டந்த 57 நாட்களாக ராஜா முத்தையா மருத்துவக் கல்லூரி மாணவர்கள் போராட்டம் நடத்தி வந்த நிலையில் பிப்ரவரி 4, இரவு தமிழக அரசு கட்டணக் குறைப்பு தொடர்பான அரசாணையை வெளியிட்டது.

மாணவர்களின் தொடர் போராட்டத்துக்குக் கிடைத்த வெற்றி இது. பிற அரசு மருத்துவக் கல்லூரிகளில் பெறப்படும்  கட்டணத்தையே ராஜா முத்தையா மருத்துவக் கல்லூரிக்கும் நிர்ணயித்துள்ளது.

எம்.பி.பி.எஸ். படிப்பிற்கு ரூ.13,610 ; பி.டி.எஸ். படிப்பிற்கு ரூ. 11,610 ; எம்.டி, எம்.எஸ். எம்.டி.எஸ் படிப்புகளுக்கான ரூ.30,000 ; முதுநிலை மருத்துவ டிப்ளமோ படிப்புகளுக்கு ரூ.20,000 ; பி.எஸ்.சி நர்சிங் படிப்பிற்கு ரூ.3000 கட்டணம்; எம்.எஸ்.சி நர்சிங் படிப்பிற்கு ரூ.5000 கட்டணம் என அரசால் ஏற்கெனவே நிர்ணயம்  செய்யப்பட்டுள்ளது. அதே கட்டணமே இந்த மாணவ்ர்களிடமிருந்தும் இனி வசூலிக்கப்படும். மேலும் அந்த அரசாணையில்  ஏற்கனவே மாணவர்கள் செலுத்தியக் கட்டணம் திரும்ப தரமுடியாது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

படிக்க :
♦ கட்டணக் கொள்ளையை தடுத்து நிறுத்து : சென்னை பல்கலை மாணவர்கள் உள்ளிருப்புப் போராட்டம் !
♦ சிதம்பரம் ராஜா முத்தையா மருத்துவக் கல்லூரி மாணவர்கள் தொடர் போராட்டம் !

மாணவர்களின் இத்தனை நாள் போராட்டத்தின் போது ஏதும் செய்யாத அரசு தற்போது ஏன் அடிபணிந்தது?

ராஜா முத்தையா மருத்துவக் கல்லூரி மாணவர்கள், கடந்த 2 மாத காலமாக கல்லூரிக்குள் உள்ளிருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்தை சீர்குலைக்க மாணவர்களுக்குப் பல்வேறு அச்சுறுத்தல்களை ஏற்படுத்தியது கல்லூரி நிர்வாகம். மூதலாம் ஆண்டு மாணவர்களுக்கு மதிப்பெண்ணில் கை வைப்போம் என்று மிரட்டுவது, ஒழுக்கு நடவடிக்கையின் படி மதிப்பெண்ணை குறைத்துவிடுவோம், என்பது உள்ளிட்ட பல்வேறு அச்சுறுத்தல்களை மாணவர்களுக்கு ஏற்படுத்தியது கல்லூரி நிர்வாகம்.

இந்த அச்சுறுத்தல்களையும் மீறி முதலாம் ஆண்டு மாணவர்களும், இண்டர்ன்சிப் மாணவர்களும் போராட்டத்தில் மன உறுதியுடன் கலந்து கொண்டது தங்களுக்கு மகிழ்ச்சியளிப்பதாக கல்லூரி இறுதி ஆண்டு மாணவர்கள் தெரிவித்தனர்.

40 நாட்களுக்கும் மேலாகியும் தமது போராட்டத்திற்கு யாரும் செவிசாய்க்கவில்லை என்று மாணவர்கள் காலவரையற்ற போராட்டத்தை அறிவித்தனர். அதன் பிறகு தமிழகத்தின் பல்வேறு மருத்துவக் கல்லூரி மாணவர்கள் மற்றும் டாக்டர்கள் சங்கம் போராட்டத்தில் ஈடுபட்டது. ஜனநாயக சக்திகள் இந்தப் போராட்டத்தைத் தொடர்ந்து ஆதரவு தெரிவித்து வந்தனர்.

இந்தப் போராட்டம் தீவிரமடைய ஆரம்பித்ததும், கல்லூரியை உயர்கல்வித் துறையில் இருந்து சுகாதாரத்துறைக்கு மாற்றிவிட்டோம் என்ற அரசாணையை வெளியிட்டு போராட்டத்தை முடிக்க நினைத்தது தமிழக அரசு. ஆனால், அரசாணையில் முக்கியமான கோரிக்கையான கல்விக்கட்டணம் தொடர்பாக எதுவும் குறிப்பிடவில்லை என்று, மாணவர்கள் கல்விக் கட்டணம் தொடர்பாக தமிழக அரசு அரசாணை வெளியிடும் வரை போராட்டம் தொடரும் என அறிவித்தனர். இந்த போராட்டம் மக்கள் மத்தியில் ஆதரவை அதிகரிக்கச் செய்தது.

இதன் விளைவாக பிப்ரவரி 4-ம் தேதி மாலையில் தமிழக அரசு கட்டணம் நிர்ணயம் தொடர்பான அறிவிப்பை வெளியிட்டது. மாணவர்கள் எதிர்பார்த்த கட்டணத்தையே அரசு நிர்ணயம் செய்திருக்கிறது. இது கல்லூரி நிர்வாகம் மற்றும் தமிழக அரசின் பல்வேறு அச்சுறுத்தல்களை எதிர்கொண்ட மாணவர்களின் நெஞ்சுரமிக்கப் போராட்டத்தின் விளைவே ஆகும்.

இதே போல்தான், சென்னை பல்கலைக்கழகத்தில் மெரினா வளாக விடுதியில் முதுகலை மாணவர்கள் 27, 28, 29 மூன்று நாட்கள் தொடர் போராட்டம் நடத்தினர். விடுதி உணவகம் மூடல், ஊரடங்கில் கல்லூரி மூடப்பட்ட நாட்களில் விடுதி கட்டணம் உணவு கட்டணம் ஆகியவை வசூலிப்பதைக் கண்டித்து பல்கலைக்கழக வளாகத்தில் 3 நாட்கள் தொடர் போராட்டம் நடத்தினார்கள்.

மாணவர்களின் தொடர் போராட்டத்திற்கு வெளியில் இருந்து பெற்றோர்கள், பிற மாணவர்கள், ஆசிரியர்கள் என அனைவர் மத்தியிலும் ஆதரவு அதிகமாவதை கண்டு வேறு வழியின்றி செவிசாய்த்தது கல்லூரி நிர்வாகம்.

ராஜா அண்ணாமலை மருத்துவக் கல்லூரி மாணவர்களின் போராட்டமாக இருக்கட்டும், அல்லது சென்னை பல்கலைக்கழக மாணவர்கள் போராட்டமாக இருக்கட்டும், இரண்டிலுமே அரசை அடிபணியச் செய்ததில் நெருங்கி வரும் தேர்தலுக்கு ஒரு பங்கு இருக்கிறது எனினும், மாணவர்களின் போராட்டத்திற்கு பல்வேறு இடங்களில் இருந்து தொடர் ஆதரவு கிடைத்து வந்ததே முக்கியக் காரணமாகும்.

மத்திய மாநில அரசுகளின் மறு காலனிய கொள்கைகளால் சுரண்டப்படும் தொழிலாளர்கள், விவசாயிகள், சிறு தொழில் முனைவோர்,  மற்றும் மாணவர்களின் அடிப்படை உரிமைகளுக்கான போராட்டத்தை ஒருவருக்கொருவர் குரல் கொடுத்து தோளோடு தோள் சேர்த்து நிற்கும் போது வெற்றி நிச்சயம் என்பதை மாணவர்கள் போராட்டங்களின் இந்த வெற்றி நமக்கு எடுத்துக் காட்டுகிறது.


சந்துரு

2 மறுமொழிகள்

  1. //மத்திய மாநில அரசுகளின் மறு காலனிய கொள்கைகளால் சுரண்டப்படும் தொழிலாளர்கள், விவசாயிகள், சிறு தொழில் முனைவோர், மற்றும் மாணவர்களின் அடிப்படை உரிமைகளுக்கான போராட்டத்தை ஒருவருக்கொருவர் குரல் கொடுத்து தோளோடு தோள் சேர்த்து நிற்கும் போது வெற்றி நிச்சயம் என்பதை மாணவர்கள் போராட்டங்களின் இந்த வெற்றி நமக்கு எடுத்துக் காட்டுகிறது.//
    This shows explicitly the responsibility of the left movements..!!
    Beware comrades..! It is the time to develop ourselves exponentially and let us learn from our mistakes..!!

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க