த்திய அரசின் மனிதவள மேம்பாட்டுத்துறையின் கீழ் இயங்கி வருகிறது கேந்திர வித்யாலயா பள்ளிகள். தமிழ்நாட்டில் மட்டும் மொத்தம் 49 பள்ளிகள் உள்ளன.

இந்த பள்ளிகளில் தமிழ் கற்றுத் தரப்படுகிறதா, தமிழ் ஆசிரியர்கள் இருக்கிறார்களா, என்ற பல கேள்விகளை முன்வைத்து தூத்துக்குடி மாவட்டத்தை சேர்ந்த ஒரு சமூக ஆர்வலர் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் கடந்த ஜனவரி மாதம் 15-ஆம் தேதி 16 கேள்விகள் கேட்டிருந்தார். அதற்கு ஜனவரி 25-ஆம் தேதி கேந்திர வித்யாலயா நிர்வாகம் சார்பாக பதில்கள் அளிக்கப்பட்டுள்ளது.

அதில், 6-ஆம் வகுப்பு முதல் 8-ஆம் வகுப்பு வரை தமிழ் மொழிக் கட்டாயப்பாடம் இல்லை என்று கூறியிருப்பது, தமிழகத்தில் மிகப்பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.

படிக்க :
♦ இந்தி திணிப்புக்கு எதிராக தமிழ் ஃபேஸ்புக் !
♦ தேசிய இன அடையாளங்களை அழிக்கும் மோடி அரசின் சமஸ்கிருதத் திணிப்பு

தமிழ் மொழிப் பாடமாக கற்பிக்கும் பள்ளிகள் இருக்கிறதா என்று கேட்டதற்கு, NIL ஏதுமில்லை என்றும் பள்ளிகளில் சேரும் மாணவர்கள் தமிழை மொழிப் பாடமாக தேர்வு செய்ய முடியுமா என்று கேட்டதற்கும் இல்லை என்று பதில் கூறியுள்ளது கேந்திர வித்யாலயா.

தமிழகத்தில் இயங்கும் 49 கேந்திர வித்யாலயா பள்ளிகளிலும் 109 இந்தி ஆசிரியர்களும் 53 சமஸ்கிருத மொழி ஆசிரியர்களும் வேலை செய்கிறார்கள். இப்பள்ளிகளில் தமிழ் மொழி ஆசிரியர்கள் ஒருவர் கூட இல்லை என தனது பதில்களில் கூறியுள்ளது. மொழிப் பாடமாக தமிழ் நடத்தப்படுவதே இல்லை என்பதுதான் இதில் தெரியும் உண்மை.

6-ஆம் வகுப்பு முதல் 8-ஆம் வகுப்பு வரை இந்தி, சமஸ்மிருதம் ஆகிய இருமொழிகளும் கட்டாயமான பாடம். பத்தாம் வகுப்பில் விருப்பப் பாடமாக தேர்ந்தெடுத்துக் கொள்ளலாம் என பதில் கூறியுள்ளது கேந்திர வித்யாலயா பள்ளி நிர்வாகம்.இது தனி ஒரு விவகாரம் அல்ல.

இதற்கு முன்னரே ஒவ்வொருமுறையும் தமிழை ஒழித்து இந்தியைத் திணிக்கும் பல்வேறு திட்டங்களைக் கொண்டுவந்துள்ளது மோடி அரசு. ஒவ்வொரு திணிப்பின் போதும் தமிழ்நாட்டில் அவ்வப்போது எதிர்ப்புகள் உருவெடுக்கும்.

தற்போது கேந்திர வித்யாலயா பள்ளிகளில் ஆர்.டி.ஐ தகவல் மூலம் இந்தி சமஸ்கிருதம் திணிக்கப்பட்டுள்ளது வெளிச்சத்திற்கு வந்துள்ளது. இதற்கு பல்வேறு சமூக ஆர்வலர்கள், ஜனநாயக சக்திகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். தி.மு.க-வும் இதற்கான கண்டனங்களை பதிவு செய்துள்ளது.

ஒரு வகுப்பில் படிக்கும் 20 மாணவர்கள் விரும்பம் தெரிவித்தால் மட்டுமே தமிழ் பாடம் எடுக்கப்படும் என்று சென்ற ஆண்டே கேந்திர வித்யாலயா நிர்வாகம் கூறுயது. இதற்கு தமிழ் ஆர்வலர்கள் பலரும் கண்டனங்கள் தெரிவித்திருந்தனர். தமிழ் விருப்ப பாடமாக வைக்கப்பட்டிருப்பதை ஏற்கமுடியாது என்று உயர் நீதிமன்ற மதுரை கிளையும் கூறியிருந்தது.

கடந்த 2017, 2018, 2019 ஆகிய மூன்று ஆண்டுகளில் மட்டும் சமஸ்கிருத மொழி வளர்ச்சிக்காக நம் வரிப்பணதிலிருந்து ரூபாய் 643.84 கோடி செலவளித்திருக்கிறது மோடி அரசு. ஆனால், தமிழ் மொழி வளர்ச்சிக்கு ரூபாய் 22.94 கோடி மட்டுமே செலவு செய்துள்ளது. கடந்த 2004-ல் ஆண்டு செம்மொழி பட்டியலில் மத்திய அரசால் சேர்க்கப்பட்ட தமிழ்மொழிக்கே இந்த நிலை என்றால், இந்தியாவின் மற்ற மாநிலங்கள் உள்ள மொழிகளின் வளர்ச்சி எப்படி இருக்கும் என்று சற்று யோசித்து பாருங்கள்.

கடந்த 1965-ஆம் ஆண்டு இந்தியை ஆட்சி மொழியாக அறிவித்தபோது அதனை ஏற்றுக் கொண்ட பல மாநிலங்களில் வட்டார மொழிகள் பெரும்பாலும் அழிக்கப்பட்டுவிட்டன. தாய்மொழி தெரியாமல் அழிக்கப்பட்டு, திணிக்கப்பட்ட இந்தி மொழியை மட்டும் கற்கும் தலைமுறையும் உருவாகிவிட்டது.

அன்று இந்தி திணிப்பை எதிர்த்து தமிழகம் உள்ளிட்ட சில மாநிலங்களில் கடுமையான போராட்டங்கள் நடத்தப்பட்டன. நடைபெற்ற மொழிப்போரில், தமிழகத்தில் பலரும் தியாகிகளானார்கள். அதன் விளைவாகவே, தமிழகத்தில் மோடி அரசு இந்தி திணிப்பு அரங்கேற்ற முயற்சித்தாலே போராட்டங்கள் துவங்கி விடுகின்றன.

படிக்க :
பட்ஜெட் 2021 : சுகாதாரத்திற்கான நிதியை 137% அளவிற்கு அதிகரித்ததா மோடி அரசு ?
♦ ராஜா முத்தையா மருத்துவக் கல்லூரி, சென்னை பல்கலை மாணவர்களின் போராட்டம் வெற்றி உணர்த்துவது என்ன ?

கேந்திர வித்யாலயா முதல் ஐஐடி வரை மத்திய அரசின் கட்டுப்பாட்டில் இருக்கும் அனைத்து கல்வி நிறுவனங்களில் இந்தி, சமஸ்கிருதத்தை திணிக்க முயல்வது, சமஸ்கிருத பண்பாட்டை ஊட்டி வளர்க்க பாடத்திட்டங்களை புகுத்துவது, இந்தி, சமஸ்கிருத வளர்ச்சிக்கென மற்ற மொழிகளின் வளர்ச்சிக்கு ஒதுக்கும் நிதியை விட 22 மடங்கு அதிகமான நிதியை ஒதுக்குவது, சமஸ்கிருதத்திற்கு என்று ஒரு துறையையே உருவாக்குவது போன்ற வேலைகளை தீவிரமாக செய்து வருகிறது மத்திய மோடி அரசு.

இந்தி, சமஸ்கிருதம் திணிக்கும் மோடியரசின் கிரிமினல்தனத்தை எதிர்த்துப் போராடி முறியடிக்கத் தவறினால், தமிழ் மொழியை இன்னும் சில பத்தாண்டுகளில் மியூசியத்தில் மட்டும்தான் பார்க்க முடியும்.


சந்துரு

1 மறுமொழி

  1. வினவு தோழர்களுக்கு,
    இந்த பதிவிற்கு சம்பந்தமில்லாத விசயத்தை எழுதுவதற்கு மன்னிக்கவும். பொதுவான கருத்துக்களுக்கு வினவில் இடமில்லாததால் இது நேருகிறது.
    மாடத்தி மற்றும் The Great Indian Kitchen போன்ற திரைப்படங்கள் பற்றி பேச வேண்டும். இப்படங்களுக்கான விமர்சனங்களை பணிச்சுமை காரணமாக வினவு தோழர்கள் எழுத முடியவில்லை என்பதை புரிந்து கொள்ள முடிகிறது. அதே நேரத்தில் இந்த படங்களுக்கு முற்போக்காளர்கள் செய்கின்ற விமர்சனங்களை அவர்கள் பெயரிலேயே கட்டுரைகளாக வெளியிடலாமே..!
    மாடத்தி பற்றி திருமாவளவனும் The Great Indian Kitchen பற்றி மதிமாறனும் பேசியிருக்கிறார்கள்.

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க