06.12.2024
சென்னை பல்கலைக்கழக மாணவிகளுக்கு மறுக்கப்படும் மகளிர் விடுதிகள்
கண்டன அறிக்கை
சென்னை பல்கலைக்கழகத்தின் சேப்பாக்கம் வளாகத்தில் ராமானுஜம் கணிதத்துறையின் அருகே அமைந்திருந்த சென்னை பல்கலைக்கழக மாணவியருக்கான விடுதி கடந்த இரண்டு ஆண்டுகளாகச் செயல்படாமல் உள்ளது.
இதற்காக சென்னை பல்கலைக்கழகம் வைத்த கோரிக்கையின் அடிப்படையில் 2024 மானிய கோரிக்கையின் போது தமிழக முதல்வர் சென்னை பல்கலைக்கழகத்தின் முதுகலை மாணவிகளுக்கான கட்டிடத்தை கட்டுவதற்கு சுமார் 53 கோடி ரூபாய் வழங்குவதாக அறிவித்திருந்தார்.
அதுமட்டுமின்றி சமூக நலத்துறையின் மானிய கோரிக்கையின் போது சென்னையில் பணிபுரியும் மகளிர்களுக்கான விடுதியும் “தோழி” என்ற பெயரில் கட்டப்படும் என்று அறிவித்திருந்தார். இதற்காக சமூக நலத்துறை இடத்தை தேர்வு செய்வதற்காக பல்வேறு இடங்களில் ஆய்வு செய்து கடைசியாக சென்னை பல்கலைக்கழகத்தில் மாணவியர் விடுதியின் அருகிலேயே கட்டுவதற்கு முடிவு செய்தனர். சென்னை பல்கலைக்கழகத்திடமும் இதற்காக அனுமதி கேட்டிருந்தனர்.
இறுதியாக சென்னை பல்கலைக்கழகத்தில் படிக்கும் முதுகலை மாணவிகளுக்கு விடுதியில் 500 அறைகளும் சமூக நலத்துறையின் மூலமாக பணிபுரியும் மகளிருக்கும் அறைகள் கட்டுவதாகச் சம்மதம் தெரிவித்திருந்தனர்.
அதன் பின்பு சமூக நலத்துறையின் மூலமாக பணிபுரியும் மகளிர்களுக்கான விடுதியில் மாணவிகளுக்கு முன்னுரிமை கொடுக்கப்படும் என்று அறிவித்திருந்தனர்.
ஆனால் தற்பொழுது அந்த இடத்தில் மாணவிகளுக்கான விடுதிக்குப் பதிலாக சமூக நலத்துறையின் மூலமாக பணிபுரியும் மகளிருக்கான விடுதி கட்டுவதற்கு சென்னை பல்கலைக்கழகத்தின் ஆட்சி மன்ற குழு ஒப்புதல் அளித்துள்ளது.
இறுதியாக சென்னை பல்கலைக்கழகத்தில் படிக்கின்ற மாணவிகளுக்குத் தங்குவதற்கான இட வசதி மறுக்கப்பட்டுள்ளது; சென்னை பல்கலைக்கழகத்தின் நிலம் சமூக நலத்துறைக்குத் தாரைவார்க்கப்படுகின்றது.
சென்னை பல்கலைக்கழக இடத்தில், சென்னையில் பணிபுரியும் பெண்களுக்கான விடுதி கட்டுவதற்கு சமூக நலத்துறைக்கு ஒப்புதல் அளித்த பல்கலைக்கழகத்தின் ஆட்சி மன்ற குழுவை புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி வன்மையாகக் கண்டிக்கிறது.
சென்னை பல்கலைக்கழக இடத்தை சமூக நலத் துறைக்கு தாரைவார்க்கும் முடிவைக் கைவிடு!
உடனடியாக அதே இடத்தில் பல்கலைக்கழக மாணவியர் விடுதியைக் கட்டிக் கொடு!
தோழர். தீரன்,
மாநில ஒருங்கிணைப்புக் குழு,
புரட்சிகர மாணவர் – இளைஞர் முன்னணி,
தமிழ்நாடு.
9444836642.
சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram