சிதம்பரம் அண்ணைமலை பல்கலைக்கழகத்திற்கு உட்பட்ட கல்லூரியான ராஜா முத்தையா மருத்துக் கல்லூரி மற்றும் ராஜா முத்தையா பல் மருத்துவக் கல்லூரிகளில், அரசு மருத்துவக் கல்லூரிகளை விட 30 மடங்கு அதிகமாகக் கட்டணம் வசூலிப்பதாகவும், அரசு மருத்துவக் கல்லூரியில் வசூலிக்கும் கல்விக் கட்டணத்தையே தங்கள் கல்லூரியிலும் வசூலிக்க வலியுறுத்தி மாணவர்கள் தொடர்ந்து இரண்டு மாத காலமாகப் போராடி வருகின்றனர்.

ராஜா முத்தையா மருத்துவக் கல்லூரியில் ராணி மெய்யம்மை நர்சிங் கல்லூரி மற்றும் ராஜா முத்தையா பல்மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனை ஆகியவை அடங்கும். இதில் பயிலும் மொத்த மாணவர்களின் எண்ணிக்கை 2,293 ஆகும்.

எம்.பி.பி.எஸ் படிப்புக்கு ஆண்டுக்கு ரூ. 5.5 லட்சம் கல்விக் கட்டணமாக வசூலிக்கப்படுகிறது. விடுதிக் கட்டணமும் சேர்ந்த்து ரூ. 6.3 லட்சம் வசூலிக்கப்படுகிறது; பி.டி.எஸ் படிப்புக்கு ஆண்டுக்கு ரூ. 2.5 லட்சம் கட்டணமாக வசூலிக்கப்படுகிறது. முதுகலை படிப்பிற்கு ரூ. 9.6 லட்சம் கட்டணமாக வசூலிக்கப்படுகிறது.

படிக்க :
♦ அண்ணாமலை பல்கலை : விடுதிக் கட்டண உயர்வை திரும்பப் பெறு ! மாணவர்கள் போராட்டம்
திருவள்ளுவர் பல்கலை கட்டண உயர்வைத் திரும்பப்பெறு ! தொடரும் கல்லூரி மாணவர்கள் போராட்டம் !

இந்த கல்விக் கட்டணங்களைக் குறைத்து அரசு கல்லூரிகளின் கட்டணத்தையே நிர்ணயக்க வேண்டும் என்று கடந்த 2020-ஆம் ஆண்டு டிசம்பர் 9-ம் தேதி முதல் மருத்துவ மாணவர்கள் கல்லூரி வளாகத்திலேயே உள்ளிருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இத்தனை நாள் போராட்டத்திற்கு கல்லூரி நிர்வாகமோ, அரசோ எந்தவித பேச்சுவார்த்தைக்கும் முன்வராததால், காலவரையற்றப் போராட்டமாக அறிவித்தனர் மாணவர்கள். தற்போது அனைத்து அரசு மருத்துவக் கல்லூரிகளும் கொரோனா ஊரடங்கிற்கு பிறகு மீண்டும் திறக்கப்பட்டு இயங்கி வருகிறது.

ராஜா முத்தையா கல்லூரியில் மாணவர்களின் போராட்டத்தை சீர்குலைக்கும் விதமாக கல்லூரி மூடபபடுவதாக அறிவிக்கப்பட்டு குடிநீர், உணவு, மின்சாரம் அனைத்தையும் நிறுத்தியிருக்கிறது நிர்வாகம்.

கடந்த ஜனவரி 20-ம் தேதி, “முதலாம் ஆண்டு மாணவர்களுக்கும், இன்டர்ன்சிப் மாணவர்களுக்கும் மட்டும் வகுப்புகள் நடத்தப்படும், மற்ற மாணவர்களுக்கு கல்லூரி மூடப்படுகிறது. எனவே மாலை 4 மணிக்குள் கல்லூரி விடுதியை விட்டு வெளியேற வேண்டும்” என்று காலை 11 மணிக்கு சுற்றறிக்கை வெளியிட்டுள்ளது கல்லூரி நிர்வாகம். அதற்குள் காலிசெய்யவில்லையென்றால் அடுத்தக்கட்ட நடவடிக்கை மிகவும் கடுமையாக இருக்கும் எனவும் மிரட்டல் விடுத்தது.

அதன் பின்பும் மாணவர்கள் போராட்டம் நீடித்ததால், ஜனவரி 21-ம் தேதி மீண்டும் ஒரு சுற்றறிக்கையை வெளியிட்டது கல்லூரி நிர்வாகம், அதில் அனைத்து மாணவர்களும் வெளியேறும் படியும் கல்லூரி காலவரையற்று மூடப்படுகிறது என்று மிரட்டியது.

“ ஜனவரி 23-ம் தேதி விடுதியின் உணவு, தண்ணீர் மற்றும் மின்சாரத்தை நிறுத்திவிட்டது கல்லூரி நிர்வாகம். உணவு தண்ணீர், வெளியில் இருந்து கைக்காசுகளைப் போட்டு சாப்பாடு வாங்கி வரச்சென்றார்கள். வாங்கி வந்த மாணவர்களை உள்ளே அனுமதிக்கவில்லை காவல்துறை. மிகுந்தப் போராட்டத்திற்கு பிறகு மாலை 4 மணிக்குதான் மதிய உணவு கிடைத்தது. அதற்குமுன் இரண்டு மருத்துவ மாணவர் மயங்கி விழுந்தார்கள். அவர்களுக்குப் போராட்டக்களத்திலேயே சிகிச்சை அளிக்கப்பட்டது. கணிசமான கர்ப்பிணி மாணவிகளும் இருக்கிறார்கள், அவர்களுக்கு தங்குமிடமும், கழிவறை வசதியும் இல்லாமல் மிகுந்த சிரமப்படுகிறார்கள் ” என்று வருந்துகிறார் ஓர் மருத்துவ மாணவி.

எத்தைனை இடையூறுகள் செய்தாலும் நாங்கள் தொடர்ந்து போராடுவோம், நாங்கள் நிதி சுமையால் அதிகம் பாதிக்கப்பட்டு விட்டோம் போராட்டத்திற்குத் தீர்வு கிடைக்காமல் இங்கிருந்து செல்லமாட்டோம் என்று மாணவர்கள் உறுதியாகக் கூறுகின்றனர்.

“முதலாவதாக, வேலை செய்து கொண்டே போராட்டம் நடத்தினோம். அதன் பின் அவசர சிகிச்சை மட்டும் செய்து வந்தோம். யாரும் எமது போராட்டத்திற்கு செவிசாய்க்காததால் காலவரையற்றப் போராட்டத்தை அறிவித்தோம். அதன் பிறகு கல்லூரி மூடல், உணவு இல்லை, விடுதி மூடல் போன்ற நெருக்கடிகளை கொடுத்தனர்” என்கிறார்கள் மாணவர்கள்.

தொடர்ந்து போராட்டம் நடந்துவந்த நிலையில் கடந்த ஜனவரி 28-ம் தேதியன்று, சிதம்பரம் ராஜா முத்தையா மருத்துவக்கல்லூரி தமிழக அரசின் சுகாதாரத் துறையின் கீழ் கொண்டுவரப்பட்டதாக அரசாணை தமிழக அரசால் வெளியிடப்பட்டது. இனி இது கடலூர் அரசு மருத்துவக்கல்லூரி என்று அழைக்கப்படும் என்றும் தெரிவித்திருந்தனர்.

இருப்பினும் கல்விக் கட்டணம் தொடர்பாக அரசாணையில் எதுவும் குறிப்பிடவில்லை. கல்விக்கட்டணம் தொடர்பாக அரசாணை வெளியிடப்படும் வரைப் போராட்டம் தொடரும் என அறிவித்துப் போராடி வருகிறார்கள் மாணவர்கள்.

“இது முழுமையான திருப்தி அளிக்கக்கூடிய ஒரு அரசாணையல்ல. ராஜா முத்தையா மருத்துவக் கல்லூரியும், ராஜா முத்தையா பல்மருத்துவக் கல்லூரியும், தமிழ்நாடு டாக்டர் எம்.ஜி.ஆர் மருத்துவப் பல்கலைக் கழகத்தின் கீழ் எந்த தேதிக்குள் கொண்டுவரப்படும், தமிழ்நாடு மக்கள் நல்வாழ்வுத் துறையோடு எப்போது இணைக்கப்படும் என்பதை அதில் கூறவில்லை.

இது உயர்கல்வி துறையில் இருந்து மாற்றுவதற்கான ஒரு அரசாணையாக இருக்கிறதே தவிர, அண்ணாமலை பல்கலைக் கழகத்தின் பதிவாளரும், தமிழ்நாடு சுகாதாரத்துறையும் இணைந்து இது சம்பந்தமான பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என்று சொல்லப்பட்டிருக்கிறதே தவிர, எந்த தேதிக்குள் முடிக்க வேண்டும் என்ற கால வரம்பும் இல்லை. கட்டணத்தை உடனடியாக குறைக்க வேண்டும் என்ற அறிவிப்பும் இல்லை. இது மிகப்பெரும் ஏமாற்றத்தை அளிக்கிறது.

எனவே, தமிழக முதல்வர் போராடும் மாணவர்களை அழைத்துப் பேச வேண்டும். உடனடியாகக் கட்டணத்தைக் குறைக்கிறேன் என்று அறிவிக்க வேண்டும். அதேபோல குறிப்பிட்டக் காலஅளவு வைத்து இந்த இரண்டு மருத்துவக் கல்லூரிகளையும் டாக்டர் எம்.ஜி.ஆர் மருத்துவப் பல்கலைக்கழகத்துடன் இணைக்கப்படும் என்ற உறுதி மொழியை தமிழக முதல்வர் வழக்க வேண்டும்” என்கிறார் டாக்டர் ரவீந்தர நாத்.

ஒரு அரசாணை வெளியிட்டு மாணவர்களை ஏய்த்துவிடலாம் என்ற மாநில அரசின் பகல் கனவு பலிக்கவில்லை. மாணவர்கள் தொடர்ந்து போராடி வருகின்றன. இவர்களது போராட்டத்திற்கு பிற அரசு மருத்துவக் கல்லூரி மாணவர்களும்  ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.

ராஜா முத்தையா மருத்துவக் கல்லூரி மாணவர்கள் தொடர் போராட்டத்திற்கு ஆதரவாக, சமூக சமத்துவத்திற்கான மருத்துவர்கள் சங்கம், தஞ்சை மருத்துவக் கல்லூரி மாணவர்கள், நெல்லை மருத்துவக் கல்லூரி மாணவர்கள், சென்னை மருத்துவக் கல்லூரி மாணவர்கள் கடந்த ஜனவரி 28ஆம் தேதி போராட்டம் நடத்தினர்.

இதே போன்று, ஈரோடு மாவட்டம் பெருந்துறையில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரியிலும் கட்டணம் அதிகமாக உள்ளது என்று மாணவர்கள் போராட்டம் நடந்து வருகிறது. மற்ற அரசு மருத்துவக் கல்லூரிகளில் ஆண்டிற்கு ரூ. 13,610 மட்டும் வசூலிக்கப்படுவதாகவும், தங்களிடம் கல்லூரி நிர்வாகம் 3 லட்சத்து 85ஆயிரம் ரூபாய் வசூலிப்பதாகவும் இம்மாணவர்கள் கூறுகின்றனர். இம்மாதத்தில் இருந்து தொடர் போராட்டம் நடத்தவிருப்பதாக கூறியுள்ளார்கள். இந்த மருத்துவக் கல்லூரி முதலில் அரசு போக்குவரத்து துறையில் கீழ் இருந்தது. இரண்டாண்டுகளுக்கு முன்பு இது அரசு கையகப்படுத்தி அரசு மருத்துவக் கல்லூரியாக மாற்றப்பட்டது.

ஏற்கெனவே அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் நடந்த ஊழல் முறைகேடுகள் கடந்த 2013-ம் ஆண்டு அம்பலமாகின. அதைத் தொடர்ந்து மாநில அரசு அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தை அரசுடைமை ஆக்கியது.

MCI மற்றும் அண்ணாமலை யூனிவர்சிட்டி ACT பிரிவு 58,3,B,C-ன்படி ராஜா முத்தையா மருத்துவக்கல்லூரி சுயநிதிக் கல்லூரி அல்ல. பிற அரசு மருத்துவக் கல்லூரிகளை போல இதுவும் அரசு மருத்துவக் கல்லூரியே, என்று அந்த பிரிவுகள் கூறுகிறது.

அண்ணாமலைப் பல்கலைக் கழகத்திற்கு அரசாங்கம் நியமித்த கல்விக் கட்டணக் குழு முதுகலை மருத்துவக் கல்விக்கான கட்டணத்தை 9.6 லட்சமாக நிர்ணயம் செய்துள்ளது. இந்த கல்விக் கட்டணக் குழுவில், மாணவர்களின் கல்விக்கான செலவினங்களை மட்டுமே கணக்கிட்டு மாணவர்களுக்கு கல்விக் கட்டணம் நிர்ணயம் செய்ய வேண்டும். ஆனால், பல்கலைக்கழக நிர்வாக சீர்கேட்டின் காரணமாக ஏற்படும் நஷ்டம் மற்றும் நிதி சுமையை மாணவர்கள் மீது திணித்துக் கல்விக் கட்டணம் என்று நிர்ணயத்துள்ளது அரசாங்கம் நியமித்த கல்விக் கட்டணக்குழு.

இந்த பல்கலைக்கழகத்தில் நோயாளிகளுக்கு ஏற்படும் செலவினம், மருத்துவனையில் பணிபுரியும் ஊழியர்கள், செவிலியர்கள் ஆகியவர்களின் ஊதியங்களை மாணவர்களின் கல்விக் கட்டணத்தில் வசூலிக்கிறார்கள்.

பெயருக்கு மட்டுமே இது அரசால் எடுத்துக் கொள்ளப்பட்ட கல்லூரியாக குறிப்பிடப்பட்டு வருகிறதே ஒழிய, கல்விக் கட்டணக் கொள்ளையில் தனியார் கல்லூரிகளுக்கு நிகராகவே மாணவர்களிடமிருந்து பறித்து வருகிறது.

படிக்க :
♦ அண்ணாமலைப் பல்கலை: ஊழலை சமூகமயமாக்கும் அரசு !
விழுப்புரம் SVS ‘மருத்துவக் கல்லூரி’ மாணவர்கள் தற்கொலை முயற்சி !

அண்ணாமலை பல்கலைக் கழகத்தை அரசு கையகப்படுத்தியதில் இருந்து இன்றுவரை கட்டணத்தைக் குறைக்க வேண்டும் என்று மட்டுமே இத்தனை ஆண்டுகாலமாக ராஜா முத்தையா மருத்துவக் கல்லூரி மாணவர்கள் போராடி வந்திருக்கின்றனர்.

கடந்த 2016-ம் ஆண்டு ஆகஸ்டு 29-ம் தேதி முதல் கல்விக் கட்டணத்தை குறைக்க வலியுறுத்தி தொடர் போராட்டங்களை மேற்கொண்டு வருகின்றனர். அதன் பிறகு கடந்த 2017 செப்டம்பரில், கல்விக் கட்டணத்தைக் குறைக்க வலியுறுத்தி தொடர் போராட்டம் நடத்தியுள்ளார்கள் ராஜா முத்தையா மருத்துவக்கல்லூரி மாணவர்கள். தற்போது 2020 டிசம்பரில் துவங்கிய போராட்டம் தீவிரமாக நடந்து வருகிறது.

ஒவ்வொரு போராட்டத்தின் போதும் ஏதேனும் கண் துடைப்பு வித்தைகளைக் காட்டியும், மாணவர்களை அச்சுறுத்தியும் போராட்டத்தை நீர்த்துப்போகச் செய்து வருகிறது தமிழக அரசும், கல்லூரி நிர்வாகமும்.

இந்த முறை மாணவர்கள் ஏமாறத் தயாராக இல்லை. போராட்டக்களத்தில் இரண்டில் ஒன்று பார்க்கத் தயாராக இருக்கின்றன. மாணவர்களின் போராட்டத்திற்கு ஆதரவாக தமிழகமெங்கும் அனைத்து மாணவர்களும், சமூக ஜனநாயக சக்திகளும் களத்தில் இறங்கினால் மட்டுமே, தமிழக அரசை பணியச் செய்ய முடியும்.


சந்துரு

1 மறுமொழி

  1. (Anti-corruption ) ஊழல் தடுப்பு ஆணையம் இதில் தலையிட வேண்டிய அவசியம் குறித்து வலியுறுத்த வேண்டும், அரசின் கீழ் உள்ள ஓர் உயர் கல்வி நிறுவனத்தில் நிர்ணயித்து உள்ள கட்டணங்களை விட அதிகமாக கொள்ளையிட படுகிறது,இதற்காக இத்தனை ஆண்டுகள் போராட்டம் தொடரும் சூழலில் மாணவர்கள் படிப்பு உளவியல் ரீதியான மன உளைச்சலுக்கு ஆட்படுத்தப் பட்டுள்ளனர், மாநில அரசு செயலர், மனித வள மேம்பாட்டு ஆணையம், மருத்துவ மேலாண்மை ஆணையம் மற்றும் அமைச்சரகம் உள்ளிட்டவர்களும் இதற்க்கு நியாயம் பெற்று தர கடமையுள்ளவர்கள் ஆவார்கள்.ஒரு ஆரோக்கியமான சமுதாயத்தை உருவாக்க பயின்று வரும் மாணவ பருவத்தினர்க்கு அடிப்படை அரசியல் உரிமைகளை நிலைநாட்ட வழிவகுக்கும்.

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க