Sunday, October 13, 2024
முகப்புமறுகாலனியாக்கம்ஊழல்அண்ணாமலைப் பல்கலை: ஊழலை சமூகமயமாக்கும் அரசு !

அண்ணாமலைப் பல்கலை: ஊழலை சமூகமயமாக்கும் அரசு !

-

அரசு இயந்திரத்தின் ஒத்தாசையுடன் சர்வவியாபகமாகும் அண்ணாமலைப் பல்கலைக்கழக ஊழல் முறைகேடுகள்!  மீளமுடியாத நெருக்கடியில் சிக்கும் தமிழக உயர்கல்வித்துறையும் வேலை வாய்ப்புச் சந்தையும் !!

“அண்ணாமலைப் பல்கலைகழகத்தில் தேவைக்கு அதிகமாக உள்ள பேராசிரியர்கள் அனைவரையும் மற்ற அரசு கல்லூரிகளில் நிரப்பும் வரை புதிய ஆசிரியர் நியமனங்களை நிறுத்தி வைக்குமாறு மாநில பல்கலைகழகங்களை கேட்டு கொண்டுள்ளதாக உயர்கல்வி துறை செயலாளர் சுனில் பாலிவால் தெரிவித்ததாக” 25-9-2017 தேதி டைம்ஸ் ஆப் இந்தியா நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது.

2017 ஏப்ரல் மாதத்தில் தமிழ்நாடு உயர்கல்வித்துறை அனைத்துப் பல்கலைக்கழகங்களுக்கும் ஒரு சுற்றறிக்கை அனுப்பியது. அதில் அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தில் அதிகமாக நியமிக்கப்பட்டுள்ள ஆசிரியர்களையும் அலுவலக ஊழியர்களையும் பல்கலைக்கழகங்கள், அரசுக் கல்லூரிகள், அரசுத் துறைகள் மற்றும் பொதுத் துறை நிறுவனங்களில் பணிநிரவல் செய்து முடிக்கும் வரை எந்த பல்கலைக்கழகமும் புதியதாக எவ்வகையான நியமனங்களையும் மேற்கொள்ளக்கூடாது எனக் கட்டளை பிறப்பித்துள்ளது.

முதற்கட்டமாக அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தின் 369 உதவிப் பேராசிரியர்கள் பல்வேறு அரசுக் கல்லூரிகளுக்கு பணியிடமாற்றம் செய்யப்பட்டனர்.  தற்போது 545 ஆசிரியர்கள் மற்றும் 2,645 அலுவலர்கள் தமிழக அரசின் பல்வேறு துறைகளில் பணியிடமாற்றம் செய்யப் படுகின்றனர்.

தமிழ்நாடு ஆவணக் காப்பகத்தில் மட்டும் 45 அலுவலக ஊழியர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். அரசு பாலிடெக்னிக்குகளில் 211 விரிவுரையாளர்கள் மற்றும் 40 உடற்கல்வி இயக்குநர்கள், அரசு பொறியியல் கல்லூரிகளில் 86 உதவிப்பேராசிரியர்கள், அரசு கலைக்கல்லூரிகளில் 208 உதவிப்பேராசிரியர்களுக்கும் மாற்றல் வழங்கப்பட்டுள்ளனர்.

உதவியாளர்கள், எழுத்தர், ஓட்டுநர், மென்பொருளாளர்கள் உட்பட்ட 2,635 அலுவலகப் பணியாளர்களை தலைமைச் செயலகம் உட்பட்ட அரசுத் துறைகளில் பணியிடமாற்றம் செய்கின்றனர்.

தற்போது உயர்நீதிமன்றத்தில் 500 ஊழியர்களும், அரசுப் போக்குவரத்துக் கழகத்தில் 552 பேரும், தொழிற்கல்வி இயக்குநரகத்தில் 452 பேரும், சமூகநலத்துறை இயக்குநரகத்தில் 452 பேரும் பணியிடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

இதுவரை முதற்கட்டமாக பேராசிரியர்கள் உட்பட 3,170 ஊழியர்கள் பணியிடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.  அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் 1,031 பேராசிரியர்கள் (19 பேராசிரியர்கள், 12 இணை பேராசிரியர்கள், 844 உதவிப் பேராசிரியர்கள், 150 புரோகிராமர்கள் மற்றும் 6 உதவி நூலகர்கள்) உட்பட மொத்தம் 5755 ஊழியர்கள் அதிகமாக பணியாற்றுவதாக தமிழக அரசு தற்போது கண்டுபிடித்துள்ளது.

இவர்களனைவரும் அங்கிருந்து தமிழ்நாட்டு அரசின் அனைத்துப் பொதுத் துறைகளுக்கும் மாற்றப்படுவது வரை தமிழ்நாட்டில் இனி புதிய நியமனங்களோ, பதவி உயர்வுகளோ நடத்தக் கூடாது என ஒவ்வொரு துறைக்கும் சுற்றறிக்கை விடப்படுகிறது.

இதைத் தொடர்ந்து இரண்டு கட்டமாக நூற்றுக்கணக்கான அரசுக் கல்லூரி மற்றும் பல்கலைக்கழக கௌரவ விரிவுரையாளர்களும், அண்ணா பல்கலைக்கழகத்தின் கீழியங்கும் பொறியியல் கல்லூரி கற்றல் உதவியாளர்கள் (teaching fellows) 45 பேரும் வேலையிலிருந்து நீக்கப்பட்டுள்ளனர்.

பல்வேறு அரசுத் துறைகளில் குறைந்த கூலிக்கு கடினமான வேலைகளை செய்து வந்த தற்காலிக ஊழியர்கள் விடுவிக்கப்பட்டுள்ளனர். ஏற்கனவே பல கல்லூரிகள் மற்றும் பல்கலைக் கழகங்களில் காலியிடங்கள் நிரப்பப்படாமல் உள்ளன. சென்னைப் பல்கலைக்கழகத்தில் மட்டும் 37% ஆசிரியர் பணியிடங்கள் நிரப்பப்படாமலுள்ளன.  இங்கு தற்காலிக விரிவுரையாளர்கள் குறைந்த கூலிக்கு (ரூ. 10,000-த்திலிருந்து ரூ. 20,000 வரை சம்பளத்தில்) பிற பணிப்பயன்களோ, பணிப்பாதுகாப்போ, கௌரவமோ இல்லாமல் மாடாக உழைக்கும் நிலைதான் இதுவரை இருந்தது.

Ph.D அல்லது NET தேர்வில் வென்றாலும் கூட TRB நியமனத்தின் போது 7.5 வருட பணிமூப்பு இருந்தால் மட்டுமே அரசுக் கல்லூரிகளில் வேலைக்கு தகுதியானவர் என்ற தமிழக அரசாணை நடைமுறையில் உள்ள காரணத்தால் இந்தகைய கொத்தடிமை வேலைக்கு படித்த தகுதியான இளைஞர்கள் பலரும் வேலைக்கு வருகின்றனர்.  இன்று 8 வருட பணி மூப்பு இருப்பவரைக் கூட வேலையிலிருந்து தயவு தாட்சண்யமின்றி விரட்டியடித்துள்ளனர்.

பல்கலைக்கழகத்தைப் பற்றி

1929 –ல் அண்ணாமலைச் செட்டியாரால் தொடங்கப்பட்டது. 50 துறைகள். 12,500 ஆசிரியர்கள் மற்றும் ஊழியர்கள். 1979 – 80 ஆம் ஆண்டு தொலை தூர கல்வி தொடங்கப்பட்டது.  259 பாடப்பிரிவுகளில் இளங்கலை, முதுகலை, பட்டயப்படிப்பு, முதுகலைப் பட்டயப்படிப்பு, சான்றிதழ் படிப்புகள் நடத்தப்பட்டன. நாடு முழுவதும் 89 கல்வி மையங்கள், 78 தகவல் மையங்கள்.

முறையற்ற நியமனம் மற்றும் நிர்வாக சீர்கேடு, நிதி சிக்கல், ஊழியர்களுக்கு ஊதியம் வழங்கமுடியாத நிலை. 2012 ஆம் ஆண்டு தொலைதூரக் கல்வியை தமிழக அரசு முடக்கியது. (அந்த மசோதாவை 5 ஆண்டுகளுக்குப் பின் 2017 தமிழக அரசு நிறைவேற்றியுள்ளது).  இதை எதிர்த்து 2012 -ல் ஆசிரியர்கள், ஊழியர் சங்கங்கள் போராட்டம் நடத்துகின்றனர். சிபிஎம் மற்றும் பாமக ஆகியோர் குரல் கொடுக்கின்றனர். நிர்வாகத்தை 2013 -ல் தமிழக அரசு அரசாணை மூலம் எடுத்துக் கொள்கிறது.

தமிழக அரசால் நியமிக்கப்பட்ட தனியதிகாரி சிவ்தாஸ் மீனா

தமிழக அரசு சிவ்தாஸ் மீனாவை தனியதிகாரியாக நியமிக்கிறது.  பல்கலைக்கழகத்தில் செய்யப்பட்ட முறையற்ற நியமனம், யுஜிசி விதிகளுக்கு முரணான பதவிகள் மற்றும் பதவி உயர்வுகள் என பல்வேறு முறைகேடுகள் பற்றிய விரிவான அறிக்கையை தமிழக உயர்கல்வித் துறையிடம் அவர் சமர்ப்பிக்கிறார்.

2015 -ல் புதிய துணை வேந்தராக மணியன் நியமனம் செய்யப்படுகிறார். பதிவாளராக ஆறுமுகம் பொறுப்பேற்கிறார். தமிழக அரசு நிதி ஒதுக்கி ஊழியர்களுக்கு சம்பளம் வழங்கியது. ஆனால் பணிப்பயன்கள், பதவி உயர்வுகள் வழங்கப்படவில்லை.

அரசிடமிருந்து ஆண்டுதோறும் ரூ. 200 கோடிக்கு மேல் மானியம். அதன்படி கடந்த 14 ஆண்டுகளில் ரூ. 2,300 கோடிக்கு மேல் பெற்றுள்ளது. 2017 – 18 ஆம் ஆண்டில் உயர்கல்வித்துறைக்கு தமிழக அரசு ஒதுக்கிய ரூ. 139 கோடியில் 43% அண்ணாமலைப் பல்கலைக் கழகம் மட்டுமே தின்று செரிக்கிறது.  இப்பல்கலைக் கழக ஊழியர்களின் சம்பளப்பணம் மட்டும் மாதாந்திரம் ரூ. 40 கோடி என்றால் இந்த வெள்ளையானையை தமிழக மக்களின் வரிப்பணத்தில் கட்டி மேய்க்கும் தமிழ்நாடு அரசின் கயமையின் தீவிரத்தைப் பாருங்கள்.

தனியார்மய தாராளமயக் கொள்கைகள் அமல்படுத்தப்பட்ட 25 ஆண்டுகளிலேயே மீளமுடியாத நெருக்கடிக்குள் உயர்கல்வித்துறை சிக்கியுள்ளது. இப்போது அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் தோன்றியுள்ள இந்நெருக்கடியை தமிழகம் முழுக்க பரவலாக்குவதற்குப் பின்னால் ஒரு மாபெரும் ஊழல் ஒளிந்துள்ளது. இதில் அதிமுக அரசாங்கம் மட்டுமன்றி அரசு இயந்திரத்தில் பழம் தின்று கொட்டைபோட்டுக் கொண்டிருக்கும் அதிகாரிகளுக்கும், ஏன் சங்கத் தலைவர்களுக்கும் கூட பாரிய பங்குள்ளது.

குற்றங்கூட சாட்டப்படாமல் செத்துப்போன மாபெரும் ஊழல் குற்றவாளி எம்.ஏ.எம். ராமசாமி செட்டி

16,000 கோடி ரூபாய் சொத்துக்கு அதிபதியான எம்.ஏ.எம்.ராமசாமி தான் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தின் இணைவேந்தராக 2012 வரை இருந்தவர். எம்.ஏ.எம்.ராமசாமி, இந்தியாவில் உள்ள பிரபலமான தொழிலதிபர்களில், சொத்துக்களின் அடிப்படையில், 18 -வது இடத்தில் இருப்பவர். கல்வி, சிமெண்ட், தகவல் தொழில்நுட்பம், சுகாதாரம், தோட்டத் தொழில், போக்குவரத்து, கப்பல் வணிகம், கிரானைட், ஏற்றுமதி – இறக்குமதி, ஜவுளித் தொழில், நிலக்கரி உள்ளிட்ட பல்வேறு தொழில்களை செய்து வந்தவர்.

எம்.ஏ.எம். ராமசாமி செட்டி

சந்தையில் பிரபலமான, ‘செட்டிநாடு சிமெண்ட்’ நிறுவனம், இவருடைய தொழில் குழுமத்தின் ஒரு பகுதி என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால் இவரது அனைத்து சொத்துக்களிலும் முதன்மையானது அண்ணாமலை பல்கலைக்கழகம். இப்பல்கலைக்கழக நிதி மட்டும் ரூ. 10, 000 கோடியை இணை வேந்தராக இருந்த ராமசாமி சுருட்டியதாகவும் அதனை அரசு மீட்க வேண்டுமென்றும் அண்ணாமலைப் பல்கலைக்கழக ஆசிரியர்கள் முன்னேற்ற சங்கத் தலைவர் பேராசிரியர் சுப்ரமணியன் கூறுகிறார் (தி இந்து மே 10, 2017) என்றால் இவர் எவ்வளவு பெரிய முதலை என்று பாருங்கள். மேலும் இவர் விஜய் மல்லையாவின் நெருங்கிய நண்பர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

பணிநியமன முறைகேடு, நிர்வாக சீர்கேடு, நிதி சிக்கல், ஊழியர்களுக்கு ஊதியம் வழங்க முடியாத நிலை என்ற காரணத்தைக் கூறி அரசுடமையாக்கப்பட்ட இப்பல்கலைக்கழகத்தில் இவ்வூழலுக்கு காரணமானவர்கள் மீது துறை சார்ந்தோ குற்றவியல் சட்டத்தின் கீழோ எவ்விதமான நடவடிக்கையும் எடுக்கவில்லை. 2013 வரையான காலகட்டம் ஊழல்-I  எனக் கொண்டால் 2013-ற்கு பிந்தையது ஊழல்-II.

ஊழல் – I

அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் பேராசிரியர், பேராசிரியர் அல்லாத இதர அலுவலர், அதிகாரி என அனைத்துப் பதவிகளும் கடந்த 25 ஆண்டுகளாக பச்சையாகவே விற்பனை செய்யப்பட்டன.

அரசு, அரசு உதவிபெறும் நிறுவனங்களில் மட்டுமின்றி தனியார் நிறுவனங்களிலும் தங்களிடம் இருக்கின்ற காலிப்பணியிடங்கள், அதற்குத் தேவையான நபர்கள், தகுதி போன்றவை குறித்து விளம்பரம் செய்யப்படும் நடைமுறை உள்ளது.  வந்திருக்கின்ற விண்ணப்பங்களில் தகுதியான நபர்களை  எழுத்துத்தேர்வு, நேர்காணல் ஆகியவற்றை நடத்தி பணிக்கு அமர்த்தப்படுவர்.

அரசாங்கம், அரசாங்க உதவிபெறும் நிறுவனம் ஆகியவற்றில் இடஒதுக்கீடு முறை பின்பற்றப்படும்.  ஆனால் அண்ணாமலை பல்கலைக்கழகம் தன்னிடம் எத்தனை காலிப்பணியிடங்கள் இருக்கின்றன என்பதை கடந்த 25 ஆண்டுகளில் விளம்பரம் செய்ததில்லை. அங்குப் பணிக்கு அமர்த்தப்பட்ட முறையானது அரசாங்கத்தின் ஒழுங்குமுறைக்கும் தனியார் நிறுவனங்களின் ஒழுங்குமுறைக்கும் உட்பட்டது அல்ல.

அது தான்தோன்றித்தனமாக பணியிடங்களை விற்பனை செய்தது. ஒவ்வொரு பதவிக்கெனவும் ஒரு விலை நிர்ணயம் செய்யப்பட்டது. உதவிப் பேராசிரியர் விலை ரூ. 10 லட்சத்தில் தொடங்கி சுமார் ரூ. 50 லட்சம் வரை விற்பனை செய்யப்பட்டன.

அரசாங்கம், தனியார் நிறுவனம் ஆகியவற்றில் அந்தந்த வேலைக்குத் தகுதியான ஆட்களைத் தான் நியமிப்பார்கள். ஆனால் இங்கு திறமை தகுதி போன்றவை ’கிலோ எவ்வளவு ரூபாய்?’ எனக் கேட்குமளவிற்கு உள்ளது. யூஜிசியோ தமிழக அரசோ வகுத்துள்ள குறைந்தபட்ச கல்வித்தகுதி அடிப்படையில் எந்த பதவியும் நிரப்பபடவில்லை. பெரும்பாலானவர்கள் தொலைதூர முறையில் கல்விபயின்றதாக சான்றிதழ் வைத்துள்ளனர்.

ஆனால் அண்ணாமலைப் பல்கலைக் கழகமோ புரோக்கர்களை உருவாக்கும் வேலையைத் தான் திறம்பட செய்தது. இது செட்டியாரின் தொழில்திறமை.

பேராசிரியர் பணிக்கு சேரவிரும்பும் ஒருவர் அங்கு ஏற்கனவே பணியிலிருக்கும் ஒருவர் மூலம்   மேற்குறிப்பிட்ட தொகையை கொடுத்து பணியில் சேர்வார். அண்ணாமலைப் பல்கலைக் கழகம் தன்னிடம் விலைகொடுத்து பதவி பெற்று பணியாற்றும் பணியாளர்களையே புரோக்கர்களாவும் நியமித்திருந்தது.

அதாவது பேராசிரியர் முதல் பியுன் வரை பாரபட்சமின்றி புரோக்கர்களாகவும் இருந்தனர். பணிநியமனம், பட்டம் அளித்தல், தேர்ச்சிபெறச் செய்தல், மாணவர் சேர்க்கை என அனைத்திற்கும் உரிய விலை நிர்ணயிக்கபட்டது. இவற்றைத் தேவையானவர்களுக்கு வாங்கிக்கொடுக்கின்ற  நபர்களுக்கு நிர்வாகம் ஒரு குறிப்பிட்ட தொகையை புரோக்கர் கமிஷனாகக் கொடுத்துவிடும்.  இந்த வியாபாரத்தில் சிறந்த புரோக்கர்கள் முன்பணி ஆணை பெற்றிருந்தனர்.

உதாரணத்திற்கு வரலாற்றுத் துறையில் சுப்பன் என்ற நபர் தனக்கு உதவிப் பேராசிரியர் பணி வேண்டும் என்று அங்குப் பணியாற்றும் மன்னன் என்ற புரோக்கரை நாடினால் அவர் சுப்பன் பெயருக்கு பணியாணையில் நகலைத் தருவார். அப்போது அவர் அந்தப் பணிக்கான மொத்தத் தொகையில் பாதித் தொகையைக் (ரூ. 20 லட்சம்) கொடுக்க வேண்டும். மீதித் தொகையை செலுத்திய பின்னர் அந்தப் பணியின் அசல் ஆணையை மன்னன் சுப்பனிடம் கொடுப்பார்.

ஒருவேளை சுப்பனால் பணம் திரட்ட இயலாமல் தான் ஏற்கனவே செலுத்திய பணத்தைத் திரும்பப் பெறவிரும்பினால் மன்னன் ரூ. 20 லட்சத்தில் ரூ. 5 லட்சத்தை எடுத்துக் கொண்டு மீதம் ரூ. 15 லட்சத்தைத் திருப்பிக் கொடுப்பார்.

சுப்பன் முழுத்தொகையும் வட்டிக்குக் கடன்பெற்று கொடுத்து அந்த வேலையை வாங்கிவிட்டால் வட்டியிலிருந்து விடுபடுவதற்கும் அவர்கள் ஒரு வழிமுறையைப் பின்பற்றினர். அங்குப் பணிக்குச் சேர்ந்த சுப்பனுக்கு அங்குச் செயல்படுகின்ற தேசிய வங்கியில் தனிநபர் கடன் விரைவாகக் கிடைப்பதற்கு ஏற்பாடு செய்யப்படும். இதற்கு அந்த புரோக்கர் மற்றும் பல்கலைக்கழக நிர்வாகம் துணைபுரியும்.

சுப்பன் வங்கியில் தனிநபர் கடன்பெற்று வட்டிக்கு வாங்கிய கடனை அடைத்துவிடலாம். வேலையை விற்பது, அந்த விலையை தான் பெற்றுக்கொண்டு அதில் ஈடுபட்ட புரோக்கருக்கு உரிய கமிஷனை கொடுத்தல், வட்டிக்குப் பணம் திரட்டி வேலையை வாங்கும் நபருக்கு வட்டிக்காரனின் வட்டித் தொல்லையிலிருந்து நிவாரணம் செய்வதற்காக அங்குள்ள வங்கியில் தனிநபர் கடனுக்கு ஏற்பாடு செய்தல். என இது அங்கு ஒரு முறையான ஊழலாக நடந்து வந்தது.

இந்த வியாபரத்தில் சம்பாதித்தவர் செட்டியார் மட்டுமல்ல புரோக்கர்களான பேராசிரியர்களும் ஊழியர்களும் கூட கோடிகளில் சம்பாதித்தார்கள். புரோக்கர்கள் பலரும் கோடிஸ்வரர்களான கதைகள் நிறைய உண்டு. அவர்கள் சொத்துக்களை பாண்டிச்சேரி, சிதம்பரம் போன்ற பகுதிகளில் குவித்துள்ளனர்.

ஊழியர்களுக்கான ஊதியத்தை தொலைதூரக் கல்வி நிறுவனத்திலிருந்து எடுத்துக் கொடுத்தனர். அங்கு வருமானம் கொட்டோ கொட்டென்று  கொட்டியது. அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தின் கிளைகள் இந்தியாவில் பல பாகங்களிலும் இருந்ததால் கிளை நிறுவனங்களை நடத்துகின்ற நபர்கள்  பட்டங்களைத் தேவைப்படுவோர்க்கு விற்றனர்.

தேர்வு நடத்துதல், மதிப்பிடுதல் என அனைத்துமே கண்துடைப்பு வேலை. கிளை நிறுவனங்களுக்கு தலைமை நிறுவனம் பேராசிரியர்களை தேர்வு நடத்துவதற்கு அனுப்பி வைக்கும். கிளையை நடத்தும் முகவர் அந்தப் பேராசிரியர்களுக்கு உரிய கவனிப்புகளைச் செய்வார். தேர்வில் பங்கேற்ற அனைவரும் தேர்ச்சி பெறுவர்.

இதனால் அங்குப் பண மழை பொழிந்தது. இவ்வாறு வந்த பணத்தை அப்போது அரசு அங்கீகாரம் பெறாத இதர கல்வி நிறுவனங்களுக்கு குறிப்பாக மருத்துவக் கல்லூரிக்கு மடைமாற்றியது. பின்னர் அங்குக் கொட்டிய பணத்தை தொலைதூரக் கல்வி இயக்குநரகத்துக்கு மடைமாற்றியது. இவ்வாறு தேவைக்கு ஏற்ப பணம் மடைமாற்றுதல் நடைபெற்றது.

இதில் கிடைத்த லாபத்தில் நிர்வாகத்தில் இருந்த பலரும் சுருட்டிக்கொண்டனர். இதனால் அது பெரும் சீரழிவைச் சந்தித்தது. இந்தச் சீரழிவிற்குக்  காரணம் அண்ணாமலைப் பல்கலைக்கழக நிர்வாகம் மட்டுமல்ல அதில் பணியாற்றியோரும் காரணம்.

செட்டியார் வேலையை விற்றார் என்றால் அது தவறு என்று தெரிந்தே வாங்கினர் பணியாளர்கள். வேலை வாங்கிய பணியாளர்கள் குற்றம் என்றும் தெரிந்தும் வேலையையும் பட்டங்களையும் விற்பதற்கு புரோக்கர்களாகச் செயல்பட்டனர்.  செட்டியார் சீரழிவைச் செய்தார் என்றால் அந்தச் சீரழிவை சமூகமயமாக்கியவர்கள் அங்கு வேலை வாங்கியவர்கள்.

உயர்கல்வித் துறையில் மட்டுமின்றி பணிநியமன முறையில் பெரும் சீழ் பிடித்த ஊழல் முறையை தொடங்கிவைத்தவர் செட்டியார் என்றால் அதற்கு நியாயவுரிமையைப் பெற்றுக் கொடுத்து சமூகத் தூண்களாகச் செயல்பட்டது அங்குப் பணியாற்றிய பேராசிரியர்களும் பணியாளர்களும் ஆவர். எந்தவிதத்திலும் வேலைவாங்கிய பணியாளர்கள் அப்பாவிகள் அல்ல அவர்கள் குற்றவாளிகள். ஒருகட்டத்தில் இணைவேந்தரான ராமசாமியும் தரகர்களும் அடித்த கொள்ளையில் நிர்வாகம் திவால் நிலைக்கு சென்றது.

2013 ஆம் ஆண்டு கணக்குப்படி கூடுதலாக தேவையின்றி நியமிக்கப்பட்டவர்கள் 5755 பேர்.  பலகலைக்கழகத்தில் ஊதியம் வழங்கவும் இதர தேவைகளுக்காகவும் வைக்கப்பட்டிருக்கும் தொகையைக் கூட செட்டியார் தலைமையிலான குற்ற கும்பல் ஆட்டையப் போட்ட போது தான் தமிழக அரசு இப்பல்கலைக்கழகத்தை எடுத்து கொள்கிறது.  இது ஊழலின் முதலாம் பாகம்.

ஊழல் – II

தமிழக அரசு சிவ்தாஸ் மீனா வழங்கிய அறிக்கையின் கீழ் யார் மீதும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இன்று ராமசாமியின் பல்லாயிரம் கோடி சொத்துக்கு வளர்ப்பு மகன் முத்தையா என்ற அய்யப்பன் அதிபதியாகியுள்ளான்.

வளர்ப்பு மகனுடனான குடும்ப சண்டையின் முடிவில் ஊழல் பெருச்சாலி ராமசாமி செட்டி இயற்கை மரணமடைந்தாரே தவிர, ஒரு பெட்டி கேஸ் கூட இக்குற்றவாளி மீது இந்த அரசு போடவில்லை.  மாதந்தோறும் கோடிக்கணக்கான மக்கள் பணம், ஊழலை சமூகமயப்படுத்திய புரோக்கர்களுக்கு சம்பளமாக வாரியிறைக்கப்படுகிறது.

எம்.ஏ.எம். ராமசாமியும் அவரது வளர்ப்பு மகனும்

இவர்கள் யார் மீதும் எந்த வழக்கும் போடப்படவில்லை என்பது மட்டுமல்ல, ஒவ்வொரு அரசுத்துறை செயலர்களும், பல்கலைக்கழக துணைவேந்தர்களும் இவர்களை தங்கள் நிறுவனங்களில் உள்ள காலியிடங்களுக்கு பணிநிரவுமாறு அரசுக்கு கடிதங்கள் எழுதுகின்றனர்.  அதன் படி தான் தொடக்கத்தில் கூறியபடி உயர்நீதிமன்றம் மட்டும் 500 -க்கு மேல் ஊழியர்களை கேட்டுப் பெற்றுள்ளது.

அரசுத்துறைகளில் TRB, TNPSC போன்ற பல்வேறு வாரியங்கள் மூலம் இடஒதுக்கீடு அடிப்படையில் காலிப்பணியிடங்கள் குறித்து விளம்பரம் செய்து, விண்ணப்பங்கள் வரவேற்கப்பட்டு, எழுத்துத் தேர்வு நடத்தப்பட்டு, முறையான குழு அமைத்து நேர்காணல் நடத்தி பணியில் அமர்த்தப்படும் முறைக்கு நேர்மாறாக உள்ளது.

தகுதியற்ற நபர்கள் முறையற்ற வகையில் பணிநியமனம் பெற்று ஊழல் முறைகேடுகளை சமூகமயப்படுத்திய குற்றவாளிகளான அண்ணாமலைப் பல்கலைக்கழக பேராசிரியர்கள் மற்றும் ஊழியர்களை அரசுக் கல்லூரி, பல்கலைக் கழகம், அரசுத் துறைகள் ஆகியவற்றில் நியமிக்கின்றது இந்த அரசு.

சொற்ப ஊதியத்தில் தாங்கள் சுரண்டப்படுகிறோம் என்பதைத் தெரிந்தே, பல்லாண்டுகாலமாக அரசாங்கத்தில் காலிப்பணியிடங்கள் வரும்போது தங்கள் வாழ்வு வளமாகும். எனக் கனவுகளோடு இருந்த பலர் வாழ்க்கையிலும் இந்த அரசு மண்ணள்ளிப் போட்டுள்ளது.

இக்குற்றவாளிகள் அரசுக் கல்லூரிகளில் சேர்க்கப்பட்டதால் அங்குக் கெளரவ விரிவுரையாளர்களாகப் பணியாற்றி வந்த பலர் வீதியில் வீசியெறியப்பட்டனர். இவர்கள் அரசுக் கல்லூரிகளிலும் அரசுத் துறைகளிலும் நிரவப்பட்டிருப்பதால் பல பத்தாண்டுகளுக்கு இளந்தலைமுறையினருக்கு அரசுவேலையே இல்லை என்னும் நிலைமை ஏற்பட்டிருக்கிறது.

ஏற்கனவே பணியிலிருக்கும் பேராசிரியர்களுக்கும் ஊழியர்களுக்கும் உரிய பதிவியுயர்வுகளையும் சேர்த்தே காவு வாங்கியுள்ளனர். முதற்கட்டமாக பணிநிரவு செய்யப்பட்ட போது கௌரவ விரிவுரையாளர்கள் எதிர்ப்பைத் தெரிவித்தார்கள். அவர்கள் சார்பாக அரசுக் கல்லூரி ஆசிரியர் சங்கத்தினர் இரு நாட்கள் சேப்பாக்கத்தில் உண்ணாவிரதம் இருந்தனர். அதன் பின் அவர்கள் கள்ளமௌனம் சாதிப்பது மிகுந்த சந்தேகத்தை எழுப்புகிறது.

இதில் அதிமுக அரசுக்கும், அனைத்துத் துறை உயரதிகாரிகளுக்கும் ஊழியர் சங்கத் தலைவர்களுக்கு கூட பெட்டிகள் கைமாற்றப்பட்டிருந்தால் தவிர இது நடப்பதற்கான சாத்தியமே இல்லை. இன்று பெரும்பான்மையான மக்களின் வரிப்பணம் ஊழல் குற்றவாளிகளுக்கு சம்பளமாக வழங்கப்படுகிறது.  இது ஊழலின் இரண்டாம் பாகம். வியாபத்தைப் போன்றதொரு மாபெரும் ஊழல் முறைகேடு இது.

ஒரு பக்கம் நஷ்டத்தில் இயங்குவதாகக் கூறி அரசுப் பொதுத்துறை நிறுவனங்களை தனியாருக்கு தாரை வார்க்கிறது இவ்வரசு. மிக சமீபத்திய உதாரணம் ஏர் இந்தியா.  100% அன்னிய நேரடி முதலீடு என்ற பேரில் உலகிலேயே அதிக ஊழியர்களையும் சொத்தையும் கொண்ட இரயில்வே துறையை பன்னாட்டு நிறுவனங்களுக்கு பிளாட் போட்டு விற்கிறது.

ஆனால் தனியார் நிறுவனங்கள் ஊழல் முறைகேடுகளை நடத்தி திவாலாகும் போதோ அல்லது மீளமுடியாத கடனில் சிக்கும் போதோ அந்நிறுவனங்களை அரசுடமையாக்குகிறார்கள். அதாவது நஷ்டத்தை அரசுடமையாக்குதல் எனலாம்.

கிங்ஃபிஷெர் மல்லையாவின் பிற நிறுவனங்கள் குறிப்பாக யுனைடட் பிவரேஜஸ் இலாபத்தில் ஓடியும் கூட அரசு அச்சொத்துக்களை பறிமுதல் செய்து கடனை அடைக்க சொல்லவில்லை. இது போலத்தான் சஹாரா நிதி முறைகேட்டிலும் நடக்கிறது.

இப்பொழுது தனியார் அனல்மின் நிலையங்களின் கடனை தேசிய சொத்தாக்கும் முடிவை புதிய நிலக்கரி இணைப்புத் திட்டத்தின் (New Coal Linkage Plan) மூலம் மத்திய அரசு எடுத்துள்ளது. தனியார் நிறுவனங்கள் கடனைத் திருப்பி அடைக்காத போது அல்லது நிதி, நிர்வாக முறைகேடுகளால் நஷ்டமடையும் போது ஏற்பட்ட நஷ்டத்திற்கு அவர்கள் முதலீடு செய்துள்ள பிற நிறுவனங்களின் சொத்துக்களை பறிமுதல் செய்வது போன்ற நடவடிக்கைகளை அரசு மேற்கொள்வதில்லை.

ஏனென்றால் அதற்கான கொள்கையோ சட்டமோ இந்நாட்டில் இல்லை என்பது மட்டுமல்ல, நஷ்டத்தை அல்லது கடனை நாட்டுடமையாக்கி மக்கள் தலையில் கட்டும் முறையைத் தான் இவ்வரசுகள் செய்கின்றன.

அண்ணாமலை விவகாரத்தில் முறைகேடு நடத்திய ராமசாமியின் ரூ. 16, 000 கோடி சொத்துக்களை அரசுடமையாக்கவில்லை. மாறாக தீர்க்கவே முடியாத நிதி நிர்வாக முறைகேட்டை நாட்டுடமையாக்கியுள்ளது. கூடுதலாக இவ்வூழல் முறைகேடுகளுக்காக அதன் இணைவேந்தர் இராமசாமி தண்டிக்கப்படாதது மட்டுமல்ல அரசனைப் போல நடத்தப்பட்டார் என்பதிலிருந்தே இவ்வரசு கட்டமைப்பே எப்படியானதொரு நெருக்கடிக்குள் சிக்கியிருக்கிறது என்பதை புரிந்து கொள்ளலாம்.

ராமசாமி செட்டியார் சாகும் போது அரசர் செத்தார் என்றே பத்திரிகைகள் எழுதினர். கோடி கோடியாகக் கொள்ளையடித்த இக்குற்றவாளியின் ஒரு சொத்து கூட பறிமுதல் செய்யப்படவில்லை.

கிண்டி ரேஸ் கோர்சில் பெரும்பகுதி இச்செட்டியாருடையது.  நகரின் பல்வேறு பகுதிகளில் உள்ள நிறுவனங்களின் மதிப்பு பல ஆயிரம் கோடியைத் தாண்டும் இதை ரியல் எஸ்டேட் மதிப்புக்கு விற்றாலே இப்பல்கலைக்கழகத்தை நடத்த முடியும் என்ற நிலையில் மக்கள் வரிப்பணத்தை வாரியிறைத்து இக்குற்றவாளித் தரகுக் கும்பலைப் போற்ற வேண்டிய அவசியமென்ன?

மேலும் இந்நாட்டில் ஒரு விவசாயிக்கோ, ஒரு தொழிலாளிக்கோ அல்லது ஒரு கௌரவ விரிவுரையாளருக்கோ இல்லாத பணிப்பாதுகாப்பை இந்த குற்றவாளி புரோக்கர்களுக்கு வழங்குகிறது இவ்வரசு. எனவே கடந்த 25 ஆண்டுகளாக அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தில் நடந்த ஊழல் முறைகேடுகளை உரிய விசாரணைக் கமிஷன் வைத்து முறையாக விசாரித்து இதற்கு காரணமானவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.

இம்மாபெரும் ஊழலில் திரட்டப்பட்ட நிதியை செட்டிநாடு அரண்மனை பல்வேறு இடங்களில் முதலீடு செய்துள்ளது. அச்சொத்துக்கள் பறிமுதல்செய்யப்பட வேண்டும். அதற்கான சட்டங்கள் உடனடியாக நிறைவேற்றப்படவேண்டும். அண்ணாமலை ஊழியர்களை அரசு துறையில் பணிநிரவல் செய்வதற்கு பின்னால் மிகப்பெரிய ஆளும் கட்சி அரசியல்வாதிகள் முதல் அதிகாரிகள் வரை மிகப்பெரியதொரு வலைபின்னல் செயல்பட்டுள்ளது.

இதையும் சேர்த்தே விசாரணை செய்யப்பட வேண்டும்.  இவ்விசாரணை முடியும் வரை இப்பல்கலைக்கழக ஊழியர்களை பணிநிரவல் செய்யக்கூடாது. ஏற்கனவே பணிநிரவல் செய்யப்பட்டவர்கள் திருப்பியனுப்பபடவேண்டும்.  இலஞ்சம் வழங்கி வேலை வாங்கியதோடன்றி புரோக்கர்களாக செயல்பட்டு ஊழலை சமூகமயமாக்கிய ஊழியர்கள் மீது குற்றவியல் சட்டத்தின் கீழ் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் இம்மாதிரியான முறைகேடுகள் மீண்டும் நடக்காமலிருக்க வேண்டுமென்றால் அதற்கு முன்னுதாரணமாக தார்மீக மற்றும் நெறிமுறை அடிப்படையில் இத்தகைய ஊழியர்களின் வேலைகள் நிரந்தரமாகப் பறிக்கப்படவேண்டும்.

தற்கொலை செய்து கொண்ட வேளான் அதிகாரி முத்துக்குமாரசாமி (இடது) முன்னாள் அதிமுக அமைச்சர் அக்ரி கிருஷ்ணமூர்த்தி

கடந்த 25 ஆண்டுகாலமாக அண்ணாமலைப் பல்கலைக்கழகம் ஒரு போக்கை தமிழ்நாட்டில் உருவாக்கியுள்ளது.  தமிழ்நாட்டில் அரசு வேலைகளுக்கு பல பத்து இலட்சங்களை இலஞ்சமாகக் கொடுப்பதை சர்வசாதாரணமாகப் பார்க்கும் போக்கு நிலவுகிறது. இதில் ஆளும் கட்சி அரசியல்வாதிகளிலிருந்து அரசு அதிகாரிகள் வரை கணிசமான பங்கை பெறுகின்றனர்.

‘இலஞ்சம் கொடுக்காமல் தகுதியடிப்படையில் தான் வேலைக்குப் போவேன்’ என யாராவது கூறினால் அவரை ‘பைத்தியக்காரன்’ என முகத்துக்கு நேராகவே பேசும் நிலையுள்ளது. முத்துக்குமரசாமி தற்கொலையும் அக்ரி கிருஷ்ணமூர்த்தி வழக்கின் இன்றைய நிலையும் மிகச் சிறந்த சமீபத்திய உதாரணங்கள்.

சமூக நலத்துறை அமைச்சர் சரோஜா விவகாரம் தற்காலிகப் பணியிடங்களுக்குக் கூட வட்டச் செயலாளர் முதல் அதிகாரிகள், அமைச்சர்கள், மன்னார்குடி மாபியா வரை இலஞ்சத்தில் பங்கு கேட்கின்றனர் என்பதை வெளிக்கொணர்ந்தது.

தமிழ்நாட்டைப் பொறுத்தவரை அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் நடப்பது போன்ற ஊழல்கள் இன்று சமூகமயமாகியுள்ள நிலையில், ஏற்கனவே பதவியிலிருப்பவர்களில் பலரும் இதுபோல இலஞ்சம் பெற்று வந்தவர்களாகவே உள்ளனர்.

புதிய பொருளாதாரக் கொள்கைகள் அமுல்படுத்தப்பட்ட கடந்த 25 ஆண்டுகளில், உயர்கல்வி நிலையங்களை புதிது புதிதாக திறந்து வேலைவாய்ப்பு சந்தைக்கு தேவையானதை விட பல பத்து மடங்கு அதிகமான பட்டதாரிகளை உருவாக்கியுள்ளனர்.

மறுபக்கம் இக்காலகட்டத்தில் விவசாயம் திட்டமிட்டு அழிக்கப்பட்டதாலும், இவர்களின் தகுதிக்கேற்ற வேலை வழங்க போதுமான அளவு தொழிற்துறை வளராததாலும், பெரும்பான்மையான படித்த இளைஞர்கள் அரசு வேலையை மட்டுமே உத்தரவாதமானதாகக் கருதுகின்றனர்.

இது தான் பொது உளவியலும் கூட, இதை ஒட்டியே தனிநபர்களின் வாழ்க்கையும் அமைக்கப்படுகிறது.  இதைப் புரிந்து கொண்ட புதிய தரகு வர்க்கம், அரசு வேலைக்கு இலஞ்சம் வாங்குவதன் வழி தனது பையை நிரப்பிக் கொள்வதோடு, இலஞ்ச ஊழலில் புரோக்கர் முறையை வளர்த்து தன் வர்க்கத்தை பெருக்கி இலஞ்ச இலாவண்யத்தை வியாதியைப்போல சமூகத்தில் பரப்பி ஒட்டுமொத்தக் கட்டமைப்பையும் சீரழிக்கிறார்கள்.  இது ஒரு மீளமுடியாத நெருக்கடி.  இதற்கான தீர்வு நிலவும் கட்டமைப்பு மொத்தத்தையும் மாற்றியமைப்பதன் வழி மட்டுமே சாத்தியம்

– தங்கராஜ்

_____________

உழைக்கும் மக்களின் இணையக் குரல் வினவு தளத்தை ஆதரியுங்கள் – சந்தா செலுத்துங்கள்!

சந்தா செலுத்தும் நண்பர்களுக்கு அந்த காலத்திற்குரிய வார செய்திப்பதிவு – புதிய கலாச்சாரம் – புதிய ஜனநாயகம் மின்புத்தகங்கள், நிகழ்வுகள் குறித்த அறிவித்தல்கள் அனுப்பப்படும். இந்தியாவில் வங்கிக் கணக்கு வைத்திருப்போர் மட்டுமே சந்தா அனுப்ப இயலும். டெபிட் கார்டு, கிரெடிட் கார்டு, நெட்பேங்கிங் மூலம் பணம் அனுப்பலாம். அனுப்புவதற்கு PayUmoney பட்டனை அழுத்தவும். வெளிநாடுகளில் வங்கிக் கணக்கு வைத்திருப்போர் எமது வங்கிக் கணக்கிற்கு நேரடியாக பணம் அனுப்பிவிட்டு, விவரத்தை உடன் அறியத்தரவும். நன்றி