ள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி. “அரசுப் பள்ளிகளை நவீனப்படுத்தவும், அவற்றின் தரத்தை உயர்த்தவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. அரசுப் பள்ளிகள் வறுமையின் அடையாளமல்ல, அவற்றைப் பெருமையின் அடையாளமாக மாற்றுவோம்”என நடப்புச் சட்டமன்றக் கூட்டத்தொடரில் அவர் அறிவித்திருக்கிறார்.
கடந்த பத்தாண்டுகளில் அரசுப் பள்ளிகள், குறிப்பாக ஆரம்பப் பள்ளிகளில் மாணவர்கள் எண்ணிக்கை குறைந்து, தனியார் பள்ளிகளில் மாணவர்களின் எண்ணிக்கை அதிகரித்தது. இதனால் பல அரசுப் பள்ளிகள் மூடப்பட்டுவிட்டன. தேசிய கல்விக் கொள்கையின்படி அரசுப் பள்ளிகளில் குறிப்பிட்ட எண்ணிக்கையில் மாணவர்கள் இல்லை என்றால், அத்தகைய பள்ளிகளை மூடிவிட்டுப் பல கிராமங்களுக்கு மையத்தில் பள்ளி வளாகத்தை உருவாக்க வேண்டும் என ஒன்றிய அரசு கடந்த ஆண்டு அறிவித்தது. அதிமுக அரசும் அக்கொள்கையை ஏற்றுக் கொண்டது.
குறிப்பாக ஜூலை 04, 2019 அன்று தமிழகத்தில் 1,848 பள்ளிகளில் 10-க்கும் குறைவான மாணவர்கள் பயில்வதாகவும், அவற்றை மூட தமிழக அரசு முடிவு செய்துள்ளதாகவும் தகவல் வெளியானது.
படிக்க :
தமிழகத்தில் அதிகரித்து வரும் தனியார் பள்ளி கட்டணக் கொள்ளை !
♦ தமிழகத்தின் கேந்திர வித்யாலயா பள்ளிகளில் தமிழ்மொழி புறக்கணிப்பு!
ஜூலை 18, 2019 அன்று தமிழகத்தில் 1248 அரசு பள்ளிகள் மூடப்பட்டு, நூலகங்களாக மாற்றப்படும். நூலகங்களில் பணியாற்ற ஆசிரியர்களுக்கு பயிற்சி தேவையில்லை. அங்குள்ள ஆயாக்களே பணியாற்றுவார்கள் என கல்வி அமைச்சர் செங்கோட்டையன் கூறியதாக செய்தி வெளியானது.
ஆனால் அதனை மறுத்து, “பள்ளிகளை மூடும் நோக்கம் அரசிற்கு இல்லை. மூடப்போவதும் இல்லை. மாணவர்களே இல்லாத பள்ளிகள் நூலகமாக செயல்பட்டுக் கொண்டிருக்கும். அங்கே ஒரு ஆசிரியர் இருப்பார். அங்கிருக்கும் மாணவர்களுக்கேற்ப அந்த ஆசிரியர் தொடர்ந்து பணிகளை ஆற்றுவார்” என ட்விட்டரில் அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்து இருந்தார்.
மேற்கூறிய சம்பவங்கள் அதிமுக அரசு தேசிய கல்விக் கொள்கையை அமல்படுத்த எடுத்த முயற்சிக்கான துலக்கமான எடுத்துக்காட்டுகள்.
கொரோனா வந்தபிறகு நிலைமை தலைகீழாக மாறிவிட்டது. கொரோனா காலத்தில் வேலையிழந்து, வருமானத்தையும் வாழ்வாதாரத்தையும் இழந்த ஏழை, எளிய விளிம்பு நிலைக் குடும்பங்களைச் சார்ந்தவர்கள் தனியார் பள்ளிகளில் படித்து வரும் தங்கள் குழந்தைகளைக் கட்டணம் செலுத்திப் படிக்க வைக்க இயலாததால், அரசுப் பள்ளிகளில் சேர்க்கத் துவங்கினர். இதுவரையில் 2 லட்சம் மாணவர்கள் தனியார் பள்ளிகளிலிருந்து அரசுப் பள்ளிகளுக்கு வந்துள்ளதாகத் தகவல்கள் கூறுகின்றன.
இதற்கு அரசுப் பள்ளிகளின் தரம் உயர்ந்ததுதான் காரணம் என்று சொல்லி விட முடியாது. ஏழை, எளிய குடும்பங்களின் வாழ்க்கைத் தரம் சரிந்ததால் ஏற்பட்ட மாற்றம் இது.
கொரோனா தொற்றுக் காலத்தில் அதிக பாதிப்புக்குள்ளானது கல்வி. தேசிய அளவில் ஆரம்பக் கல்வி முதல் மேல்நிலைக் கல்வி வரை பயிலும் 24.7 கோடி மாணவர்களுடைய கல்வி பாதிக்கப்பட்டு, மனஉளைச்சலுக்கு ஆளாகியிருக்கிறார்கள். இந்தச் சவாலை வெற்றிகரமாக எதிர்கொள்வதற்கு, அரசுப் பள்ளிகளில் நிலவும் சில பிரச்சினைகளைப் புரிந்து கொண்டாக வேண்டும்.
தமிழக அரசுப் பள்ளிகளின் நிலைமை:
தமிழ்நாட்டில் உள்ள மொத்த பள்ளிகளின் எண்ணிக்கை 58,897. இதில் 35,621 பள்ளிகள் தொடக்கப் பள்ளிகளாகவும், 9,392 பள்ளிகள் நடுநிலைப் பள்ளிகளாகவும், 5,788 பள்ளிகள் உயர்நிலைப் பள்ளிகளாகவும், 8,096 பள்ளிகள் மேல்நிலைப் பள்ளிகளாகவும் உள்ளன.
அரசுப் பள்ளிகளை பொருத்த வரை 24,310 தொடக்கப் பள்ளிகள்; 7,024 நடுநிலைப் பள்ளிகள்; 3,135 உயர்நிலைப் பள்ளிகள்; 3,110 மேல்நிலைப் பள்ளிகள் உட்பட மொத்தம் 37,579 பள்ளிகள் உள்ளன.
தனியார்ப் பள்ளிகளைப் பொருத்த வரை தொடக்கப் பள்ளிகள் 5089, நடுநிலைப் பள்ளிகள் 763, உயர்நிலைப் பள்ளிகள் 2046, மேல்நிலைப் பள்ளிகள் 3764 உட்பட மொத்தம் 12,382 பள்ளிகள் உள்ளன.
அரசு உதவிப் பெறும் பள்ளிகளைப் பொருத்த வரை தொடக்கப் பள்ளிகள் 5021, நடுநிலைப் பள்ளிகள் 1508, உயர்நிலைப் பள்ளிகள் 589, மேல்நிலைப் பள்ளிகள் 1210 உட்பட மொத்தம் 8328 பள்ளிகள் உள்ளன.
தமிழ்நாட்டுப் பள்ளிகளில் உள்ள 5.6 லட்சம் ஆசிரியர்களில், 2.27 லட்சம் பேர் அரசுப் பள்ளிகளிலும், 77 ஆயிரம் பேர் அரசு உதவிபெறும் பள்ளிகளிலும், 2.53 லட்சம் பேர் தனியார்ப் பள்ளிகளிலும் பணிபுரிகின்றனர். மற்ற பிரிவுகளில் 4,552 ஆசிரியர்களும் பணிபுரிந்து வருகின்றனர்.
மொத்தம் 37,579 பள்ளிகள் உள்ள அரசுப் பள்ளிகளில் 2.27 லட்சம் ஆசிரியர்கள் தான் பணிபுரிகின்றனர். ஆனால், 12,382 பள்ளிகள் உள்ள தனியார் பள்ளிகளில் 2.53 லட்சம் ஆசிரியர்கள் பணிபுரிகின்றனர்.
தமிழகத்தில் அரசுப் பள்ளிகளில் 45,93,422 பேரும், அரசு உதவிபெறும் பள்ளிகளில் 22,25,308 பேரும், தனியார்ப் பள்ளிகளில் 64,15,398 பேரும், மற்ற பள்ளிகளில் 83,755 மாணவ, மாணவிகளும் உள்ளனர்.
மொத்தம் 37,579 பள்ளிகள் உள்ள அரசுப் பள்ளிகளில் 45,93,422 மாணவ, மாணவிகள் தான் படிக்கின்றனர். ஆனால், 12,382 பள்ளிகள் உள்ள தனியார் பள்ளிகளில் 64,15,398 மாணவ, மாணவிகள் தான் படிக்கின்றனர்.
அரசுப் பள்ளிகளின் எண்ணிக்கை தனியார் பள்ளிகளின் எண்ணிக்கையை விட 3 மடங்கு அதிகமாக உள்ளது. ஆனால், மாணவ, மாணவிகளின் எண்ணிக்கையிலும், ஆசிரியர்களின் எண்ணிக்கையிலும் தனியார் பள்ளிகள் தான் ஆதிக்கம் செலுத்துகின்றனர்.
மேற்கூறியவற்றில் இருந்து பார்க்கும்போது தமிழக மாணவ மாணவிகள் அரசுப் பள்ளிகளை விட தனியார் பள்ளிகளை நோக்கிதான் செல்கின்றனர். இதை இப்படிக்கூட கூறலாம், இலவசக் கல்வி படிப்படியாக ஒழிக்கப்பட்டு காசு இருந்தால்தான் படிக்க முடியும் என்ற நிலை படிப்படியாக உருவாக்கப்படுகிறது.
2019-ம் ஆண்டு நடத்தப்பட்ட ஆய்வின் முடிவில், தமிழகத்தில் 2,391 அரசு உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் கழிப்பறை உள்ளிட்ட அடிப்படை வசதிகள் இல்லை என்ற தகவலை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்கள், பள்ளிக் கல்வித் துறையிடம் சமர்ப்பித்துள்ளனர்.
அரசின் கணக்கின்படியே பள்ளிகளின் நிலைமை இவ்வளவு மோசம் என்றால், உண்மை நிலவரம் இதைவிட மோசமாக இருக்கும். பள்ளிக் கல்வித் துறை அரசாணை நிலை எண் படி, 20 மாணவர்களுக்கு 1 சிறுநீர் கழிவறையும், 50 மாணவர்களுக்கு 1 மலக்கழிவறையும் இருக்க வேண்டும். இந்த அரசாணைகள் எல்லாம் காகிதத்தில்தான் உள்ளது. நடைமுறையில் எந்த பள்ளிக் கூடத்திலும் அமலாக்கத்திற்கு செல்லவில்லை.
உயர்நிலைப் பள்ளி மாணவர்கள் தங்களின் மேல்நிலைப் படிப்புக்கு செல்வது குறைவதன் மூலம், தமிழ்நாட்டின் இடைநிற்றல் விகிதமும் அதிகரிக்கிறது என்பதை நம்மால் உணர முடிகிறது. அதாவது, 9-ம் வகுப்பு மற்றும் 10-ம் வகுப்புகளில் படிக்கும் மாணவர்களின் இடைநிற்றல் விகிதம் அதிகரித்துள்ளது. இவர்கள் 9,10-ம் வகுப்போடு தங்களின் பள்ளிக் கனவையே இழக்கின்றனர். 2019-20-ல் தமிழ்நாட்டின் மொத்த உயர்நிலைப் பள்ளி மாணவர்களின் இடைநிற்றல் விகிதம் 9.6 % ஆக உள்ளது.
தமிழ்நாட்டில் ஆரம்பப் பள்ளிகளில், மாணவர்களின் இடைநிற்றல் விகிதம் 16% ஆக உள்ளது. இப்படி பல மாணவ, மாணவியர் இடைநிற்றலுக்கு உள்ளாவதால், குழந்தைத் தொழிலாளர்களின் எண்ணிகை அதிகரித்து வருகிறது
இந்தளவுக்கு இடைநிற்றல் மாணவ மாணவியர் அதிகரிப்பதன் பின்னணியில் வேலைவாய்ப்பின்மையால் குடும்பத்தில் நிலவும் வறுமை உட்பட வெவ்வேறு குடும்ப சூழ்நிலை போன்றவை உள்ளது. 10-ம் வகுப்பு முடித்தவுடன் பலர் குழந்தைகள், குழந்தைத் தொழிலாளராக சென்று விடுகின்றனர்.
இப்படி இடைநிற்றல் அதிகமாவதால், குழந்தைத் தொழிலாளர்கள் அதிகமாவதை போல குழந்தைத் திருமணங்களும் அதிகளவில் நடைபெறுகின்றன. இந்தியாவில் ஒவ்வொரு வருடமும் 15 லட்சம் குழந்தை திருமணங்கள் நடைபெறுவதாக யுனிசெஃப் கூறுகிறது. தேசிய குடும்ப சுகாதார கணக்கெடுப்பின்படி, இந்தியாவில் திருமணம் செய்துகொள்ளும் 4 பேரில் ஒருவருக்கு குழந்தை திருமணம் நடைபெறுவதாக தெரியவந்துள்ளது.
படிக்க :
இழிவாகப் பார்க்கப்படும் தாய்மொழி வழிக் கல்வி : ஒரு பெற்றோரின் அனுபவம் !
இந்துத்துவத்தை கற்பிக்க தனி கல்வி வாரியம் அமைக்கும் மோடி அரசு !
இப்படிப்பட்ட மோசமான நிலைமையில்தான் தமிழக அரசுப் பள்ளிகளின் கட்டமைப்பு உள்ளது. அரசுப் பள்ளிகளை நாடி வருகிற, தனியார் சுயநிதிப் பள்ளிகளிலிருந்து விலகி வருகிற மாணவர்களைத் தக்கவைக்கவும், மேலும் மேலும் அதிகமானோரை ஈர்க்கவும் அரசுப் பள்ளிகளின் கட்டமைப்பை மேம்படுத்துவதோடு கல்வித் தரத்தையும் உயர்த்த வேண்டும். தமிழகத்தில் பல மாவட்டங்களில் அரசுப் பள்ளிகளில் மாணவர்கள் எண்ணிக்கையைத் தக்கவைப்பதோடு அதிகரிக்கவும் சமூகப் பார்வையோடு பல ஆசிரியர்கள் செயல்பட்டு வருகிறார்கள்.
‘குடி’மகன்களை வெளியேற்றிய முகப்பேர் பள்ளி
சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட ‘அம்பத்தூர் நகராட்சி தொடக்கப் பள்ளி’ 1935-ல் தொடங்கப்பட்டது. 2009-ல் இப்பள்ளியில் படித்த மாணவர்களின் எண்ணிக்கை 45. அவ்வாண்டு தலைமை ஆசிரியராக எஸ்.கிருஷ்ணவேணி பொறுப்பேற்றபோது, பள்ளி நிறைவடைந்து ஆசிரியர்களும் மாணவர்களும் வெளியேறும் முன்பாகவே சிலர் மதுபாட்டில்களுடன் பள்ளிக்குள் ‘குடி’யேறிவந்தார்கள். ஆசிரியர்கள் அச்சத்தோடு வெளியேறினார்கள். அப்பகுதி சமூக ஆர்வலர்களைச் சந்தித்துத் தலைமையாசிரியர் நிலைமையை எடுத்துக் கூறினார். அவர்களது தலையீட்டைத் தொடர்ந்து நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. ‘குடி’மகன்கள் தடுக்கப்பட்டார்கள், பள்ளிக்குச் சுற்றுச் சுவரும் கட்டப்பட்டது.
ஆசிரியர்கள் செலவில் காலைச் சிற்றுண்டியும் சீருடையும் கொடுத்தனர். சில புரவலர்கள் மூலம் 100 நாற்காலிகளும் 12 மேஜைகளும் பெறப்பட்டன. பள்ளியின் தோற்றம் மாற்றப்பட்டது. குழந்தைகளுக்கு ஆங்கில மொழிப் பயிற்சி தனியாக அளிக்கப்பட்டு வருகிறது. வெளிநாடுகளில் உள்ள ஆர்வலர்கள் மூலம் 6 மடிக்கணினிகள், 6 மேசைக் கணினிகளுடன் கணினிப் பயிற்சியும் அளிக்கப்படுகிறது. மாவட்ட ஆட்சியரை அழைத்து பள்ளி ஆண்டு விழா நடத்தப்பட்டது.
புளியமரப் பள்ளி என்று ஏளனமாகப் பார்க்கப்பட்ட காலம் போய், தலைநிமிர்ந்த புளியமரம் என முகப்பேரின் அடையாளமாக, அனைவரும் தேடி வரும் பள்ளியாக இது உள்ளது. இப்பள்ளி மாணவர் எண்ணிக்கை கொரோனாவுக்கு முன்பு 110 ஆக உயர்ந்திருந்தது. கரோனாவுக்குப் பிறகு மேலும் 90 மாணவர்கள் சேர்ந்திருக்கிறார்கள். இப்பள்ளியின் கட்டமைப்பை மேம்படுத்த வேண்டியுள்ளது. 2017-ல் இப்பள்ளியின் கட்டமைப்பை மேம்படுத்த மாநகராட்சி ரூ.30 லட்சம் ஒதுக்கீடு செய்தது. ஆனால், அந்தத் தொகை இன்னும் பள்ளிக்கு வந்துசேரவில்லை.
பெற்றோர் தேடி வரும் திருவெற்றியூர் பள்ளி
ராமநாதபுரம் மாவட்டம் திருவெற்றியூரில் உள்ள நகராட்சி நடுநிலைப் பள்ளி 1975-ல் தொடங்கப்பட்டது. 2013-ல் இப்பள்ளி மாணவர்கள் எண்ணிக்கை 203. அவ்வாண்டு தலைமையாசிரியராக ஆ.முத்துச்செல்வி பொறுப்பேற்றார். தினமும் பள்ளி நேரம் முடிந்த பிறகு, மாணவர்களுக்குத் தமிழ், ஆங்கிலம் இரண்டு மொழிகளையும் கற்பிக்க ஒன்றரை மணி நேரம் சிறப்பு வகுப்புகள் நடத்தப்பட்டன. மாணவர்களுக்கு நாடகம், சிலம்பு, பறை போன்ற கலைகளிலும் பயிற்சி அளிக்கப்பட்டது. இப்பள்ளியைச் சார்ந்த 7 மாணவர்கள் தேசியத் தகுதி – உதவித்தொகைத் தேர்வில் கடந்த ஆண்டு வெற்றிபெற்றார்கள்.
பள்ளி ஆசிரியர்கள் மேற்கொண்ட முயற்சியால், 2020-ல் மாணவர்கள் எண்ணிக்கை 392ஆக உயர்ந்தது. தற்போது அப்பள்ளியில் மொத்த மாணவர்கள் எண்ணிக்கை 662. இப்பள்ளியில் குழந்தைகளைச் சேர்ப்பதற்குப் பெற்றோர் தினமும் வருகிறார்கள். இடநெருக்கடி, ஆசிரியர் பற்றாக்குறை இருந்தாலும் மாணவர்கள் சேர்த்துக்கொள்ளப் படுகிறார்கள்.
தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து சட்டமன்ற உறுப்பினர் 3 புதிய வகுப்பறைகளை 2019-2020-ல் கட்டிக் கொடுத்திருக்கிறார். ஊராட்சி நிர்வாகமும் நிதியுதவி செய்தது. அதேநேரம், தேவையான ஆசிரியர்களை நியமனம் செய்வதோடு, பள்ளியின் கட்டமைப்பை மேம்படுத்திடவும் அரசு நடவடிக்கை எடுத்திட வேண்டும்.
முன்மாதிரியான மதரசா பள்ளி
சென்னை அண்ணா சாலையில் காயிதே மில்லத் பெண்கள் கல்லூரி வளாகத்தின் ஒரு பகுதியில், அரசு மதரசா மேல்நிலைப் பள்ளி இயங்கி வருகிறது. 1849-ல் தொடங்கப்பட்ட பள்ளி இது. ஏழை, எளிய குழந்தைகளின் கல்விக்காக ஆற்காடு நவாப் 23 ஏக்கர் பரப்பளவு இடத்தை இப்பள்ளிக்கு அளித்தார். 2017-ல் இப்பள்ளியில் மாணவர்கள் எண்ணிக்கை 140. அதேநேரம், தலைமை ஆசிரியர் கே.சுந்தரவடிவேல் தலைமையில், ஆசிரியர்கள் வீடுவீடாகச் சென்று பிரச்சாரம் செய்த பின்னணியில், மாணவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இப்பள்ளியில் மிகப்பெரிய மைதானம் உள்ளது. மாணவர்களுக்குக் கால்பந்து, ஹாக்கி, தடகளச் சிறப்புப் பயிற்சி அளிக்கப்படுகிறது. ஆங்கிலமொழி சிறப்புப் பயிற்சியும் அளிக்கப்பட்டு வருகிறது. கொரோனாவுக்கு முன்பு இப்பள்ளியில் மாணவர்கள் எண்ணிக்கை 302. தற்போது மாணவர்கள் எண்ணிக்கை 369ஆக உயர்ந்துள்ளது. அனைத்து சமூகங்களைச் சேர்ந்த குழந்தைகளும் இந்தப் பள்ளியில் படித்து வருகிறார்கள்.
இப்பள்ளியின் கட்டமைப்பை மேம்படுத்தி, ஆசிரியர்களை நியமித்து, கல்வித் தரத்தை உயர்த்த அரசு நடவடிக்கை எடுத்தால், மாணவர்கள் எண்ணிக்கை மேலும் அதிகரிக்க வாய்ப்புள்ளது. சென்னை மாநகரத்தின் மையமான பகுதியில் பெரும் பரப்பளவில் இயங்கி வரும் இப்பள்ளியை முன்மாதிரிப் பள்ளியாக மேம்படுத்திட அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மூன்று பள்ளிகளைப் பற்றி தி இந்துவில் செய்தி வெளியாகி உள்ளது.
மேற்கூறிய மூன்று பள்ளிகளும் ஆசிரியர்களின் முன்முயற்சியால் சிறப்பாக இயங்கி வருகிறது. ஆனால் அங்கேயும் அடிப்படை கட்டமைப்பு வசதிகள் இல்லாதது, ஆசிரியர் பற்றாக்குறை போன்ற பிரச்சனைகள் உள்ளன. இப்பிரச்சனைகளை களைய தற்போது உள்ள தி.மு.க அரசின் செயல்பாடுகளைப் பற்றி பார்ப்போம்.
தற்போது தாக்கல் செய்யப்பட்ட பட்ஜெட்டில் பள்ளிக்கல்வி சம்மந்தமான சில விவரங்கள் பின்வருமாறு :
பள்ளிக் கல்விக்கு மொத்தமாக ரூ.32,599.54 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.
அனைத்து ஆசிரியர்களுக்கும் தொழில்நுட்ப வசதியுடன் கண்காணிக்கக் கூடிய மற்றும் ஆதாரங்கள் அடிப்படையிலான பயிற்சி வழங்க ஏதுவாக 413 கல்வி ஒன்றியங்களுக்கும் தலா 40 தொடுதிரை கையடக்க கணினிகள் 13.22 கோடி மதிப்பீட்டில் வழங்கப்பட உள்ளது.
2025-ம் ஆண்டிற்குள் தமிழ்நாட்டில் உள்ள 8 வயதிற்குட்பட்ட அனைத்து மாணவர்களும் எண்ணும் எழுத்தும் இயக்கம் ரூ.66.70 கோடி மதீப்பீட்டில் தீவிரமாக செயல்படுத்தப்படும்.
அரசுப்பள்ளி மாணவர்கள் கணினித் திறன்களை இளம் வயதிலேயே பெறுவதை உறுதிசெய்ய 1,784 அரசு நடுநிலைப் பள்ளிகளில் ரூ.114.18 கோடி மதிப்பீட்டில் உயர் தொழில்நுட்ப ஆய்வகங்கள் ஏற்படுத்தப்படும். மேலும், 865 உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் ரூ.20.76 கோடி செலவில் ஸ்மார்ட் வகுப்பறைகள் துவங்கப்படும்.
மேலே கூறியவைகளில் இருந்து பார்க்கும் போது, பள்ளிகளில் அடிப்படை கட்டமைப்பு வசதிகளான கழிவறை, குடிநீர், காற்றோட்டமான அறைகளை ஏற்படுத்துவது மற்றும் தேவையான ஆசிரியர்களை நியமிப்பதுதான் தற்போது உள்ள அவசியமான மற்றும் அத்தியவசியமான தேவை. அதைப் பற்றி எல்லாம் இந்த பட்ஜெட் கவலைப்படவில்லை. இடைக்காலப் பட்ஜெட்டில் ஒதுக்கப்பட்ட ரூ.34,161 கோடி தற்போது இந்த பட்ஜெட்டில் ரூ.32,599 கோடியாக குறைக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் உள்ள 37,579 பள்ளிகளில் அடிப்படைக் கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்த வருடந்தோறும் ஒரு பள்ளிக்கு ரூ.10 இலட்சம் வீதம் ரூ.3,758 கோடி ஒதுக்கினாலே போதும், 5 வருடத்தில் தமிழகத்தில் உள்ள எல்லா அரசுப் பள்ளிகளிலும் தேவையான அடிப்படைக் கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்த முடியும். அப்படிப்பட்ட சிந்தனை முறையும் இந்த அரசுக்கு கிடையாது.
ஆனால், இந்த பட்ஜெட்டில் சென்னையில் மெட்ரோ இரயில் இரண்டாம் கட்டத் திட்டப் பணிகள் தொடங்கப்படும் என்றும், கோவை மற்றும் மதுரை மாவட்டங்களிலும் மெட்ரோ திட்டப் பணிகள் தொடங்கப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது.
மெட்ரோ இரயிலில் சாதாரண ஏழை மக்கள் யார் பயணிக்கிறார்கள்? கட்டண உயர்வு காரணமாக காலியாகதான் சென்று கொண்டிருக்கிறது. சாதாரண மக்கள் பயன்பெறும் வகையில் பேருந்து மற்றும் இரயில்வே போக்குவரத்தை அமைப்பதே மக்களுக்கு உதவிகரமான திட்டமாக இருக்கும்.
கோடிக்கணக்கான ரூபாய்களை கொட்டி கட்டப்படும் மெட்ரோ இரயில் சேவைகள் மேட்டுக்குடிகளுக்கு மட்டுமே பயன்படுகிறது. அப்படிப்பட்ட திட்டத்திற்கு கோடிக்கணக்கான ரூபாய்களை கடன் வாங்கி கொட்டும் மத்திய, மாநில அரசுகள் மக்களுக்கு இலவசமான கல்வி கொடுப்பதற்கு தேவையான அரசுப் பள்ளிகளின் கட்டமைப்பை அதிக நிதி ஒதுக்கி பலப்படுத்த தயங்குகின்றன.
ஏனென்றால், யார் ஆட்சிக்கு வந்தாலும் அரசை இயக்குவது தனியார்மயம், தாராளமயம், உலகமயம் என்ற கொள்கைகளே. அரசுப் பள்ளிகளுக்கு அதிக நிதி ஒதுக்கி, அதன் கட்டமைப்பை பலப்படுத்திவிட்டால் மக்கள் எல்லாரும் தன் பிள்ளைகளை அரசுப் பள்ளிகளில்தான் சேர்ப்பார்கள். அதன் விளைவாக கல்வியை விற்பனை சரக்காக்குவது என்ற திட்டம் நிறைவேறாது அல்லவா?
படிக்க :
புதிய கல்விக் கொள்கையை கமுக்கமாக அனுமதிக்கும் தி.மு.க !
புதிய கல்விக் கொள்கையை நடைமுறைப்படுத்தும் அண்ணா பல்கலை || CCCE
அதனால்தான், அரசுப் பள்ளிகளுக்கு ஒதுக்கும் நிதி படிப்படியாக குறைக்கப்படுகிறது. அரசுப் பள்ளிகளின் கட்டமைப்பு ஒன்னும் இல்லாமல் ஆக்கப்படுகிறது. மக்களிடமும் தனியார் பள்ளிகள்தான் தரமான பள்ளிகள் என்ற சிந்தனை ஏற்படுத்தப்படுகிறது. அதனால், அவர்களும் தன் பிள்ளைகளை கடன் வாங்கியாவது தனியார் பள்ளிகளில் படிக்க வைக்க வேண்டும் என்ற நிலைக்கு தள்ளப்படுகின்றனர்.
அரசுப் பள்ளிகள் வறுமையின் அடையாளமல்ல, அவற்றைப் பெருமையின் அடையாளமாக மாற்றுவோம் என்று அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கூறுவது எல்லாம் வெற்று வாய்ச்சவடால்தான்.
இப்படிப்பட்ட நிலைமைகளில் அரசுப் பள்ளிகளில் கல்வி சொல்லிக் கொடுப்பதை சேவையாக கருதும் சமூக அக்கறை உள்ள ஆசிரியர்களால்தான், சில பள்ளிகள் மாணவர்களின் எண்ணிக்கையை அதிகரித்து அரசின் உதவி இல்லாமல் சிறப்பாக செயல்படுகின்றன.
ஆனால், அனைவருக்கும் தரமான, இலவசமான, விஞ்ஞானப்பூர்வமான கல்வி கொடுக்க வேண்டிய அரசானது அக்கடமையிலிருந்து விலகி நிற்கிறது.

அமீர்
செய்தி ஆதாரம் : தி இந்து, UDISE + ஆய்வறிக்கை.

2 மறுமொழிகள்

  1. அவசியமான கட்டுரை.தரவுகள் வாசிப்புக்கு சுமையாகி கவனம் சிதைகிறது.புள்ளிவிவரங்களை எடுப்பாக, உள்ளே அட்டவணையாக்கி
    கொடுத்தால் மூளை அதை உள்ளிழூக்கும்.

  2. சரியான புள்ளி விவரங்களுடன் தகவலை பகிர்ந்தமைக்கு நன்றி. அரசின் செயல்பாட்டில் நடுநிலைமையுடன் விமர்சனம் செய்த தாங்கள் ஏன் அரசுப்பள்ளி ஆசிரியர்களின் நடவடிக்கைகளை பொது வெளியில் விமர்சிக்க தயங்குகிறீர்கள்.கல்வி அதிகாரிகளின் அலட்சியப்போக்கை கண்டும்காணமல் ஒதுங்குகிறீர்கள்.சோற்றுக்கே வழியற்ற ஏழைக்குழந்தைகளை கல்வியறிவிக்கு க கொள்ளிக்கட்டையாய் இருக்கும் எத்தனை அரசுப்பள்ளி ஆசிரியரை நீர் இனம்கண்டீர். முடிந்தால் முயன்று பாருங்கள் மிகப்பெரிய உண்மை உறங்கி கிடக்கிறது தோழர்களே! கைகோர்ப்போம் சமூக வளர்ச்சிக்கு. நன்றி.

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க