சென்னை பல்கலைக்கழக சிண்டிகேட் தேர்தல்:
மாணவர்களின் கடமை என்ன?
அன்பார்ந்த மாணவர்களே!
நமது சென்னை பல்கலைக்கழகத்தில் வருகின்ற 22-02-2025 சனிக்கிழமை அன்று ஆட்சி மன்றத்திற்கும் (Syndicate) ஆட்சி மன்ற பேரவைக்குமான (Senate) தேர்தல் நடக்க இருக்கிறது. இது, பேராசிரியர்களுக்கான தேர்தல், அவர்கள் போட்டிப்போட போகிறார்கள், அவர்கள் ஓட்டுப் போடப் போகிறார்கள்; இது பற்றி மாணவர்களாகிய நாம் பேசுவதற்கு என்ன இருக்கிறது என்று நம்மில் பலரும் கருதலாம்.
கடன் வலையில் சிக்க வைக்கப்பட்டுள்ள நமது பல்கலைக்கழகத்தை மீட்டெடுப்பதும், பல்கலைக்கழக மாணவர்களின் கல்வி உரிமையை பாதுகாப்பதுமான போராட்டத்தில் இந்த தேர்தல் முக்கியத்துவமுடையதாக இருக்கிறது. இந்தத் தேர்தலில் தேர்ந்தெடுக்கப்பட இருக்கும் புதிய சிண்டிகேட் மேற்கொள்ளப் போகும் நடவடிக்கைகள் என்ன என்பதை விளக்கக் கோருவதற்கு மாணவர்களாகிய நமக்கு முழு உரிமையும் உண்டு.
முக்கியமாக, பல்கலைக்கழகத்தை சீரழித்து தனியார் வசப்படுத்த துடிக்கும் ஒன்றிய அரசின் சதிக்கு துணை போவது; பல்கலைக்கழக நிர்வாகத்தின் உண்மை நிலையை வெளிக்கொண்டு வராமல் மூடி மறைப்பது; பல்கலைக்கழகத்தின் வங்கிக் கணக்குகள் முடக்கப்படக்கூடிய நிலைக்குச் சென்ற போதிலும் கூட ஒன்றிய, மாநில அரசுகளிடம் போராடி பல்கலைக்கழகத்தை மீட்டெடுப்பதற்கு பதிலாக, அதற்காகப் போராடிய மாணவர்களை போலி வாக்குறுதிகளை கொடுத்து கலைப்பது போன்றவைதான் தேர்வு செய்யப்பட்ட சிண்டிகேட் உறுப்பினர்களின் தொடர் நடவடிக்கைகளாக இருந்து வருகிறது.
ஒன்றிய பாஜக அரசு கடந்த 10 ஆண்டு காலமாக உயர் கல்வித்துறைக்கு ஒதுக்க வேண்டிய நிதியினை வெட்டிச் சுருக்கி, யு.ஜி.சி.யின் மூலம் சென்னை பல்கலைக்கழகத்திற்கு கொடுக்க வேண்டிய நிதியை வழங்காமல் நெருக்கடியை ஏற்படுத்தியது. மாநில அரசும் பல்வேறு தணிக்கை காரணங்களை கூறி பல்கலைக்கழகத்திற்கு ஒதுக்க வேண்டிய நிதியை நிறுத்தியுள்ளது. இவை முழுக்க முழுக்க பல்கலைக்கழக கட்டமைப்புகளை சீரழித்து அவற்றை நெருக்கடிக்கு உள்ளாக்கி கார்ப்பரேட்டுகளுக்கு தரை வார்ப்பதற்கான முயற்சியாகும்.
இந்தச் சதி வலையில் இருந்து பல்கலைக்கழகத்தை மீட்டெடுப்பதற்கான வேலை திட்டத்தை சிண்டிகேட் தேர்தலில் நிற்கக் கூடியவர்கள் முன்மொழிந்திட வேண்டும் அல்லது இது குறித்து பல்கலைக்கழக பேராசிரியர்கள், மாணவர்கள், மாணவர் அமைப்புகள் மற்றும் கல்வியாளர்கள் ஆகியோருடன் ஆலோசனைக் கூட்டங்களை நடத்திட முன்வந்திட வேண்டும். குறிப்பாக, கீழ்க்கண்ட கேள்விகளுக்கு பதிலளிக்குமாறு போட்டியிடும் பேராசிரியர்களை நாம் நிர்பந்திக்க வேண்டும்.
- பல்கலைக்கழகத்தின் நிதிச் சுமையை தீர்ப்பதற்கான வழிமுறைகள் என்ன?
- பல்கலைக்கழகத்தில் பேராசிரியர் பணியிட பற்றாக்குறையை தீர்ப்பதற்கான திட்டம் என்ன?
- பல்கலைக்கழகத்தில் ஆசிரியர் அல்லாத பணியிடங்களின் பற்றாக்குறையை தீர்ப்பதற்கான திட்டங்கள் என்ன?
- பல்கலைக்கழகத்தில் தொலைதூரக் கல்வியை மேம்படுத்துவதற்கான திட்டங்கள் என்ன?
- பல்கலைக்கழகத்தின் சொத்துக்களை ஆக்கிரமிப்பு செய்வதை தடுப்பதற்கான திட்டம் என்ன?
- பல்கலைக்கழகத்தின் பழமை வாய்ந்த கட்டடங்களை பாதுகாப்பதற்கான திட்டங்கள் என்ன?
- பல்கலைக்கழகத்தில் மாணவர்களிடம் அதிகப்படியாக பெறுகின்ற கல்வி கட்டணத்தை குறைப்பதற்கான திட்டங்கள் என்ன?
- பல்கலைக்கழகத்தில் பதவி உயர்வு பெற்ற பேராசிரியர்களுக்கு வழங்க வேண்டிய நிதியினை பெறுவதற்கான திட்டங்கள் என்ன?
- பல்கலைக்கழகத்தில் ஓய்வு பெற்ற பேராசிரியர்கள் மற்றும் பணியாளர்களுக்கு வழங்க வேண்டிய ஓய்வூதிய பலனை வழங்குவதற்கான திட்டம் என்ன?
- பல்கலைக்கழகத்தில் மாணவர் தேர்தலை நடத்துவதற்கான திட்டங்கள் தங்களிடம் உள்ளதா?
இப்படி மேற்கூறிய கேள்விகளுக்கு சிண்டிகேட் தேர்தலில் நிற்கக் கூடிய வேட்பாளர்கள் பதில் அளிக்க வேண்டும் என எல்லாத் தளத்தில் இருந்தும் குரல் எழுப்புவது அவசியம்.
மாணவர்களே!
நமது பல்கலைக்கழகம், 166 ஆண்டுகளுக்கு மேலாக நிலைத்து நின்று, தென்னிந்திய பல்கலைக்கழகங்களுக்கெல்லாம் தாயாக விளங்கும் பல்கலைக்கழகமாகும். நமது பல்கலைக்கழகத்தை மீட்டெடுப்பது என்பது பல்கலைக்கழக பேராசிரியர்கள் மாணவர்கள், கல்வியாளர்கள் பொதுமக்கள் மற்றும் அரசியல் சக்திகள் என நம் எல்லோருடைய கடமை.
ஆகையால், ஒருங்கிணைந்த முறையில் மேற்கூறிய கோரிக்கைகளை ஓங்கி முழங்கிட வேண்டும். பல்கலைக்கழகத்தை மீட்டெடுக்கும் இந்தப் போராட்ட களத்தில் எமது புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி முன்னிலையில் இருந்து செயல்படும்! பல்கலைக்கழகத்தை மீட்டெடுக்கும்! அந்தவகையில், மாணவர்கள் அனைவரும் போராட முன்வருமாறு கேட்டுக்கொள்கிறோம்.
புரட்சிகர மாணவர் – இளைஞர் முன்னணி,
சென்னை பல்கலைக்கழகக் கிளை.
94448 36642.
சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram