ததுண்டா?

  4. சிறப்பான பகுப்பாய்வுக் கட்டுரை. அடுத்ததாகப் புதிய (புரட்சிகர) அரசியல் வடிவமைப்புத் தொடர்பான கட்டுரைகளையும் நூல்களையும் அறிமுகம் செய்யவேண்டும். நன்றி.

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க