Thursday, June 1, 2023
முகப்புவாழ்க்கைஅனுபவம்இழிவாகப் பார்க்கப்படும் தாய்மொழி வழிக் கல்வி : ஒரு பெற்றோரின் அனுபவம் !

இழிவாகப் பார்க்கப்படும் தாய்மொழி வழிக் கல்வி : ஒரு பெற்றோரின் அனுபவம் !

ஆங்கில வழிக் கல்வி முறையில் பயிலும் குழந்தைதான் அறிவார்ந்த குழந்தை எனும் இந்த உளவியல், தமிழ்நாட்டு மக்களின் மேல் மறுகாலனியாக்கம் ஏவியிருக்கும் அடிமைப் புத்தியாகும். இதனை எங்கும் விரவச் செய்கிறது, அரசு

-

தமிழ்வழிக் கல்வியில் தன் மகனைச் சேர்த்த பெற்றோரின் அனுபவம்!

சென்னையைச் சேர்ந்த நண்பர் ஒருவர் ஆறு வயதான மகனைப் பள்ளிக் கூடத்தில் சேர்த்ததில் ஏற்பட்ட சிக்கல்களைப் பற்றிய பதிவு இது. தமிழ் மொழிப் பற்றாளரான அவர் தனது மகனை தமிழ் வழியில் தான் படிக்க வைக்க வேண்டும் என்ற கொள்கையில் உறுதியாக இருந்தவர்.

சென்ற ஆண்டு தன் வீட்டுக்கு அருகே உள்ள அரசு தொடக்க பள்ளி ஒன்றில் தன் மகனை மழலையர் வகுப்பில் (யு.கே.ஜி) சேர்த்திருந்தார். ஆனால் அப்பள்ளியில் யு.கே.ஜி. தமிழ் வழியில் இல்லை, ஆங்கில வழியில் மட்டும்தான் இருக்கிறது என்று கூறியிருந்தார்கள். எனினும் இவர் தமிழ் வழிக் கல்வியை வலியுறுத்திக் கேட்கவே அடுத்த கல்வியாண்டில் முதலாம் வகுப்புக்கு செல்லும் போது தமிழ் வழியில் மாற்றிக் கொள்ளுங்கள் என்று கூறியிருக்கின்றனர்.

அரசு தொடக்கப் பள்ளியில் தமிழ் வழியில் மழலையர் கல்வி ஏன் இல்லை என்ற கேள்வியே நம்மை தொக்கி நின்று கொண்டிருக்கையில், இந்த ஆண்டு ஒன்றாம் வகுப்பில் சேர்ப்பதற்காகச் சென்று கேட்ட போதும் “இல்லை சார் தமிழ் மீடியம் இல்லை. இங்கிலீஷ் மீடியம் தான் இருக்கு. நீங்க அதிலேயே சேருங்களேன்” என்று சொன்னதைக் கேட்டு அவர் அதிர்ந்து போயிருக்கிறார்.

அதெப்படி, நீங்கள் தானே சொன்னீங்க. அடுத்த ஆண்டு தமிழ் மீடியம்ல மாத்திக்கலாம்னு, இப்ப எப்படி இல்லைன்னு சொல்றீங்க? அதெப்படி இல்லாமல் போகும்” என்று கேட்டிருக்கிறார். “சார், தமிழ் மீடியம்ல யாரும் இல்ல, உங்க பையன் ஒருத்தனுக்காக சேர்க்க முடியாது, நீங்கள் வேணும்னா இங்கிலீஷ் மீடியம்லயே சேருங்களேன்” என்று அப்பள்ளியின் ஆசிரியர்கள் கூறியுள்ளனர். அவர் சம்மதிக்கவில்லை.

படிக்க :
♦ அரசுப் பள்ளி ஆசிரியர்கள் சரியாக சொல்லி கொடுக்கவில்லையா?
♦ ஆங்கில மோகத்திற்கு பலியிடப்படும் அறிவுத்திறன் – ஒரு கள ஆய்வு !

ஒரு அரசுத் தொடக்கப் பள்ளியிலேயே “தமிழ் மீடியம் இல்லை, யாரும் சேர்க்கவில்லை, அதனால் உங்கள் பிள்ளையையும் தமிழ் வழியில் சேர்க்க முடியாது” என்று அந்த ஆசிரியர் சொன்னதை அவரால் ஏற்க முடியவில்லை. வேறுபள்ளியில் தமிழ் வழியிலேயே சேர்த்துக் கொள்ளலாம் என்று வந்துவிட்டார்.

வேறொரு பள்ளிக் கூடத்தில் சேர்ப்பது பற்றி யோசித்துக் கொண்டிருக்கும்போது, அந்தப் பகுதியில் உள்ள ஒரு அரசு மேல்நிலைப் பள்ளியின் ஆசிரியர்கள் தன் வீட்டருகே பிரச்சாரம் செய்து கொண்டிருப்பதைக் காண்கிறார். “அனைவரும் தங்கள் வீட்டுப் பிள்ளையை அரசுப் பள்ளியில் சேர்க்க வேண்டும்” என வீட்டுக்கு வீடு துண்டுப் பிரசுரம் கொடுத்துக் கொண்டிருந்தார்கள்.

அவர்களிடம் சென்று ஒரு துண்டு பிரசுரத்தை வாங்கிய பின் அக்குழுவிலிருந்த ஒரு ஆசிரியரிடம் “என் பையனை ஒன்னாவது வகுப்புல சேர்க்கனும். பக்கத்துல இருக்கிற பள்ளிக்கூடத்துல தமிழ் மீடியமே இல்லைன்னு சொல்லுறாங்க, நம்ம பள்ளிக் கூடத்துல தமிழ் மீடியம் இருக்கா?” எனக் கேட்டுள்ளார்கள். ”இருங்க கேட்டு சொல்றேன்” என இன்னொரு ஆசிரியரிடம் போனில் பேசிய அவர் “இல்ல சார் தமிழ் மீடியம் இல்ல. இங்கிலீஷ் மீடியம் மட்டும் தான் இருக்காம்” என்று சொல்லிய போது அவருக்கு என்ன சொல்வதென்று தெரியவில்லை. இது இரண்டாவது முறை. அரசுப் பள்ளிக் கூடங்களிலேயே தமிழ் வழிக் கல்வி இல்லை என்பதனை அவரால் நம்ப முடியவில்லை.

இது பற்றி தன் வீட்டருகே உள்ள சத்துணவுக் கூட ஆசிரியர் ஒருவரிடம் பேசியபோது, அவருக்கு அந்த மேல்நிலைப்பள்ளியின் தலைமை ஆசிரியரை தெரிந்திருந்தது. ஆகவே அவருக்கு போன் போட்டு பேசி, அப்பள்ளியில் தமிழ் வழி இருக்கிறது என்பதனை உறுதிபடுத்தியுள்ளார். மேலும் ”தமிழ் மீடியம் இல்லாமல் இருக்காது, நேரிலேயே சென்று பாருங்கள்” எனவும் வழிகாட்டியுள்ளார்.

உங்கள் பள்ளிப் பருவத்தின் இனிமைகளை உங்கள் குழந்தைகளும் சுவைக்க வேண்டுமா? வாருங்கள், அரசுப் பள்ளிகளை நோக்கி…

அடுத்த நாளே தனது துணைவியாருடன் அம்மேல்நிலைப் பள்ளிக்குச் சென்றார். பள்ளியின் வாசலில் உள்ள அறிவிப்பு பதாகையிலேயே இங்கு தமிழ் மற்றும் ஆங்கில வழிக் கல்வி இரண்டும் உண்டு என எழுதப்பட்டிருந்தது அவருக்கு நம்பிக்கையை ஏற்படுத்தியது. உள்ளே சென்ற பின், சேர்க்கை நடத்துவதற்கான பகுதியில் அமர்ந்திருந்த ஆசிரியர்களிடம் விண்ணப்பத்தை கோரியுள்ளார். அப்போது ஆசிரியர்கள் ”எந்த மீடியம்” என கேட்டபோது, ”தமிழ் மீடியம் சேர்க்கனும் டீச்சர்” என சொல்லியதற்கு இலேசான புன்னகையுடன் “தமிழ் மீடியமா?” என கேட்டுக் கொண்டே அந்த ஆசிரியர்கள் விண்ணப்பத்தைக் கொடுத்துள்ளனர்.

எனது நண்பர் விண்ணப்பத்தை பூர்த்தி செய்துகொண்டிருந்தபோது, சில அடிகள் தள்ளியிருந்த அவரின் துணைவியாரைப் பார்த்துக் கொண்டே “இரண்டு பேரும் சேர்ந்து விருப்பத்தோடு தான் தமிழ் மீடியம் சேர்க்குறீங்களா?” எனக் கேட்டுள்ளார் அங்கிருந்த ஆசிரியர் ஒருவர்.

அரசுப் பள்ளிகளில் இருமொழிக் கல்வி அறிமுகப்படுத்தப்பட்டதிலிருந்து சாதாரண ஏழை, நடுத்தர வீட்டுப் பெற்றோரும் அரசுப் பள்ளிக் கூடங்களில் ஆங்கில வழியில் சேர்ப்பதையே விரும்புவதால் (விரும்ப வைக்கப்படுவதால்) எதோ ஒரு கொள்கைக்காக தன் துணைவியார் சம்மதமில்லாமல் என் நண்பர் வலுக்கட்டாயமாக தமிழ் வழியில் சேர்க்கிறாரோ என்று நினைத்துதான் அந்த ஆசிரியர் அவ்வாறு கேட்டுள்ளார் என்பது அவரின் துணைவியாருக்கும் புரிந்துவிட்டது. “ஆமாங்க, இரண்டு பேரும் சேர்ந்துதான் முடிவெடுத்தோம்” என்று பதில் சொல்லி அவர்களது சந்தேகத்தை பொய்யாக்கினார் அவர்.

பிறகு ஒருவழியாக அந்த நண்பர் தான் விரும்பிய வண்ணம் தன் மகனை தமிழ் வழியில் சேர்த்துவிட்டார். ஆனால் அவருக்கு நடந்த சம்பவத்தையெல்லாம் கொஞ்சம் திரும்பிப் பார்ப்போம்.

படிக்க :
♦ அண்ணாமலை ஜி, மக்கள் மன்றத்தின் எதிர்வினைதான் மதுரை சம்பவம் !
♦ தேச துரோக சட்டத்தை (124-A) ரத்து செய்யுமா மோடி அரசு ? || தோழர் சுரேசு சக்தி முருகன்

விருப்பத்துடன் தான் சேர்க்கிறீர்களா?” என்று அந்த ஆசிரியர் கேட்குமளவிற்கு தாய்மொழியான தமிழ் வழிக் கல்வியில் சேர்ப்பதென்ன அத்தகைய விரும்பத்தகாத செயலா? உண்மையில் ஆங்கில வழியில் சேர்ப்பவர்களிடம் தான் நியாயமாக இந்தக் கேள்வியை கேட்க வேண்டும். ஏனெனில் அது தான் அந்நியமொழி, ஆனால் மறுகாலனியாக்கக் கொள்கைகள் புகுத்தப்பட்ட பிறகு, நிலைமை தலைகீழாகப் போகுமளவிற்கு ஆங்கில மோகம் சாதாரண மக்களிடமும் திணிக்கப்பட்டிருக்கிறது என்பதனைத் தான் இது காட்டுகிறது.

முன்னர் இவர் சேர்க்க முயன்ற தொடக்கப் பள்ளியிலோ, தமிழ் வழியில் ஒரு மாணவர் கூட இல்லை, அதனால் தனியாக உங்கள் பிள்ளையை மட்டும் தமிழ் வழியில் சேர்க்க முடியாது என்று சொல்லியதையும் சேர்த்துப் பார்க்கும்போது இதன் வீச்சை உணரமுடிகிறது.

அரசுப் பள்ளிக் கூடத்தில் தமிழ் வழியில் தன் மகனை சேர்த்தது குறித்து என் நண்பரின் உறவினர் ஒருவர் “ஏம்பா இப்படி பண்ண, சரி கவர்மண்ட் ஸ்கூல்ல சேர்த்ததே சேர்த்த, அட்லீஸ்ட் அங்கயாவது இங்கிலீஷ் மீடியம்ல சேர்த்திருக்கலாம்ல. இப்படி பண்ணிட்டியே” என்று ‘அக்கறைப்பட்டுக் கொண்டாராம்’.

நிலா, நிலா ஓடி வா..” என்று தமிழ்ப்பாட்டு பாடும் குழந்தையை விட, “டிவிங்கிள்.. டிவிங்கிள் லிட்டில் ஸ்டார்” என்று ரைம்ஸ் பாடும் குழந்தைதான் அறிவார்ந்த குழந்தை எனும் இந்த உளவியல் தமிழ்நாட்டு மக்களின் மேல் மறுகாலனியாக்கம் ஏவியிருக்கும் அடிமைப் புத்தி. அதற்கு கிரியாவூக்கியாக சமூகத்தில் ஊறியிருக்கும் பார்ப்பனியம் செயலாற்றுகிறது.

ஆனால், தமிழால் ஆட்சியைப் பிடித்த திராவிடக் கட்சிகளே, இந்த அடிமைப் புத்தியிலிருந்து மக்களை மீட்டெடுத்து மொழியுணர்வு ஊட்டுவதற்கு எந்த நடவடிக்கையும் எடுக்காமல், மறுகாலனிய கொள்கைகளுக்கு ஏற்ப ஆங்கில வழிக் கல்வி மாயையை மக்கள் மத்தியில் தீனிபோட்டு வளர்த்திருக்கின்றன. இதுவே, அரசுப் பள்ளிக்கூடங்களில் தாய்மொழியான தமிழ் வழிக் கல்வியே இழிவாகப் பார்க்கப்படுவதற்கான முதன்மை காரணம்.


பால்ராஜ்

  1. இந்த அனுபவத்தை எடுத்துக் கொண்டு தாய்மொழி வழிக் கல்விக்காக அனைவரும் போராட வேண்டும்.

  2. மேல் நிலை பள்ளியில் ஒன்றாம் வகுப்பு சேர்க்கை இருக்காதே, ஆறாம் வகுப்பில் இருந்துதானே சேர்க்கை நடைபெறும், கதையில் ஏதோ இடிக்கிறதே

  3. ஒன்றாம் வகுப்பு முதல் அரசு பள்ளியில் தமிழ் வழியில் படித்தவர்களுக்கு அரசு வேலையில் கல்வியில் முன்னுரிமை தர தமிழக அரசு பரிசீலனையில் இருக்கிறது ஆனால் அரசு தொடக்க பள்ளியில் தமிழ் வழி வகுப்புகளே இல்லை பெரும்பாலான தொடக்க நிலை பள்ளிகளில் ஆங்கில வழி வகுப்புகளே உள்ளன இதுகுறித்து கல்வியாளர்கள் கவனம் செலுத்த வேண்டும்

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க