சென்னை அரும்பாக்கம் ராதாகிருஷ்ணன் நகர் பகுதியில் பல ஆண்டுகளாக வசித்து வந்த மக்களின் வீடுகளை கடந்த ஜூலை 29-ம் தேதியன்று அகற்றியுள்ளது அரசு.

சென்னை கோயம்பேட்டிற்கு அருகிலுள்ள அரும்பாக்கம் பகுதியில் கூவம் நதிக்கரையை ஒட்டி ராதாகிருஷ்ணன் நகர் அமைந்துள்ளது.

படிக்க :
♦ சென்னை மாநகராட்சி : சுடுகாடு முதல் சுகாதாரம் வரை தனியார்மயம் !
♦ தீவுத்திடல் குடிசைகள் இடிப்பு : எடப்பாடி அரசின் அடாவடித் திமிரும் தீண்டாமையும்..

கிட்டத்தட்ட 20 ஆண்டுகளுக்கும் மேலாக இப்பகுதியில் வாழ்ந்து வந்த உழைக்கும் மக்களை திடீரென அகற்றும் மாநகராட்சியின் இந்த நடவடிக்கையை, “ஆக்கிரமித்துக் கட்டப்பட்ட 93 வீடுகள் அகற்றம்” என்று தினகரன் நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது.

எடப்பாடி ஆட்சியில் கடந்த 2018-ம் ஆண்டு, ஐந்தாண்டுக்கு மேல் புறம்போக்கு இடத்தில் குடியிருப்பவர்களுக்கு பட்டா போட்டுத் தரவேண்டும் என அரசாணை வெளியிடப்பட்டது. அப்படி இருக்கையில் 20 ஆண்டுகளாக அங்கு வசித்து வரும் மக்கள், திமுக ஆட்சியில் ஆக்கிரமிப்பாளர்கள் ஆகிவிட்டனர்.

மேலும், இந்தக் குடியிருப்புகளை அகற்றுவதற்கு பலவிதங்களில் நியாயம் கற்பிக்கிறது தினகரன் நாளிதழ். கடந்த 2015-ம் ஆண்டு மழை வெள்ளத்தில் இந்த குடியிருப்பில் தண்ணீர் புகுந்து மக்கள் மிகவும் பாதிப்பப்பட்டார்கள். எனவே தற்போது வரவிருக்கும் வடகிழக்கு பருவமழையின் முன்னெச்சரிக்கை நடவடிக்கை காரணமாக வீடுகளை அகற்றும் பணியில் பொதுப்பணித்துறை மற்றும் மாநகராட்சி அதிகாரிகள் இறங்கியுள்ளனர் என்று தினகரன் நாளிதழ் கூறுகிறது.

This slideshow requires JavaScript.

ஆனால், அம்மக்கள் “20 ஆண்டுகளுக்கு மேலாக தாங்கள் இங்குதான் வசித்துக் கொண்டிருக்கிறோம். எங்களிடம் ரேசன் கார்டு, ஆதார்கார்டு என அனைத்து ஆவணங்களும் இருக்கிறது. எங்களை ஏன் விரட்டுகிறீர்கள்?. எந்த முன் அறிவிப்புமின்றி திடிரென எங்கள் வீடுகளை இடித்து எங்களை விரட்டியடித்தால் நாங்கள் எங்கே செல்வோம்?” என்று ராதாகிருஷ்ணன் நகர் மக்கள் கொந்தளிக்கின்றனர்.

ஆற்றின் பாதையில் ஆக்கிரமிப்பாக இருப்பதால் அகற்றுகிறார்கள் எனில், தொல்காப்பியப் பூங்கா முதல், மதுவரவாயலில் அமைந்துள்ள எம்.ஜி.ஆர் பல்கலைக்கழக கல்லூரிகள், ராமாபுரம் மியாட் மருத்துவமனை வரை பல ஷாப்பின் மால்களும், தனியார் கல்லூரிகளும், மருத்துவமனைகளும் ஆற்றின் பாதையில் ஆக்கிரமிப்பாகத் தான் கட்டப்பட்டு இருக்கின்றன. அதையெல்லாம் இடித்துவிட்டதா இந்த அரசு ?

அடையாறு கரையில் வசித்த உழைக்கும் மக்களை ஆக்கிரமிப்பு என்ற பெயரில் அகற்றி, அங்கு திமுக அரசே கடந்த ஆட்சியில் ஆக்கிரமித்து தொல்காப்பிய பூங்காவை கட்டியது குறிப்பிடத்தக்கது. சென்னை விருகம்பாக்கம் பகுதியில் ஐ.ஏ.எஸ் – ஐ.பி.எஸ் அதிகாரிகளுக்கான பிரம்மாண்ட குடியிருப்புகள் கால்வாயை ஆக்கிரமித்து தான் கட்டப்பட்டுள்ளன. எந்த அரசு ஆட்சிக்கு வந்தாலும் இந்தக் கட்டிடங்கள் அனைத்தும் ஆக்கிரமிப்புகளாகக் கருதப்படுவதில்லை. ஏழைகளின் வீடுகள் மட்டும் இவர்களுக்கு ஆக்கிரமிப்புகளாகத் தெரிகின்றன.

கடந்த தி.மு.க ஆட்சியில் சிங்காரச் சென்னை என்ற பெயரில் கூவம் ஆற்றையும், அடையாறு ஆற்றையும் அழகுபடுத்துகிறேன் என்று கூறி ஆற்றங்கரையோரம் பல ஆண்டுகளாக வசித்து வரும் சென்னை நகரின் உழைக்கும் மக்கள் கண்ணகி நகர், செம்மஞ்சேரி போன்ற புறநகர் பகுதிகளுக்கு விரட்டியடிக்கப்பட்டனர். தற்போது அந்த சிங்கார சென்னை அமைப்பதற்கான வேலையை மீண்டும் துவங்கியுள்ளது திமுக அரசு.

மக்களின் வாழ்வாதாரம், வேலைவாய்ப்பு, அவர்களது குழந்தைகளின் கல்வி ஆகிய எதைப்பற்றியும் கவலைப்படாமல், 20 ஆண்டுகளுக்கு மேலாக அங்கு குடியிருப்பவர்களை ஆக்கிரமிப்பாளர்கள் என்று கூறி வெளியேற்றுவதற்கும் ஒரு வக்கிர மனம் வேண்டும். பெரும் பணக்காரர்களுக்கும், பெருமுதலாளிகளுக்கும் இத்தகைய குடிசைகள் கண்ணில் உருத்தலாக இருக்க கூடாது என திமுக அரசு கருதினால், அந்த மக்களுக்கு வாழ்வாதாரத்தை ஏற்படுத்தி அவர்களது வாழ்நிலையை உயர்த்தி இருக்கலாமே ?

அதைச் செய்வதற்கு வக்கற்ற இந்த அரசுதான், இந்த மக்களின் உழைப்பைச் சுரண்டி வரும் பெருமுதலாளிகளின் கண்களைக் குளிர்விக்க, குடியிருப்புகளை ஆக்கிரமிப்புகள் என்று கூறி அகற்றுகின்றது.

வினவு செய்திப் பிரிவு
சந்துரு
செய்தி ஆதாரம் : தினகரன் நாளிதழ்
புகைப்படம் :
பேரின்பக் குமார்

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க